20160718



அறம் - அறிவு - அன்பு

இவை மூன்றையும்

முதன்மையாகக் கொண்டு

மனிதநேயம் பாராட்ட வந்தால்

நான் உங்களோடு
எப்போதும் உடன்படுவேன்


*





ஒவ்வொருவரும்
ஏதேனும் ஒன்றில்
அதீத உணர்வுளோடு
கட்டிப்போடப்பட்டுத்தான்
கிடக்கிறார்கள்

அது எதுவானாலும்
சரிதான்
பிழையே இல்லை

ஆனால்
அதில் வைக்கும்
எந்தத் தீவிரமும்
எவ்வகை வன்முறையையும்
தூண்டிவிட்டுவிடவே
கூடாது

கூடவே கூடாது


*


திருடப் போகிறவன் திமிறுபவர்களைத் தீர்த்துக் கட்டுகிறான்

ஊழல் அரசியல்வாதி தட்டிக் கேட்பவனைத் தரைமட்டும் ஆக்குகிறான்

அரசியல் வெற்றிக்கு மதத்தின் உணர்வுகளை குத்தீட்டிகளாய்ப் பயன்படுத்துகிறான்

சொந்தச் சிரங்கை சாதியைத் தீண்டி சொரிந்துவிட்டுக் கொள்கிறான்

இப்படியாய் ஒரு வக்கிர மனிதனின் தகாத செயல்களுக்குத் தடையாய் இருப்பதையெல்லாம் வன்முறையால் அழிக்கிறான்

வன்முறை அழிய ஒரே ஒரு வழிதான் உண்டு

அறம் அறிவு அன்பு என்ற மூன்றையும் பிறந்த நிமிடம் முதலே மரபணுக்களில் பதித்துவிட வேண்டும்.

எப்படிப் பதிக்கலாம் என்று எல்லோரும் சிந்திக்கலாம்




*


அறம் அறிவு அன்பு
கொண்டு வாழ்வதுதான்
தனிமனித ஒழுக்கம்

இரண்டாவது இல்லாவிட்டாலும்
கடைசியைக் கைவிடக்கூடாது

முதலானது
முதன்மையானது
மாற்றுமருந்தே இல்லாதது


*


மேலை நாட்டவர்

பொருள்வழிச்

சிந்தனையாளர்கள்


நாமோ
உணர்வுவழிச்
சிந்தனையாளர்கள்


வெளிப்பார்வையில்

மேலை

உயர்வதுபோல் தெரியும்


ஆனால்

உண்மையில்

உயர்வானவர்கள்

நாம் தான்






*





நாத்திகம் விரும்புவோர்
நாத்திகத்திலேயே இருக்கட்டும்

ஆத்திகம் விரும்புவோர்
ஆத்திகத்திலேயே இருக்கட்டும்


இருவருக்கும் இடையில்
வன்முறை மட்டும்
இல்லாதிருக்கட்டும்

யார் வேண்டுமோ
எப்படி வேண்டுமோ இருக்கட்டும்
வன்முறையின்றி

அதுதான்
மனித நேயத்திற்கான
அவசியத் தேவை


*


கர்ப்பத்திலேயே
அறத்தையும் அன்பையும்
ஊட்டிவிட்டுவிட வேண்டும்


அறிவு
வளரும்போது
அந்த இரண்டும்
கேடாகிவிடக்கூடாத
தரத்தில்
மிக அழுத்தமாகப்
பதித்துவைத்துவிடவேண்டும்


பிறகென்ன
மனிதநேயம் மட்டுமே
உலகில் இருக்கும்


வன்முறை
கனவின் கண்களுக்கும்
தென்பாடாமல் போகும்






*


நான் அறிந்தவரை எந்த நாத்திகரும் குண்டு வைத்ததில்லை, கொலைசெய்ததில்லை. இருந்தால் சொல்லுங்கள்.


இது எனக்கு வந்த கேள்வி


கடவுளை நம்பாதவர்கள் நாத்திகர்தானே? ISIS, RSS ஆகியோருக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. கடவுள் நம்பிக்கை இருந்தால் அவர்கள் வன்முறையில் ஈடுபடவே முடியாது.


இது என் பதில்






*


சங்கராச்சாரியார் தீய செயல்களில் ஈடுபட்டால், தீய செயல்களுக்குத் துணை போனால் அவர் கடவுள் நம்பிக்கையே இல்லாதவர் என்று பொருள்.


நபிபெருமானார் தீய செய்ல்களில் ஈடுபட்டிருந்தால், தீய செயல்களுக்குத் துணைபோயிருந்தால் அவரும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்றே பொருள்






*






கடவுள் நம்பிக்கை இருந்தால் கடவுளுக்கு பயப்படவேண்டும் அல்லவா?


கடவுளுக்குப் பயந்தால் எப்படி தப்பு செய்ய முடியும்?


கடவுள் பயம் இல்லாதவன் தான் யாருக்கும் தெரியாமல் தப்பு செய்வான் - அவன் மனசாட்சி செத்துப் போயிருந்தால்.


கடவுள் பயம் உள்ளவனுக்கு மனச்சாட்சி கொஞ்சம் அழுத்தமாகவே இருக்கும் இல்லியா?


கொஞ்சம்தான் யோசித்துப் பாருங்களேன் ;-)


*



கேள்வி: உலகில் ஆத்திகரும் நாத்திகரும் மட்டும் தான் இருக்கிறார்களா? இருவருக்கும் இடையே தான் வன்முறையா?

பதில்: நல்ல கேள்வி. இவர்களுக்கு இடையில்தான் எல்லோரும் இருக்கிறார்கள்.

2% நாத்திகம் 98% ஆத்திகம்
98% ஆத்திகம் 2% நாத்திகம்


இப்படியே அடுக்கிக்கொண்டு போங்கள்.

கடவுள் நம்பிக்கைக் குறையக் குறைய குற்றங்கள் பெருகிய வண்ணம் இருக்கும்.

கேள்வி: இருவருக்கும் இடையே வன்முறை இல்லைங்க

இருக்கு, நாத்திகர்களும் ஆத்திகர்களும் சொல்வன்முறையில் வெகுவாகத் தாக்கிக்கொள்கிறார்கள்.

ஆத்திகர்கள் கூறும் அமைதி எங்கே, நாத்திகர்கள் கூறும் பகுத்தறிவு எங்கே என்று தான் தெரியவில்லை. அவர்களை எல்லாம் நான் இடைப்பட்டவர்களாகவே கொள்வேன். அவர்கள் முழுமையானவர்கள் அல்ல. ழுழுமையானவர்களாய் இருந்தால் அவர்களில் யாரும் வன்முறையில் இறங்கவே மாட்டார்கள்.

எல்லாம் அரைவேக்காடு, அவ்ளோதான் ;-)

*





நல்ல ஆத்திகரை ஒரு நாத்திகர் சந்தித்தால் அவர் ஆத்திகராகக்கூடும்.

நல்ல ஆத்திகரே கிடையாது என்ற நினைப்பில்தான் நாத்திகர்கள் அதிகரிக்கிறார்கள். இவர்கள் நல்ல நாத்திகர்கள்.

அதுமட்டுமல்ல, அறவழியில் விருப்பில்லாதவர்களும் நாத்திகர்களாய் ஆகிறார்கள். இவர்கள் கெட்ட நாத்திகர்கள்


*

நாத்திகர்கள் அவர்களுள் உள்ள நல்லவர்களைப் பற்றிமட்டுமே முன்வைத்து கருத்தாட வருகிறார்கள். அப்படி ஒருவருக்கு நான் இட்ட மறுமொழி இது.

நீங்கள் நல்லவர்களைப்பற்றி மட்டுமே பேசி இருக்கிறீர்கள். அதில் எந்தச் சிக்கலும் இல்லை. வக்கிரக்காரர்களைப்பற்றி யோசித்தீர்களா?

ஆகையால்தான் நான் தொடர்ந்து சொல்கிறேன். நீங்கள் நாத்திகராய் இருங்கள் அல்லது ஆத்திகராய் இருங்கள். எனக்குக் கவலை இல்லை. ஆனால் ஒருவருக்கொருவர் வன்முறையில் இறங்காதீர்கள் என்பதே என் தேவை. எப்போது வன்முறையில் இறங்குகிறீர்களோ அன்றே நீங்கள் ஆத்திகர் இல்லை, ஆனால் நாத்திகர் என்று தாராளமாய்ச் சொல்லிக்கொள்ளலாம்.


சரி, இனி வக்கிரம் கொண்டவர்களைப் பற்றிப் பார்ப்போமா? நாத்திகரில் வக்கிரம் கொண்டவர்களை அடக்க வழியே இல்லை. ஆத்திகரிலாவது அவ்வப்போது கடவுள் பயத்தை நினைவூட்டி மாற்றிவிடலாம். மாறினால் மட்டுமே அவன் மீண்டும் ஆத்திகராகமுடியும்.

அடுத்து, வக்கிரம் கொண்டவர்களுக்கு ஆத்திகர்கள் என்ற பெயர் பொருந்தாது. ஏனெனில் அதன் கட்டமைப்பில் வக்கிர மனம் செத்து ஒழிந்தால்மட்டுமே அவர் ஆத்திகராய் இருக்க முடியும். ஆனால் நாத்திகருக்கு அப்படியில்லை. அவர் எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம். அவரே அவருக்கான நிதிபதி. அவர் சட்டமே அவருக்கு. அவர் தர்மமே அவருக்கு.

அடுத்து, கடவுளை நம்பாதவர்களைத்தானே நாத்திகர்கள் என்கிறீர்கள்? மற்றபடி சிறந்த சிந்தனையாளர்கள், அறத்தால் வலுவானவர்கள், அன்பால் சிறந்தவர்கள், அறிவால் உச்சம் தொட்டவர்கள் என்ற வரையறையா தருகிறீர்கள்? ஆனால் ஆத்திகர்களுக்குத் தெளிவான வரையறைகள் உண்டு. கடவுள் பக்தி அவசிய்ம். கடவுள் பயம் அவசியம். என்று நீ கடவுள் பயம் அற்றுப் போகிறாயோ அன்றே நீ ஆத்திகன் இல்லை. எந்த தீமையை நீ செய்யலாம் என்று நினைத்தாயோ அன்றே நீ ஆத்திகன் இல்லை. மனிதநேயம் காத்தால் மட்டுமே நீ ஆத்திகன்.

*


























No comments: