1988 ஜூலை நான் சவூதி அரேபியாவில் பணியாற்றிக்கொண்டே கணினிக்குள் கட்டெறும்பாய்ப் புகுந்து ஈர்ப்புகளோடும் ஆச்சரியங்களோடும் கணி மொழிகளையும் கணி நிரலிகளையும் புத்தகங்கள் வாசித்தும், பயத்தோடும் பதட்டத்தோடும் தட்டித் தட்டிப் பார்த்தும் ஒருவழியாய் எவரின் துணையுமின்றி தானே பயின்று சின்னச் சின்ன நிரலிகள் எழுதி சந்தோசப் பட்டுக்க்கொண்டிருந்த காலம்.
வெளிர் நீல சிறகடித்துக்கொண்டு வந்து என் படுக்கையில் சன்னமான விசாரிப்புகளோடு விழுகிறது ஒரு கடிதம். அதிதூரம் பறந்த களைப்பு அந்தக் கடிதத்தின் சிறகுகளில் காயங்களாய்த் தெரிகின்றன. எடுத்து என் எழுத்து விரல்களால் ஒத்தடம் கொடுக்கிறேன்.
என் ஒரத்தநாட்டு முகவரிக்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதம், இங்கில்லை அவன், ஒரு பாலைவனத்தில் வலுவில்லாத ஒட்டகமாய் அலைந்துகொண்டிருக்கிறான் என்று என் அம்மா அதை என் சவூதி முகவரிக்குத் திருப்பிவிட்டிருந்தார்.
அதன் அனுப்புனர் முகவரியைப் பார்தேன். முனைவர் கே. ஏ. ஜமுனா. யார் இந்த ஜமுனா? முழுவதும் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்ட முகவரி. டெல்லியிருந்து வருகிறது. அவசரம் அவசரப்படுத்த, சட்டென்று உடைத்தேன். உள்ளேயும் ஆங்கிலம்தான்.
அந்தக் கடிதத்திலிருந்து முனைவர் ஜமுனா ஓர் இந்திப் பேராசிரியர், டெல்லி பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார், இந்தி தமிழ் ஒப்பீட்டு இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர், சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள் என்று அனைத்தையும் தமிழிருந்து இந்திக்கும், இந்தியிலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்பவர் என்று அறிந்துகொண்டேன்.
தீபம் இதழில் உங்கள் கவிதையைக் கண்டேன். அதை இந்தியில் மொழி பெயர்த்தேன். மனிதவள அமைச்சரவை (Ministry Of Human Resources) ஆண்டுதோறும் வெளியிடும் வார்சிகி ஆண்டு மலரில் தமிழ் நாட்டின் அடையாளக் கவிதையாகப் பிரசுரிக்க உங்கள் கதையின் மொழியாக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதை வார்சிகி 86ல் பிரசுரிக்க உங்கள் அனுமதியைப் பெறவே இந்த மடல். உங்களுக்கு இதனால் வருடா வருடம் உரிமைப்பணமும் (Royalty) கிடைக்கும் என்று எழுதப்பட்டிருந்தது.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பாலைவனத்துக்குக் கங்கையைத் திருப்பிவிட்டது யார் என்று கதவுகள் பல தட்டி விசாரித்துப் பார்த்தேன். தட்டிய கைகளும் தட்டப்பட்ட கதவுகளும் என் நினைப்புதான் என்பதால், பதில் ஏதும் வரவில்லை.
தேவதையைக் காதலிக்க தினமும் திருநெல்வேலி அல்வா கூலியா? சிறகுகள் இல்லாமல் வானில் பறக்க சம்மதம் கேட்டு ஒரு தென்றல் மடலா? அதோடு இப்படி ஒரு மடல் வரும் என்று இன்னொரு மடலும் வந்தது தீபம் எஸ். திருமலை அவர்களிடமிருந்து.
தீபம் இலக்கிய இதழ், நா. பார்த்தசாரதி என்ற புகழ்பெற்ற எழுத்தாளருடையது அதை அப்போது பொறுப்பாக நிர்வகித்து வந்தவர்தான் எஸ் திருமலை. ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிடுங்கள் என்று 1982லிருந்தே சொல்லத் தொடங்கிவிட்டார்.
ஏனோ என் மனம் அதற்குத் தயாராகவே இல்லை. ஆனால் வெளிச்ச அழைப்புகள் என்று புத்தகத்துக்குப் பெயரிட்டு விட்டேன். கல்லூரித் தோழர் நாகூர் ஆபிதீனிடம் கூறி அதன் அட்டைப்படத்துக்கும் ஓவியம் வரைந்து விட்டேன். அதைத்தான் 2002ல் கனடாவில் நான் வெளியிட்டேன்.
இருபது ஆண்டுகள் உதிர்கால இலைகளாய் உதிர்ந்து ஓய்ந்தபின் தீபம் எஸ். திருமலை அவர்களின் பரிந்துரையை நான் ஏற்றிருக்கிறேன். 2005 மே மாதம் பத்து தினங்களுக்காகச் சென்னை சென்றபோது, விழாவில் திரு மாலன் சொன்னார், விழாவைப் பற்றி அறிந்த தீபம் எஸ். திருமலை அவர்கள், என்னை ஞாபகம் வைத்திருந்து மிகவும் விசாரித்ததாகக் கூறச்சொன்னாராம்.
எனக்குப் புல்லரித்துவிட்டது. உடனே சந்திக்க வேண்டும் என்று விசாரித்தேன். சில காரணங்களால் இயலாமல் போனது. அடுத்தமுறை அவசியம் சந்திக்கவேண்டும் என்று சந்திப்பு முத்திரைகள் குத்தப்பட்ட தங்கக் காசு ஒன்றை என் மன உண்டியலில் சிரத்தையாய் இட்டுக்கொண்டேன்.
இப்படியான இனிமையான நினைவுகளைக் கொண்டதுதான் இந்த 'உலகம்' என்ற என் கவிதை.
உலகம்
.
சிரியுங்கள்
இந்த உலகம்
உங்களுடன் சிரிக்கிறது
அழுங்கள்
நீங்கள் மட்டுமே
அழுகிறீர்கள்
.
பாடுங்கள்
அந்த
மலைகளும் உங்களுக்குப்
பதிலளிக்கின்றன
பெருமூச்செறியுங்கள்
அவை
காற்றினில்
காணாமல் போகின்றன
.
கொண்டாடுங்கள்
உங்கள் வீட்டில்
ஓராயிரம் நண்பர்கள்
கவலைப்படுங்கள்
உங்கள் வீட்டில்
தூண்கள்கூட இல்லை
வாழ்வின் அமுதங்களை
நாம்
எல்லோருடனும்
பங்கிட்டுக்கொள்ளலாம்
ஆனால்-
நம்மின் சோகத்தை
நாம் மட்டுமே விழுங்கவேண்டும்
.
விருந்தளியுங்கள்
உங்கள் அறை
அமர்க்களப்படுகிறது
கையேந்துங்கள்
எங்கும்
மனிதர்களே
தென்படமாட்டார்கள்
வாழ்வின் வெற்றி
உங்களை வாழச்செய்கிறது
ஆனால்-
அதன் தோல்வி
உங்களை சாகடிப்பதில்லை
ஆழப்பதியும்
அறிவுரை வழங்குகிறது
.
இன்று வரும்
துயரங்களைக் கண்டு
ஓடி ஒளிந்தால்
நாளை
நம் முகவரி விசாரித்து வரும்
இன்பங்களை
யார் வரவேற்பது
நம்பிக்கை கொள்ளுங்கள்
அதுவே
எல்லாவற்றையும் வெல்லும்
அருமருந்து
4 comments:
வாழ்த்துக்கள்
அருமையான கவிதையும் கருத்தும்..
அண்ணன் புகாரி அவர்களுக்கு
தம்பி இளங்கோவின் வணக்கங்கள் பல..
"உலகம்" கவிதை படித்தேன்..
வளரும் இளைஞர்களுக்காகவே வார்த்தைகளை
கோர்த்து எழுதப்பட்ட வரிகளை வாரி அனைக்கின்றேன்..
அற்புதமான கவிதையினை படிக்கையில்
மனம் மகிழ்ந்தது.... சிந்தனை வளர்ந்தது...
வாழ்த்துக்கள் அண்ணன் புகாரி..
அன்புடன் இளங்கோவன்...
எனக்கு ஓராயிரம் செய்திகள் சொல்லிப் போனது உங்கள் கவி....நன்றி. நீங்கள் தாண்டி வந்த நெடும் பயணம் இன்று உங்களை தமிழ்த் தாயின் மடியில் தவழ வைத்திருக்கிறது...எம் மன உச்சியிலும் ஏற்றி வைத்திருக்கிறது.
கொண்டாடுங்கள்
உங்கள் வீட்டில்
ஓராயிரம் நண்பர்கள்
கவலைப்படுங்கள்
உங்கள் வீட்டில்
தூண்கள்கூட இல்லை
அருமையான வரிகள்
Post a Comment