ஓர் இஸ்லாமியன் வணக்கம்  என்று முகமன் கூறலாமா?

வணக்கம் என்ற சொல் ஒருவருக்கு ஒருவர் அன்பு தருவது, இன்முக இணக்கம் தருவது, உரிய மரியாதை தருவது என்று தொடங்கி பல அர்த்தங்களைக் கொண்டது.

ஒரு 90 வயது முதியவர் ஒரு 5 வயது சிறுவனிடம் வணக்கம் என்று சொல்கிறார். அதற்கு என்ன பொருள்?

முதியவர் சிறுவனுக்கு அன்பு தருகிறார், இன்முக இணக்கம் தருகிறார், உரிய மரியாதை தருகிறார்.

சிலருக்குத் தோன்றும் சிறுவனுக்கு ஏன் மரியாதை?

உலகின் சிறந்த பண்பாடே எல்லோருக்கும் எல்லோரும் மரியாதை தருவதுதான். யாரும் கீழானவரும் இல்லை யாரும் மேலானவரும் இல்லை.

இதைத்தான் ’பெரியோரை வியத்தலும் இலமே தம்மிற் சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ என்று தமிழ்ப்பண்பாடும் சொல்கிறது, சகோதரத்துவம் என்று இஸ்லாமும் சொல்கிறது.

ஒரு மாணவன் ஆசிரியருக்கு வணக்கம் சொல்கிறான் . ஓர் ஆசிரியர் மாணவனுக்கு வணக்கம் சொல்கிறார்.

ஒரு அரசியல் தலைவர் மக்கள்முன் வந்து வணக்கம் என்று சொல்கிறார்.  மக்கள் அரசியல் தலைவருக்கு வணக்கம் சொல்கிறார்கள்.

ஒரு குடிமகம் குடியரசுத் தலைவருக்கு வணக்கம் சொல்கிறான். அந்தக் குடியரசுத் தலைவரும் அந்தச் சாதாரண குடிமகனுக்கு வணக்கம் சொல்கிறார்.

இங்கெல்லாம் பரிமாறிக்கொள்ளப்படுவது அன்பும் இணக்கமும் மரியாதையும்தானேயன்றி  தொழுதல், வழிபடுதல் அல்ல என்று பெரிய விளக்கங்களைக் கூறிப் புரியவைக்க வேண்டிய அவசியமே இல்லை.

தமிழ் மிகவும் சொல்வளம் மிக்க மொழி. வணக்கம் என்ற சொல்லுக்குத் தமிழில் பலபொருள்கள் உள்ளன. அவற்றுள் சில கீழே தரப்பட்டிருந்தாலும் இவை மட்டுமே என்று சொல்லிவிடமுடியாத அளவுக்குத் தமிழ் வளமை நிறைந்த மொழி.

அன்பு பரிமாறல்
இணக்கம் பேணுதல்
உரிய மரியாதை தருதல்
போற்றுதல்
வாழ்த்துதல்
வரவேற்றல்
நன்றி உரைத்தல்

இவை பயன்படுத்தும் இடத்திற்கேற்ப மாறிவரும்.

பலருக்கும் ஆங்கிலத்தை உதாரணமாகச் சொன்னால் சட்டென்று விளங்கிவிடும். love என்பது நான்கே எழுத்துச் சொல்தான். ஆனால் இதன் பொருள் இடத்துக்கு இடம் ஆளுக்கு ஆள் மாறுபட்டுக்கொண்டே இருக்கும்.

I love you என்று...

தாய் மகனிடம் சொல்கிறாள்
மகன் தந்தையிடம் சொல்கிறான்
சகோதரன் சகோதரனிடம் சொல்கிறான்
நண்பன் நண்பனிடம் சொல்கிறான்
காதலன் காதலியிடம் சொல்கிறான்
கணவன் மனைவியிடம் சொல்கிறான்
ஆசிரியன் மாணவனிடம் சொல்கிறான்
மாணவன் ஆசிரியரிடம் சொல்கிறான்
ரசிகன் கலைஞனிடம் சொல்கிறான்
கலைஞன் ரசிகனிடம் சொல்கிறான்
பக்தன் கடவுளிடம் சொல்கிறான்

இன்னும் யார் யாரோ யார் யாரிடமோ சொல்கிறார்கள். எல்லாவற்றுக்கும் ஒரே பொருள்தான் என்று எவரும் சொல்லமாட்டார்.

இப்படியான love என்ற சொல்லுக்கு இணையான அல்லது அதனினும் மேம்பட்டத் தமிழ்ச் சொல்தான்  வணக்கம்.

வணக்கம் என்ற சொல் மனிதருக்கு மனிதர் சொல்லும் முகமனாக பயன்படும்போது, வணங்குதல் என்ற சொல் இறைவனை மட்டுமே வணங்குவதற்கு உரியதாய் ஆகிவிடுகிறது குறிப்பாக இஸ்லாத்தில்.

என் தந்தையை நான் வணங்கிவிட்டு வருகிறேன் என்று ஒரு இஸ்லாமியன் சொல்ல மாட்டான். ஏனெனில் பெற்றோரைத் தெய்வமாகக் காண்பது இஸ்லாத்தில் இல்லை.

என் ஆசானை நான் வணங்கிவிட்டுவருகிறேன் என்று ஒரு இஸ்லாமியன் சொல்லமாட்டான் பதிலாக என் ஆசானுக்கு வணக்கம் சொல்லி நலம் விசாரித்துவிட்டு வருகிறேன் என்று சொல்வான். ஏனெனில் ஆசானைத் தெய்வமாகக் காண்பது இஸ்லாத்தில் இல்லை.

வணங்குதல் என்பது இறைவனைத் தொழுதல் அல்லது வழிபடுதல். அந்த வழிபாட்டில்

நான் உன்னைப் படைத்தவனல்லன்
நீதான் என்னைப் படைத்தவன்

நான் உனக்கு அருள் தருபவனல்லன்
நீதான் எனக்கு அருள் தரவல்லவன்

நான் தேவைகள் உள்ளவன்
நீயோ தேவைகள் அற்றவன்

நான் இறப்பினைக் கொண்டவன்
நீயோ இறப்பே இல்லாதவன்

நான் மனிதன்
நீ இறைவன்

போன்ற அறிதல்களே இருக்கும்.

ஆகவே சிரம்தாழ்த்தி நெற்றி மண்ணில் பதிய இறைவா உன்னை நான் வணங்குகிறேன்

இவ்வாறான வணங்குதலை நானே உனக்குச் செய்கிறேன் நீ எனக்குச் செய்வதில்லை

ஒரு கற்பனைக்கு இப்படி வைத்துக்கொள்வோம். இறைவன் நேரில் வந்துவிட்டான்.

இறைவா நான் உன்னை வணங்குகிறேன் என்று ஒருவன் நெற்றியைத் தரையில் முத்தமிடச் செய்கிறான். இறைவன் என்ன செய்வான்?

தானும் அந்த மனிதனிடம், மனிதா நான் உன்னை வணங்குகிறேன் என்று தன் நெற்றியைத் தரையில் முத்தமிடச் செய்து கிடப்பானா?

கற்பனையிலும் கூட இது ஏற்புடையதாய் இல்லை அல்லவா? ஆகவே வணக்கத்தையும் வணங்குதலையும் ஒன்றென எவராலும் கொள்ளமுடியாது.

இஸ்லாமிய சகோதரர்கள் பிற இஸ்லாமிய சகோதரர்களைச் சந்திக்கும்போது அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்கிறார்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் அன்பும் அமைதியும் நிறைக என்று பொருள். சாந்தியும் சமாதானமும் உண்டாகுக என்று பொருள்.

அப்படியான அஸ்ஸலாமு அலைக்கும் என்ற முகமனை இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்குமே இஸ்லாமியர் சொல்லலாம். இறை நம்பிக்கையே இல்லாதவரிடமும்கூட சொல்லலாம்.

இஸ்லாமியர் அல்லாத ஒருவரைச் சந்திக்கும்போது அவரிடம் அஸ்ஸலாமு அலைக்கும்  என்று சொல்வது மிகவும் நல்லது. அது இஸ்லாத்தின் மீதுள்ள புரிதல்களை உலகெங்கும் வளர்க்கும்.

அதோடு மனிதகுலம் அனைத்தும் சாந்தி சமாதனத்துடன் இருக்க வேண்டும் என்று எண்ணுவது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்று. அதை ஓர் இஸ்லாமியன் செய்யத்தானே வேண்டும்?

பொருளையும் பயன்பாட்டையும் சரியாகப் புரிந்துகொண்டுவிட்டால் யாதொரு குழப்பமும் வராது.

வணக்கம் என்று முகமன் கூறும் மாற்றுமதத்தவருக்கு நிச்சயமாக வணக்கம் என்று பதில் சொல்லலாம், அல்லது அவர்களை நோக்கி நாம் வணக்கம் என்று கூறி நம் உரையாடலைத் தொடங்கலாம்.

இதனால் நாம் ஏதும் இறைவனுக்கு இணைவைத்துவிட்டோமோ என்று ஐயம் கொள்ளத் தேவையில்லை.

வணக்கம் என்று சொல்வது வணங்குவது இல்லை, தொழுவது இல்லை, வழிபடுதல் இல்லை, இணைவைப்பது இல்லை என்பது தெளிவானதாக இருந்தாலும், ஒருவருக்கு அவரின் மன இயல்பு காரணமாக, வணக்கம் என்று மறுமொழி சொல்வது  சங்கடம் தருவதாக இருந்தால், பிறர் வணக்கம் என்று சொல்லும்போது, தமிழிலேயே வேறு ஏதேனும் நல்ல வார்த்தையைச் சொல்லலாம்.

உதாரணமாக, ‘மகிழ்ச்சி’, ‘சந்தோசம்’, ‘நலம்பெருக’, ’இனிதாகுக’, ‘வாழ்க’, ‘வளர்க’, ’வாழ்க வளமுடன்’, ‘அருள் நிறைக’, 'அன்பு வளர்க’, ’இன்பம் நிறைக’, ’இனிமை பொங்குக’ என்று எதையாவது மென்மையான முறையில் கூறலாம். அல்லது அலைக்கும் அஸ்ஸலாம் என்றும் சொல்லலாம்.

ஓர் இஸ்லாமியன் வணக்கம் என்று சொல்லும்போது அவனுக்கு ஓர் ஐயமும் சங்கடமும் வருவதற்கு மிக அழுத்தமான காரணம் உண்டு.

இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படை நம்பிக்கை என்னவென்றால் ‘வணங்குதலுக்குரியவன் இறைவனைத் தவிர வேறுயாருமில்லை’ என்பதுதான்.

அதாவது இஸ்லாம் மனிதர்களை இறைவனாகப் பார்க்காது. குருவை இறைவனாக எண்ணி வணங்காது. பெற்றோரை கடவுள்களாக்கித் தொழாது. தலைவர்களைத் தெய்வங்களாக்கி  வழிபடாது.

ஒரு சொல்லில் சொல்வதென்றால் இறைவனுக்கு இணைவக்கவே வைக்காது.

எப்போது ஓர் இஸ்லாமியன் இறைவனுக்கு இணை வைக்கிறானோ அப்போது அவன் இஸ்லாத்தைவிட்டே வெளியேறுகிறான் என்றாகிவிடும்.

ஆகவே வணக்கம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதால் நாம் எங்கே இணைவைத்துவிடும் கொடும் பாவத்தைச் செய்துவிடுவோமோ என்று ஓர் இஸ்லாமியன் அஞ்சுகிறான்.

ஆகையால் அவனது சங்கடத்தை மாற்று மதத்தினர் தவறாக எண்ணுதல் கூடாது.

அதுபோலவே, ஓர் இஸ்லாமியனும் வணக்கம் என்று மணிதர்களிடம் சொல்வதால் அவன் இறைவனுக்கு இணைவைத்துவிட்டான் என்று அச்சங்கொள்ளத் தேவையில்லை.

தாய் மண்ணே வணக்கம் என்றால் தாய் மண்ணை நான் நேசிக்கிறேன் என்றுதான் பொருள். தாய் மண் என்பது இறைவன் என்று பொருள் அல்ல.

வணக்கம் என்று சொல்வது வேறு, இறைவனை வணங்குதல் என்னும் தொழுகை என்பது வேறு  என்கிற வேறுபாட்டைச் சரியாகப் புரிந்துகொள்ளும் முகமாகத்தான் இறைவனை வணங்குதலைத் தமிழில் தொழுகை என்றும் மனிதர்களுக்கு முகமன் கூறுவதை வணக்கம் என்றும் அன்றே அழகாக வரையறுத்துக் குழப்பத்தை நீக்கி இருக்கிறார்கள் இஸ்லாத்தை நன்கு அறிந்த தமிழ் அறிஞர்கள்.

அன்புடன் புகாரி



நிகழ்ச்சி என்ன?

கட்டிப்பிடி 
வைத்தியம்



எப்போது?

பெருநாள்
தொழுகையின் 
நிறைவில்



எங்கே?

டொராண்டோ
இஸ்லாமியக் 
கல்விநிறுவனப் 
பள்ளிவாசல் 
திடலில்



ஏன்?

யாதும் ஊரே
யாவரும் கேளிர்



எதற்கு?

இனிய 
ஈகைப் பெருநாள்
வாழ்த்துக்கள்

அன்புடன் புகாரி






தமிழ்நாட்டில் இந்து முஸ்லிம் கிருத்தவர்கள் அனைவரும் அவரவர் பண்டிகைகளுக்கு ஒருவருக்கொருவர் விருந்து பரிமாறி மகிழ்வது வாடிக்கை. புலம்பெயர்ந்த கனடாவிலும் குடும்பங்களுக்கு இடையே இது நடந்துகொண்டுதான் இருக்கிறது.
ஆனாலும் சங்கங்கள் வழியாக தனித்தனியே பண்டிகைகள் கொண்டாடப்பட்டுவந்தாலும், நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டை இதுவரை யாரும் முன்வந்து இங்கே செய்ததில்லை.
இந்த ஆண்டு Tamilnadu Community Centre என்கிற தமிழ்ச் சமூகச் சங்கத்தின் நிறுவனர் திரு வல்லிக்கண்ணன் அதைத் தொடங்கி வைத்தார். அவரின் அழைப்பு எனக்கு வந்தபோது இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது.
ஜூன் 23 வெள்ளியன்று ஒரு விருந்து மண்டபத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அசத்திவிட்டார். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்.
தமிழர்களுள் ஒரு முன்னோடியாக நண்பர் வல்லிக்கண்ணன் இந்த ஏற்பாட்டைச் செய்த இதே ஆண்டு, முதன் முறையாக டொரோண்டோ நகரசபையும் நோன்பு திறக்கும் ஏற்பாட்டையும் தொழும் ஏற்பாட்டையும் அது பற்றி சொற்பொழிவுகள் ஆற்றும் ஏற்பாட்டையும் செய்து வியக்க வைத்தது.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இஸ்லாமியர்கள் போன்ற சிறுபான்மையினரை அரவணைப்பதில் முதன்மையானவர் என்பதை உலகே அறியும். அவரின் ஆட்சியில் இன்னும் இதுபோன்ற நிறைய எதிர்பார்க்கலாம்.
நன்றி
வல்லிக்கண்ணன்
டொராண்டோ மாநகரசபை
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்

அளவற்ற அருளாளனின்
என்றும் - நிகரற்ற அன்பாளனின்
களவற்ற உள்ளங்களில்
நாளும் - குறைவற்று வாழ்பவனின்

நிறைவான அருள்நாளிது
நெஞ்சம் - நிமிர்கின்ற பெருநாளிது
கரையற்ற கருணையினை
ஏந்திக் - கொண்டாடும் திருநாளிது

மண்ணாளும் செல்வந்தரும்
பசியில் - மன்றாடும் வறியோர்களும்
ஒன்றாகக் தோளிணைந்தே
தொழுது - உயர்கின்ற நன்நாளிது

இல்லாதார் நிலையறிந்து
நெஞ்சில் - ஈகையெனும் பயிர்வளர்த்து
அள்ளித்தினம் பொருளிறைக்க
வறுமை - அழிந்தொழியும் திருநாளிது

சொந்தங்கள் அள்ளியணைத்து
நட்பின் - பந்தங்கள் தோளிழுத்து
சிந்துகின்ற புன்னகையால்
உறவைச் - செப்பனிடும் சுகநாளிது

உள்ளத்தின் மாசுடைத்தும்
தளரும் - உடலுக்குள் வலுவமைத்தும்
நல்லின்ப வாழ்வளிக்கும்
வலிய - நோன்பில்வரும் பெருநாளிது

நபிகொண்ட பண்பெடுத்து
அந்த - நாயகத்தின் வழிநடந்து
சுபிட்சங்கள் பெற்றுவாழ
நம்மைச் - சேர்த்திழுக்கும் பிறைநாளிது

சமத்துவமே ஏந்திநின்று
என்றும் - சகோதரத்தைச் சொல்லிவந்து
அமைதியெனும் கொடிகளேற்றி
எவர்க்கும் - அன்புசிந்தும் பொன்னாளிது

அனைவருக்கும் ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்
இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்

ஈத் முபாரக்

அன்புடன் புகாரி



உங்கள் கலிபோர்னியா பற்றிய கவிதையில் உங்களுக்குப் பிடித்த வரிகள் எவை அந்தக் கவிதையின் சிறப்பு அம்சம் எது? 

நான் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பிறந்தவன் என்றாலும் கனடாவிலிருந்து வந்திருக்கிறேன் என்று அறிவீர்கள். எனக்கொரு வழக்கம். நான் எங்கு சென்றாலும் சென்ற இடத்து அழகினை என் உயிர்முட்டப் பருகி உணர்வு பொங்கப் பாடி மெல்லக் கூத்தாடி மகிழ்வேன்

கலிபோர்னியா என்னை வெகுவாகக் கவர்ந்தது. பொற்பட்டுச் சிறகசைக்கும் பட்டாம் பூச்சியாய் அது என் இதயக் கொடியில் வந்து சிலிர்ப்பாய் அமர்ந்தது. அதைப் பாடி வைத்தேன் என் உள்வெளிகள் பூத்து

இந்தக் கவிதை வல்லினம் மிகக்கொண்டு இசைகூட்டிச் செய்யப்பட்ட சந்தக் கவிதை. தொடர் எதுகைகள் கோத்து இதயத்தில் மகிழ்ச்சித் தாளம் எழ கவனமாய் உருவாக்கப்பட்ட கடினமான நடை, ஆனாலும் எளிமையான தமிழ்.

வல்லினம் மிகக்கொண்ட தமிழ்க் கவிதைகளை மேடைகளில் வாசிப்பது எப்போதுமே ஆனந்தத்தை அள்ளித் தரும். வல்லினம் தமிழின் அழகு. மொழியறியாதவர்களிடம் வல்லினக் கவிதை வாசித்தால் இதுதமிழ்தானே என்று சட்டென்று அடையாளம் கண்டுகொள்வார்கள். அந்த வல்லினத் தமிழ் அழகு வேறு எந்த மொழியிலும் இருக்கிறதா என்பது ஐயமே

அடடா அடடா கலிபோர்னியா
அமெரிக்க மண்ணின் எழில்ராணியா
அழகோ அழகு கலிபோர்னியா

வட்ட வட்ட நிலவைத் தொட்டுத்தொட்டுப் பேசும்
         உச்சி மலைத்தொடரும் உண்டு
எட்டி எட்டிப் பார்க்க தட்டுப்படா அடியில்
        வெத்துப் பள்ளத்தாக்கும் உண்டு

நட்ட நடு வானை முத்தமிட்டு ஆடும்
        நெட்டை மரக்காடும் உண்டு
தொட்டுத் தொட்டுக் கரையில் கட்டுக்கதை எழுதும்
        சிட்டு அலைக்கடலும் உண்டு  

அடடா அடடா கலிபோர்னியா
அமெரிக்க மண்ணின் எழில்ராணியா
அழகோ அழகு கலிபோர்னியா

சுட்டுச் சுட்டு எரிக்கும் பொட்டில் அனல்தெறிக்கும்
         பொட்டல் வெளிப் பாலையும் உண்டு
மொட்டு விட்டுப் பூத்து வெட்டுங்குளிர் கோத்து
         கொட்டும் பனித்தூறலும் உண்டு

நெட்டி கிட்டி முறித்து தட்டுத் தடுமாறி
         கெட்ட நில நடுக்கமும் உண்டு
வெட்டி வெட்டி எடுக்க கொட்டிக்கொட்டிக் கொடுத்த
         கட்டித் தங்கச் சுரங்கமும் உண்டு

அடடா அடடா கலிபோர்னியா
அமெரிக்க மண்ணின் எழில்ராணியா
அழகோ அழகு கலிபோர்னியா

விட்டு விட்டு மேகம் கொட்டிக்கொட்டிப் போகும்
          பச்சை வயல் வெளியும் உண்டு
எட்டி எட்டிப் பார்த்து விட்டுவிட்டுக் குமுறும்
          வெள்ளை எரி மலையும் உண்டு

பட்டுச் சிட்டுப் போல மெட்டுக்கட்டித் தாளம்
         இட்டுச் செல்லும் நதிகளும் உண்டு
தட்டித் தட்டி உலகைக் கட்டிக்கட்டி ஆள
        விட்ட கணிப்பொறியும் உண்டு  

அடடா அடடா கலிபோர்னியா
அமெரிக்க மண்ணின் எழில்ராணியா
அழகோ அழகு கலிபோர்னியா

எட்டுப் பத்து மாடி கட்டித்தரும் வலிமை
         கிட்டித் தரும் செல்வமும் உண்டு
கட்டுக் கட்டு நோட்டுகள் கொட்டிக்கொட்டிக் கொடுத்தும்
         வட்டி கட்டும் செலவும் உண்டு

சொட்டுச் சொட்டுத் தேனாய் பட்டுப்பட்டுக் கவிதை
        இட்டுத்தர நானும் உண்டு
தட்டித் தட்டிக் கைகள் கெட்டிமேளச் சத்தம்
        கொட்டித்தர நீங்களும் உண்டு  

அடடா அடடா கலிபோர்னியா
அமெரிக்க மண்ணின் எழில்ராணியா
அழகோ அழகு கலிபோர்னியா

அன்புடன் புகாரி
கடும் வெயில் காலத்தில், தலை முதல் கால் வரை ஒருவரை கருப்புத் துணி கொண்டு மூடச்சொல்வது அந்த மனிதர் மீதான அடக்குமுறை தான். இந்த அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுபவர்கள் இசுலாமிய பெண்கள் தான். அதை அவர்களைச் செய்யச்சொல்லி வற்புறுத்துவது எது? மதமா இல்லை மதவெறி பிடித்த மனிதர்களா? எதுவாகினும் அப்பெண்கள் அதை அனுபவிக்கக் காரணம் இசுலாமிய வீட்டில் பெண்ணாகப் பிறந்தது தான் - சுபாசினி சிவா
நீங்கள் ஒரு மதத்தை அதில் பெண்கள் உடுத்தும் உடை கொண்டுமட்டும்தான் பார்க்கிறீர்களா?
நான் கனடாவில் வாழ்கிறேன். கோடையும் வந்துவிட்டது. டவுண்டவுன் - நகர மத்திக்குச் சென்றால், எதிர் இருக்கைப் பெண்ணின் ஆடை, ஆடையே இல்லாததாய் இருக்கிறது. உங்களுக்கு விரிவாகச் சொல்லத் தேவை இருக்காது என்று நம்புகின்றேன்.
இன்னொரு பக்கம் ஒரு நாட்டின் கலாச்சார உடை காரணமாக கறுப்புக்குள் கண்கள் மட்டுமே தெரியும்படி பெண்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்.
இஸ்லாம் மதம் படி கண்ணியமான உடை உடுத்த வேண்டுமே தவிர இதெல்லாம் அவசியமானதல்ல என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அதன் மத நூலான குர்-ஆனை வாசித்தறிய வேண்டும்.
ஏசுநாதரின் அம்மா எப்படி உடை உடுத்தி இருந்தார்கள் என்று அறிவீர்களா? ஏசுநாதரின் அம்மா மட்டுமல்ல அப்போது அங்கு வாழ்ந்த எல்லோருமே என்ன உடை உடுத்தினார்கள் என்று தெரியுமா?
நம் தமிழ்ப்பாட்டன் ஒரு கைக்குட்டையைக் கோவணமாய்க் கட்டித் திரிந்தான். தமிழ்ப்பாட்டியோ 16 முழச் சேலையைச் சுற்றிச் சுற்றிக் கட்டிக்கொண்டு நின்றாள்.
அந்தச் சேலையை வெட்டினால் ஒரு 100 பாட்டனாவது ஆடைகட்டிக் கடைவீதிக்கு வந்துவிடுவான்.
தமிழ்ப்பாட்டன் தமிழ்ப்பாட்டிகளை அடிமைகளாய் வைத்திருந்தான் என்றா சொல்வோம்?
அறிவு, அன்பு, பண்பு, நட்பு, நாகரிகம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் வளரட்டும். பிறகு பாருங்கள் அடக்குமுறை என்ற சொல்லே காணாமல் போகும்.
* * * *

நம்பிக்கை
மகா வலிமையானது

காடுகடக்கும்
ஒரு சிட்டுக்குருவிக்கு
அடர்த்தியான
இறகுகளைக் கொண்ட
சிறகுகளைப்போல

நம்பிக்கை
இல்லா நிலையில்
மரணம்
மிக நெருக்கமானது

வழுக்கும்
கண்ணாடிச் சிலையை
நடுங்கும் கரங்களில்
ஏந்தி நிற்பதைப்போல

அன்புடன் புகாரி
20160810


தமிழ் வளர புலம் பெயர்ந்த தமிழர் என்ன செய்ய வேண்டும்?

நான் பல தமிழ்ச் சங்கங்களுக்குச் சென்றிருக்கிறேன், பல இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன், ஈழத் தமிழர்கள் வாழும் கனடாவில் வாழ்கிறேன், தமிழகத் தமிழர்கள் நிறைந்திருக்கும் இடங்கள் பலவற்றுக்கும் சென்றிருக்கிறேன்.

அங்கெல்லாம் நான் கண்ட ஓர் கசப்பான உண்மை இதுதான். நாற்பதைக் கடந்தவர்களே அவை நிறைய வீற்றிருப்பார்கள். இளைஞர்கள் மிக அரிதாகவே தென்படுவார்கள்.

ஏன்?

இளைஞர்களை ஏந்திக்கொள்ளாமல் தமிழ் நாளைய தமிழாய் ஆகுமா? வெல்லத் தமிழ் இனி வெல்லுமா? நாம் அடிப்படையில் ஏதோ தவறிழைக்கிறோம்.

தமிழை அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் இருக்கையில் அமர்த்துவது அவசியம்தான் மறுப்பதற்கில்லை. ஆனால் அதைவிட செய்யவேண்டிய மிக முக்கியமான காரியம் ஒன்று உண்டல்லவா?

இன்றெல்லாம் இரண்டரை வயதிலேயே பிஞ்சுகள் பள்ளிக்குச் சென்றுவிடுகின்றன. ஆனால் அங்கே அவர்கள் தமிழையா கற்கிறார்கள், தாய் மொழியோடா உறவாடுகிறார்கள்? அந்த அந்த நாட்டு மொழியையல்லவா கற்கிறார்கள்?

நாம் அதனைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் புலம்பெயர்ந்த நாட்டில் தமிழுக்கு ஏது எதிர்காலம்?

ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டிலிருந்து தமிழ்க் குழந்தைகள் தமிழோடு அயல்நாடு வருவதும், சில வருடங்களில் அப்படியே தமிழறியாதவர்களாய் ஆவதும், பின் புதிய வரவுகள் வருவதும், பின் அவர்களும் விழுங்கப்படுவதும் என்ற அவல நிலையல்லவா நிகழ்கிறது.

புலம்பெயர் நாடுகளில் தமிழ் என்ன முதியவர் - ’சீனியர் சிட்டிசன்’களுக்கான மொழியா?

நாம் முயன்றால் நம்மால் நாற்பது மில்லியன் ஐம்பது மில்லியன் டாலர்கள் என்று வசூலிக்க முடிகிறது. ஆனால் நாம் செய்ய வேண்டியது என்ன?

இலவசமாக பிஞ்சுகளுக்குத் தமிழ்ப்பள்ளிகள் அமைப்பதும், தமிழ் சொல்லித் தருவதும், சிறுவர் பராமரிப்புக் கூடம் நடத்துவதும்தானே?

புலம்பெயர்ந்த ஒவ்வொரு ஊரிலும், அப்படியான தமிழ்ப் பள்ளிகள் பல்கிப் பெருகுதல் வேண்டும். அதுவன்றி தமிழின் பெருமை பேசுவதும் தொன்மை பேசுவதும் வெட்டிப் பேச்சு என்றே இங்கே நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

நாம் இங்கே ஆயிரம் காமராசர்களாய்ச் செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

நான் அயல்நாட்டில் எந்த ஊர் சென்றாலும் அங்கே முதலில் பாராட்டுவது தமிழ்ப்பள்ளி நடத்துவோரையும் அதன் ஆசிரியர்களையும்தான். அவர்களே தமிழுக்காகப் பாடுபடும் களப் பணியாளர்கள் என்பேன்.

அன்புடன் புகாரி

நேற்று ஜூன் 18, 2017 தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 18வது இயல் விருது விழா சிறப்பாக நடந்தது.

தமிழ் இலக்கியத் தோட்டம் 2001ம் ஆண்டு டொராண்டோ - கனடாவில் தொடங்கிய ஆண்டிலிருந்து நான் அதன் இயல் விருது விழாவிற்குத் தவறாமல் சென்றுவருவதை மனநிறைவானச் செயலாகச் செய்துவருகிறேன். அன்போடு எனக்கு அழைப்பிதழ் அனுப்புவதை ஒருபோதும் இலக்கியத் தோட்டக் காவலர் அ.முத்துலிங்கம் அவர்கள் மறந்ததில்லை. நன்றி முத்துசார்.

இந்த ஆண்டின் சில சிறப்புகளைச் சொல்லியே ஆகவேண்டும்.

1. இதுவரை பல்கலைக்கழகம் மற்றும் விடுதி மண்டபங்களில் நடத்திவந்த இயல் விருது விழா, இம்முறை அழகிய விருந்து மாளிகையில் அமர்க்களமாய் நடந்தது. புதுமையாக அனைவருக்கும் இரவு உணவும் வழங்கப்பட்டது. தொலைதூர விமானப் பயணத்தில் தரப்படும் உணவைப் போலத் தரமானதாக அது இருந்தது. சுகமாக நண்பர்களுடன் அமர்ந்து இனிதாக அனைத்து உரைகளையும் கேட்க முடிந்தது. ஆக மொத்தத்தில் முன்பெல்லா விருது விழாக்களையும் விட இம்முறை கூடுதல் வசதி கொண்டதாக இருந்தது.

2. தமிழ்த் திரைப்பட இயக்குனர் மிஷ்கின் அவர்களுக்குக் கற்பனையற்ற படைப்புக்கான விருது வழங்கப்பட்டது. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற திரைப்படம்தான் அந்தக் கற்பனையற்றத் திரைப்படம். கற்பனை இல்லாமல் திரைப்படமா என்று விரியும் ஏளனப் புன்னகையை வியாபார யுத்திகள் இல்லாமல் எடுக்கப்பட்ட அந்தப்படம் அப்படியே மாற்றி புருவங்களை வியந்து உயர்த்த வைத்துவிடும் என்பது உண்மை. அதைவிட மிஷ்கினின் வலிமிகுந்த பேச்சு அருமையாக இருந்தது. நேரடியாய் இதயத்திலிருந்து அப்படியே வார்த்தைகளைக் கொட்டினார்.  விருது தராதோர் உலகில், தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இந்த விருது அவருக்குக் கிடைத்தற்கரிய விருது என்று கூறி அனைவரின் நீண்ட கைத்தட்டல்களைப் பெற்றுக்கொண்டார்.  இதுவரை திரைப்பட இயக்குனர்களுக்கு விருது வழங்கியதாய் எனக்கு நினைவில்லை. அப்படியே வழங்கி இருந்தாலும் மிஷ்கினுக்கு வழங்கியதை நான் சிறப்பானதென்றே சொல்வேன். சில நிமிடம் அவரோடு உரையாடி ஒரு புகைப்படமும் எடுத்துக்கொண்டேன்.

3. சேலைகட்டி வந்து செந்தமிழ் பேசிய சுவிசர்லாந்து ஈவ்லின் என்ற பெண்மணிக்கு மொழியாக்க விருது வழங்கப்பட்டது. பச்சைச் சேலையில் வெள்ளைப் புறாவாக வந்து ஆங்கிலக் கலப்பே இல்லாமல் தமிழ் பேசியதைப் பாராட்டத்தான் வேண்டும். தமிழ்ச் சிறுகதைகளை ஜெர்மன் மொழியில் ஆக்கித் தந்த இவர் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பயின்று முனைவர் பட்டம் பெற்றவர். தமிழைப் பிறமொழி நாவின் வழியே கேட்பதைக் காட்டிலும் இனியது குழலும் இல்லை யாழும் இல்லை.

4. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் ஹார்ட்வர்ட் தமிழ் இருக்கையின் முதற் கொடையாளர்  திருஞானசம்பந்தம் அவர்களின் செயலை அறிமுகம் செய்துவைத்த பேச்சு மிகுந்த சுவை நிறைந்ததாக இருந்தது. பாரி தொட்டு கர்ணனின் தொட்டு வரலாற்றுக் கொடை வள்ளர்களின் குணங்களை விவரித்த விதமும் அவர்களோடு ஒப்பிட்டுப் பேசிய அழகும் வெகுசிறப்பு. தொடர்ந்த திருஞானசம்பந்தம் அவர்களின் நேரடியான பேச்சு. வாழ்வதற்குத் தமிழ் வேண்டும், ஆயிரம் கோவில்களுக்கிடையே அறிவுக் கோவில் ஒன்று வேண்டும் என்று சொல்லிச் சிலிர்த்தார். அவரோடு உரையாடியபோது உங்கள் குடும்பம் பற்றிக் கூறுங்கள் என்றேன். எனக்குப் பிள்ளைகள் கிடையாது தமிழ்தான் என் பிள்ளை தமிழர்கள் எல்லோரும் என் பிள்ளைகள் என்றார்கள். என்னையும் உங்கள் பிள்ளையாய் ஏற்றதற்கு நன்றி என்றேன். அப்படியே கட்டியணைத்துக்கொண்டார். அதில் அன்பும் பாசமும் கதகதப்பாய் இருந்தது. தமிழைத் தாய் என்பார்கள், தமிழைப் பிள்ளையாகவும் பார்க்கும் அந்த மனது தமிழை எப்படிச் செல்லமாகப் பார்க்கிறது, வீழ்ந்துவிடாமல் நிறுத்திப் பிடிக்கும் விழுதுகளாகப் பார்க்கிறது என்று நினைத்து நெகிழ்ந்தேன்.

5. இளம் மாணவிகளிடையே தமிழை ஊக்குவிக்கும் விதமாக, மேடையேறும் தகுதியுடைய பள்ளி மாணவிகளை அவர்களின் அருமை பெருமைகளைச் சொல்லி விருது பெறுவோர் பற்றிய முன்னுரைகளை வழங்கச் செய்தது புலம்பெயர்ந்த நாடுகளில் இளைய தலைமுறையினரிடையே தமிழ் வளர்ச்சிக்கான பாராட்டுக்குரிய பணி என்பதில் ஐயமில்லை.

6. 18 வது இயல் விருது கவிஞர் நா.சுகுமாரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அறியப்படாதவரை அறியப்பட வைக்கும் கனடிய இயல் விருது விழாவைப் புகழ்ந்தார். புரியாத ஒன்றையோ பொய்யான ஒன்றையே தான் எழுதுவதில்லை என்று தான் முடிவெடுத்ததாகச் சொன்னது பாராட்டுக்குரியது. காலசுவடுகளைத் தாளில் பதித்துக் கவிதைகள்
மொழியாக்கங்கள் கட்டுரைகள் என்று இருபதுக்கும் மேல் நூல்கள் வெளியிட்டுள்ளார். கவிஞர் சேரன் இயல்விருது பற்றி அருமையான அறிமுகமும் விளக்கமும் கொடுத்துப் பேசினார்.  அப்படிப் பேசும்போது, ஒரு பெரிய கவிஞனுக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது கிடைப்பது இதுவே முதல் முறை என்றார். ஆனால் முதல் இயல்விருதே ஒரு பெரிய கவிஞர் சுந்தரராமசாமி அவர்களுக்குத்தானே வழங்கப்பட்டது என்று நான் நினைத்தேன். இவ்வேளையில் பசுவைய்யா என்ற புனைபெயரில் சுந்தரராமசாமியின் புகழ்பெற்ற கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

உன் கவிதையை நீ எழுது
எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி
எழுது, உன் ரகசிய ஆசைகள் பற்றி
நீ அர்ப்பணித்துக் கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது
உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது
சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது
நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது
எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது
எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும்
தத்தளிப்பைப் பற்றி எழுது
எழுது உன் கவிதையை நீ எழுது
அதற்கு உனக்கு வக்கில்லை என்றால்
ஒன்று செய்
உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று
என்னைக் கேட்காமலேனும் இரு

அடுத்து நா. சுகுமாரனின் புகழ்பெற்ற கவிதை ஒன்று. நான் கவிஞரின் மொழிபெயர்பான பாப்லோ நெருதா கவிதைகளை வாசித்திருக்கிறேன். ஆனால் இது மொழியாக்கக் கவிதையல்ல.

அள்ளி
கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அந்நியமாச்சு
இது நிச்சலனம்
ஆகாயம் அலை புரளும் அதில்
கை நீரை கவிழ்த்தேன்
போகும் நதியில் எது என் நீர்

கவிஞர் சேரனையும் குறிப்பிட்டதால் அவரின் கவிதை ஒன்றையும் இங்கே பகிர்வதுதான் சரி என்று படுகிறது. இதோ சேரனின் கவிதை ஒன்று:

அம்மா அழாதே
நின் காற்சிலம்பிடை இருந்து தெறித்தது
முத்துக்கள் அல்ல
மணிகளும் அல்ல
குருதி என்பதை உணர்கிற பாணிடியன்
இங்கு இல்லை

7.  கழுத்தில் பூட்டுகள் தொங்கும் சங்கிலியோடு, cowboy ஆடையைப் போன்றதோரு கசமுசா  ஹாலிவுட் ஆடையோடு ஒருவர் மேடையேறினார். அவரைப் போல ஆடையுடித்தி வந்த இன்னொருவர் விழாவில் இல்லை. எல்லோருமே அலுவலக ஆடை என்று சொல்லும் விதமாகவே வந்திருந்தார்கள். அவர்களுக்கு மத்தியில் இவரின் ஆடை யார் யாரை என்னவெல்லாம் எண்ணம் கொள்ளச் செய்ததோ எனக்குத் தெரியாது. ஆனால் அவர் ஒன்றை அழுத்தமாக அங்கே சொல்லிவிட்டார். ஒருவனின் ஆடையை வைத்தோ அழகை வைத்தோ நிறத்தை வைத்தோ ஒரு புண்ணாக்கு முடிவையும் யாரும் எடுத்துவிட முடியாது. ஏன் தெரியுமா? அவர்தான் தமிழுக்காக டொராண்டோ பல்கலைக் கழகத்துக்கு இரண்டு மில்லியன் டாலர்களை  அப்படியே அள்ளிக்கொடுத்த மகா கொடையாளர்.  அவர்தான் முனைவர் ரவி குகதாசன். மேடையேறிய அந்தத் தமிழ்ப்பற்றாளர் பேசியதெல்லாம் ஆங்கிலத்தில். அந்த முரணும் ஒரு வினோதமானதாகவே இருந்தது. அவரைச் சந்தித்து அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அப்படியே என் உரையாடல் தொடங்கியது.

எப்படி இத்தனை பெரியதொரு கொடையை அள்ளிக்கொடுத்தீர்கள்?

முத்துலிங்கம் சொன்னாரே, திருஞானசம்பந்தம் சொன்னாரே அதுபோன்ற தொரு மனோ நிலையில்தான்!

உங்களுக்குத் தமிழ் தெரியுமா? தமிழில் உரையாடுவீர்களா?

தெரியும்!

பிறகு ஏன் மேடையில் ஒரு சொல்லும் தமிழில் சொல்லவில்லை?

நான் தமிழில் பேசத் தொடங்கி இருந்தால் என்னால் இப்படிச் சில நிமிடங்களிலேயே கீழே இறங்கி இருக்க முடியாது. அரைமணி நேரமாவது எடுக்க வேண்டி வந்திருக்கும் என்பதால்தான்!

எப்படி வந்தது இத்தனைத் தமிழ்ப்பற்று?

தாய் மொழியையும் தாய் மண்ணையும் விட்டு நான் நாற்பதாண்டுகளுக்கு முன்பே இங்கு வந்துவிட்டேன். தமிழுக்காக நான் எதையும் செய்யவில்லை என்ற ஏக்கம் எனக்குள் பெருகிக் கிடக்கிறது. தமிழ் உலகமெல்லாம் நிறையவேண்டும், புலம்பெயர்ந்தாலும் தமிழர்களெல்லாம் தமிழோடு வாழவேண்டும்!

8. நான் அன்புடன் என்ற ஒரு கூகுள் குழுமத்தைச் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்குமுன் தொடங்கி நடத்தி வந்தேன். அங்கே கணித்தமிழ் பயின்றவர்களும், தமிழ்க் கவிதை பயின்றவர்களும் ஏராளம். அதில் முக்கியமான ஒரு கவிஞர் இலங்கையைச் சேர்ந்த கவிஞர் ரிஷான் செரீப். அன்புடன் அவர் கவிதைகளுக்குத் தளம் தந்தது உயர்வுக்கு விமரிசனங்களைத் தந்தது. நேற்று அவர் பெயர் இறுதி மணித்துளிகள் என்கிற மொழியாக்க நூலுக்கு அறிவிக்கப் பட்டபோது பெரிதும் மகிழ்ந்தேன். அவர் ஏன் விழாவுக்கு வரவில்லை என்று வருத்தப்பட்டேன்.

9. புனைகதைக்கான விருது பெற்ற சயந்தன், கவிதைக்கான விருது பெற்ற சங்கர ராம சுப்ரமணியன், கணினிச் சாதனைக்காக விருதுபெற்ற சீனிவாசன், இலக்கியச் சாதனை சிறப்பு விருது பெற்ற டேவில் சுல்மான் மற்றும் இரா. இளங்குமரன், மாணவ உதவித்தொகை விருதுபெற்ற சோபிகா சத்தியசீலன் ஆகிய அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

கவிஞர் சங்கர சுப்ரமணியனின் கவிதை ஒன்று:

தெலைபேசியில் உள்ள எண்காட்டியில்
எண்கள் நடுங்குவதை
முதல் முறையாய் பார்க்கிறீர்களா.
உங்கள் அழைப்புமணியின் ரீங்காரம்
இதவரை செல்லாத நிலவுகளின்
சுவர்களுக்குள்
ஊடுருவுவதை உணர்கிறீர்களா.
நீங்கள் அழைக்கும் நபர்
சற்றுமுன் இறந்தவராய் இருக்கக்கூடும்.

பெருமைகொள் தமிழா என்று தமிழுக்கும் தமிழர்களுக்கும் சேவை செய்யும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் சிறப்பான இப்பணியை வாழ்த்திப் பாராட்டுவோம்.

அன்புடன் புகாரி
ஜூன் 19ம் 2017, டொராண்டோ, கனடா




தொல்காப்பியத்தை மரபுப் பாக்கள்  மட்டுமே அண்டமுடியும் என்ற நிலை மாற்றி நீங்கள் செய்த தொல்காப்பியக் கவிதை பற்றி கூறுவீர்களா?  

தமிழ் என்பது வெறும் மொழி அல்ல. அது ஒவ்வொரு தமிழனுக்கும் மிக நெருக்கமானதோர் உறவு. பெரும்பாலும் தாய் சேய் பந்தம்.

யார் வேண்டுமானாலும் அந்தத் தாயின் மடியில் அமரலாம். அப்படி அமர இயன்றால்தானே தமிழ் நமக்குத் தாயாக இருக்க முடியும்?

அம்மா பால் வேண்டும் என்றால் தாய் தருவாளா மாட்டாளா?

ஆனால், நாம் கேட்கும்வரைகூடக் காத்திருக்காமல் பால் தரும் அன்புத் தாய்தான் தமிழ்.

அவளை நிராகரித்து நடக்கும் வழிதவறிய மகனாக நான் இருக்கக் கூடாது என்பது என் விருப்பம், அதுவே என் தமிழ்த் தாயின் நெருப்பு விருப்பமும்கூட.

தொல்காப்பியம் பற்றி கவிதை எழுத வேண்டும் என்று நான் என் தாயிடம் கேட்டு நின்றேன், அவள் அள்ளித் தந்ததே தமிழ்காப்புத் தொல்காப்பியம் என்ற கவிதை.

பெற்ற தாய் என்பவள் மகனைவிட முதுமையானவளாகத்தான் இருப்பாள். ஆனால் தமிழூட்டும் தமிழ்த்தாயோ வினோதமானவள். முதுமையான அந்தத் தாயே என்னிலும் இளையவளாகவும் இருக்கிறாள்.

இன்றைநாள் கவிதைகளை என்னிலும் அவளே உச்சிமுகர்ந்து நேசிக்கிறாள் தன் இளமையை உற்சாகமாகக் கொண்டாடுகிறாள்

உலகில் உனக்கொரு தாய் எனக்கொரு தாய் அவனுக்கொருதாய் என்றுதான் தாய்மார்கள் இருப்பார்கள். ஆனால் எனக்கும் என்னைப் பெற்ற தாய்க்கும் தந்தைக்கும், அவர்களையும் பெற்ற தாய்க்கும் தந்தைக்கும், இன்னும் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் ஒரே தாய் என்று இருப்பதுதான் எத்தனைப் பேறு?

-அன்புடன் புகாரி
நீங்கள்
கவிதை எழுதுவீர்களா

எழுதுவீர்கள் என்றால்
அதுதான்
உங்கள் கவிதை

அதற்குமேல்
ஏதும்
இலக்கணம் இல்லை
உங்கள் கவிதைக்கு
* * * * *

ஆப்பிளில் இருந்ததா
அல்லது
ஆதாமில் இருந்ததா
பாம்பு
திருமணம்
ஓர்
அழகான பந்தம்

அந்த
சுகராக பந்தத்திற்கு
நிகரான பந்தமென்று
வேறொன்றைக்
காண்பதற்கில்லை

அணையாத்
தீப்பந்தமாய்
அப்பந்தம்
ஆகிவிடாதவரை

இந்துக்களெல்லாம்
தீவிரவாதிகளென்றால்
இந்தியா என்றோ
இடுகாடாகிப் போயிருக்கும்

கிருத்தவர்களெல்லாம்
தீவிரவாதிகள் என்றால்
யூதம் என்றோ
தீய்ந்து போயிருக்கும்

முஸ்லிம்களெல்லாம்
தீவிரவாதிகள் என்றால்
உலகம் என்றோ
அழிந்து போயிருக்கும்

தீவிரவாதம்
ஓர்
லாபநோக்குடைய
வியாபாரம்

வல்லரசுகள்
நல்ல
வியாபாரிகள்

தீவிரவாதத்தை உருவாக்கிச்
சந்தைக்குக்
கொண்டுவராவிட்டால்
வல்லரசுகளின் பிழைப்பு
நாறிப்போகும்

தீவிரவாதம் வெறுக்கும்
நெஞ்சங்களை
பிஞ்சு வயதிலிருந்தே
தேயாப்
பிறைநிலாக்களாய்த்
தெளிவாய்
வளர்த்தெடுப்போம்

அது ஒன்றே
தீவிரவாதம் ஈனும்
வல்லரசுகளைக்
களையெடுக்கவல்லது

அன்புடன் புகாரி
20171124
ஒரு மார்க்கம் என்பது
யாதெனில்
வாழ்வைச் சீர் செய்யும்
அறநெறிச் சட்டங்கள்
அமல் படுத்தும் திட்டங்கள்

நியாயங்களுக்குப் பாதுகாப்பு
தர்மங்களுக்கு அரண்

ஆனால்
சட்ட அமலாக்கம்
ஏழை எளியவர்களுக்கு
எதிராக ஏவப்படுகின்றன

அரசியல்வாதிகளும்
அதிகாரவர்கங்களும்
அச்சம் கொள்வதுமில்லை
அடங்குவதுமில்லை

பற்றவைத்தவன் இருக்க
நெருப்பைச் சாடுவது
கையாலாகாதத்தனம்

குற்றவாளியைப் பாதுகாத்து
நிரபராதியைக் கொல்வது
காட்டுமிராண்டித்தனம்

காதலி என்பவள்
ஆயிரம் ரூபாய் நோட்டு மாதிரி

ஒருநாள்
ஒன்றுமில்லாமல்
போய்விடுவாள்

ஆசைப்படும் பெண்
ரோசா வண்ண
இரண்டாயிரம் மாதிரி

பயன்படுத்தவே
முடியாது

மனைவி என்பவள்
நூறு ரூபாய் நோட்டு மாதிரி

பார்க்க
அலட்சியமாய்த் தெரியும்

ஆனால்
எப்பவும் எல்லாத்துக்கும்
அவள்தான் உத்திரவாதம்

குடும்பச்சித்திரம்
காணத்தவறாதீர்கள்


திரைக்கதை வசனம்
பாடல்கள் இயக்கம்
மோடி நவம்பர் 2016




எத்தனை போராடினாலும்
இத்தனை உயரம்
எட்டவும் முடியுமோ

அவமானங்களை
நிரந்தரமாய்த்
திருப்பிக் கொடுத்த
நெஞ்சுரமும் வைராக்கியமும்
உச்சத்திலும் உச்சம்

பாறையிலும்
முளைக்கலாம்
பயிர்
நெருப்பில்
முளைக்க முடியுமா

ஜெ
ஜெயலலிதா
ஒரு வரலாறு

அது
கறுப்பும் வெள்ளையும்
கலந்தோடிய கூவகங்கை

அஞ்சலிகள்
டிசம்பர் 5, 2016
கொஞ்சம் தமிழைப் பற்றி பேசலாமா? தமிழின் தொன்மையும் இளமையும் பற்றி நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி?

நான் தமிழறிஞன் அல்லன், ஆனால் தமிழின் மீது தீராத காதலுடையோன்.

நான் அணைகட்டிய நதியல்ல, இயல்பாய்ப் புறப்பட்டப் பெருமழையாறு.

2016 ஜூன் மாத முதல் வாரத்தில் கனடாவில் உலகத் தொல்காப்பிய விழா இரு தினங்கள் சிறப்பாக நடந்தது. அதில் தொல்காப்பியம் பற்றி கவிதை வாசிக்க என்னையும் அழைத்திருந்தார்கள்.

எனக்குக் கவிதை எழுதுவது என்பது பொன்வானம் முன்னறிவிப்பின்றிப் பொழிவதைப் போல இயல்பானது சில நேரம். மகப்பேறில் முதல் மகவினை ஈனுவதைப் போல வலியும் அச்சமும் மிகுந்தது சில நேரம்.

என் நெஞ்சில் நீண்டு வளர்ந்து நிறைந்திருக்கும் அழுத்தமான எண்ணங்களையும் உணர்வுகளையும் எனக்குச் சட்டெனக் கொட்டுவது எளிது. ஆகவே சில நிமிடங்களில் சில கவிதைகள் கொட்டிவிடக்கூடும்.

ஆனால், தொல்காப்பியம் பற்றி நான் அப்படி எழுதிவிடமுடியாது.

நிறைய வாசித்தேன், தொல்காப்பியனை முன்பைவிட அதிகமாக நேசித்தேன். நான் நேசித்தப் பெருமைகலையெல்லாம் என் நடையில் அந்த மேடையில் வாசித்தேன்.

அக்கவிதை உங்கள் கேள்விக்கான பதிலை ஓரளவு தரும். தமிழின் தொன்மையும் இளமையும் கண்டு நான் எப்படிச் சிலிர்த்தேனோ, அதை அப்படியே உங்களுக்குக் காட்டும் என்றும் நம்புகின்றேன்.

இந்தோ அந்தக் கவிதையின் சில பகுதிகள், முழுக்கவிதையையும் வாசிக்க கீழுள்ள சுட்டியைச் சொடுக்குங்கள்:

தமிழ்காப்புத் தொல்காப்பியம்

தொல்காப்பியா
நீ புதுமைக் காரனடா

இலக்கணம்தானே எழுத வந்தாய்
ஆனால் அதையும் நீ ஏன்
இலக்கியம் சொட்டச் சொட்ட எழுதினாய்

*
அள்ளித்தரும் இலக்கியம்
தாய்க்கு நிகர்
சொல்லித்தரும் இலக்கணம்
தந்தைக்கு நிகர்

ஞானத் தந்தையே
தொல்காப்பியா
நீ தாயுமானவன்தான்
தொல்காப்பியா

*
தமிழோடு தமிழாக
தழுவிக் கிடக்கும்போது
உன் தொன்மைக்கு
ஏதடா முதுமை
உன் சொல்லுக்கோ
தீராத மகிமை

தொன்மையையே இளமையாக்கி
நீ நிற்கும் முரண்
அடடா அதுதான் எத்தனைச் சவரன்

*
அட்டையைத் தொட்டாலே
விரால்மீனாய்த் துள்ளும்
உயிர்நூல் படைத்தவனே

அதோ வருகிறான் பார்
நக்கீரன்
உன் நூலுக்குப் பெயரிட்டதில்
பொருட் பிழை என்கிறான்

என்றென்றும்
இளமையே கொண்ட காப்பியம்
எப்படித் தொல்காப்பியமாகும்
என்று தகிக்கிறான்
கேள்

*
ஓர் இலக்கண நூலே
இத்தனைத் தொன்மையெனில்
தமிழனின் இலக்கியம்தான்
எத்தனை எத்தனைத் தொன்மையானது

கண் தோன்றிச்
செவி தோன்று முன்னரே
முன் தோன்றி வளர்ந்த
மூத்த மொழியோ

*
பசுமரத்தாணியைப்
பழுதின்றி அறைந்தாய்
இலக்கியப் பயிர்களுக்கு
வரப்புகள் வகுத்தாய்
வடமொழி நூல்களுக்கும்
தடம்போட்டுத் தந்தாய்
சுற்றுப்புறச் சூழல் பேசும்
சித்தாந்தம் கொண்டாய்

கம்பனை வள்ளுவனை
இளங்கோவை பாரதியை
உயிர்த்தமிழ் அமுதூட்டிய
இன்னும்பல
இலக்கியக் கொடை வள்ளல்களை
உன் பட்டறையில் வைத்துப்
பட்டைதீட்டிவிட்டாய்

*
ஓரறிவதுவே உற்றறிவு அதுவே
இரண்டறிவு அதுவே அதனொடு நாவே
மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றொடு செவியே
ஆறறிவு அதுவே அவற்றொடு மனமே

இது
தொல்காப்பியத்தின்
ஒரு சிறு துளித்தேன்

அன்றெழுதிய இத்தேனில்
ஒரு சொல்லேனும்
இன்று வாழும் நமக்கு
அந்நியமாய் நிற்கிறதா
அவையோரே

என்றால்
தொல்காப்பியன்
எங்கே நிற்கிறான்

கடைநிலைத் தமிழனோடும்
கைகுலுக்கும் தாகத்தோடு
நெருக்கமாய் நிற்கிறானல்லவா

இதுதான் தமிழின் தொடர்ச்சி
செம்மொழித் தேர்வில்
இதுவுமொரு சுந்தரத் தகுதி

https://anbudanbuhari.blogspot.ca/2016/06/blog-post_6.html

அன்புடன் புகாரி
கருத்துக்கள் கருக் கொண்டாலும் கவிதை எழுத நினைத்தும் முதல் கவிதையை வடிக்க தயங்குவோருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

கவிதை முதலில் அந்தரங்கமானது. அதை எழுதுவதை யாராலும் தடுக்க முடியாது. ஆகவே முதல் கவிதை எழுத தயங்குவோன் என்று நான் யாரையுமே சொல்ல மாட்டேன். ஆனால் எழுதித தன் கவிதையை வெளியில் காட்டத் தயங்குபவன் என்று வேண்டுமானல் சொல்லலாம்.

ஏன் எழுதியதைக் காட்டத் தயங்குகிறான் அந்த இளம் கவிஞன். காட்டமாக நிற்கிறார்களே சில விமரிசகர்கள், அவர்கள் காரணமாக இருக்கலாம்.

எழுத எழுத வலுப்பெறுவதே எழுத்து. இதிலிருந்து கவிஞன் விலக்கல்ல. குப்பைகளைக் காலம் முடிவு செய்யும்.

எழுதுவோரின் விரல்களை ஒடிப்பது தமிழை ஒடிப்பது. படைப்பு நதி எந்த அணைகளாலும் தடைபடக்கூடாது.

வளர்ந்த கவிஞன் கடுமையான விமரிசனங்களை எளிதாகக் கையாண்டுவிடுவான். பாவம் இளையவன் மருண்டு மயங்கி விலகக்கூடும். அது தமிழுக்குப் பெரு நட்டம்.

கவிஞன் தன் கவிதை அலசி ஆராயப்படுவதைப் பெரிதும் விரும்புவான். தன்னை வளர்த்துக்கொள்ளும் ஏணியாய் அதைப் போற்றுவான். மாறாக கவிதை மலிந்துவிட்டது நீயும் எழுதவந்துவிட்டாயா என்று காயப்படுத்தினால் பாவம் இளையவன் மனம் சிதைந்துபோவான்.

இது கவிதை இல்லை என்று ஒதுக்கப்பட்ட கவிதைகள் பரிசுக் கவிதைகளாக ஆகி இருக்கின்றன. இது கவிதை என்று உயர்த்தப்பட்ட கவிதைகள் காலத்தால் கூவத்தில் கவிழ்ந்திருக்கின்றன.

பாரதி எழுதிய செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற கவிதை போட்டியில் இரண்டாம் பரிசைப் பெற்றது. ஆனால் முதல் பறிசு பெற்ற கவிதை எதுவென்று யாருக்கும் தெரியவில்லை.

ரசனைகளின் அடிப்படையில் கவிதைகள் பலருக்கும் மாற்று முகங்கள் காட்டக் கூடும். இக்கவிதை என்னைக் கவரவில்லை என்று சொல்வதில் பொருள் இருக்கிறது. அது ஒருவனின் தனிப்பட்ட ரசனை. அக்கவிதை எவரையும் கவரக்கூடாது என்பதில் வன்முறையே இருக்கிறது.

நான் கவிதையல்ல என்று சொன்னதை எவரும் கவிதை என்று ஏற்கக்கூடாது வாழ்த்தக்கூடாது பாராட்டிவிடக் கூடாது என்று வம்படிப்பதில் நகைப்புதான் இருக்கிறது.

கவிதை கால ஓட்டத்தில் தன் வடிவையும் அழகையும் பலவாராய் மாற்றிக் கொண்டு ஓடுகிறது. அனைத்தையும் ரசிப்போரும் இருக்கிறார்கள், சிலவற்றை மட்டுமே ரசிப்போரும் இருக்கிறார்கள்.

சிலரின் விருப்பு பலரின் வெறுப்பு, சிலரின் வெறுப்பு பலரின் விருப்பு என்பதை உணர்வதே நடுநிலை.

கவிதை உயிர்த்துடிப்புகளோடு இருக்க வேண்டும் என்பதே கவிதைக்கான பொது அடையாளம். ஆனால் உயிர்த்துடிப்புகளை அடையாளம் காண்பதில் ஆளுக்கொரு வழி வைத்திருப்பார்கள் அந்த வழியை அவர்களே அறிவார்கள். அவர்களுக்கு அதை அடுத்தவருக்கு வரையறுத்து மிகச்சரியாகக் கூறவும் தெரியாது.

பலரும் பலவாராய் இதுகாறும் கவிதையை வரையறுத்திருந்தாலும் அவற்றோடு மட்டுமே அந்த வரையறைகள் நின்றுபோவதில்லை என்பதை அவர்களே அறிவார்கள். அதோடு கால ஓட்டத்தில் கவிதை நியதிகளும் மாறி மாறி வந்திருக்கின்றன.

மனிதர்கள், விலங்குகளைப் போல கவிதைகளும் ஓர் உயிரினம்தான். சில ஊனமுற்றவையாய்ப் பிறந்தாலும் பெற்றெடுத்த அந்தத் தாயை மலடியாக்கிவிடாமல் நாளை நல்ல கன்றுகளைப் பெற்றெடுக்கும் சிறந்த தாயாய் உருவாக்கித் தருவது நடுநிலை விமரிசனங்களால் மட்டுமே இயலும். சிறந்த தாயாய் மாறிக்கொள்வது கூர்ந்த பார்வையாலும் நிறைந்த வாசிப்பாலும் கவிஞனுக்கு இயலும்.

அன்புடன் புகாரி
நேசிப்பு ஒன்றையே
வேர்களாகக் கொண்டு
உருவான
பசுமைத் தாவர உலகம்
ஒன்று உண்டு

அதன் பெயர்
இஸ்லாம்

வெறுப்புக் காய்கள்
அத்தாவரங்களில்
காய்க்காது

திணிக்கப்படும் வெறுப்புகளும்
அன்புக் கனிகளாகப்
பழுத்து
அந்நிய மடிகளில்
சகோதரமாய்
விழும்

-அன்புடன் புகாரி
இறைவன்
நாயகத்தின் வழியாக
தன் புகழை உலகறிய
நிலைநாட்டிக்கொண்டான்

அறவழிப் பாதையே
மறுக்கமுடியாத இறுதிப்பாதை
மாற்றமில்லாத உறுதிப்பாதை
என்று அறுதியிட்டுச் சொன்னான்

தீயன வென்றெடுக்கும்
வல்லமை வழிகளை
வரைபடமாக்கித் தந்தான்

உலக அமைதிக்கு
உத்திரவாதம் தந்தான்

நம்பிகை இழைகளைச்
சிறகுகளாய் வளர்த்தெடுத்து
வலிமைகூட்டி வானம் கடந்தும்
நிம்மதியில் பறக்கச் செய்தான்

அளவில்லா அன்பு தந்தான்
அரும்பெரும் அமைதி தந்தான்
ஒப்பிலாப் பண்பு தந்தான்
ஒன்றுபடும் பணிவு தந்தான்

கரையில்லா ஆற்றல் தந்தான்
குறைமனத் தேற்றல் தந்தான்
வைரமாய் யாக்கை தந்தான்
வளம்நிறை வாழ்க்கை தந்தான்

எல்லாப் புகழும்
இறைவனுக்கே என்று
நன்றிப் பெருக்கெடுத்தக்
குழை நெஞ்சம்
கூறும் சொற்களின்
எழுத்துக்களாகவும்
அவனே இருக்கின்றான்

-அன்புடன் புகாரி
கவிதையில் கருத்து எண்ணத்தில் கருக்கொண்டாலும் ஓசை நயம் அமைவது எப்படி? சில நுணுக்கங்களைப் பகிர்வீர்களா?

விற்பனர்க்கும் அற்புதமே
       முற்றுமுதற் கற்பகமே
சிற்றருவிச் சொற்பதமே
       சுற்றுலக முற்றுகையே
வெற்றிநிறை கற்றறிவே
       நெற்றிவளர் பொற்றழலே
உற்றதுணை பெற்றுயர
      பற்றுகிறேன் நற்றமிழே

நான் எழுதிய பல தமிழ்த்தாய் வாழ்த்துக்களுள் இக்கவிதையும் ஒன்று.

உலகக் கவிதைகளை எல்லாம் ஓர் அலசலுக்கு உட்படுத்தினால், சந்தம் என்ற செழுமையில் தமிழ்க் கவிதைகள் நிச்சயம் தலையாயதாய் நிற்கும். வேறு எம்மொழியிலும் இசைகூட்டி எழுதுவதில்லை என்று பொருளல்ல. எல்லோரும் பூக்களைக் கோக்கிறார்கள் என்றால் தமிழ் பூந்தோட்டங்களையே கோக்கும் அளவுக்கு யாப்பிலக்கணச் செழுமைகளைக் கொண்டது.

எதுகை, மோனை, அசை, சீர், தளை, அடி, தொடை, அணிகள் என்று போய்க்கொண்டே இருக்கும், செம்மையாக வகுக்கப்பட்டு இசையை அழகாக வளமாகக் கவிதைகளுக்குள் கொண்டுவந்து சேர்க்கும்.

கவிதை எழுத வருகிறேன் என்று ஆர்வமாக வந்தவர்கள், இந்த யாப்பிலக்கணத்தின் கடுமையான விதிகளைக் கேட்டு, முயன்று தலைதெறிக்க ஓடி இருக்கிறார்கள். ஏனெனில் அதுவல்ல தமிழ்க் கவிதைகளை அணுகும் முறை.

இலக்கியம்தான் முதலில் வந்தது அதன் பின்னரே இலக்கணம் வந்தது.

முந்தாநாள் படைக்கப்பட்ட இசை கூட்டிய கவிதைகளுக்கு இலக்கணம் வகுத்து அப்படியான கவிதைகளை இப்படி எழுதவேண்டும் என்றான் நேற்றைய தமிழன்.

ஆனால் அந்த சந்தம் எப்படிக் கைகூடும். அது இசைமீதான நம் ரசனையைப் பொருத்தது. இசைகூட்டிய கவிதைகளை ரசிக்க ரசிக்க அந்த இசை நம் நெஞ்சில் வந்து தங்கிவிடும். பின் அந்த இசையை உள்வாங்கிக்கொண்டு நாம் கவிதை எழுதத் தொடங்கினால் அது தானே இயல்பாய் வந்துவிடும்.

சித்திரமாம் கைப்பழக்கம் செந்தமிழாம் நாப்பழக்கம் என்பது போல, பழக்கமும் கைகொடுக்கும்.

கவிதையை எழுதி முடித்ததும் பின் அதை எடுத்து வைத்துக்கொண்டு யாப்பிலக்கணத்தைச் சரிபார்த்தால் போதும். அநேகமாக யாப்பிலக்கணம் அதில் சரியாகவே அமைந்திருக்கும் என்பது ஓர் ஆச்சரியம்.

ஆனால் நான் அப்படி யாப்பிலக்கணத்தைச் சரிபார்ப்பதில்லை. என் நெஞ்சில் உள்ள இசைக்கு இயைந்ததாய் இருந்தால் மட்டும் போதும் அப்படியே விட்டுவிடுவேன். ஆகவேதான் என்னிடம் நான் எழுதிய ஒரு கவிதையைக் காட்டி இது வெண்பாவா என்றவருக்கு இல்லை இது என்பா நண்பா என்றேன்.

பழைய பா வகைகளைத் தாண்டி என்னால் புதிய பா வகைகளைப் படைக்க முடிவது என் இந்த இயல்பால்தான். அதைப் புலவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் காத்திருப்பதில்லை. என் கவிதையை நான் எழுதிச் சென்றுகொண்டே இருக்கிறேன்.

ஊரலசி உறவலசி
      உண்மையான நட்பலசி
பாரலசிப் பார்த்துவொரு
      பசுங்கிளியக் கண்டெடுத்து
வேரலசி விழுதலசி
      வெளியெங்கும் கேட்டலசி
ஆறேழு உறவோடு
      அணிவகுப்பார் பெண்பார்க்க

நான் யாப்பிலக்கணத்தைச் சரிபார்க்காத ஓர் இசைக்கவிதையின் முதல் நான்கு அடிகள்தாம் இவை.
*  * * *

வசந்தத்தில்
மடியில் விழும்
மலர்களைவிட

பாலையில்
நாவில் விழும்
மழைத்துளிகளால்

வடிவமைக்கப் படுவதே
வாழ்க்கை
எந்த மார்க்கமும்
அந்த மார்க்கத்தினரால்
சரியாகப்
புரிந்துகொள்ளப் படாததாகவே
இருக்கிறது

எந்த மார்க்கமும்
அடுத்த மார்க்கத்தினரால்
சரியாகப்
புரிந்துகொள்ள விரும்பாத
எண்ணங்களைத் தருவதாகவே
இருக்கிறது

எந்த மார்க்கமும்
பகுத்தறிவாளர்களென்று
சொல்லிக்கொள்பவர்களால்
பிழையான
பொருள் கூறப்படுவதாகவே
இருக்கிறது

இவை
மூன்றுக்குமே
முக்கிய காரணம்
மனிதர்களின்
அறியாமைகளும்
வக்கிரங்களும்தானே
அன்றி
மார்க்கங்கள் அல்ல
கவிதையில் காதல் பற்றி!

மனிதனை இயக்கும் மகா சக்தி காதல்.

மனிதனை மட்டுமா இந்தப் பிரபஞ்சத்தையே இயக்கும் மகா சக்தி காதல். எல்லா வயதிலும் எல்லா பருவத்திலும் காதல் நம்மோடு இயற்கையாய் வாழ்கிறது. நம்மோடு வாழும் ஒன்றை நாம் பதிவு செய்வதைவிட மேன்மையானது ஒன்று உண்டா?

அநேகமாக உலகின் அத்தனைக் கவிஞர்களும் ஆரம்பத்தில் காதல் என்ற மகா சக்தியால் உந்தப்பட்டு கவிஞர்களாய் ஆனவர்களாய்த்தான் இருக்க முடியும் என்று தைரியமாகவே சொல்லிவிடலாம்.

”நல்லா கவிதை எழுதறீங்க. கற்பனை வளம் எழுத்து நடை எல்லாமே அமோகமா இருக்கு. ஆனால், இந்தக் காதல் கவிதைகள் எழுதறத விட்டுட்டு எப்போ நல்ல கவிதைகள் எழுதப் போறீங்க?”

அநேகமாய் ஒவ்வொரு கவிஞனும் இந்த வரிகளால் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் வலைவீசிப் பிடிக்கப்பட்டிருப்பான்.

உங்கள் கவிதை நன்றாக இல்லை என்று சொல்ல ஒவ்வொருவருக்கும் விமரிசன உரிமை உண்டு, ஆனால் காதல் கவிதை எழுதாதே என்று சொல்ல எவருக்குமே உரிமை இல்லை.

பலருக்கும் ரோஜா தோட்டங்களைப் பிடிப்பதில்லையோ சுண்டைக்காய் பயிரிடுங்கள் என்று சட்டென்று சொல்லிவிடுகிறார்களே என்று சில நேரம் கவிஞனுக்குத் தோன்றும். ஆனால் உண்மை அப்படியே வேறுமாதிரியாய் இருக்கும். ஆம், ரோஜாத் தோட்டங்களில் புகுந்து வெளிவராமல் உருண்டு புரள்பவர்களின் முதன்மையானவர்கள் அப்படியான விமரிசகர்களாகத்தான் இருபார்கள்.

ஆனால் காதலோடு நின்றிவிடாமல் மற்ற தளங்களிலும் கவிதைகள் எழுதுங்கள் என்பதே அவர்களின் உண்மையான விமரிசனம் என்பதை கவிஞன் புரிந்துகொண்டுதான் இருக்கிறான். காதல் கவிதையால் அகரக்கவிதை எழுதிய கவிஞன் காதலோடு மட்டுமே நின்றுவிடுவதில்லை. பாரதியைப் போல எல்லாத் தளங்களிலும் நிச்சயம் சஞ்சரிக்கவே செய்வான். அப்படி சஞ்சரிக்கச் செய்யாமல் கவிதைச்சக்தி அவனை விடவே விடாது.

கவிஞன் ஒரு வினோதமான தாவரம். இந்தத் தாவரத்தில் ரோஜாக்களும் மல்லிகைகளும் பூக்கும். ஆப்பிள்களும் முந்திரிகளும் பழுக்கும். நெல்மணியும் கோதுமையும் விளையும். வெண்டைக்காய், கத்திரிக்காய், முருங்கைக்காய் என்று எதுவேண்டுமோ காய்க்கும். சில சமயம் கோழி முட்டை ஆட்டுக்கால் சூப்கூட கிடைக்கலாம்.

வெண்டைக்காய் மட்டுமே காய்த்தால்தான் நல்ல தாவரம் என்று கவிதைத் தாவரங்களிடம் எவரும் சட்டம் போடக்கூடாது. அவற்றை அவற்றின் இயல்பிலேயே விட்டால்தான், காய்ப்பவையும் பூப்பவையும் சிலிர்ப்புகள் உதிர்ப்பனவாய் அமையும்.

தாவரத்தை ஊசிகளால் குத்திக் காயப்படுத்தினாலோ ரம்பங்களால் அறுத்து கோடுகள் கிழித்தாலோ, விளைவு நன்றாக இருக்காது. சீக்கிரமே பட்டுப்போய் கீழே விழுந்துவிடவும் வாய்ப்புகள் உண்டு.

ஆனாலும் உண்மையான தாவரங்கள் இந்தக் கல்லெறிகளுக்கெல்லாம் கட்டுப்படாமல், தன் விருப்பம்போல் வாரிவழங்கி புசிப்போரைக் குவித்து நிலைத்துவிடும்.

கவிஞன் அப்படிப்பட்ட ஒரு தாவரம்!

நான் கவிதை எழுதவேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டு என்றுமே எழுத அமர்ந்ததில்லை. என் கவிதைகள்தாம் இவனைக் கவிதை எழுத வைக்கவேண்டும் என்று என்னை இழுத்துக்கொண்டுபோய் எழுத வைக்கின்றன.

அப்படி எழுதப்பட்டவைதாம் உண்மையான கவிதைகள் என்ற கர்வம் கொண்டவன் நான்.

ஆகவே காமத்துப்பால் எழுதுவதும் பொருட்பால் வடிப்பதும் அறத்துப்பால் இயற்றுவதும் என் கையில் இல்லை. எழுதி முடித்த கவிதைகளைத் தனித்தனியே பிரித்துத் தொகுத்து நூலாய் வெளியிடுவதுதான் என் கையில் இருக்கிறது.

தமிழ் மொழியில் மட்டுமல்ல உலக மொழிகளிலும் புறக்கவிதைகளைவிட அகக்கவிதைகளே ஏராளம் ஏராளம்!

அன்புடன் புகாரி

கவிதையில் பொய்யும் மெய்யும் பற்றி சற்று விளக்குவீர்களா?

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

என்று பாரதி கூறுவது அறிவியல் கண்ணோட்டத்தில் அழகான பொய்யாகத்தான் தோன்றும்.  ஆனால் அது உண்மையில் பொய்தானா என்று நாம் சற்றே சிந்திக்க வேண்டும்.

வானம் என்பது கூரையும் அல்ல அது இடிந்துபோகக் கூடியதும் அல்ல. ஆனால் எந்த எல்லைவரை ஒருவனுக்கு அச்சமில்லை என்று சொல்ல கவிஞனுக்கு ஓர் உவமை தேவைப்படுகிறது. அங்கேதான் அவன் கற்பனை சிறகடித்துப் பறக்கிறது.

உச்சிமீது வானம் இடிந்து விழுந்தாலும் என்று வாசகனை கவிஞன் பெற்ற உணர்வின் உயரத்திற்கு உயர்த்திப் பார்க்கிறான். அடடா என்று வியந்து புரிந்துகொள்ளவும் வைத்துவிடுகிறான்.

அச்சமில்லை என்பது ஒரு மெய். அந்த மெய்யை அழுத்தமாகக் கூற கவிநயமிக்க ஒரு கற்பனை தேவை. அந்தக் கவிநயமிக்க கற்பனையே உச்சிமீது வானிடிந்து வீழ்ந்தாலும் என்பது. அந்தக் கவிநயமிக்கக் கற்பனை இல்லாவிட்டால் ரசிப்பதற்கும் சிலிர்ப்பதற்கும் கவிஞன் கண்ட அதே உச்சம் சென்று உணர்வதற்கும் ஏதாவது இருக்கிறதா?

இப்படியான கற்பனை நயங்களைச் சொல்வதால் கவிதைக்குப் பொய்யழகு என்று சொல்வது இலக்கியச் சுவையே ஏதென்றறியாத அறியாமைதானேயன்றி வேறில்லை.

இப்படிக் கற்பனை நயங்களைச் சொல்வது கவிஞன் மட்டுமா என்றும் பார்க்க வேண்டும்?

நிலாவைப் பிடித்து விளையாடத் தருகிறேன் ஒரு வாய் சோறு வாங்கிக்கொள் என்று தாய் நமக்குப் பாலூட்டும்போதே சொல்கிறாள். எனவே, தாய்மைக்குப் பொய்யழகு என்று சொல்வதா?

உனக்காக என் உயிரையும் தருவேன் என்கிறான் நட்பில் சிலிர்த்த ஒரு நண்பன். எனவே, நட்புக்குப் பொய்யழகு என்று சொல்வதா?

வானத்து நட்சத்திரங்களை எல்லாம் பிடித்துவந்து தோரணம் கட்டவா என்கிறான் ஒரு காதலன். எனவே, காதலுக்குப் பொய்யழகு என்று சொல்வதா?

இப்படியே போனால், வாழ்க்கைக்குப் பொய்யழகு என்று புரிந்துகொள்ள அதிக நேரம் பிடிக்காது.

எந்தக் கவிதையும் உண்மை என்ற அழுத்தமான தளத்தில்தான் காலூன்றி நிற்க முடியும். வெறும் கற்பனை மட்டுமே கவிதை ஆகிவிடாது. அப்படியானவை நிலைக்கவும் செய்யாது. அவற்றைப் போலிக்கவிதைகள் என்று நாம் விலக்கிவிடலாம். ஓர் உண்மையை அழுத்தமாகச் சொல்வதற்குக் கறபனை வளம் கூட்டி சொல்நயம் கவிநயம்கூட்டிச் சொல்வது காலத்தால் அழியாததாக நிலைத்து நிற்கும். மக்கள் மனதில் அழுத்தமான மாற்றங்களையும் விதைக்கும்.

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

முகத்தில் முகம் பார்க்கலாம் - விரல்
நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்

இந்த வரிகளை வாசிக்கும்போதே சட்டெனத் தெரிவது உண்மையா பொய்யா என்பது எவருக்கும் எளிதா இல்லையா?

இப்படியே நம் அன்றாட வாழ்வில் எத்தனையோ கவிநயமிக்க வரிகளை நாம் சொல்லிக்கொண்டே வாழ்க்கையை ரசித்து வாழ்கிறோம்.

தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது

நீரெல்லாம் கங்கை நிலமெல்லாம் காசி

என்று தொடங்கி எத்தனையோ நயமான வரிகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இன்னொன்றையும் என்னால் சுவாரசியம் கருதிச் சொல்ல முடியும். பொய்யிலே பிறந்து பொய்யில வளர்ந்த புலவர் பெருமானே என்று கண்ணதாசன் பாடினார். என்றால் புலவர்கள் கவிஞர்கள் எல்லாம் பொய் மூட்டைகளா?

காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்தப் பையடா
என்றான் ஒரு சித்தன்.

உலகே மாயம்
வாழ்வே மாயம்
என்றான் ஒரு திரையிசைக்கவிஞன்.

இதன்படி பார்த்தால் காயம் (உடல்) என்ற பொய்யிலே பிறந்து, உலகம் (மாயம்) என்ற பொய்யிலே வளர்ந்து என்று பொருளாகிறது. ஆகவே, புலவர் பெருமான் மட்டுமல்ல உலகின் ஒவ்வோர் உயிரும் உடல் என்ற பொய்யிலே பிறந்து உலகம் என்ற பொய்யிலே வளர்ந்தவைதானே?

அன்புடன் புகாரி

உங்களுக்குக் கவிதையில் நாட்டம் எப்படி எப்போது உருவானது?

அந்த ரகசியம்தான் எனக்கு இன்னமும் தெரியாத மந்திரம். என்னையே நானறியாத (இன்றும் தெரியாது என்பது வேறு விசயம்) சிறுவயதில் என்னை ஆட்கொண்ட ரசனை அது.

வானூறி மழை பொழியும்
வயலூறி கதிர் வளையும்
தேனூறி பூவசையும்
தினம்பாடி வண்டாடும்
காலூறி அழகுநதி
கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலங்கூட
பசியாறும் ஒரத்தநாட்டில்...

நான் பிறந்தேன்.

தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால், சிரிக்கும் பூசனிப்பூவை, நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும். தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்கு ஓர் பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் அழைக்கப்படும்.

ஏழெட்டு வயதிலேயே என் செவிகளில் விழுந்த பாடல்களும் பள்ளியில் பயின்ற சின்னச் சின்னக் கவிதைகளும் என்னை இழுத்து மடியில் வைத்துக் கொண்டு 'எழுது செல்லம்' என்று வார்த்தைகளை ஊட்டிவிட்டன. இசையில் மயங்கினேன், அதன் உயிரோடு இழைக்கப்பட்ட வார்த்தைகளில் கிறங்கினேன். அதனால் எழுதத் தொடங்கினேன்.

பள்ளியில் கற்றறிந்த மரபுக்கும், மனதிலிருந்து மட்டற்று நழுவிவிழும் உரைவீச்சுக்கும் இடையில் ஓர் ஆசனமிட்டு என் உணர்வுகளை வெளிப்படுத்தினேன்.

உச்ச உணர்வுகளின் தாக்கத்தில், அடரும் மனவலியை ஓர் உன்னத ரசனையோடு, சிந்தனா முற்றத்தில் கற்பனை ஆடைகட்டிப் பெற்றெடுப்பதே எனக்குக் கவிதைகளாகின.

என்னை எழுதத் தூண்டும் உணர்வுகளை, எனக்குப் பிடித்த வண்ணமாய், என்னுடன் பேசும் உயிருள்ள புகைப்படங்களாய் நான் பிடித்து வைத்தேன்.

கவிஞர்கள் பிறக்கிறார்களா? அல்லது உருவாகிறார்களா?

தேனீக்கள் பிறக்கின்றன. ஆனால் பிறக்கும்போது அவை வெறும் ஈக்களாக மட்டுமே இருக்கின்றன.

தேனின் சுவையறிந்து, தேன் தேடும் தாகம் வளர்த்து, அதைத் தேடிச் சென்று லாவகமாய் எடுத்து வந்து கூடு சேர்க்கும் திறமையை அவை வளர்த்துக்கொள்கின்றன.

கனடாவில் எனக்கு ஒரு கவிஞரைத் தெரியும். கனடா வந்த நாள் முதல் நான் அவரை அறிவேன். தன் நாற்பது வயதுவரையிலும்கூட அவர் கவிதைகள் எதுவும் எழுதியதே கிடையாது. ஆனால் அதன் பின் அவர் பல நல்ல கவிதைகளைப் படைத்தார், விருதுகளும் பெற்றார், ஒரு கவிஞராகவே புகழோடு மரணித்தார்.

ஆகவே ஒவ்வொருவரும் கவிஞராகவே பிறக்கிறார்கள். ஆனால் கவிஞராய்த் தன்னை வளர்த்துக்கொள்ளாதவரை அவர் கவிஞராய் ஆவதே இல்லை.

கவிதை எழுதுவது என்பது ஒரு வகை மனது. அந்த மனது சிலருக்குச் சிறுவயதிலேயே வாய்த்துவிடுகிறது. சிலருக்கோ சில அனுபவங்களும் தனிமையும் தாகமும் அமையும்போது வாய்க்கிறது. சிலர் அந்த மனதைக் காலமெல்லாம் கட்டிக் காத்துத் தக்க வைத்துக்கொள்கிறார்கள். சிலரோ வாலிபம் முடியும்போதே அதைப் பறிகொடுத்தும்விடுகிறார்கள்.

வெறும் சில்லரை உணர்வுகளைத் தாண்டிய நிலையில் ஆழமாய் அழுத்தமாய் உயிரில் பதிந்த ஒரு மனது என்றென்றும் கவிதை மனதாகவே இருக்கும்.

அன்புடன் புகாரி
இது 2017

எல்லைக் கோடுகளால்
உடைந்து உடைந்து
உலகம்
சாக்கடையில் விழுந்த
தின்பண்டமாகக் கிடக்கிறது

அன்றெலாம்
மாவீரனென்று அழைக்கப்பட்டவனை
இன்றெலாம்
நான் மனதாரப் புகழ்கிறேன்

அவன்
சிறுசிறு எல்லைக் கோடுகளைச்
சிலந்திக் கூடுகளாய்ச் சிதைத்தான்
இருண்ட வாசல்களை உடைத்தெறிந்தான்
உலகம் ஒற்றைக் கூடுதான் என்று
வீரமுழக்கம் செய்தான்

இந்நாள்
வல்லரசுத் தலைகளோ
சீழ்பிடித்தவை

உலகப் போர் உலகப் போர் என்று
ஒவ்வொரு போரிலும்
பூமியெனும் ஒற்றைப் பந்தைக்
கிழித்துக் கிழித்துக்
கழுத்தில் தொங்கவிட்டுக்
கூத்தாடுகின்றன

சுயநலம் பெருகிப் பெருகி
சொந்தமண் சொந்தமக்கள்
சொந்த இனம் சொந்த நிறம் என்று
நெஞ்சம் சுருங்கச் சுருங்க
நரகப் பாடல்கள் பாடுகின்றன

எந்த மண்ணைக் கொண்டுவந்து
இந்த மண்ணில் இட்டான்
மனிதன்?

இந்த மண் வாய்விழும்போதும்
விழுங்கப் போவது
மண்ணா மனிதனா?

இந்தப் பிரபஞ்சத்தில்
பால்வீதியே ஒரு புழுதிச் சுழல்

அந்தப் புழுதிச் சுழலில்
உற்று உற்றுப் பார்த்தாலும்
இந்த பூமி
தெரியப் போவதே இல்லை

அந்தத் தூசுக்குள்
இத்தனைப் பெரும் நாசங்களா?

இந்த உலகம்
எல்லா இனங்களுக்குமானது

இந்த உலகம்
எல்லா மதங்களுக்குமானது

இந்த உலகம்
எல்லா நிறங்களுக்குமானது

இந்த உலகம்
எல்லா உயிர்களுக்குமானது

இந்த உலகம்
ஒரு புழுவுக்கும்
சிறு பழுதுமில்லாதது

- அன்புடன் புகாரி









கவிதை என்றால் என்ன என்று வியப்போர் பலர். அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

வியக்கத்தான் வேண்டும். ஏனெனில்

கவிதை
உணர்வுகளை
மொழியாய் மொழி பெயர்க்கும்
ஓர் அழியாக் கலை

மொழியின் உயிர்
உயிரின் மொழி

உயிர்த் துடிப்புகளை
அப்படி அப்படியே காலன் தின்னாததாய்ச்
சேமித்து வைக்கும் உயிர்ப் பெட்டகம்

நாளைகளில் நம்பிக்கை இல்லாக்
கோழைகளாக்கும் இந்த நூற்றாண்டுகளின்
பிரம்மாண்டங்களில்
நால்திசை நாடுகளும்
இடுப்பில் அணுகுண்டுகளைத்
தூக்கி வைத்துக்கொண்டு நிலாச் சோறு ஊட்ட

உலகம்
ஒரு நொடியில் பொடியாகும் அபாயம்
நம் நிழலைக் கிள்ளியெறிந்துவிட்டு
அந்த இடத்தை அபகரித்த
பெருமிதத்தில் மந்தகாசிக்க

விழிகளில் நம்பிக்கை ஒளியூட்டி
நடுங்கும் கரங்களைப் பிடித்து நிறுத்தி
இயல்பு வாழ்க்கைக்குள்
இழுத்துச் செல்லும் அன்புக் கரம்

ஆகவே வியக்கத்தான் வேண்டும்.

ஆனால் வியக்கிறேன் என்று விலகி நின்றிடுதல் கூடாது. வியப்பது ரசிப்பதின் உச்சம். ரசனை உயர உயர அந்த ரசனையாகவே மாறிப்போவதே இலக்கியத்தின் மேன்மை. அப்படி ரசனையாகவே மாறிப்போனால், தமிழ்க் கவிதைகள் சிறு விரல் நுனிகளில் நம் எண்ண ஆழத்தில் இடையறாது துடிக்கும் உட்கிளியின் அமுதை, உணர்வுகெடாமல் சுரந்து கசிந்த வண்ணம் இருக்கும். அதைக் காட்டாறாய் மாற்றிக்கொள்ள தமிழோடும் தமிழ்க் கவிதைகளோடும் கடும் தாகத்தோடும் மோகத்தோடும் காதல்கொள்ளுதல் வேண்டும். கவிஞனாய் வளர்ந்து நிமிர வேண்டும்.

ஒவ்வொரு தமிழனும் கவிஞனாய் ஆகவேண்டும் என்பதே என் தமிழாசை. தமிழன் என்று சொன்னாலே அவன் கவிஞன்தான் என்று அறியப்படவேண்டும்.

இவ்வேளையில் நான் ஒன்றைக் கூறவேண்டியதை அவசியமாகக் கருதுகிறேன்.

கணினிப் பணியாற்றும் நான் கவிதைகளும் எழுதுகிறேன் அல்லது கவிதைகளை ரசிக்கிறேன்.

ஒரு வணிக நிறுவனத்தை உருவாக்கி பொருளீட்டும் வணிகரும்கூட கவிதைமனம் கொண்டிருக்க வேண்டும்.

நம் உடலில் வயிறும் இதயமும் இருப்பதுபோல தொழிலும் இலக்கியதாகமும் அவசியமானவை.

உலகில் எல்லோருமே தொழில் செய்பவர்களாக மட்டுமே இருந்துவிட்டால், வாழ்க்கை வரண்டுபோய் பொய்கள் நிறைந்ததாய் கருணையற்றதாய் ஆகிவிடும்.

அதே போல, எல்லோருமே கவிதை எழுதுபவர்களாய் மட்டுமே இருந்துவிட்டால், பசி பட்டினி வறுமையில் உலகமே அழிந்துபோகும்.

அன்புடன் புகாரி

நோன்புக் கஞ்சி அது மாண்புக் கஞ்சி

பிச்சைக்காரரின்
நெளிந்த பாத்திரத்தில் ஊற்றப்படுவதே
பணக்காரரின்
வெள்ளிப் பாத்திரத்தையும் நிறைக்கும்
அமுதமாகிறது

அது எது?


உடல்நலமில்லா முதியவரின்
நடுங்கும் கரங்களின்முன்
வைக்கப்படுவதே
ஆரோக்கியமான இளைஞனின்
துடிப்பான விரல்கள்
தாவியெடுக்கும்
அருசுவையாகிறது

அது எது?


உண்டு முடித்ததும்
மீந்துப் போனதென்று
பின்னிரவில் நீரூற்றப்படும் பழையதே
புனிதப் பசியின் உச்சத்துக்கு
புத்தம் புதிதாகச் சமைக்கப்படுகிறது

அது எது?


பிரியாணிகளும்
கோழி வறுவல்களும்
வகைவகையாய்ப்
பறிமாறப்பட்டிருக்கும்போதே
அனைத்தையும் மறுதலித்து
ஆவலோடு அள்ளிக்குடிக்கும்
கிடைத்தற்கரிய அற்புதமாகிறது

அது எது?


ஓய்வெடுத்துத் தளர்ந்து
மயங்கிக் கிடக்கும்
நாக்கின் நரம்புகளுக்குப்
புத்துணர்ச்சி மந்திரம்
அதுவன்றி வேறொன்றில்லை

அது எது?


எரியடுப்பு வயிற்றை
ஈரமாய் அணைத்து
இதமாய் வருடும் பாசம்மிக்கது
இன்னொன்றில்லை

அது எது?


ஏழை வீட்டில்
செலவே இல்லாமல்
செய்யப்படும் அந்த ஒன்றே
கோடி கொட்டிச் சமைத்தாலும்
கிட்டாத
செல்வச் செழிப்புமிக்க
இன்சுவையாகிறது

அது எது?


தரைதொட்டுத் தரைதொட்டு
நிமிரும் நெற்றிகளின்
செல்கள் ஒவ்வொன்றுக்கும்
அது
சொல்லவொண்ணாத
ஊட்டச்சத்தை அள்ளித்தரும்
சூட்சுமமாகிறது

அது எது?


அதை அருந்தும்
முன்பு கேட்கும் துவாக்கள்
உனக்கானவை
பின்பு கேட்கும் துவாக்களோ
உலகுக்கானவை

அது எது?


அதுவும்
ரமதானின்
ஒரு
கருணைக் கொடைதான்

அதுதான்
நோன்புக் கஞ்சி
நெஞ்சுநிறை
மாண்புக் கஞ்சி