இதனால் யாவருக்கும்.....

எந்த மதத்தில் இருப்பவருக்கும் எவ்வகை இறைமறுப்பில் இருபவர்களுக்கும் நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

மதங்களில் இருப்போரே நீங்கள் யாவரும் இறைவன் இறைவன் என்று இறைவனையே பாருங்கள். என் மதம் என்பதை மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக்கொண்டே இருக்கத் தேவையில்லை. அது உங்களுக்கு இடப்பட்ட ஒரு புனைபெயரைப் போல இருந்துவிட்டுப் போகட்டும். நீங்கள் நீங்களாக இறைவனையே நோக்கி இருங்கள். இறைமறுப்பாளரைக் கண்டால் தீண்டத்தகாதோரைக் காண்பதுபோலக் காணாதீர்கள். இறைமறுப்பாளர்களே இறைவனை உங்களைவிட அதிகம் நினைக்கிறார்கள். இறைவன் இப்படி இருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற ஏமாற்றத்தில்தான் பெரும்பாலான இறைமறுப்பாளர்கள் உருவாகி இருக்கிறார்கள்.

இறைமறுப்பில் இருப்போரே நீங்கள் யாவரும் பகுத்தறிவே எனக்கான எல்லாம் என்ற நிலையில் மட்டுமே இருங்கள். உண்மையான பகுத்தறிவு எல்லோருக்கும் வாழ்வளிப்பது, எவரையும் கீழானவர்கலாக நினைப்பதல்ல. அப்படி நினைப்பதன் பெயர் அகங்காரம். உங்களுக்கு விகாரமான அகங்காரம் தேவையில்லை, அற்புதனான பகுத்தறிவே தேவை. சிறந்த பகுத்தறிவு என்பது எல்லோரும் ஓர் நிலை எல்லோரும் உலக மக்கள், ஏற்றத்தாழ்வுகளே இல்லை என்ற நிலையைத் தேடுவது. இது மூடநம்பிக்கை என்று நீங்கள் எதையாவது நினைத்தால், அதனால் நேரடியாய் சமுதாயத்துக்கு என்ன கேடு என்ற கண்ணோட்டத்தில் அந்த மூட நம்பிக்கையைப் பாருங்கள். ஒருவன் தன் கடவுள் நம்பிக்கையால் எதையாவது அழிக்கிறானா என்று பாருங்கள். அழித்தால் அது இறைவனின் விருப்பமே அல்ல. அவனது மனோவியாதி. அதற்கான தண்டனையை அவர்களுக்குக் கொடுங்கள், இறைவன் மீது பாயாதீர்கள். பாய்ந்தால் நீங்கள் திசை தெரியாத பயணத்தில் இருக்கிறீர்கள் என்றுதான் பொருள்.

இறைவனுக்கு நம்மிடமிருந்து என்ன வேண்டும்?

1. அறம் - ஒழுக்கம் - நாம் கடைபிடிக்க  வேண்டும். இல்லையேல் நரகம் இருந்தால் சொர்க்கம்.

2. அன்பு - அரவணைப்பு - நாம் நிறைவாய்க் கொள்ளல் வேண்டும். ஏனென்றால் அன்புதான் இறைவனின் அடிப்படைப் பண்பு. அவன்மீது பற்றுள்ளோம் என்றால் நாம் அன்பின்மீதுதான் பற்றுகொண்டுள்ளோம் என்று பொருள். அல்லது நம் அன்பை அதிகப் படுத்த அதிகப்படுத்த, நாம் இறைவனுக்கு வெகு அருகாமைக்குச் செல்கிறோம்.

3. அறிவு - ஞானம் - இறைவனை அறிதலே சிறந்த ஞானம் என்கிறீர்கள். இறைவனை அறிதல் என்றால் என்ன? இறைவன் என்ன சொல்கிறான் என்பதை முழுமையாய் அறிவது. அவன் என்ன சொல்கிறான். அறமும் அன்பும் நிறைவாய்க்கொண்டிரு மனிதா என்கிறான்.

பகுத்தறிவாளர்களுக்கு என்ன வேண்டும்?

1. அறம் - ஒழுக்கம் - நாம் கடை பிடிக்க வேண்டும். இல்லையேல் நாம் மனிதர்கள் இல்லை, விலங்கிலும் கீழானவர்கள்.

2. அன்பு -  அரவணைப்பு - இது இரண்டும் இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை என்பதை பகுத்தறிந்தவர்கள் நீங்கள். அன்பு செய்யாவிட்டால் நீ மனிதனே இல்லை என்பீர்கள். அரவணக்காவிட்டால் உன்னிடம் மேன்மையான குணமே இல்லை நீ காட்டுமிராண்டி என்பீர்கள்.

3. அறிவு - ஞானம் - பகுத்தறிய அறிவு மிக அவசியம் என்கிறீர்கள். இயற்கையை எல்லாம் அதை அறிதலே ஞானம் என்கிறீர்கள். இயற்கை என்படி இன்புற்று வாழும். மனிதர்கள் அன்பும் அறனும் கொண்டு வாழாவிட்டால் இயற்கையே அழிந்துவிடும் என்பதை அறிவீர்கள்.

ஆகவே, இங்கே பாதை மாறினாலும் பயணம் ஒன்றுதானே? ஏனய்யா இன்னும் குத்திக்கொண்டு சாகிறீர்கள்?

தெரிகிறது எல்லோருக்குள்ளும் ஒரு ஹீரோ ஒரு வில்லன் இருக்கிறார்கள். அவர்கள் சில வேளைகளில் நம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

உள்ளே இருக்கும் வில்லனை உள்ளே இருக்கும் ஹீரோவால் அடித்து வீழ்த்திக்கொண்டே  இருக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு உங்கள் உள்ளே இருக்கும் வில்லன் வெளியே இருக்கும் ஹீரோக்களை கொன்றழிப்பதும் உள்ளே இருக்கும் ஹீரோ வெளியே இருக்கும் வில்லன்களைக் கொன்றழிக்கிறேன் என்று புறப்படுவதும் வன்முறை வன்முறை வன்முறைதான்.

எனக்கு இவ்வேளையில் ஒரு அருமையான செய்தி ஞாபகத்திற்கு வருகிறது. அது அறம் பற்றிய அருமையான போதனை.

தீமையை எங்கு கண்டாலும் உன் கரங்களால் தடு.
இயலாவிட்டால் உன் சொற்களால் தடு.
அதுவும் இயலாவிட்டால் அதை மனதளவில் வெறுத்து ஒதுங்கிச் செல்.

இந்த மூன்றையும் நான் இந்த நாகரிகக் காலத்திர்கு ஏற்ப அமைதியை நாடி எளிதாக வகை பிரித்துக்கொள்கிறேன்.

1. உன் கரங்களால் தடு என்பதை அரசிடம் விட்டுவிடலாம்.  அதற்குத்தானே அது இருக்கிறது. அது அதன் கடமையைச் செய்கிறதா என்று நாம் கண்காணிக்க வேண்டும். அரசு என்பது நாம் தானே? நம்மைப் பிரதிபளிக்கத்தானே அரசு. ஆகவே நம் கரங்களால்தானே தடுக்கிறோம்.

2. உன் சொற்களால் தடு என்பதை கவிஞர்கள், இலக்கியக்காரர்கள், தத்துவ ஞானிகள் போன்றோடிடம் விட்டுவிடலாம். நம்மைவிட அவர்கள் பலவற்றையும் சீர் தூக்கிப் பார்த்து சிந்தித்து எழுதுபவர்கள் சொல்பவர்கள். அவர்கள் சொன்னால் ஏற்க வேண்டும் போல இயல்பாகவே தோன்றும். ஆகவே நாம் நம் சொற்களால் தடுக்கிறோம்.

3. மனதில் வெறுத்து ஒதுங்கு - இது நாமே செய்யவேண்டிய முக்கியமான ஒன்று. அதை வெறுக்காமல் பாராட்டவோ நியாயம் பேசவோ தொடங்கிவிட்டால் (அதுதான் முகநூல் முழுவதும் நடக்கிறது) நாம் மனிதர்களாய் இருப்பதிலிருந்து விலகிக்கொண்டே இருக்கிறோம் என்று பொருள். முதல் இரண்டும் முழுமையாக நிறைவேனாலும் இந்த மூன்றாவது நிகழாமல் உலகம் ஒரு பொட்டும் மாறப்போவவே இல்லை.

ஆகவே அன்பு நெஞ்சங்களே, எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது.

வன்முறை விடுவோம் அன்பைத் தொடுவோம் அறத்தோடு வாழ்வோம் புதியதோர் உலகம் செய்வோம்!

No comments: