காய்ந்த சிறகு ஒன்று
என் காலடியில் கிடந்தது

குனிந்து எடுத்து
என் கைகளில் ஏந்தினேன்

ஒரு
முத்தம் பதித்தேன்

அடுத்த நொடி
காய்ந்த சிறகின் மேனி
தங்கநிறமானது

சருகின் உடைந்த ரேகைகளில்
பசுமையின் ஒளி ஏறிச்
சீராகின

ஓரங்களில்
பொன்நிறத் துகள்கள்
உதிரத் தொடங்கின

வெட்டுக்கிளியின்
வகை வகையான
சின்னஞ்சிறு இறக்கைகள்
சடசடவெனப் பலநூறாய் முளைத்தன

அடடா
காய்ந்த சிறகு
ஓவிய அழகில்
ஆகாய வெளியில்
சிலுசிலுவெனப்
பறக்கத் தொடங்கிவிட்டது

அது செல்லும் திசையையே
பார்த்துக்கொண்டு நின்றேன்
ஆச்சரியமாய்

இப்படியே
என் முத்தங்கள் எல்லாம்
பறந்து பறந்து வந்து
உன் இதழ்களையே சேருமானால்

உனக்கல்லாத
என் முத்தங்களை
நான் எப்படித்தான்
பத்திரப்படுத்தி வைப்பேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

No comments: