20160730

>>>நபி சாதியை ஒழித்தாருன்னு சொல்லிட்டு சாதிஒழிய வேண்டியதில்லைன்னு சொல்றிங்க நன்பர் புகாரி<<
நான் சாதி ஒழிய வேண்டியதில்லை என்று சொல்லவில்லை.
சாதி ஒழிந்ததாய் நான் அறியவில்லை என்றுதான் சொல்கிறேன்.
சாதியை ஒழிப்பது இயலுமா இயலாதா என்பது இருக்கட்டும், ஆனால் சாதிகளுக்கு இடையில் இருக்கும் பாகுபாடுகள் தூள் தூளாக வேண்டும். அதைத்தான் நான் சொல்கிறேன்.
பாகுபாடுகள் தீர்ந்துவிட்டால், யார் என்ன சாதியானால் யாருக்கு என்ன?
அப்படியே இனம் அழியத் தேவையில்லை. ஆனால் இனப்பாகுபாடு அழிந்தே தீரவேண்டும்
மொழி அழியக் கூடாது ஆனால் மொழிப்பாகுபாடு அழிய வேண்டும்.
இப்படியே மனிதர்களுக்கு இடையில் உள்ள பாகுபாடுகள் எல்லாம் தீய்ந்து கருக வேண்டும்.
அதற்கு முதலில் கோவிலில் ஆண்டான் அடிமை ஒன்றாய் நின்று வணங்குதல் வேண்டும், மேலோன் கீழோன் ஒரே கல்விநிலையத்தில் பயிலல் வேண்டும், இப்படி ஒரே ஒரே என்ற உயர்வு வேண்டும்

*

>>>பெரியார் இல்லை என்று சொன்ன கான்சப்ட் பிறப்பால் உயர்வு, தாழ்வு மற்றும் மனித அறிவுக்கு சரி என்கிற அளவில் இல்லாத மூடநம்பிக்கைகளை உள்ளடக்கிய கடவுள் கான்சப்ட்.<<<
அதனால்தான் எனக்குப் பெரியாரைப் பிடிக்கும்.
அப்படியான கான்செப்ட் கடவுளுக்கு இல்லை. தப்பாக அவர் தலையில் ஏற்றிவைப்பதை மனிதர்கள்தாம் மாற்றிக்கொள்ளவேண்டும்.
கடவுள்....
அறுந்த இதய்ங்களுக்கான நம்பிக்கைக்கு
அழுத்தமான அறம் புகட்டுவதற்கு
சட்டம் ஒழுங்கு சீராய் இருக்க பயம் தருவதற்கு
அன்பு அறிவு அறம் வலியுறுத்துவதற்கு
மனிதநேயம் காக்க வைப்பதற்கு
*
தேவி பாலா (தன்னை நாத்திகர் என்று அடையாளப்படுத்திக்கொண்டவர்) >>> நாத்திகம் பேசும் யாரும் தயவு செய்து கடவுளை காட்டு என்று சொல்லாதீர் இது காலாவதியான வார்த்தைகள் அறிவு சார்ந்த விவாதங்களை முன் வைங்க நானும் நிறைய தெரிந்து கொள்ள விரும்புகிறேன் நன்றி<<<
ஒரே ஆள் பலமுறை லைக் போட முகநூலில் வசதி வேண்டும் அவ்ளோ பிடிச்சிருக்கு நீங்கள் எழுதுவது.
ஆமாம்...
ஒரு பகுத்தறிவு வாதியாய் உலகின் வன்முறையற்ற வாழ்க்கைக்கு எத்தனைத் தொண்டாற்றலாம்?
ஒரு பகுத்தறிவு வாதியாய் இதுவரையிலான அத்தனை ஆன்மிகமும் தராத அறத்தையும் அன்பையும் அறிவையும் வளர்க்க என்னென்ன செய்யலாம் என்று எத்தனைச் சிந்தனை ஓவியங்களை அறிவின் அற்புதம் கொண்டு தீட்டலாம், உலகை நல்வழிப்படுத்தலாம்?
மதங்களே ஏன் அடித்துக்கொள்கிறீர்கள். இது உங்களுக்கு, அது அவர்களுக்கு. இதில் அடித்துக்கொள்ள என்ன இருக்கிறது என்று எத்தனை அழகாய்க் கேட்கலாம்.
அது மதங்களையெல்லாம் விட்டு விலகி வெளியே நின்று பொதுமனிதனாய்ப் பார்க்கும் உங்களால்தானே மிக சிறப்பாகச் செய்யமுடியும். செய்கிறீர்களா? இல்லையே...
இருப்பது போதாதென்று நீங்களும் புதிதாய் ஒன்றைத் தொடங்கிவைக்கிறீர்கள்
உங்களால் அமைதி வரவேண்டுமா அல்லது அட்டூழியம் நிறைய வேண்டுமா?
பகுத்தறிவு வாதிகளிடம் பகுத்தறிவு இல்லாவிட்டால் அவர்கள் பகுத்தறிவுவாதிகளா?

*
Naduvai Kurichi >>>சாதி பாத்தானா,மதம் பாத்தானா,தொடைய தட்டி கொண்டு எங்களை பாதுகாத்து முன் நிற்பான்.அந்த உறவு இனி வரும் இளைஞர்களுக்கு கிடைக்காமல்,எதிர்எதிரா நிறுத்திவிட்டார்களே என வருந்துகிறேன்.<<<
ஆமாம் அதே பயம்தான் பதட்டம்தான் எனக்கும். அதனால்தான் நான் இங்கே மதம் பேசுகிறேன் இறைவன் பேசுகிறேன் இறைமறுப்பாளர்கள் பற்றி பேசுகிறேன்.
நாம் அடுத்த தலைமுறைக்கு நீர் தராமல் சாகப் போகிறோம் என்கிறது ஓர் அறிக்கை.
அதையும் விடக் கொடுமையாய் நாம் இளயவர்களுக்கு வாழ்க்கையையே தராமல் நரகத்தைத்தான் தரப் போகிறோம் என்ற நிலையை நினைத்து அதைக் காணச் சகியாமல் கண் பொசுங்குகிறது.
அழுகிறேன்!
என் அழுகைதான் என் எழுத்துக்கள்!

*
மெக்கா நடுவில் லிங்கம்!!!
*
என் முகநூல் அஞ்சல் பெட்டிக்கு வந்த ஓர் அதிர்ச்சி ஐயம்...
*
தோழரே நான் கேள்விபட்ட விஷயம் உண்மையா என்று உங்களிடம் கேட்கலாம் என்று நினைக்கிறேன். கேட்கலாம தோழரே
ம்ம்ம்
தோழரே மெக்காவில் நடுவில் இருப்பது லிங்க அமைப்பில் உள்ளது என்கிறார்கள் உண்மையா தோழரே
அடப்பாவிகளா 😉
மெக்காவின் நடுவில் இருப்பது ஒரு சதுர கட்டிடம்.
அதனுள் இருப்பது வெறும் வெற்றிடம்
அதனுள் இருந்த முந்நூற்றி அறுபதுக்கும் மேலான சிலைகள் எல்லாம் நபி பெருமானாரால் அகற்றி எறியப்பட்டுவிட்டன
நல்லது
நீங்கள் என்னிடம் கேட்டது
இல்லையேல் புரளியைத்தான் நம்பி இருப்பீர்கள்
*
இதனால் நான் என் அன்பானவர்கள் அனைவருக்கும் சொல்வது யாதெனில், அன்பர்களே எந்த விசயத்தையும் அறிந்தவர் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெளிவுபெறுங்கள்.
சத்தியம் தோற்று அசத்தியம் வெல்வதை நாம் ஏற்கலாமா?
நன்றி

*
Kalyanasundaram Rangasamy>>>> அறம் செய்ய விரும்பு
....ஒளவை
பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்
.....வள்ளுவர்
யாதும் ஊரே யாவரும் கேளிர் 
....கணியன் பூங்குன்றனார்.
இது போன்று சொன்ன
தெல்லாம் அறமில்லையா?
இவர்களைப் போன்றவர்கள்
எந்த மதம்?
அறத்தை சிறநத மனிதம்
போற்றும்.
அறம் கூறும் நல்லுலகம்.
எல்லாச் செயல்களும்
கடவுளின் பெயரால் தான்.<<<<
*
இவர்கள் யாவரும் சிறப்பாக அறத்தைச் சொன்னவர்கள். இனியும் கவிஞர்கள் எழுத்தாளர்கள் தத்துவ ஞானிகள் சொல்வார்கள்.
ஆனால் அதை மக்களை ஏற்று நடக்கச் செய்வது எப்படி?
அதற்கான தீர்வுதான் இறைவன் + மார்க்கம்.
இப்போது இங்கே பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல் ஒன்றை இடவேண்டும். இவர் ஒரு கடவுள் மறுப்பாளர். பாரதிதாசனின் தாசர்.
*
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க?
என்னபண்ணி கிழிச்சீங்க?
*
சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்
செய்யுறதைச் செஞ்சுடுங்க
நல்லதுன்னா கேட்டுக்குங்க
கெட்டதுன்னா விட்டுடுங்க
முன்னாலே வந்தவங்க
என்னென்னமோ சொன்னாங்க
மூளையிலே ஏறுமுன்னு
முயற்சியும் செஞ்சாங்க
ஒண்ணுமே நடக்காம
உள்ளம் நொந்து செத்தாங்க
என்னாலும் ஆகாதுன்னு
எனக்கும் தெரியுமுங்க ( சொல்லு )
முடியிருந்தும் மொட்டைகளாய்
மூச்சிருந்தும் கட்டைகளாய்
விழியிருந்தும் பொட்டைகளாய்
விழுந்துகிடக்கப் போறீங்களா?
முறையைத் தெரிஞ்சு நடந்து
பழைய நினைப்பை மறந்து
உலகம் போற பாதையிலே
உள்ளம் தெரிஞ்சு வாரீங்களா ( சொல்லு )
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க?
என்னபண்ணி கிழிச்சீங்க? ( சொல்லு )

*

20160729





*
நண்பர்களே, தயவு செய்து இங்கே மதங்களுக்கு இடையேயான பிரச்சினைகளைப் பேசாதீர்கள்.
நான் இணக்கமாக இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று நாளெல்லாம் சிந்தித்து எழுதுகிறேன்.
மதச்சண்டை போடாதீர்கள்.
எல்லா மதத்திலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள்.
அது மதத்தின் குறை இல்லை. மனிதனின் குறை.
முதலில் நாம் மாறுவோம். பின் மற்றவர்களை மாற்றுவோம்
இந்த உலகை அமைதிப் பூங்காவாக சொர்க்கவெளியாக வாழ்வுச் சோலையாக ஆக்குவோம்.
அதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்று ஒவ்வொருவரும் இங்கே சொல்லுங்கள்.
நன்றி

*
இன்றெழுத்திச் செல்வதுவும் என் கவிதைகளே.
வன்முறையைத் தகர்த்தெறியாவிட்டால் அது என்ன கவிதையா?
நல்லிணக்கத்தை அள்ளித் தராவிட்டால் அது என்ன கவிதையா?
நான் எழுதுவேன், இனியும், இன்னமும் நிறைய எழுதுவேன்.
வன்முறை என்பது ஓர் அறியாமை.
அதை அகற்ற என் கவிதைகள் பல்லாயிரம் விரல்களாய்ப் பல்கிப் பெருகும்

*
>>>மதமென்ற அமைப்பு
மனிதன் கண்ட ஆட்சிக்
கான அரசமைப்பு<<<
உலகில் மதத்தின் பெயரால் நிகழும் எந்த ஆட்சியும் நல்லாட்சியாய் இருக்கமுடியாது.
எல்லா மதங்களையும் அள்ளியணைத்து எல்லா இனங்களையும் ஆரத் தழுவி எல்லா மனிதர்களுக்கும் பொதுவானதாக இருக்கும் அரசு ஒன்றே நல்லரசாக இருக்க முடியும். அதுவே வெல்லும்.
கனடா அப்படியானதொரு அன்னைத் தெரிசா கருணை அரசு!
*
>>>எங்கள் மத வாழ்க்கையே வாழ்க்கை என்று சொல்வது சரி யில்லைதானே.<<<
தன் வீட்டை தன் குடும்பத்தை தன் நாட்டை நேசிப்பதுபோல மனிதன் தன் மதத்தையும் நேசிக்கத்தான் வேண்டும்.
என் மதம் நல்ல மதம் என்று சொல்வதில் யாதொரு பிழையும் இல்லை.
உன் மதம் வீணாப்போன மதம் என்று சொல்வதுதான் மனிதத்தனமே அல்ல.
அந்தப் பதர்கள் அழியவேண்டும்.
அப்போதுதான் வன்முறை ஒழியும்.
உலகம் அமைதியின் மடியில் தவழும்

*
வேந்தன் அரசு >>>கடவுள் என்பது சிலரது கொள்கை. அறிவியல் ஒப்புவது இல்லை.<<<
அறிவியல் ஒப்புதல் தேவையே இல்லை.
அறிவியல் ஒப்புதல் தேவையே இல்லாதவைதான் நம்பிக்கைகள்.
கடவுள் ஒரு நம்பிக்கை
இவள் தான் என் அம்மா என்பது ஒரு நம்பிக்கை
இவள் என் மகள் என்பது ஒரு நம்பிக்கை
நாளை உயிரோடிருப்பேன் என்பது ஒரு நம்பிக்கை.
நம்பிக்கையால் ஆனதே இவ்வுலகு!

*
>>>காபாவுக்குள் ஒரு கருங்கல் இருக்கிறது. அதை ஏன் போற்றி சுற்றிவருகிறார்கள்??<<<
உங்களுக்கு இஸ்லாத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமா? முறையாகப் படியுங்கள்.
முதலில் குர்-ஆனைக் கையில் எடுங்கள். பின் முகம்மது நபியின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்
பிறகு உங்கள் எல்லா கேள்விகளுக்கும் நல்ல விடை உங்களுக்கே கிடைக்கும்.
என்னிடம் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்.
வன்முறை ஏன் கூடாது என்பதுபோன்ற கேள்விகள் உண்டா என்னிடம் கேளுங்கள்.
நல்லணிக்கம் எதுக்கு என்று தோன்றுகிறதா? என்னிடம் கேளுங்கள்!

*
நண்பா,என்னிடம் ஒரு மதம் பற்றிய கேள்வியைக் கேட்டால் என்ன பதில் சொல்வேன். நீ அந்த நூலைப் படி எல்லாம் புரியும் என்றுதானே சொல்வேன்.
அல்லாமல் நான் இங்கே அந்த மதம் பற்றி எல்லாம் எழுதினேன் என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? நான் அந்த மதத்தைப் போதிக்கவந்திருக்கிறேன் என்றுதானே சொல்வீர்கள்?
என்னை எந்தப் பக்கமும் செல்லவிடாமல் தடுப்பது ஏன்? நான் நல்லிணக்கம் பேசுகிறேன் என்பதாலா? வன்முறை கூடாது என்று சொல்கிறேன் என்பதாலா?
இதுதான் சத்திய சோதனையா?

*
இலக்ஷ்மணன் ஒண்டிபுதூர் திருமூர்த்தி >>>நாம் இந்த மதம் விட்டு மனதார இணக்கம் பற்றி பேசினால் கண்டிப்பாக நல்லிணக்கம் வரும். <<<
அதைத்தானே செய்துகொண்டிருக்கிறேன்
ஆனாலும் மறந்துவிடாதீர்கள்
RSS அமைப்பிற்கும் இந்து மதத்துக்கும் சம்மந்தம் இல்லை என்பதை நிறுவவேண்டியது உங்கள் கடமை
ISIS அமைப்பிற்கும் இஸ்லாம் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதை நிறுவ வேண்டியது என் கடமை.
அதைச் செய்தால்தான் நல்லிணக்கம் விரைந்து வரும்.
நான் குற்றவாளி வா கைகோர்க்கலாம் என்றால் யார் வருவார்?
நான் நிரபராதி என்னைக் குற்றவாளியோடு சேர்த்துப் பார்க்காதே என்று சொன்னாலல்லவா கைகோர்க்க எல்லோரும் வருவார்கள்?

*
எங்கள் அன்பு கவிஞரே
உங்களை யாரோ
மனம் சார்ந்து ஆழமாய்
காயப்படுத்தி விட்டாதாய்
உங்கள் எழுத்துக்கள்
எங்களை யோசிக்க வைக்கிறது
ஆனால் ஒன்று நீங்கள்
என்னதான் விளக்கம் தந்தாலும்
வீம்புக்கு பேசும் உள்ளம்
அதை ஏற்காது
அத்திகம் நாத்திகம்
இருவருமே பேசி முடிவெடுப்பது
இல்லை முடிவெடுத்து
பின் விவாதிப்பது
நிச்சயம் உடன்பாடு புரிதல்
உருவாக சாத்தியமே இல்லை
//தீவிரவாதிக்கு மதம் இல்லை
அது எந்த இயக்கமோ அமைப்போ
அவர்கள் தங்களுக்காக
கட்டமைப்ப உருவாக்க மதத்தை
தங்களுக்கு சாதகமாய் பயன்படுத்தி ஆதாயம் அடைகிறார்
எந்த மதமும் இன்னொரு உயிரை கொல்வதை ஏற்காது தீவிரவாதி அதை மட்டுமே செய்கிறான்
அப்படி இருக்கும் ஒருவனை
எப்படி மதம் சார்ந்து யோசிக்க
/// எல்லா மதங்களிலும்
நிறை குறை இருக்கு அதை யாரும்
மறுக்க முடியாது
எனக்கு எம்மதமும் சம்மதமில்லை
ஆனால் அதற்காய் யாரையும்
இழிவாய் பேசுவதும் உடன்பாடும்
இல்லை
நீங்கள் ஆயுள் வரை போதித்தாலும்
சிறு துளி மாற்றம் கூட இந்த சமுகத்தில் நிகழ்த்திட முடியாது
இது அனுபவ உண்மை
எல்லாமே அவரவர் எண்ணமே
சில விஷமிகளின் சீண்டலுக்கு
உங்கள் பொன்னான பொழுதுகளை
வீணாக்குவது வருத்தமே
>>>தேவி பாலா
*
இந்த உலகமே நானென்று நினைக்கிறேன். அந்த நான் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
*
மனிதனின் வக்கிரம்தான் ஜாதியை உருவாக்கிய வண்ணம் இருக்கும். அதனுள் நல்லவர்கள் சேர்ந்துவிட்டால், வக்கிரம் வென்றதாக ஆகிவிடும்.

*
உண்மையைச் சொல்வதானால், எதுவுமே (சாதி, இனம், நிறம்.. ... .. ) ஒழிக்கப்படவேண்டியவை அல்ல.
எதனுள்ளும் இருக்கும் பாகுபாடுகள்தாம் ஒழிய வேண்டும்.
இறைவனை வணங்கும் இடத்தில்கூட பாகுபாடு வைத்திருக்கும் நம் ஊரில் பாகுபாட்டை எப்படித்தான் ஒழிப்பது என்பதுதான் 100 மில்லியன் டாலர் கேள்வி

*
நான் கடவுள் மறுப்பைத் தவறென்று எங்குமே சொல்லவில்லை.
ஆனால் அவர்களுள் பலர் கடவுளை நேசிப்பவர்களை வன்முறை செய்கிறார்கள்.
அது கூடாது. அது நல்ல பகுத்தறிவல்ல.
நல்ல பகுத்தறிவும் சிறந்த ஆன்மிகமும் பிற நம்பிக்கைகளை நோகடிக்கவே விரும்பாது. மனிதநேயமே எல்லாம் என்று உணர்ந்ததாய் இருக்கும்.
அது எங்கே என்றுதான் கடவுள் மறுப்பாளர்களிடம் தேடுகிறேன்!

*
>>>இந்து கடவுள் இல்லை என்று கிறிஸ்தவன் சொல்கிறான். கிறிஸ்தவ கடவுள் இல்லை என்று இந்து சொல்கிறான். இந்த இரண்டு கடவுளும் இல்லை என்று முஸ்லிம் சொல்கிறான். இவர்கள் மூவரும் தனித்தனியாக சொல்றத நான் மொத்தமா சொல்றேன் இது தப்பா என்று கேட்டவர் பெரியார்.<<<<
அங்கே ஒரு பூ பூத்திருந்தது
அதை ரோஜா என்றான் ஒருவன்
மல்லிகை என்றான் மற்றவன்
முல்லை என்றான் மூன்றாமவன்
நான் அங்கே பூவே இல்லை என்றேன்
இது தப்பா 



தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இஸ்லாமியன் மரியாதை தரலாமா?

தமிழ்த்தாய் வாழ்த்து என்று ஒரு பாடிசைப்பார்கள். அதற்கு விழாவினர் எழுந்து நின்று கண்மூடி ஆழ்ந்த மரியாதை தருவார்கள் அது நம் இஸ்லாமிய மார்கத்திற்கு உகந்ததா? ”தரித்த நறும் திலகமுமே” என்றெல்லாம் வருகிறது. திலகம் என்றெல்லாம் சொல்வது சரியா? இறைவனுக்கு இணைவைப்பதாக ஆகாதா?
தமிழ்த்தாய் வாழ்த்து என்றதும் அதை இறைவனுக்கு இணைவைப்பதாக நினைக்கிறார்கள் சிலர். அது தவறான கருத்தாகும்.

தாய் சிறந்தவள், தாய்மொழி இனிமையானது, தாய்நாடு நேசம் மிகுந்தது என்று எத்தனையோ விசயங்கள் மனிதனோடு இரண்டறக் கலந்து கிடப்பவை.

ஓர் ஆன்மிகவாதிக்குத் தன் இறைவனோ உள்ளத்தின் உயர்ந்த இடத்தில் இருக்கிறான்.

தாய், தாய்மொழி, தாய்நாடு ஆகியவற்றின் மீதான அவன் பற்றும் பாசமும் நேசமும் தன் இறைவனை அவன் எங்கே வைத்திருக்கிறானோ அந்த இடத்திலிருந்து இறக்கிவிட்டுவிட வழியே இல்லை.

அப்படி இறக்கிவிட்டுவிடுமானால், அவனுடையது உண்மையான பக்தியே இல்லை.

நெகிழ்வதும், மகிழ்வதும், புகழ்வதும், வாழ்த்துவதும், பாராட்டுவதும், அன்பு செய்வதும், கருணை கொள்வதும், கூடாது என்றால் மனித வாழ்க்கையே கூடாது என்று பொருளாகிவிடும்.

மனித வாழ்க்கையை அனுபவிக்காவிட்டால் பிறகு மனித வாழ்க்கையே தேவையில்லை. இறைவனோ மனித வாழ்வை அனுபவிக்கச் சொல்கிறான்.

தமிழ்த்தாய் வாழ்த்து:

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிரைநுதலும் தரித்த நறும் திலகமுமே

அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !

பொருள்:

அலை கடலே ஆடையான
இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு
பாரத நாடே முகமாம்
தென்திசை அதன் நெற்றியாம்
அதில் திலகமென திகழ்வது திராவிடத் திருநாடாம்
அந்தத் திலகத்தின் வாசனைப் போல்
அனைத்து உலகமும் இன்பம் காண
எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும்
பெருமை மிக்க பெண்ணான தமிழே
என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய
இந்த அழகைக் கண்டு வியந்து,
செய்யும் செயலையும் மறந்து வாழ்த்துகிறோம்

இந்த அழகான பாடலில் இறைவனுக்கு இணைவைப்பது என்று ஏதேனும் உள்ளதா?

மதம் என்று வரும்போது சிலரின் உணர்வுப் பூர்வமான உள்ளம் கொக்கின் தலையில் வெண்ணை வைக்கும் அளவுக்கு அறிவின் ஒளியைக் குறைத்துக் கொண்டுவிடுவது இறைவனே விரும்பாத ஒன்று.

இறைவன் தன்மீது நம்பிக்கை கொள்ளச் சொல்கிறான். மூட நம்பிக்கை கொள்ளச் சொல்லவே இல்லை.

இந்தத் தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு சிறப்பினைக் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட சொல்தான் திலகம்.

நடிகர் திலகம், நடிகையர் திலகம், மக்கள் திலகம் என்றெல்லாம் கூறுகிறோம். அதன் பொருள் என்ன? உயர்வானது சிறப்பானது என்பதைத் தவிர வேறு ஏதேனும் உண்டா?

இறைவனுக்கு இணைவைப்பது என்றால் இன்னொருவனைக் காட்டி இவனும் இறைவன் என்று கூறி தொழுவது.

”பாரதத்தின் நெற்றியான தென் திசையின் திலகமாக இருப்பது திராவிடத் திருநாடு” எத்தனை அழகாக இந்தக் கவிதை எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் பாராட்டாமல், வேண்டாததை ஏன் நினைக்கின்றன சில மனங்கள்.

ஏனெனில் இவர்களின் மனம் எப்போதும் ஏதோ ஓர் அச்சத்திலேயே இருக்கிறது.

அதிலிருந்து விடுதலை பெற்று வாழ்வைச் சுவைத்தால் எவரும் மகிழ்வார் இறைவனும் மகிழ்வான்.

தீமைகளிடமிருந்து விலகிவிடுதலில் மட்டுமே அச்சம் கொள்ளுதல் வேண்டும். இறைவன் தடுக்காத வற்றைத் தடுத்துக்கொள்ளும் அச்சத்தை இறைவன் விரும்பவில்லை. கண்டிக்கிறான்.

”மார்க்கத்தைவிட - மொழி முக்கியமாகப் போகிவிட்டதா? கவிதை, இணைவைப்பதைத் தன்னுள்ளே மறைத்துக் கொண்டு, வெளியே தெரியாமல் ஆக்கும் தன்மை கொண்ட விஷம்.
மார்க்கம் என்ற சொல்லும் அல்லாஹ் என்ற சொல்லும் குர்-ஆன் வசனங்களும் மொழிதான்.

மொழியில்லையேல் நீங்களும் நானும் உரையாடிக்கொண்டிருக்க முடியாது.

மொழியின் வழியாகத்தான் இறைவன் குர்ஆனை அருளினான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

காட்டுமிராண்டிகளை மீட்டு மனிதர்களாக்கிய பெருமை மொழிக்கு உண்டு.

மொழியைச் சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். மொழியில்லையென்றால் இன்று நீங்கள் காணும் பண்பட்ட உலகமே இல்லை.

அன்பு பாசம் கருணை ஈகை மனிதம் பண்பு மொழி இலக்கியம் கவிதை கலை என்று மனித நாகரிகத்தின் செயலும் வளர்ச்சியும் ஏராளம் ஏராளம்.

மார்க்கம் என்பது இவற்றை மறுத்தால் அது எப்படி மார்க்கம் ஆகும். வழி தராத ஒன்று வழியாகுமா? பாதை தராத ஒன்று பாதையாகுமா? மார்க்கம் தராத ஒன்று மார்க்கம் ஆகுமா?

ஆகவே இறைவன் அருளிய அழகிய மார்க்கத்தைத் தவறாக எண்ணிக்கொண்டு இறைவனுக்கே நாம் கலங்கத்தை உண்டுபண்ணுதல் கூடுமா என்று யோசித்துக்கொள்ளுங்கள்.

இணைவைப்பது என்பது கவிதையால் மட்டுமே ஆகக்கூடியதில்லை, வெறுமனே ஒரு அத்துமீறல் செயலாலும் ஆகக்கூடும். ஒரு சொல்லாலும் ஆகக்கூடும். ஒரு சிறுகதையாலும் ஆகக்கூடும். ஒரு கட்டுரையாலும் ஆகக்கூடும். ஒரு நாடகத்தாலும் ஆகக்கூடும். ஒரு சினிமாவாலும் ஆகக்கூடும். ஒரு விமரிசனத்தாலும் ஆகக்கூடும்.

உங்கள் நிலைபாட்டில் நின்று, உறுதியாக இணைவைத்தலை வேண்டாம் என்று கூறுங்கள். அது ஏற்புடையது.

ஆனால் கவிதையை வேண்டாம் என்று சொல்லாதீர்கள். அது மார்க்கத்தை ஆழமாக அறிந்துகொள்ளாமல் அவசரமாக முடிவெடுக்கும் நிலைப்பாட்டைத் தவிர வேறெதையும் சொல்ல வழியில்லை.

மார்க்கத்தைப் பலரும் தடுப்புச் சுவராகவே நினைக்கிறார்கள். மார்க்கம் என்பது திறந்த பெரும் பாதை என்பதை உணர்வதற்கு அவர்களுக்கு அனுபவமும் போதுமானதாய் இருப்பதில்லை அறிதலும் போதுமானதாய் இருப்பதில்லை.

மதமும் நம்பிக்கையும் நமக்கும் இறைவனுக்குமான நேரடித் தொடர்பு. அதன் இடையே குறுக்கிட எவருக்கும் ஞானமில்லை என்று நினைப்பதே கூட்டிக் கழித்துப் பார்த்தால் சரியானதாக ஆகும்.
இதனால் யாவருக்கும்.....

எந்த மதத்தில் இருப்பவருக்கும் எவ்வகை இறைமறுப்பில் இருபவர்களுக்கும் நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

மதங்களில் இருப்போரே நீங்கள் யாவரும் இறைவன் இறைவன் என்று இறைவனையே பாருங்கள். என் மதம் என்பதை மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக்கொண்டே இருக்கத் தேவையில்லை. அது உங்களுக்கு இடப்பட்ட ஒரு புனைபெயரைப் போல இருந்துவிட்டுப் போகட்டும். நீங்கள் நீங்களாக இறைவனையே நோக்கி இருங்கள். இறைமறுப்பாளரைக் கண்டால் தீண்டத்தகாதோரைக் காண்பதுபோலக் காணாதீர்கள். இறைமறுப்பாளர்களே இறைவனை உங்களைவிட அதிகம் நினைக்கிறார்கள். இறைவன் இப்படி இருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற ஏமாற்றத்தில்தான் பெரும்பாலான இறைமறுப்பாளர்கள் உருவாகி இருக்கிறார்கள்.

இறைமறுப்பில் இருப்போரே நீங்கள் யாவரும் பகுத்தறிவே எனக்கான எல்லாம் என்ற நிலையில் மட்டுமே இருங்கள். உண்மையான பகுத்தறிவு எல்லோருக்கும் வாழ்வளிப்பது, எவரையும் கீழானவர்கலாக நினைப்பதல்ல. அப்படி நினைப்பதன் பெயர் அகங்காரம். உங்களுக்கு விகாரமான அகங்காரம் தேவையில்லை, அற்புதனான பகுத்தறிவே தேவை. சிறந்த பகுத்தறிவு என்பது எல்லோரும் ஓர் நிலை எல்லோரும் உலக மக்கள், ஏற்றத்தாழ்வுகளே இல்லை என்ற நிலையைத் தேடுவது. இது மூடநம்பிக்கை என்று நீங்கள் எதையாவது நினைத்தால், அதனால் நேரடியாய் சமுதாயத்துக்கு என்ன கேடு என்ற கண்ணோட்டத்தில் அந்த மூட நம்பிக்கையைப் பாருங்கள். ஒருவன் தன் கடவுள் நம்பிக்கையால் எதையாவது அழிக்கிறானா என்று பாருங்கள். அழித்தால் அது இறைவனின் விருப்பமே அல்ல. அவனது மனோவியாதி. அதற்கான தண்டனையை அவர்களுக்குக் கொடுங்கள், இறைவன் மீது பாயாதீர்கள். பாய்ந்தால் நீங்கள் திசை தெரியாத பயணத்தில் இருக்கிறீர்கள் என்றுதான் பொருள்.

இறைவனுக்கு நம்மிடமிருந்து என்ன வேண்டும்?

1. அறம் - ஒழுக்கம் - நாம் கடைபிடிக்க  வேண்டும். இல்லையேல் நரகம் இருந்தால் சொர்க்கம்.

2. அன்பு - அரவணைப்பு - நாம் நிறைவாய்க் கொள்ளல் வேண்டும். ஏனென்றால் அன்புதான் இறைவனின் அடிப்படைப் பண்பு. அவன்மீது பற்றுள்ளோம் என்றால் நாம் அன்பின்மீதுதான் பற்றுகொண்டுள்ளோம் என்று பொருள். அல்லது நம் அன்பை அதிகப் படுத்த அதிகப்படுத்த, நாம் இறைவனுக்கு வெகு அருகாமைக்குச் செல்கிறோம்.

3. அறிவு - ஞானம் - இறைவனை அறிதலே சிறந்த ஞானம் என்கிறீர்கள். இறைவனை அறிதல் என்றால் என்ன? இறைவன் என்ன சொல்கிறான் என்பதை முழுமையாய் அறிவது. அவன் என்ன சொல்கிறான். அறமும் அன்பும் நிறைவாய்க்கொண்டிரு மனிதா என்கிறான்.

பகுத்தறிவாளர்களுக்கு என்ன வேண்டும்?

1. அறம் - ஒழுக்கம் - நாம் கடை பிடிக்க வேண்டும். இல்லையேல் நாம் மனிதர்கள் இல்லை, விலங்கிலும் கீழானவர்கள்.

2. அன்பு -  அரவணைப்பு - இது இரண்டும் இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை என்பதை பகுத்தறிந்தவர்கள் நீங்கள். அன்பு செய்யாவிட்டால் நீ மனிதனே இல்லை என்பீர்கள். அரவணக்காவிட்டால் உன்னிடம் மேன்மையான குணமே இல்லை நீ காட்டுமிராண்டி என்பீர்கள்.

3. அறிவு - ஞானம் - பகுத்தறிய அறிவு மிக அவசியம் என்கிறீர்கள். இயற்கையை எல்லாம் அதை அறிதலே ஞானம் என்கிறீர்கள். இயற்கை என்படி இன்புற்று வாழும். மனிதர்கள் அன்பும் அறனும் கொண்டு வாழாவிட்டால் இயற்கையே அழிந்துவிடும் என்பதை அறிவீர்கள்.

ஆகவே, இங்கே பாதை மாறினாலும் பயணம் ஒன்றுதானே? ஏனய்யா இன்னும் குத்திக்கொண்டு சாகிறீர்கள்?

தெரிகிறது எல்லோருக்குள்ளும் ஒரு ஹீரோ ஒரு வில்லன் இருக்கிறார்கள். அவர்கள் சில வேளைகளில் நம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

உள்ளே இருக்கும் வில்லனை உள்ளே இருக்கும் ஹீரோவால் அடித்து வீழ்த்திக்கொண்டே  இருக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு உங்கள் உள்ளே இருக்கும் வில்லன் வெளியே இருக்கும் ஹீரோக்களை கொன்றழிப்பதும் உள்ளே இருக்கும் ஹீரோ வெளியே இருக்கும் வில்லன்களைக் கொன்றழிக்கிறேன் என்று புறப்படுவதும் வன்முறை வன்முறை வன்முறைதான்.

எனக்கு இவ்வேளையில் ஒரு அருமையான செய்தி ஞாபகத்திற்கு வருகிறது. அது அறம் பற்றிய அருமையான போதனை.

தீமையை எங்கு கண்டாலும் உன் கரங்களால் தடு.
இயலாவிட்டால் உன் சொற்களால் தடு.
அதுவும் இயலாவிட்டால் அதை மனதளவில் வெறுத்து ஒதுங்கிச் செல்.

இந்த மூன்றையும் நான் இந்த நாகரிகக் காலத்திர்கு ஏற்ப அமைதியை நாடி எளிதாக வகை பிரித்துக்கொள்கிறேன்.

1. உன் கரங்களால் தடு என்பதை அரசிடம் விட்டுவிடலாம்.  அதற்குத்தானே அது இருக்கிறது. அது அதன் கடமையைச் செய்கிறதா என்று நாம் கண்காணிக்க வேண்டும். அரசு என்பது நாம் தானே? நம்மைப் பிரதிபளிக்கத்தானே அரசு. ஆகவே நம் கரங்களால்தானே தடுக்கிறோம்.

2. உன் சொற்களால் தடு என்பதை கவிஞர்கள், இலக்கியக்காரர்கள், தத்துவ ஞானிகள் போன்றோடிடம் விட்டுவிடலாம். நம்மைவிட அவர்கள் பலவற்றையும் சீர் தூக்கிப் பார்த்து சிந்தித்து எழுதுபவர்கள் சொல்பவர்கள். அவர்கள் சொன்னால் ஏற்க வேண்டும் போல இயல்பாகவே தோன்றும். ஆகவே நாம் நம் சொற்களால் தடுக்கிறோம்.

3. மனதில் வெறுத்து ஒதுங்கு - இது நாமே செய்யவேண்டிய முக்கியமான ஒன்று. அதை வெறுக்காமல் பாராட்டவோ நியாயம் பேசவோ தொடங்கிவிட்டால் (அதுதான் முகநூல் முழுவதும் நடக்கிறது) நாம் மனிதர்களாய் இருப்பதிலிருந்து விலகிக்கொண்டே இருக்கிறோம் என்று பொருள். முதல் இரண்டும் முழுமையாக நிறைவேனாலும் இந்த மூன்றாவது நிகழாமல் உலகம் ஒரு பொட்டும் மாறப்போவவே இல்லை.

ஆகவே அன்பு நெஞ்சங்களே, எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது.

வன்முறை விடுவோம் அன்பைத் தொடுவோம் அறத்தோடு வாழ்வோம் புதியதோர் உலகம் செய்வோம்!

என்னை நீ வந்து
கடைசியாய்ச் சந்தித்த நாளில்
பூத்திருந்த குறிஞ்சி
மீண்டும் பூக்கவா நீ
காத்திருந்தாய்

இப்போது வந்த நீ
இன்னுமொரு குறிஞ்சி
பூக்கும் வரையிலாவது
எனக்குள்ளேயே இருக்கும் நீ
என்னுடனேயே இருப்பாயா

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
காய்ந்த சிறகு ஒன்று
என் காலடியில் கிடந்தது

குனிந்து எடுத்து
என் கைகளில் ஏந்தினேன்

ஒரு
முத்தம் பதித்தேன்

அடுத்த நொடி
காய்ந்த சிறகின் மேனி
தங்கநிறமானது

சருகின் உடைந்த ரேகைகளில்
பசுமையின் ஒளி ஏறிச்
சீராகின

ஓரங்களில்
பொன்நிறத் துகள்கள்
உதிரத் தொடங்கின

வெட்டுக்கிளியின்
வகை வகையான
சின்னஞ்சிறு இறக்கைகள்
சடசடவெனப் பலநூறாய் முளைத்தன

அடடா
காய்ந்த சிறகு
ஓவிய அழகில்
ஆகாய வெளியில்
சிலுசிலுவெனப்
பறக்கத் தொடங்கிவிட்டது

அது செல்லும் திசையையே
பார்த்துக்கொண்டு நின்றேன்
ஆச்சரியமாய்

இப்படியே
என் முத்தங்கள் எல்லாம்
பறந்து பறந்து வந்து
உன் இதழ்களையே சேருமானால்

உனக்கல்லாத
என் முத்தங்களை
நான் எப்படித்தான்
பத்திரப்படுத்தி வைப்பேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

20160726

மனிதர்களை யாசிக்க விடாமல் ஈகையை அள்ளி வழங்கச் சொல்கிறது இஸ்லாம்.
அதற்கான பயிற்சியும் மன உறுதியும் ரமதான் மாதத்தில் வழங்கப்படுகிறது.
எல்லாமே மனிதர்களைக் கொண்டுதான் மனிதர்களுக்குச் செய்யப்படுகின்றன .
கட்டளை மட்டும்தான் இறைவனுடையது, காரியமெல்லாம் மனிதர்களுடையதுதான்.
இது சரி இது பிழை என்பதைத்தான் இறைவன் நறுக்கென்று சொல்லிமுடிக்கிறான்.
அதுதான் அறம், அன்பு, அறிவு!

*
>>>இருப்பவர்கள் உதவ ஈகை உடன் செல்வம் வேண்டும் அதனால் இது பெருங்கொடை ஆனால் செல்வமே இல்லாத எவருக்கும் ஈகை செய் என்று சொன்ன அல்லா தந்துள்ள செல்வங்கள் அறம், அன்பு, அறிவு ஆனால் நமக்கு இவை செல்வம் சென்று தெரிவதில்லை உண்மையில் இம்மூன்றும் தான் முக்கிய கொடைகள் என்றும் அதன் பண்பு கொடுக்கக்கொடுக்க வளரும் இயல்புடையது. கண்ணுக்குத் தெரியாமல் நம்பிக்கை எனும் ஆலவிருட்சமாக வளர அது சுயநலமில்லாத கொடையாக இருக்க வென்டும். (இலட்சுமணன் ஒண்டிப்புதூர் திருமூர்த்தி)<<<<
அருமை.
உண்மையில் இதுவும் இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது.
அதோடு நபிபெருமானார் வரலாற்றில் ஒரு சம்பவம்.
நபிபெருமானாருக்குப் போர் சுத்தமாகப் பிடிக்காது. ஆனால் அந்தக் கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள் ஒரு முறை. அதிலும் பல கட்டளைகளை இடுகிறார்கள்.
பெண்களைக் கொள்வது, குழந்தைகளைக் கொல்வது, முதியவர்களைக் கொல்வது என்பதெல்லாம் கூடாது.
சரணடைந்தவனைக் கொல்லக்கூடாது.
ஒருவழியாய் போர் முடிந்ததும், தோற்றவர்கள் அடிமைகளாய் கொண்டுவரப்படுகிறார்கள்.
அந்த அடிமைகள் நன்கு கற்றவர்கள் என்று நபிபெருமானார் அறிகிறார்கள்.
ஆகவே, தன் ஊரில் உள்ள கல்வியறிவில்லாதவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுத்துவிட்டால், அத்தனை பேருக்கும் விடுதலை என்று சொல்கிறார்கள்.
அதாவது அடிமைகளுக்கு ஆசிரியர் அந்தஸ்து.
நபிபெருமானாருக்கு கல்வி *அறிவின்மீதும், எதிரிகளிடத்தும் *அன்பின் மீதும், யுத்த *அறத்தின்மீதும் அளப்பரிய விருப்பம்

*
மதங்கள் என்று சொன்னால்தான் உலகம் பிரியும் வாய்ப்பு இருக்கிறது. (மத நல்லிணக்கம் ஒன்றே சேரும் வழி)
இறைவன் என்று சொன்னால் உலக மக்கள் எல்லோரும் இணையும் வாய்ப்பே இருக்கிறது.
அல்லாஹ் என்றால் அரபு மொழியில் இறைவன் என்று பொருள். ஆங்கிலத்தில் God என்று பொருள்.
இறைவன், கடவுள், ஆண்டவன் என்று பலவாராய் அழைக்கிறோம் அல்லவா அதுபோலத்தான் அல்லாஹ்.
ஆனால் அல்லாஹ் என்பதற்கான விளக்கம் சில கடவுளர்களிடமிருந்து மாறுபட்டதாய் இருப்பதால் அல்லாஹ் என்று சொல்வதையோ அல்லது என்போன்று தமிழில் இறைவன் என்று சொல்வதையோ பலரும் விரும்புகிறார்கள்.
இறைவன் மனிதன் இல்லை
இறைவனுக்கு உருவம் இல்லை
இறைவன் ஒருவனே
இறைவனுக்கு இணையில்லை. இணைவைத்தல் கூடவே கூடாது
இறைவன் மகா பெரியவன்
இறைவன் அளவற்ற அன்புடையோன் நிகரற்ற கருணையுடையோன் / அருளுடையோன்
இறைவன் தேவைகளற்றவன்
இறைவன் மனிதர்களிடமிருந்து அறம் அன்பு அறிவைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை

*
>>>நான்மணிக்கடிகை, திருக்கடிகம், இனியவை நாற்பதூ, இன்னா நாற்பதுஎன
பதினெட்டின் கீழ்கணக்கின் திரூக்குறள் என இவற்றில் இல்லாத எதைஇஸ்லாமிய மார்க்கம் புதியதாய்
சொல்கிறதூ<<<
நீங்களே அப்படியான காப்பியங்களோடு இஸ்லாத்தை உயர்த்திப் பேசுவது மகிழ்வாக இருக்கிறது.
நல்லறம் சொல்லும் முறை இஸ்லாத்தின் தனிச்சிறப்புதான். ஆனால் சொல்வதோடு நின்றுவிடாமல் அதைக் கடைபிடிப்பதில்தான் எல்லாம் இருக்கிறது என்பதை அறிந்து இறைவன் பயத்தை அதற்கு பாதுகாப்பாய் வைத்தது மிகச் சிறப்பு.
எப்படியோ உலகம் அமைதி வழியில் மனிதநேயம் கண்டு வாழவேண்டும் என்று எல்லா மார்க்கங்களும் சேவை செய்ய வேண்டும்.
அதுதான் தேவை
அந்த வழியில் கேடில்லாமல் செல்ல மத நல்லிணக்கம் மிக முக்கியம்
>>>இந்தியாவில் தங்களின்
தாய் மதத்தவரான இந்துக்களோடூ இணங்கியும் நயந்தும்
நடந்து கொள்வது ஏன்ப
தாகும்.<<<<
இஸ்லாத்தின் தாய் மதங்கள் கிருத்தவமும் யூதமும் ஆகும்.
இணங்கி நடந்துகொள்ள வேண்டும் என்பது மிகவும் சரி. ஆனால் சகோதரத் துவத்தோடுதானே தவிர நீங்கள் சொல்வதுபோல நயந்து அல்ல. நயந்து என்பது அடிமைப்பட்டு என்பதுபோல் ஒலிக்கிறது.
எல்லா மதங்களும் சகோதர மதங்கள் என்று தோளோடு தோள் சேர்த்து சமத்துவம் பேணி சுமுகமாக இணக்கத்தோடு வாழவேண்டும்
>>>>>எததற்கெடுத்தாலும்
நபிகள் சொன்னார்,
எங்கள் மார்க்கம் சொல்கிறது என்பதெல்லாம் இந்தியாவில் வேண்டாமே.<<<
அதாவது இந்தியாவில் வேறு எந்த மார்க்கமும் வாழ அனுமதிக்க மாட்டீர்கள். அப்படித்தானே?
உங்கள் மதவெறியை நான் பார்த்துக்கொண்டுதான் வருகிறேன். உங்களை மாற்றும் பேறு எனக்குக் கிடைத்தால் மகிழ்வேன். உங்களிடம் பிழையான எண்ணங்கள் பல சூழ்ந்து கிடக்கின்றன.
அவை உங்களை அழித்துவிடும், கவனம்!

*
தலை விரித்தாடும் மதவெறியை நம் மதங்கள் சொல்லித் தந்த ***அன்பு அறம் அறிவு*** கொண்டு பார்க்க வேண்டும், சீர் செய்ய வேண்டும்.
நல்லவர்களைப் பார்த்து நாம் நல்லவர்கள ஆவோம்.
கெட்டவர்களைப் பார்த்து கெட்டவர்கள் ஆவதையா மதங்கள் சொல்லித் தந்தன?
மத நல்லிணக்கத்துக்கு எதுவெல்லாம் தேவையோ அதை எல்லாம் செய்பவர்கள்தான் உன்மையான மதப்பற்று உள்ளவர்கள்.
செல்லும் மார்க்கம் யாதாகினும், வணங்கும் இறைவன் ஒருவன் தானே?
சகோதரத்துவம் நாசமாகக்கூடாது. அதனால் உலகம் அழிந்துவிடும். சகிப்புத் தன்மையே அதற்கான அரு மருந்து.
உன்னுடையது உனக்கு
என்னுடையது எனக்கு
அவ்வளவுதானே?
சொல்வன்முறை, செயல்வன்முறை, எண்ணவன்முறை ஆகிய எல்லா வன்முறைகளிலிருந்தும் விலகுவோம், உலக அமைதிக்கு ஒரு சிறு துரும்பையாவது நகர்த்துவோம், சகோதரர்களே!
மதங்கள் பற்றியே எழுதாமல், கவிதைகளோடு மட்டுமே வாழ்ந்திருந்த நான், இப்போது நல்லிணக்கம் தேடி ஒரு தீயணைப்புப்படையைப் போல நெருப்பைத் தணிக்க ஏதேனும் செய்ய முடியுமா என்று யோசித்து கொஞ்சம் எழுத வந்திருக்கிறேன்.
எனக்கான வாழ்த்துக்களை நான் உங்களிடமிருந்தெல்லாம் எதிர்பார்க்கலாமா நம்பிக்கையோடு?

*
>>>இறைவனுக்கு உருவம் இல்லை என்பதை பகுத்தறிவின்பாற்பட்டு விளக்குங்கள்.
1. கொள்கலனின் உருவம் கொள்ளும் நீரைபோன்றவரா?
2 காற்றைப்போல் உணர்வால் மட்டும் உணரக்கூடிய வரா?
3. அணுவைபோல் கருவிகளன்றி காணப்படாதவரா?
4. ஒளியைபோல் புலன்களுக்கு மட்டும் உணரக்கூடியவரா
5. காந்தம், ஈர்ப்புவிசை போல் ஒரு ஆற்றல் மட்டுமா?
6 விண்வெளிபோல் யாதுமற்ற வெறுமையா?
7. அல்லது பிறிதொன்று எனில் அது என்ன?<<<<<
உங்கள் சிந்தனைக்கு அற்பாற்பட்டவன் இறைவன் என்கிறது இஸ்லாம்!
-இறைவன் ஒருவனே
-இறைவனுக்கு இணையில்லை
-அவன் மனிதனில்லை
-அன்பும் அருளும் அவன்
-மறுமைநாளின் நீதிமான்
அறியத் தந்த விடயங்கள் இவை போல வெகு சிலதான்!

*
உங்கள் ரேகையும் என் ரேகையும் வேறு.
உங்கள் ரேகையும் உங்கள் பிள்ளையின் ரேகையுமே வேறு.
நீங்கள் நேசிக்கும் இறைவனை அப்படியே நேசிக்கும் இன்னொருவரின் ரேகையும் உங்கள் ரேகையும் வேறு.

அட, உங்கள் இடது கை ரேகையும் வலதுகை ரேகையும் வேறு வேறு.
என்றால் இணக்கம் இணைவு சகோதரத்துவம் என்றால் என்ன?
மாறிய ரேகைகளையுடைய கைகள் அன்பும் நட்பும் சகோதரத்துவமும் கொண்டு குலுக்கிக்கொள்ள வேண்டும்.

*
பத்துபேரின் மூளையை உடையவன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் பத்துக் கலைகள் தெரியும். பத்து வேலையை ஒரே நேரம் செய்வான்.
அந்தக் காலத்தில் சிற்பிகள் ஓவியர்கள் கவிஞர்கள் அவனைப் பத்துத் தலை ராவணனாகச் செய்தார்கள்.
அவனுக்கு இருந்தது உண்மையில் ஒரே ஒரு தலைதான். ஆனால் பத்துத் தலைக்கான அறிவும் ஆற்றவலும் அவனிடம் இருந்தது.
இப்படித்தான் கடவுளுக்கு உருவங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
காளி எப்படிப்பட்டவள் என்று அவள் சிலை சொல்லும்.

*
எம் ஜி ஆர் தன் படங்களில் யாரையுமே கொன்றதில்லை. எல்லா வில்லன்களும் இறுதியில் திருந்திவிடுவதாகவே காட்டுவார்.
குற்றம் செய்பவர்களை விட்டுவிடவேண்டு என்று அர்த்தம் இல்லை.
தண்டனை என்பது அரசுதான் வழங்க வேண்டும்.
நீதிபதி மனிதன் தான் என்றாலும் நிதானமாக ஒரு குற்றவாளியை ஊர்ஜிதப்படுத்தி பின் தீர்ப்பளிக்கும் தகுதி உடையவர்.
அவர் சரியில்லாவிட்டால், நாம் நம் அரசை உடனே மாற்றவேண்டும்.
அரசைத் தேர்வு செய்த நாம் தான் இதற்கும் பொறுப்பு!

*
வெகு சிறப்பாக
அறத்தோடும்
அன்போடும்
அறிவோடும்
அனுபவித்து அனுபவித்து
ரசித்து ரசித்து
ருசித்து ருசித்து
மகிழ்ச்சியாக வாழுங்கள்
அதைவிட சிறந்த ஞானம் வேறொன்றில்லை
அதைவிட சிறந்த பக்தி வேறொன்றில்லை
அதைவிட அடையவேண்டிய பேறு வேறொன்றில்லை

*
>>> துறவு என்றால் கெட்ட எண்ணம் செயல் சொல் சிந்தனைய துற என்பதாகும்<<<
இந்த விளக்கம் அருமை. இதைத்தான் இஸ்லாம் ஜிகாத் என்கிறது.
ஆனால் துறவு என்றதும் புத்தரைப்போல் பொண்டாட்டி பிள்ளைகளை விட்டுவிட்டு மரத்தடி மலையடி என்று கிளம்பிவிடுகிறார்களே, அவர்கள் உண்மையான துறவை அவமதிக்கிறார்களா?

*
>>>தீவிர கடவுள் பற்றாளர் பகுத்தறிவு வாதியாக இருக்கலாம். அது அறிவு சார்ந்தது<<<
பெரிய விஞ்ஞானியாகவும் இருக்கலாம்,
ஐன்ஸ்டீன், அப்துல்கலாம்,....
புரட்சியாளராகவும் இருக்கலாம்
பாரதி... காந்தி....
இப்படியே அடுக்கிக்கொண்டே போகலாம்

*

அரசை மாற்ற அறிவுடையோர் மட்டுமல்ல அறம்மிகுந்தோர் வேண்டும். இல்லாவிட்டால் மாற்றவே முடியாது

*
அல்லாஹு அக்பர் என்றால் அதன் பொருள் என்னவென்று நினைத்தீர்கள்
இறைவன் மிகப்பெரியவன்
ஏன்?
உங்களிடம் அன்பு இருக்கிறது. ஆனால் அவனிடம் நிகரற்ற அன்பு இருக்கிறது. ஆகையால் அவன் பெரியவன்
உங்களிடம் கருணை இருக்கிறது. ஆனால் அவனிடம் அளவற்ற கருணை இருக்கிறது. அதனால் அவன் பெரியவன்.

*
ஹா ஹா ஹா...
இஸ்லாம் ஒரு விசயத்தைத் தெளிவாகச் சொல்கிறது வேந்தன்.
அரபு மொழி உயர்ந்ததென்றும் பிறமொழி தாழ்ந்ததென்றும் எவனொருவன் நினைத்தாலும் அவன் பெரும் பிழை செய்கிறான்.
அப்படி
மொழிகளுக்குள் வேற்றுமை இல்லை
மனிதர்களுக்குள் வேற்றுமை இல்லை
அல்லாஹ்வின் மொழி அரபி அல்ல.
தூதரின் மொழியில் குர்-ஆன் இறங்குகிறது. அவ்வளவுதான்.
இன்னும் வேற்றுமைகளே இல்லை இல்லை என்று சொல்வதாகத்தான் இஸ்லாம் இருக்கிறது.
அதனால்தான் அது முற்போக்கு மார்க்கம் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.
பெர்னாட்சா சொன்னதை நான் விரைவில் இடுகிறேன்.

*

மிருகம் போக்க ஒரே வழி 
அப்பழுக்கில்லாத அறம் கொள்வது மட்டுமே!

*
அறம் படைக்கப்படுவதால் மட்டும் ஒரு பயனும் இல்லை. அது பின்பற்றப்படுவதால் மட்டுமே பயன் கிட்டும்.
*
இணக்கத்தைக் கெடுப்பவராக நீங்கள் மட்டுமே இருக்கிறீர்கள். இங்கே இருக்கும் பலநூறு நண்பர்கள் இணக்கத்தை விரும்புபவர்களாகவே இருக்கிறார்கள்.
மதங்கள் உலக அரங்கினுக்குரியது.
கனடா வாருங்கள். வந்து பாருங்கள்.

இங்கே இந்துமதம் இருக்கிறது, பௌத்தமதம் இருக்கிறது, சீக்கியமதம் இருக்கிறது, யூத மதம் இருக்கிறது, கிருத்துவ மதம் இருக்கிறது, இஸ்லாமிய மதம் இருக்கிறது, நாத்திகம் இருக்கிறது, இன்னும் உலகில் எத்தனை மதங்கள் உள்ளனவோ அத்தனையும் இருக்கின்றன.
யாவரும் நலமுடன் வளமுடன், உங்கள் விருப்பபோல வாழுங்கள் என்று அரசு அனுமதிக்கிறது. மக்கள் அனுமதிக்கிறார்கள். எல்லோரும் நலமுடன் இருக்கிறார்கள்.
ஆனால் வன்முறை மட்டும் கூடவே கூடாது.
நீங்கள் அவ்வப்போது மெல்ல மெல்ல வன்முறையில் அடியெடுத்து வைக்கிறீர்கள்.
சகிப்பது பக்குவம். அது ஒரு நாற்பதைக் கடந்துவிட்டாலே இயல்பாகவே வரவேண்டும்.
உங்களுக்கு என்னாச்சு?
கவலையாக இருக்கிறது.
ஏனெனில் கஷ்டப்படப் போவது நீங்கள் மட்டுமே 

சிறு துளி பெரு வெள்ளம் 
என் துளிகள் கடலாகும்
நான் ஈரமாய் இருக்கிறேன்
*
இந்த உலகின் மிக முக்கியமான தேவை சகோதரத்துவம்தான்
அதுதான் வன்முறையற்ற வாழ்வைத் தரும்

*




20160724

நிர்வாணம் அழகில்லை
ஆடை குறையக் குறைய
கொதித்தெழுந்த உணர்வுகள் குறைந்து குறைந்து
பின் எது வந்து எப்படி நின்றாலும் 
எந்தச் சிலிர்ப்பும் இல்லாமல் வாழ்க்கை
படு சொதப்பலாய் சொத்தையாய் கடுப்பாய்
வெறுப்பாய் பாலைவனமாய் ஆகிவிடும்
அறுபதிகளின் படங்களில் வந்த கதாநாயகிகள் தந்த எந்த உணர்வுகளையும் இன்று எந்த கதாநாயகியும் தறுவதில்லை

*
பத்மினிகள் கனவுகளை நிறைத்தார்கள், சரோஜாதேவிகள் கனவுகளில் வாழ்ந்துவிட்டே போனார்.
இன்று யார் பெயரையும் சொல்ல முடியாது, சதைகள்தான் கனவில் வருகின்றன. அப்படியே திடுக்கிட்டு எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு அடச்சே என்ன கெட்ட கனவு என்று படுத்துக்கொள்கிறான் இளைஞன்.

*
யாரைப்பார்த்தாலும் சந்தேகம்படுபவன் அனுபவமோ தெளிந்த அறிவோ வாழ்க்கையில் நம்பிக்கையோ இல்லாதவன்.
இதோ குற்றவாளி என்று அடையாளப்படுத்திக் கண்டுபிடித்து அவனை மட்டும் கொத்தாக அள்ளிச் சென்று தண்டனை அளிப்பவன் தான் புத்திசாலி, வெற்றியாளன், சமூக சீர்திருத்தவாதி.
என் வீட்டில் ஒரு பெண்சில் காணாமல் போய்விட்டது என்று இந்த உலகில் உள்ள எல்லோரும் திருடர்கள் என்று சொல்லும் மடமை கையாலாகாதத் தனத்தால் வெளிப்படுவது.
ஒரு திருடனை அடையாளம் கண்டுபிடிக்க முடியாதவர்கள் ஊரெல்லாம் திருடன் என்று சொல்வது வக்கற்ற நிலையன்றி வேறில்லை.
வேண்டாம் அது உங்களுக்கு!

*
போர்கள் காலத்துக்கு ஏற்ப மாறுகின்றன.
அன்று ஒரு ஊரும் இன்னொரு ஊரும்தான் சண்டை போடும்.
பிறகு நாடும் நாடும்.
அப்புறம் எல்லா நாடுகளும் கோதாவில் இறங்கி.
இப்போ, சூழ்ச்சி செய்து உள்ளாட்டுக் கலவரங்களைப் பிற நாடுகள் உருவாக்கி உலகமெங்கும் கொடுமையான யுத்தம் நடக்கிறது.
நேரடியாய்ப் பார்த்தால் யுத்தம் மாதிரி தெரியாது, ஆனால் முன்பு எப்போதும் இருந்ததைவிட இந்த யுத்தம்தான் கொடுமையானது.

ஏனெனில் இதற்கு முடிவே கிடையாது

*
துறவு முக்திநிலை மாயை என்பதெல்லாம்
வாழ்க்கை ஆகாது
இந்த உலகம் வாழ்க்கையால் கட்டப்பட்டிருக்கிறது. வழுக்கி விழுந்தவர்களால் கட்டப்படும் துறவால் அல்ல

*

இஸ்லாம் என்பதும் நாத்திகம் என்பதும் 
99 புள்ளிகளில் அப்படியே ஒன்றுபடுகின்றன. 
ஒரே ஒரு புள்ளியில்தான் அவை வேறுபடுகின்றன. 
அந்தப் புள்ளியின் பெயர் இறை நம்பிக்கை

*
>>>எங்கள் மத அடிப்படை அல்லது அடித்தளம் குறையுள்ளதா என்று சொல்லுங்கள் நாங்கள் தெரிந்து கொள்கிறோம் <<<
எல்லா மதத்துக்கும் அடிப்படை / அடித்தளம் **அறம் அன்பு அறிவு** என்பதாகத்தான் இருக்கும். ஆகவே அத்தனை மதங்களையும் நான் நேசிக்கிறேன்.
இந்த மூன்றுக்கும் பங்கம் விளைவிப்பது மீண்டும் மனிதர்களால்தான். அவற்றை மனிதர்களே தூய்மையாக்கிக்கொள்ள வேண்டும்.
இஸ்லாத்துக்குள் நுழையும் பொய்க் கதைகளை, ஜிகாத் என்பதன் உண்மைப் பொருளை நான் இயன்றவரை விளக்கம் கூறிக் களைய முற்படுவேன்.
அப்படித்தான் ஒவ்வொரு மதத்தவரும் செய்ய வேண்டும். செய்தால் மட்டுமே **அறம் அன்பு அறிவு** பூரணமாகும் என்று நம்புகின்றேன்.
இஸ்லாம் என்பதும் நாத்திகம் என்பதும் 99 புள்ளிகளில் அப்படியே ஒன்றுபடுகின்றன. ஒரே ஒரு புள்ளியில்தான் அவை வேறுபடுகின்றன. அந்தப் புள்ளியின் பெயர் இறை நம்பிக்கை

*
துறவு கூடாது
வாழ்வில் நம் இறுதி மூச்சுவரை வாழ்வதற்கான எல்லாமும் இந்த மண்ணில் இருக்கிறது.
இறைவனை அடைவது என்றால் என் அகராதியில்...

இறைவன்
அளவற்ற அன்புடையவன்
நிகரற்ற கருணையுடையவன்
என் அன்பையும் கருணையையும் அதிகரிக்க அதிகரிக்க நான் நான் இறைவனை நெருங்கிக்கொண்டே இருப்பேன்.

*

20160722

”உன்னுடையது உனக்கு என்னுடையது எனக்கு” என்றுதான் குர்-ஆனிலும் சொல்லப்பட்டிருக்கிறது. அடுத்த மதம் இனம் மொழி எல்லாவற்றையும் மதிக்கச் சொல்கிறது.
ஆனால் நாத்திகம் என்ற பெயரில் வன்முறைச் சொற்களை அள்ளி இறைப்பதும் நக்கலடிப்பதும் தங்களைப் பெரிய மேதாவிகள் என்று காட்டிக்கொள்ளும் வறுமையின் காரணம்தான் என்று எனக்குத் தெரியும்.
ஆனாலும் அதை அனுமதிப்பது வன்முறையை வளர்த்தெடுப்பதே என்று உறுதியாக நம்புகின்றேன்.

*

>>>எப்ப்டிவேண்டுமானாலும் ஆடை அணிய உரிமை இருக்கிறதல்லவா?<<<
நிச்சயமாக உண்டு. எப்படி வேண்டுமானாலும் ஆடை அணியலாம். அரசு அனுமதித்தால் ஆடை அணியாமலும் நடக்கலாம். அது அவரவர் விருப்பம் பண்பாடு கலாச்சாரம் வழக்கம் என்று எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளலாம்.
ஆனால் தான் நிர்வாணமாக நடக்கிறோம் என்பதற்காக முழு ஆடை உடுத்தி இருப்பவர்களை வம்புக்கு இழுப்பது பெரும் தவறு.
ஒரு பெண்ணுக்கான பாதுகாப்பு அவளின் ஆடையிலும் இருக்கிறது என்பதை பலரும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
அது இடத்துக்கு இடம் மாறுபடும் என்பதும் அறிந்த விசயம்தான்.
பட்டுக்கோட்டை ரோட்டில், கனடா வீதியில் செல்வதுபோல ஒட்டுத் துணியோடு நடக்க முடியாது. யாரும் தடுக்க மாட்டார்கள், ஆனால் கூட்டம் கூடி டிக்கட் போட்டு விற்றுக்கொண்டிருப்பார்கள்.
அப்படி நேரில் காணாத ஒருவன் அவள்மீது கைவைக்கக் கூடும். அல்லது அவன் கை வைக்காவிட்டாலும் அவன் மூளையை அவள் குடைந்துவிட்டுப் போய்விடக் கூடும்.
இப்படி ஆடை தரும் பண்பும் பாதிப்பும் அழகும் அட்டூலியமும் மிக அதிகம். நிறைய பேசலாம்.

>>>நான் இதுவிஷயத்தில் உங்கள் பக்கம்தான்!<<<

*

>>>கடவுளை மறுக்கிறேன் என வெளிபப்டையாக சொல்லுபவரே நாத்திகர்<<<
கடவுளை நேசிக்கிறேன் என்று உலகுக்குக் கூறிவிட்டு, உண்மையில் கடவுளை மறு மறுவென்று மறுத்து ஏதோ ஒரு மதத்தை அதில் உணர்வால் இருப்பவர்களைப் பயன்படுத்தி வக்கிரமாய் சதி செய்பவர்கள் யார்
கடவுள் மறுப்பாளர்கள் இல்லையா?
நாத்திகர்கள் இல்லையா?
பசுத்தோல் போர்த்திய புலி என்பார்களே அதெல்லாம் என்ன?
நான் திருமணமே ஆகாத பேச்சிலர் என்று சொல்லி ஒருவன் 10 பெண்களைப் பல ஊர்களில் திருமணம் செய்து ஏமாற்றி இருக்கிறான்.
அவன் திருமணம் ஆகாதவன் என்று சொன்னதைத்தான் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
உள்ளத்தில் கடவுள் மறுப்பு
உதட்டில் கடவுள் பக்தி
அவர்களை ஆத்திகர் என்பீர்களா நாத்திகர் என்பீர்களா?
இது என் ஒத்தைக் காசு கேள்விதான் நாத்திகர்களே!
பதில் சொல்லுங்கள்!

*

கடவுள் நம்பிக்கை இருந்தால்
கடவுளுக்கு பயப்படவேண்டும்!
கடவுளுக்குப் பயந்தால்
தப்பு செய்ய முடியாது!
அப்படி இருக்க கடவுளின் பெயரை அல்லது மதத்தின் பெயரைப் பயன்படுத்தி வன்முறை செய்பவர்களை ஏன் குற்றவாளிகளாய்ப் பார்க்காமல் மதக்காரர்களாய்ப் பார்க்கிறீர்கள்?
ஒழுங்கான உண்மையான பக்தர்களும் மதப்பிரியர்களும் அவர்கள் உண்டு அவர்கள் வழியுண்டு என்றுதானே செல்கிறார்கள்.
போலிகளை வைத்து ஏன் அசல்களைத் தாக்குகிறீர்கள்?
அவர்கள் எவ்வளவு அடித்தாலும் வாங்கிக்கொள்வார்கள் என்பதாலா?
அல்லது
போலிகள் சக்திவாய்ந்தவர்கள் அவர்களிடம் உங்கள் பாட்சா பலிக்காது என்பதாலா?

*

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு அறம் அழுத்தமாகச் சொல்லித் தரப்படுகிறது.
அவர்கள் அதிலிருந்து பிறழ்வது இயலாது.
மாறினால் அப்போதே அவர் அந்த மார்க்கம்விட்டு வெளியேறிவிடுகிறார்.
கடவுளை மறுப்பவர் என்றாகிவிடுகிறார்.
மார்க்கம் என்பது பிறப்பு அடையாளம் அல்ல. அது வாழ்க்கை அடையாளம்.
ஒருவன் எப்படி வாழ்கிறான் என்பதே மார்க்கத்தின் அடையாளம்.
>>>.நீங்கள் தவறானவை என்று நினைக்கிற காரியங்கள் அவர்கள் ஒரு வகையில் சரி என்று நினைத்து<<<
சரி என்று அவர்களாகவே நினைக்க முடியாது.
மார்க்கமும், மார்க்க நூலும், மார்க்க அறிஞர்களும், நல்லவர்களாக வாழும் மக்களும் உதாரணங்களாகவும் சரியானதைச் சொல்லித்தருபவர்களாகவும் இருக்கும்போது இதற்கு வாய்ப்பே இல்லை

*

>>>நாத்திகர்கள் உலகத்தில் உள்ள அனைவரையும் சகோதர்களாகவும்,சகோதர்களாகவும், மனித நேயத்துடன் பார்க்கின்றனர்<<<
இதுதான் நாத்திகம் என்றால் நான் சிறந்த நாத்திகன் 
>>>ஆன்மிக வாதிகள் உலகத்தில் உள்ள அனைவரையும் சகோதர்களாகவும், சகோதர்களாகவும், மனித நேயத்துடன் பார்க்கின்றனர்<<<
இத்தான் ஆன்மிகம் என்றால் நான் சிறந்த ஆன்மிகவாதி 
ISIS RSS எல்லாம் ஆன்மிகவாதிகளா?
இல்லவே இல்லை. அவர்கள் மனிதர்களே இல்லை. பிறகு எப்படி ஆன்மிகவாதிகள் என்ற உயர் இடத்துக்கு வரமுடியும்.
இதைத்தான் நான் உங்களைப் போன்றவர்களிடம் சரியாக அடையாளப்படுத்த விரும்புகிறேன்.
அர்ஜுனனுக்கு அந்தப் பறவையின் கண்மட்டுமே தெரிந்தது குறிபார்க்கும்போது என்பார்கள். இல்லாவிட்டால் அவன் அம்பு இலக்குமாறிச் சென்றுவிடும்.
அதே போல பிழையானவர்களையும் குற்றவாளிகளையும் அறமற்றவர்களையும் அயோக்கியர்களையும் குறிபார்க்கும்போது அவர்களை மட்டுமே குறிபார்க்க வேண்டும். அப்போதுதான் அவர்களை வீழ்த்தமுடியும் (உலகமே ஒன்றுபட்டு)
அதைவிட்டுவிட்டு, உலகில் 99% உள்ள மார்க்கம், மதம் ஆன்மிகம் சார்ந்த நல்லவர்களைக் குறிவைத்தால், உங்கள் நோக்கம் எத்தனை அற்புதமானதாக இருந்தாலும் நீங்கள் தோற்றுப்போய்விடுவீர்கள்.

*
குற்றவாளியைக் குறிவைக்கும்போது அவனை விட்டுவிட்டு ஒரு பெரும் கூட்டத்தையே குறிவைத்தால், குற்றவாளி மிக வசதியாய் அதில் ஒளிந்துகொண்டு, மற்றவர்களைக் கேடயமாகவும் பயன்படுத்திக்கொள்வான். நீங்கள் தோற்றுத்தான் போவீர்கள்!

*
வெள்ளைப் புறாக்கள் உலகம் எங்கும் உலவட்டும்
அமைதி மண்ணில் நிரந்தரமாகச் செழிக்கட்டும்
மனிதன் மிருகம் கொன்று மனிதனாக மாறட்டும்
இறைவனின் பணி ஓய்ந்த நிறைவு ஒளிரட்டும்

*



நபிபெருமானார்

பிறக்கும் முன்பே தந்தையை இழந்தார்
பிறந்த சில ஆண்டுகளிலேயே தாயையும் இழந்தார்

வளர்த்த பாட்டனார் அப்துல் முத்தலிபையும்
சிறு வயதிலேயே இழந்தார்

இறுதியாக பெரிய தந்தை அபுத்தாலிபிடம்தான்
முகம்மது நபி வளர்ந்து வந்தார்

சிறுவனாக இருந்த போது ஆடு மேய்த்தார்
வளர்ந்தபின் வணிகம் செய்தார்

இருபத்தைந்தாவது வயதில் நாற்பது வயதான
கணவரை இழந்த கதீஜாவை மணந்தார்
இனி
ரத்தம்பட்டுச்
சொட்டும்போது
கத்திக்குக்கூட
கருணை வரலாம்
மனிதர்களுக்கு
வரப்போவதில்லை

அடுத்த வெட்டுக்குப்
பாயும்முன்
அது
அரைநொடியேனும்
அச்சங் கொள்ளலாம்
மனிதன்
அச்சம் கொள்ளப் போவதில்லை

உள்ளங்களில் கருணை
உயிர்களிடத்து அன்பு
என்ற
செத்தொழிந்த
பழஞ்சொற்ப் பிரயோகங்களை
இனி
எங்கே சென்று தேடுவது

வன்முறை எகிறிப்பாய
மனிதம் நடுநடுங்க
வானம் இடிந்தால்தான்
இனி இங்கே 
மாற்றம் நிகழுமா

என்றால் 
இனியோர் காலையும்
இரத்தம் சொட்டச் சொட்ட
வானமே நீ
விடியவேண்டாம்
இடிந்தே போ

அன்புடன் புகாரி
20160720

20160719

புத்தர் அப்படித்தான் போதித்தார். கடவுள் இல்லை என்றார். அன்பே கடவுள் என்றார். அன்பால் எல்லாவற்றையும் வெல்லலாம் என்றார். ஆசையைக் கொல் என்று எல்லோரையும் துறவியாகச் சொன்னார்.
ஆனாலும் இந்த உலகம் அன்பால் நிறையவில்லையே. ஆசையைக் கொல்லவில்லையே.
எங்கே குறை இருக்கிறது சொல்லுங்களேன்?

*
>>>>கடவுளிடம் பயப்படுவது தான் பக்தி என்ற தங்கள் கருத்தை கேட்டால் சிரிப்பு தான் வருகிறது.
பயம் எங்கு வருகிறதோ அங்கு சிந்தனை வராது. சிந்திக்க மறுப்பதுதான் பக்தி. <<<<<
உண்மையைச் சொன்னால் உங்களுக்க்கு ஏன் சிரிப்பு வருகிறது? அப்படியாக அந்த உண்மை இருக்கக் கூடாது என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? உங்கள் குற்றப்பத்திரிகைகளை எல்லாம் எங்கோ வாசித்துவிட்டுப் போக ஆசைப்படுகிறீர்களா?
நான் கடவுளை நன்புகிறேன் என்றால் என்ன அர்த்தம். கடவுள் சொல்வதைக் கேட்கமாட்டேன் என்று அர்த்தமா?
நீங்கள் கடவுளை நம்பவில்லை என்றால் என்ன அர்த்தம் கடவுள் சொல்வதை நீங்கள் கேட்கமாட்டீர்கள் என்றுதானே அர்த்தம்.
இங்கே ஒத்துப் போவது யார்?
எனக்கு என் அம்மாவிடம் அப்பாவிடம் குருவிடம் பயம் இருந்தது. கல்வியிடம், பரிச்சையிடம், போட்டிகளிடம், பயணத்திடம், என்று பலவிடத்தும் பயம் இருந்தது, அதனால் நான் பாதுகாப்பானேன். துளி அறிவையும் இழக்கவில்லை. வளர்ந்தேன்.
பயம் தந்த எச்சரிக்கையால், நான் அதிகம் வென்றேன், தோற்கவில்லை. பயமற்ற நிலையில் எனக்கு அலட்சியப் போக்கு வந்திருக்கும். அதனால் நான் கடுமையாக உழைத்திருக்க மட்டேன், அதனால் நான் தோல்விகளையே சந்தித்திருப்பேன்.
*
>>>தான் சரியாக இருந்தாலும், பணம் என்பதை எப்படியாவது ஈட்ட வழி கண்டு மற்றவர்கள் அதை வைத்து நம்மை அழிப்பார்கள் என்பதனால் வந்த சிக்கலே இது. <<<
மிகவும் உண்மை நண்பரே
அறவழியில் பணம் ஈட்டாமல் ஊழல் வழிகளில் பணம் ஈட்டுபவர்களை யார் அழிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
யார் அறத்தின் வழி அழுத்தமாகச் செல்கிறார்களோ அவர்கள்தான் முயன்று கேடுகெட்டவர்களை அழிக்க வேண்டும்.
அழிக்கவேண்டும் என்றதும் உடனே வன்முறையால் என்று நினைக்கக் கூடாது.
அதையும் அறவழியில்தான் அழிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் அறமற்றவர்களாக ஆகிவிடுவோம்

*
நம்புகிறவர்களிடம் கடவுளை விட்டுவிட்டு நீங்கள் உங்கள் பணியைப் பார்த்தாலே உலகம் அமைதி அடையுமே?
ஏன் உங்களுக்கு இந்த வன்முறை?
வன்முறைதான் ஒரு நாத்திகனுக்கான அடையாளமா?
நீங்கள் வன்முறையாளரா?

*
>>>>கொலைப்பழி உள்ள சங்கராச்சாரியார் நாத்திகர் என்றால் அப்துல்கலாம் நாத்திகரா ??<<<
அப்துல் கலாம் மத நல்லிணக்கத்தோடு இருந்தது உங்களுக்க்குப் பிடிக்கவில்லையா?
அப்துல் கலாம் நானறிந்து எந்த வன்முறையிலும் ஈடுபட்டதில்லை.
அப்துல் கலாம் நானறிந்து எந்த ஊழலும் செய்ததில்லை.
அப்துல் கலாம் நானறிந்து திருட்டு, கொலை, கொள்ளை, என்று எதிலும் ஈடுபட்டதில்லை.
ஆகவே அவர் ஒரு நல்ல ஆன்மிகவாதியாய்த்தான் தெரிகிறார் என் பார்வைக்கு.
>>>சங்கராச்சாரியார் நாத்திகர் என்றால் அப்துல் கலாம் நாத்திகர்தானே<<<<
இதுதான் உங்கள் முத்தாய்ப்பான கேள்வி. நான் எங்கே சங்கராச்சாரியார் நாத்திகர் என்று சொன்னேன்.
அப்துல் கலாமிற்கு இட்ட வன்முறை, கொலை, கொள்ளை, ஊழல் என்ற பட்டியல் எல்லாவற்றையும் இவருக்கும் இட்டுப் பாருங்கள். இது எதையும் அவர் செய்யாதிருந்தால் அவர் நிச்சயமாக நாத்திகர் இல்லை.
அப்துல் கலாமின் கண்ணோட்டத்தில், அவர் அறிந்த வகையில் அவர் யாரை எப்படி ஆய்ந்து நல்லவர் கெட்டவர் என்று முடிவு செய்கிறாரோ அப்படியே அவர் நடந்துகொள்வார். அதில் தலையிட எனக்கோ உங்களுக்கோ ஏதேனும் உரிமை உள்ளதா?
மற்றபடி குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் அல்ல. **அறவழியில் ஆய்ந்து** குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களே குற்றவாளிகள். அது அரசின் பணி, நீதியாளர்களின் பணி. நான் அத்தனை அறிவுடையவன் அல்லன்.

*

அதில் (நாத்த்கம் என்ற பெயரில்) கடுமையான வன்முறையைக் கையாள்கிறீர்கள்.
இணங்குவதுதான் வன்முறைத் தடுப்பு வைத்தியம்.
உங்களால் இணங்கவே முடியாது என்பதை நீங்கள் காட்டிக்கொண்டே இருக்கிறீர்கள்.
எல்லோரும் உங்கள் எண்ணப்படி நடக்க வேண்டும் என்ற சர்வாதிகாரம் உங்களைப் போன்ற நாத்திகர்களிடம் மிக அதிகம்.
கடவுள் இல்லை என்கிறீர்களா? அப்படியே இருங்கள். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களிடன் வன்முறை காட்டாதீர்கள்.
மதம் இல்லை என்கிறீர்களா எந்த மதத்திலும் இருக்காதீர்கள். ஆனால் மதம்பேணி வாழ்பவனிடம் வன்முறை காட்டாதீர்கள்.
மதம் என்ற பெயரிலோ கடவுள் என்ற பெயரிலோ நாத்திகம் என்ற பெயரிலோ அரசியல் என்ற பெயரிலோ வன்முறையில் எவன் இறங்கினாலும் அவனை ***வன்முறையாளன்*** என்று அழைத்து உரிய தண்டனையை வாங்கித்தரப் போராடுங்கள். நான் பாராட்டுவேன்.
வன்முறையாளனை கடவுள் மதம் அரசியல் நாத்திகம் என்ற எந்த அடைமொழி இட்டும் அழைக்காதீர்கள்.
வன்முறையாளன் வக்கிரக்காரன். அழிக்கப்பட வேண்டிய விசப்புழு!

*
நாத்திகம் பேசுவது பிழையே இல்லை. ஆனால் ஆத்திகரை சொல் வன்முறையால் தாக்குவது பிழை.
வன்முறை எவரும் எவரிடத்தும் பிரயோகிக்கக் கூடாது.
நான் ஆத்திகர்களின் பக்கம் இருப்பதாகவும் நாத்திகர்களைத் தாக்குவதாகவும் பலரும் நினைக்கிறார்கள்.
ஆனால் உண்மை என்னவென்றால் நான் வன்முறை மறுப்பாளனாய் மட்டுமே இருக்கிறேன்.
இருந்துகொண்டு, வன்முறை செய்யாத ஆத்திகரையும் நாத்திகரையும் வாழ்த்திப் பாராட்டுகிறேன்

*
>>>பிறரை இழிவு செய்வதும் தீண்டாமை என ஒதுக்குவதும் கொடிய வன்முறைதானே சார்<<<
அது மகா கொடுமையான வன்முறை. அந்த வன்முறை கொலை பாதகத்தைவிடக் கொடியது
ஆத்திகரும் இழிவு செய்தல் ஆகாது, நாத்திகரும் இழிவு செய்தல் ஆகாது.
மனிதர்களாய் மனிதர்களை மதித்துப் போற்றி வாழவேண்டும்!

*
>>>அதன் நிறை குறைகளை விமர்சனம் செய்யும் உரிமை அனைவருக்கும் பொதுவானதுதானே<<<
நிச்சயமாக நிறை குறைகளை அலசுவதுதான் அறிவுடமை.
ஆனால் முட்டாளே, மூர்க்கனே, கேடுகெட்டவனே என்று வசைபாடுவது வன்முறையல்லவா?
உங்களுக்குத் தெரிந்த நல்லதை நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள். கேட்ப்போர் கேட்கட்டும் கேட்காதோர் விட்டுச் செல்லட்டும். ஆனால் முரட்டுத்தனமாய் பாய்ந்து மேய்ந்து கடித்துக் குதறி....
இதெல்லாம் வன்முறை இல்லையா?

*







20160718



அறம் - அறிவு - அன்பு

இவை மூன்றையும்

முதன்மையாகக் கொண்டு

மனிதநேயம் பாராட்ட வந்தால்

நான் உங்களோடு
எப்போதும் உடன்படுவேன்


*





ஒவ்வொருவரும்
ஏதேனும் ஒன்றில்
அதீத உணர்வுளோடு
கட்டிப்போடப்பட்டுத்தான்
கிடக்கிறார்கள்

அது எதுவானாலும்
சரிதான்
பிழையே இல்லை

ஆனால்
அதில் வைக்கும்
எந்தத் தீவிரமும்
எவ்வகை வன்முறையையும்
தூண்டிவிட்டுவிடவே
கூடாது

கூடவே கூடாது


*


திருடப் போகிறவன் திமிறுபவர்களைத் தீர்த்துக் கட்டுகிறான்

ஊழல் அரசியல்வாதி தட்டிக் கேட்பவனைத் தரைமட்டும் ஆக்குகிறான்

அரசியல் வெற்றிக்கு மதத்தின் உணர்வுகளை குத்தீட்டிகளாய்ப் பயன்படுத்துகிறான்

சொந்தச் சிரங்கை சாதியைத் தீண்டி சொரிந்துவிட்டுக் கொள்கிறான்

இப்படியாய் ஒரு வக்கிர மனிதனின் தகாத செயல்களுக்குத் தடையாய் இருப்பதையெல்லாம் வன்முறையால் அழிக்கிறான்

வன்முறை அழிய ஒரே ஒரு வழிதான் உண்டு

அறம் அறிவு அன்பு என்ற மூன்றையும் பிறந்த நிமிடம் முதலே மரபணுக்களில் பதித்துவிட வேண்டும்.

எப்படிப் பதிக்கலாம் என்று எல்லோரும் சிந்திக்கலாம்




*


அறம் அறிவு அன்பு
கொண்டு வாழ்வதுதான்
தனிமனித ஒழுக்கம்

இரண்டாவது இல்லாவிட்டாலும்
கடைசியைக் கைவிடக்கூடாது

முதலானது
முதன்மையானது
மாற்றுமருந்தே இல்லாதது


*


மேலை நாட்டவர்

பொருள்வழிச்

சிந்தனையாளர்கள்


நாமோ
உணர்வுவழிச்
சிந்தனையாளர்கள்


வெளிப்பார்வையில்

மேலை

உயர்வதுபோல் தெரியும்


ஆனால்

உண்மையில்

உயர்வானவர்கள்

நாம் தான்






*





நாத்திகம் விரும்புவோர்
நாத்திகத்திலேயே இருக்கட்டும்

ஆத்திகம் விரும்புவோர்
ஆத்திகத்திலேயே இருக்கட்டும்


இருவருக்கும் இடையில்
வன்முறை மட்டும்
இல்லாதிருக்கட்டும்

யார் வேண்டுமோ
எப்படி வேண்டுமோ இருக்கட்டும்
வன்முறையின்றி

அதுதான்
மனித நேயத்திற்கான
அவசியத் தேவை


*


கர்ப்பத்திலேயே
அறத்தையும் அன்பையும்
ஊட்டிவிட்டுவிட வேண்டும்


அறிவு
வளரும்போது
அந்த இரண்டும்
கேடாகிவிடக்கூடாத
தரத்தில்
மிக அழுத்தமாகப்
பதித்துவைத்துவிடவேண்டும்


பிறகென்ன
மனிதநேயம் மட்டுமே
உலகில் இருக்கும்


வன்முறை
கனவின் கண்களுக்கும்
தென்பாடாமல் போகும்






*


நான் அறிந்தவரை எந்த நாத்திகரும் குண்டு வைத்ததில்லை, கொலைசெய்ததில்லை. இருந்தால் சொல்லுங்கள்.


இது எனக்கு வந்த கேள்வி


கடவுளை நம்பாதவர்கள் நாத்திகர்தானே? ISIS, RSS ஆகியோருக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. கடவுள் நம்பிக்கை இருந்தால் அவர்கள் வன்முறையில் ஈடுபடவே முடியாது.


இது என் பதில்






*


சங்கராச்சாரியார் தீய செயல்களில் ஈடுபட்டால், தீய செயல்களுக்குத் துணை போனால் அவர் கடவுள் நம்பிக்கையே இல்லாதவர் என்று பொருள்.


நபிபெருமானார் தீய செய்ல்களில் ஈடுபட்டிருந்தால், தீய செயல்களுக்குத் துணைபோயிருந்தால் அவரும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்றே பொருள்






*






கடவுள் நம்பிக்கை இருந்தால் கடவுளுக்கு பயப்படவேண்டும் அல்லவா?


கடவுளுக்குப் பயந்தால் எப்படி தப்பு செய்ய முடியும்?


கடவுள் பயம் இல்லாதவன் தான் யாருக்கும் தெரியாமல் தப்பு செய்வான் - அவன் மனசாட்சி செத்துப் போயிருந்தால்.


கடவுள் பயம் உள்ளவனுக்கு மனச்சாட்சி கொஞ்சம் அழுத்தமாகவே இருக்கும் இல்லியா?


கொஞ்சம்தான் யோசித்துப் பாருங்களேன் ;-)


*



கேள்வி: உலகில் ஆத்திகரும் நாத்திகரும் மட்டும் தான் இருக்கிறார்களா? இருவருக்கும் இடையே தான் வன்முறையா?

பதில்: நல்ல கேள்வி. இவர்களுக்கு இடையில்தான் எல்லோரும் இருக்கிறார்கள்.

2% நாத்திகம் 98% ஆத்திகம்
98% ஆத்திகம் 2% நாத்திகம்


இப்படியே அடுக்கிக்கொண்டு போங்கள்.

கடவுள் நம்பிக்கைக் குறையக் குறைய குற்றங்கள் பெருகிய வண்ணம் இருக்கும்.

கேள்வி: இருவருக்கும் இடையே வன்முறை இல்லைங்க

இருக்கு, நாத்திகர்களும் ஆத்திகர்களும் சொல்வன்முறையில் வெகுவாகத் தாக்கிக்கொள்கிறார்கள்.

ஆத்திகர்கள் கூறும் அமைதி எங்கே, நாத்திகர்கள் கூறும் பகுத்தறிவு எங்கே என்று தான் தெரியவில்லை. அவர்களை எல்லாம் நான் இடைப்பட்டவர்களாகவே கொள்வேன். அவர்கள் முழுமையானவர்கள் அல்ல. ழுழுமையானவர்களாய் இருந்தால் அவர்களில் யாரும் வன்முறையில் இறங்கவே மாட்டார்கள்.

எல்லாம் அரைவேக்காடு, அவ்ளோதான் ;-)

*





நல்ல ஆத்திகரை ஒரு நாத்திகர் சந்தித்தால் அவர் ஆத்திகராகக்கூடும்.

நல்ல ஆத்திகரே கிடையாது என்ற நினைப்பில்தான் நாத்திகர்கள் அதிகரிக்கிறார்கள். இவர்கள் நல்ல நாத்திகர்கள்.

அதுமட்டுமல்ல, அறவழியில் விருப்பில்லாதவர்களும் நாத்திகர்களாய் ஆகிறார்கள். இவர்கள் கெட்ட நாத்திகர்கள்


*

நாத்திகர்கள் அவர்களுள் உள்ள நல்லவர்களைப் பற்றிமட்டுமே முன்வைத்து கருத்தாட வருகிறார்கள். அப்படி ஒருவருக்கு நான் இட்ட மறுமொழி இது.

நீங்கள் நல்லவர்களைப்பற்றி மட்டுமே பேசி இருக்கிறீர்கள். அதில் எந்தச் சிக்கலும் இல்லை. வக்கிரக்காரர்களைப்பற்றி யோசித்தீர்களா?

ஆகையால்தான் நான் தொடர்ந்து சொல்கிறேன். நீங்கள் நாத்திகராய் இருங்கள் அல்லது ஆத்திகராய் இருங்கள். எனக்குக் கவலை இல்லை. ஆனால் ஒருவருக்கொருவர் வன்முறையில் இறங்காதீர்கள் என்பதே என் தேவை. எப்போது வன்முறையில் இறங்குகிறீர்களோ அன்றே நீங்கள் ஆத்திகர் இல்லை, ஆனால் நாத்திகர் என்று தாராளமாய்ச் சொல்லிக்கொள்ளலாம்.


சரி, இனி வக்கிரம் கொண்டவர்களைப் பற்றிப் பார்ப்போமா? நாத்திகரில் வக்கிரம் கொண்டவர்களை அடக்க வழியே இல்லை. ஆத்திகரிலாவது அவ்வப்போது கடவுள் பயத்தை நினைவூட்டி மாற்றிவிடலாம். மாறினால் மட்டுமே அவன் மீண்டும் ஆத்திகராகமுடியும்.

அடுத்து, வக்கிரம் கொண்டவர்களுக்கு ஆத்திகர்கள் என்ற பெயர் பொருந்தாது. ஏனெனில் அதன் கட்டமைப்பில் வக்கிர மனம் செத்து ஒழிந்தால்மட்டுமே அவர் ஆத்திகராய் இருக்க முடியும். ஆனால் நாத்திகருக்கு அப்படியில்லை. அவர் எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம். அவரே அவருக்கான நிதிபதி. அவர் சட்டமே அவருக்கு. அவர் தர்மமே அவருக்கு.

அடுத்து, கடவுளை நம்பாதவர்களைத்தானே நாத்திகர்கள் என்கிறீர்கள்? மற்றபடி சிறந்த சிந்தனையாளர்கள், அறத்தால் வலுவானவர்கள், அன்பால் சிறந்தவர்கள், அறிவால் உச்சம் தொட்டவர்கள் என்ற வரையறையா தருகிறீர்கள்? ஆனால் ஆத்திகர்களுக்குத் தெளிவான வரையறைகள் உண்டு. கடவுள் பக்தி அவசிய்ம். கடவுள் பயம் அவசியம். என்று நீ கடவுள் பயம் அற்றுப் போகிறாயோ அன்றே நீ ஆத்திகன் இல்லை. எந்த தீமையை நீ செய்யலாம் என்று நினைத்தாயோ அன்றே நீ ஆத்திகன் இல்லை. மனிதநேயம் காத்தால் மட்டுமே நீ ஆத்திகன்.

*