கவிஞர் சேவியரின் 'நில் நிதானி காதலி' - என் பார்வையில்
கடல் பரப்பில் மென் காற்றாய்ப் புறப்பட்டு நீரை அள்ளி நிதானமாய்த் தெளித்து நிலம் விழுந்து ஈரம் விதைக்கும் சுகமான அலைகள் சேவியர் கவிதைகள்.
இவர் காதல் கவிதை எழுதும்போது அந்த அலைகள் குழைந்து நெளிந்து நாணப்படுவதும் ரகசியமாய்க் கரைகளை முத்தமிட்டு குதூகலிப்பதும் பரவசம் பரப்பும் வாசனையாய் இருக்கிறது
காதல் கவிதை எழுத என்ன வேண்டும்?
வயதா
அனுபவமா
இல்லை மனதா?
அடுப்பில் விழுந்த சுள்ளிகளாய்த் துடிக்கும் பதின்வயது, காதலை ஓர் அவசர கதியில் கிறுக்கி வைக்கலாம்.
பருவப் பெண்ணின் காந்தப் பூவிழியின் சிராய்ப்புகளில் சட்டென்று காயப்பட்டு வளரும் கிளர்ச்சிக் காதல் அனுபவமில்லாப் பொங்கலைப் பொங்கிவைக்கலாம்.
அட... இதுவரை நினைத்திருந்ததல்ல, இதுவரை கண்டு அனுபவித்ததும் அல்ல. இப்போது, இந்த நொடி அனுபவிப்பதுதான் காதல் என்று ஓர் ஆத்ம தாலட்டைப் பெறும் உள்ளம் எப்போது ஒரு காதலனுக்கு வருகிறது?
முத்தெடுக்க முக்குளிக்கும்போது, எத்தனையாவது முக்குளிப்பில் வலம்புரியோடும் வண்ண முத்தோடும் காதல், வெற்றி பெறுகிறது?
சேவியருக்கு அப்படி ஓர் வெற்றி தொடும் விரல் முளைத்துவிட்டது போலும். இதை நான் சொல்லவில்லை. அவரின் கவிதைகள் கிசுகிசுக்கின்றன.
காதல் என்பது பூவைப் போல
பூப்பதே அதன் வெற்றி
என்று தன் முன்னுரையிலேயே இதய மொட்டுகளை உடைக்கத் துவங்கிவிடுகிறார். ஓர் காதல் சூழலை மெல்லிய வெதுவெதுப்போடு அரங்கேற்றிவிடுகிறார்.
பிறகென்ன, இவரின் சின்னச் சின்னக் காதல் கவிதைக் குறுங்காட்டுக்குள் புத்துணர்ச்சி ஊட்டப்பட்ட இதயத்தோடு ஊர்ந்து செல்ல இனி நாமெல்லாம் தயார்தான்.
நீ சிரிக்க வேண்டும் என்பதற்காகவே
நான்
பேசியதுண்டு
நான் பேசுவதற்காகவே
நீ
சிரித்த நிஜம் தெரியாமல்
இப்படி இயல்புக்கு எந்த வர்ணமும் பூசாத எளிய கவிதைகள் மெல்லிய உணர்வுகளைத் துல்லியமாய்த் தூவிச் செல்கின்றன அந்தி நேரச் சிட்டுக் குருவிகளின் சிறகடிப்புகளைப் போல.
ஒரு
நெருப்பு நதியாய்
நடந்து செல்கிறாய்
சுடருக்காய்
நான்
மெழுகுக் கால்களோடு
காத்திருக்கிறேன்
உருகியே தீருவேன் என்று முடிவெடுத்துவிட்ட இதயத் துடிப்புக் காதல் உணர்வுகள் இந்தக் கவிதைக்குள் காத்திருக்கிறது வாசகனை வளைத்துப் போட்டுக்கொள்ள.
கண்மணி
கொஞ்சம் பேசவேண்டும்
ஒரு யுகம் தருவாயா?
இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்பார்கள் காதலர்கள் எப்போதும். அந்த இன்னும் கொஞ்சம் என்ற கெஞ்சல் ஒரு துளிப் பொழுதும் முடிவுறுவதே இல்லை. எந்நாளும் உலர்ந்துவிடாத காதல் இதயத்தின் வெதுவெதுப்பான ஈரநிலை அது. ஒரு யுகம் பேசினாலே ஒரு நொடி பேசியதாய்ப் படும் உண்மைக் காதலர்களுக்கு. இவரோ ஒரு யுகம் கேட்கிறார். அப்படியென்றால் அதற்குள் எத்தனை யுகங்களைப் பதுங்கி வைக்கிறார் இவர். இந்த உணர்வுகள்தான் காதலின் வேர்களை அடையாளம் காட்டும் மெய் காட்டிகள்.
இருள் பொழியத் துவங்கும் இளம் அந்தியில் நான் அந்த தேவதையைப் பார்த்ததும் எனக்குள் பட்டெனப் பற்றிக் கொண்டுவிட்டது தெய்வீகக் காதல் என்று சிலர் சிலாகிக்கக் கேட்டிருக்கலாம் அநேகமாக எல்லோரும். ஆனால் சேவியர் என்ன சொல்கிறார் பாருங்கள்
எப்போதும் உன்
கூந்தல் ரோஜா அழகாய்த் தெரியும்
ஒருநாள்
அது அழகின்றித் தெரிந்தது
அது தான்
உன் மீதான என் காதல்
பிறந்த் நாள்
இங்கே ஒரு நட்பு காதலாய் மலர்ந்திருக்கிறது என்ற உண்மை அப்பட்டமாய்ப் பதுங்கிக் கிடப்பது தெரிகிறதல்லவா? நட்பு காதலாய் மலரும்போது அந்தக் காதலில்தான் எத்தனை உறுதி உறுதிசெய்யப்படுகிறது.
ஓர் ஆண் எதற்காகவும் அழுவதே இல்லை. ஆனால் அவனது காதலி அவனை எத்தனை எளிதாய் அழவைத்துவிடுகிறாள்?
அழுகையின் போதுதான்
பிறந்த குழந்தை
தன்னை நிரூபிக்கிறது
நீ
உன்னை நிரூபிக்க
என்னை மீண்டும் அழ வைக்கிறாய்
முதல் முத்தம் உண்மையில் இனிப்பானதுதானா? என்ன நடந்தது என்ற எந்தத் தெளிவையும் தராத அந்த முத்தத்தை எதனோடு எப்படி ஒப்பிடுவது. சேவியர் தன் வியப்பில் அதை கண்டுகொள்ளப் பார்க்கிறார் இப்படி
உன்
முதல் முத்தத்தின்
சுருங்கிய வடிவம் தான்
சுவர்க்கமா?
ஆமாம் சொர்க்கத்தைப் பற்றியும் யாருக்கும் எந்தத் தெளிவும் தெளிவாக இல்லைதானே.
காதல் கண்ணடி பட்டுச் செத்துவிடுமா? அல்லது அப்படிச் சாவது ஒருக்கிலும் காதலாகாது என்று உறுதியாய் வாதிடுபவர்தான் நல்ல காதலன் காதலியா? இருப்பினும், அப்படி கண்ணடி பட்டு காயப்பட்டுவிடுகிறதோ என்று அவ்வப்போது தோன்றாமலும் இல்லையல்லவா சிற்சில அதிசோகப் பொழுதுகளில். அதை அப்டியே சேவியர் ஒப்புக்கொள்ள வருகிறாராரோ இந்தக் கவிதையின் மூலம்
அணையும்முன்
தீ பிரகாசமாய் எரியுமாய்
பயமாய் இருக்கிறது
கொஞ்சம் மெதுவாகவே காதலிப்போம்
குறைவாகக் கிடைத்தாலும் பரவாயில்லை. அது நின்றுபோகாமல் இருந்தால் சரி என்ற சமாதானத்துக்கு வரும் சேவியர் இழப்பின் நரகத்தில் முன்பே சாவகாசமாய்த் தங்கி அனுபவித்திருக்கிறான் இதன் கதாநாயகன் என்று மறைமுகமாய்த் தெரிவித்துவிடுகிறார்.
எப்போதும் முரண்பாடுகளில் ஒரு மயக்கம் உண்டு எனக்கு. இவர் தரும் முரண்பாட்டைக் கொஞ்சம் பார்ப்போமா?
ஒத்தடம்
காயம்தருமென்பதை
உன்
உதடுகள்தானடி
உறுதிப்படுத்தின
புதுக்கவிதைப் படகும் காதல் ஓடமும் பல நேரங்களில் ஒன்றாய்த்தான் நீந்துகின்றன. இலக்கணப் படுதாக்களை இயற்கையான அழகு முகத்தின்முன் இட்டுக்கொள்ளாத அவற்றின் வீரியத்தை எளிமையாகச் சொல்லிச் செல்கின்றது சேவியரின் இந்தக் கவிதை
இலக்கணம் கற்காமல்
தலைகாட்டுகின்றன
ஆசைகள்
காதல் என்பது பெரும்பாலும் பெண்களின் பரிசீலனையில்தான் இருப்பதாகப் படுகிறது பல ஆண்களுக்கு. அதைத்தான் கவிஞரும் இப்படிச் சொல்கிறாரோ.
ஏனோ தெரியவில்லை
விலக்க விலக்க
விரல் நீட்டும் மழலையாய்
உன்னை நோக்கியே
நீள்கின்றன
என் காதல் கரங்கள்
இதைக் கொஞ்சம் பாருங்கள். எத்தனை பெரிய உண்மையை மிக எளிய வரிகளில் இனிமையாய்ச் சொல்லிப் போகிறார் சேவியர்.
இத்தனை முறை
சுக்கு நூறாய் வெடித்த பின்னும்
மீண்டும் மீண்டும்
முருங்கை மரம் ஏறும்
விக்கிரமாதித்திய வேதாளமாகிறது
என் காதல்
சோகத்தைச் சொல்வதிலும் சுகமாகச் சொல்வது கவிஞர்களின் தனித் திறமைதான். அதற்கான சான்றாக இக்கவிதை
கிடைத்ததில் பிடித்தது
உன் நினைவுகள்
கிடைக்காததில் பிடித்தது
நீ
கீழுள்ள கவிதையை வாசித்ததும், எனக்குள் சிரிப்புப் பட்டாம்பூச்சுகள் சிறகடித்துவிட்டன. இதன் வேதனையின் ஆழத்தை அவமதித்திச் சிரித்தது தவறுதான் கவிஞரே. பொறுத்தருள்க.
யாராரோ ஏதேதோ
சொன்னார்கள்
காதலைப் பற்றி
எல்லாமே தவறானதாய் இருந்தது
நீ
விலகிய பின் தான்
சட்டென்று எல்லாமே
'சரி' யென்றானது
ஒரு காதலி ஏன் காதலனை விட்டு விலகுகிறாள் என்ற காரணம் மர்மமானது. காதலனுக்கும் காதலிக்கும் மட்டுமல்லாமல் அந்தக் காதலுக்கும் கூட அது விளங்காத புதிர்தான்.
சரி, இப்படியே நான் நீட்டிக்கொண்டே போனால் எப்படி? வாசகர்கள் வாசித்து மகிழ மீதத்தை அப்படியே விட்டுவைப்பதுதானே சரி.
பெட்டிக் கடைகளில் கண்களைக் குறிவைத்துத் தொங்கும் சட்டைப்பை நாவல்களின் அட்டைப்படங்களுடன் போட்டியிடும் கவர்ச்சியான அட்டைப்படம். ஆனால், அதன் உள்ளே இருப்பதோ சுத்த நெய்யினாய் சுடப்பட்ட தித்திப்புப் பலகாரங்கள். இதன் முரண்பாடு என்னை முட்டியது உண்மைதான்.
கவிதைகள் மனதில் ஒட்டியதைப் போல, இத் தொகுப்பின் தலைப்பும்கூட ஏனோ என்னிடம் ஒட்டவே இல்லை.
ஆயினும், இந்த முகப்பூச்சுகளைத்தாண்டி உள்ளே இருக்கும் கவிதையின் அழகு என்னை விழி துளிர்க்க வைத்ததென்னவோ நயாகராவில் ஆனந்தமாய் விழுந்து உயர்ந்து எழும் நீரைப்போல் நிசமானது.
இன்னும் ஆழமும் அழுத்தமும் சேரப்பெறின் சேவியரின் கவிதைகள் சென்று சேருமிடம் என்னவோ நட்சத்திர உச்சத்தில்தான் என்பதில் எனக்கு நடுப்பகல் இருட்டளவும் ஐயமில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment