சின்னச் சின்ன எண்ணங்கள்
*
மனிதனின் கேவலமான மனதுதான் எல்லாத் துயரங்களுக்கும் காரணம்.
அந்த மனதை எப்படி சரியாக்குவது என்ற சிந்தனைதான் காலங்காலமாய் ஓடிக்கொண்டிருக்கிறது நல்ல மனதுக்காரர்களிடம்.
அதன் பயனாய்த்தான் கடவுள் மார்க்கம் எல்லாம் தோன்றின.
அவற்றையும் அழித்துச் செழித்துவிட்டான் மனிதன்.
இனி என்ன மீதம்?
மனிதனை பயங்காட்ட இன்று ஒன்றுமே இல்லை.
ஆகவே, யார் பெரிய பலசாலி என்று குறைந்த பலசாலிகள் விழுங்கப்படுகிறார்கள்.
இறுதியாக எல்லாம் விழுங்கப்பட்டு எதுவுமில்லாமல் போகும்!
இதற்கென்ன மருந்து?
மனிதநேயம் என்ற உணர்வை எப்படி எல்லோருக்கும் ஊட்டுவது?
*
ISIS, RSS இவர்கள் எல்லோரும்தான் ஆன்மிகவாதிகளா
*
கடவுள் தண்டித்த வரலாறு இல்லை என்கிறார் ஒரு நாத்திகர்.
இது ஒரு சிக்கலான விசயம்.
தண்டித்துவிட்டது என்று சொல்வோரை நான் ஏராளமாகக் கண்டிருக்கிறேன்
கடவுளே உனக்குக் கண்ணே இல்லையா என்று கோபப்படுவோரையும் ஏராளமாகக் கண்டிருக்கிறேன்
அது அவர்களின் மூடநம்பிக்கை என்று நாத்திகர் சொல்லலாம். இல்லை உண்மை என்று ஆத்திகர் சொல்லலாம்.
ஆனால் இதில் யாரும் சொல் வன்முறை செய்ய அவசியம் இல்லை.
ஏனெனில் தண்டிக்கப்படுவோம் என்று நம்புவதால் உலகில் வன்முறை வளரப் போவதில்லை மாறாக அது அழியவே செய்யும்
நம்மை தண்டிக்க யாரும் இல்லை என்ற நினைப்பு மனசாட்சியே இல்லாதவனின் கையில் உலக அழிவு ஆயுதம்.
நாத்திகர்கள் சிந்திக்கலாம்!
*
மதம் போல
பிள்ளை வளர்ப்பில்
முதன்மை தாய்க்கு
கடவுள் போல 
பயமூட்டுவதில்
முதன்மை தந்தைக்கு
*
தாய்வழி தந்தைவழி என்று பிரிக்காமல் குடும்பவழி என்று சிந்திப்போம்.
ஆணாதிக்கமும் வேண்டாம் பெண்ணாதிக்கமும் வேண்டாம்.
ஆண் பெண் இடையே எந்த ஒரு வேற்றுமையும் இல்லா நிலை அடைவோம்.
ஆண்பிள்ளைக்குத் தரப்படும் சலுகைகளை அப்படியே வெட்டி எறிவோம்.
பிறந்த உடனேயே ஆண் பிள்ளைகளுக்கு அதிகாரம் வழங்கப்படுவதை நான் கண்டிருக்கிறேன்.
மாமாவை உதைடா1
எந்தப் பெண்பிள்ளையையாவது அப்படிச் சொல்லி இருப்பார்களா?
பாரேன் இப்பவே இது அடக்கம் இல்லாமல் காலத் தூக்கி ஒதச்சிக்கிட்டு கிடக்கு!
நம் சமூகம் வெட்கப்பட வேண்டும்
*
சட்டத்தின் தண்டனையும் இறைவனின் தண்டனையும்
நீங்கள் ஒரு தவறு செய்கிறீர்கள். ஆனால் அம்பேத்கரின் சட்டத்தால் அதை நிரூபிக்க முடியவில்லை. ஆகவே நீங்கள் நிரபராதி ஆகிவிடுகிறீர்கள்.
இப்படியே எவரும் அறியாமல் சட்டத்தின் ஓட்டைகளை நன்றாக கற்றுக்கொண்டு சட்டத்திலிருந்து தப்பித்து நீங்கள் ஆயிரம் பல்லாயிரம் என்று கொலைகள் குற்றங்கள் கற்பழிப்புகள் செய்கிறீர்கள்.
ஆனால் இறைவனின் தண்டனை எப்படி கூறப்படுகிறதென்றால். இறைவன் உன் பிடரி நரம்புக்கும் அருகாமையில் இருக்கிறான். நீ செய்வதெல்லாம் அறிவான்.மறுமைநாளில் உனக்கு தண்டனை நிச்சயம் என்று அவனை பயங்கொள்ளச் செய்து குற்றம் செய்யாமல் பாதுகாக்கும் ஆயுதமாகக் கூறப்படுகிறது.

*
கடவுள் பெயரால் தீயன செய்தால் அது அவர்களின் மூடத்தனமேயன்றி வேறில்லை.
கடவுள் என்றால் பயந்து தீயன செய்யாதிருந்தால்தான் கடவுள் கோட்பாட்டின்படி அது கடவுளின் பெயரால் செய்யப்படுபவை.
கடவுள் கோட்பாட்டில் இல்லாததைக் கடவுள் பெயரால் செய்யும் சாத்தான்களை வேரோடு அழியுங்கள்.

அதுதான் என்றென்றும் அமைதிக்குத் தேவை!

*
உலகம் நல்வழிப்படுவதற்கான வழி
எதுவானால் என்ன?

நிலாவைக்காட்டிச் சோறூட்டுவதும்
பூச்சாண்டியைக் காட்டி அடக்கிவைப்பதும்
நம்மைப் பெற்றவளே நமக்குச் செய்ததுதானே?
*

வன்முறை என்பது இருமுனைக் கத்தி நண்பரே.
அது எதிரியை அழிப்பதுபோல் தெரியும்.
ஆனால் உண்மையில் உங்களைத்தான் அழிக்கும்!
உங்கள் விதியை நீங்கள் தாம்பூலத் தட்டுவைத்து வரவழைக்க வேண்டுமா என்று சிந்தியுங்கள்

*

No comments: