திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் புகுமுக வகுப்பில் கனவுகளோடு சேர்கிறேன். அதுவரை தமிழ்வழிக் கல்வியே பயின்ற என்னை ஆங்கிலவழிக் கல்வி என்று காய்ச்சி எடுக்கிறார்கள் பேராசிரியர்கள். ஒரு மண்ணும் புரியவில்லை. கண்களில் ஒரே இருட்டு. அப்போது மதியத்திற்குப்பின் ஒரு தமிழாசிரியர் வந்து அழகு தமிழ் பேசுகிறார். நம்புங்கள் மக்களே சொர்க்கம் என்பது செத்ததும் கிடைக்கும் ஏதோ ஒன்றல்ல. இப்படி அவ்வப்போது கிடைக்கும் பாக்கியம்தான்.
அந்தத் தமிழ்ப் பேராசிரியர் மன்சூர் அலி இளயவராகவே இருந்தார். இங்கே எவராவது கவிதை எழுதுவோர் இருப்பர். அவர்களிடமிருந்து நாளை ஒரு கவிதையை எதிர் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அதோடு கவிதை என்றால் என்ன என்பதை விவரித்தும் கூறியிருந்தார்.
உடனே அமர்ந்து ஒரு கவிதையை அன்று மாலையே எழுதினேன். அந்தக் கவிதைதான் இது. அவர் அடுத்தமுறை வகுப்பு வந்ததும் இந்தக் கவிதையை நீட்டினேன். அவரோ அப்படியே சட்டைப்பையில் செருகிக்கொண்டு ஒன்றுமே சொல்லாமல் சென்றுவிட்டார். என் பத்தாம் வகுப்புத் தமிழாசிரியராய் இருந்திருந்தால், அப்போதே வகுப்பில் அதை அலசிப் பேசி என்னை மகிழ்வித்திருப்பார். ஏமாற்றத்தோடு விடுதிக்குச் சென்று மௌனமாகவே இருந்துவிட்டு உறங்கிவிட்டேன்.
ஆனால் அடுத்த நாள் பேராசிரியர் மன்சூர் அலி அவர்கள் என்னை அள்ளி அனைத்ததை சொல்லி மாளாது. தன் நூலகம் அழைத்துச் சென்று அத்தனை நூல்களையும் நீ வாசிக்க வேண்டும் என்று அள்ளிக்கொடுத்தார். அப்படி ஒரு ஆசான் எனக்கு அதன்பிறகு கிடைத்ததாகச் சொல்லமாட்டேன். புகுமுக வகுப்பிற்குப் பிறகு நான் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. அது எனக்கு மகா வருத்தம். கவிஞர் வைரமுத்து அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஓ மன்சூரா நல்லாத் தெரியுமே என்று கூறினார். சந்திக்கலாம் என்றும் சொன்னார். இன்னும் நிறைய என் நினைவுகளை எழுதலாம். அலுவலகம் ஓட வேண்டும் நேரமாகிவிட்டது.
அன்று என் தமிழாசிரியர் கேட்டதற்காக நான் எழுதிய கவிதைதான் இது.
தமிழய்யா
தீந்தமிழ்ப் பாடங்களைத்
தித்திக்கப் புகட்டுமெங்கள் தமிழய்யா
நீந்தும் ஆசையை ஏந்திச் சென்றேன்
நீர்சொன்ன கவியாற்றில் நீச்சலிட
பூந்திடச்சில துணிவுகளைப் புகுத்தி
எனதாசையையும் வளர்த்துவிட்டீர்
காந்தம்முன் இரும்பாய்நான்
கவிபுனைய முற்பட்டேன்
பாந்தமாய்க் கவிவடிக்கப்
பெருந்துணையோ கருத்தென்றீர்
ஆந்தையாய் விழியுருட்டி
அலசியுமொரு பலனில்லை
ஏந்துக உணர்சிகளென்றீர்
எங்கிருந்தும் கிட்டவில்லை
சாந்திகெட்டேன் தமிழய்யா
கவிவருமோ இச்சிறுவனுக்கு
அன்புடன் புகாரி
19760615