மரபுப்பா பாடவா புகாரி


கவிஞர் புகாரி அவர்கட்கும் இராஜ. தியாகராஜனின் வணக்கம்.

சொல்வளமும், மொழியாற்றலும், நிறைந்த பொருள் ஆளுமையும், உவமை/உவமேயங்களை எடுத்தாளும் திறனும் ஒருங்கே கொண்டவர் கவிஞர் புகாரியவர்கள். எனக்கும் அவர் மரபென்னும் மாகடலில் மூழ்கி முத்தெடுக்க மறுத்து, கரையினிலேயே தமிழென்னும் வாரிதியை வாழ்த்திப் பாடிக்கொண்டிருப்பது வருத்தமாகவே இருக்கிறது.

புதுக்கவிதைக்கோ, துளிப்பாக்களுக்கோ நான் சற்றும் எதிரியல்ல. 75/85 ஆம் ஆண்டுகளில் நானும் புதுப்பாவென்னும் கடலில் முக்குளித்து 200 கவிதைகளூக்கு(!!) மேல் எழுதியிருக்கிறேன். பின்னர் யாப்பருங்கலக்காரிகை உரைகளைப் படித்த போதில் தான், இத்தனை ஆண்டுகளாக நானிழந்தது எவ்வளவென்று அறிந்து வருத்த முற்றேன்.

சொல்லாற்றலொடு புதுப்பாவும், துளிப்பாவும் எழுத எத்தனையோ பேர் இருக்கிறார்கள், இன்னும் வருவார்கள். புகாரி போன்ற சொல்வளமும், தமிழின்பால் தாளாத பற்றும் கொண்ட மொழிப் பற்றாளர்கள் வருவது குறைவே. இவர் போன்றவர்கள் மரபில் ஆழ்ந்து எழுதினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

அவருக்கு நான் தாழ்மையுடன் வைக்கும் வேண்டுகோள்; புதுப்பாவை, துளிப்பாவை ஒதுக்க வேண்டாம், கூடவே மரபும் எழுதுங்கள் என்பதே! ஆனால் ஒருவரின் கொள்கைப் பிடிப்பு அவரவர் உரிமை. நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது. 50 வயதுக்கு மேற்பட்டவர் மட்டுமே மரபெழுத வேண்டும் என்ற இள வயதுக்காரர்களின் எழுதாத சட்டத்தை திரு புகாரி போன்றவர்கள் மாற்றக்கூடாதா என்றா ஆதங்கத்தினால் இதை எழுதுகிறேன்.

அன்புடன் இராஜ. தியாகராஜன்.

*

அன்பிற்கினிய இராஜ. தியாகராஜன் அவர்களுக்கு,

நான் மரபுப்பாக்களுக்கு எதிரியல்ல. அதிலுள்ள இலக்கணத்தை ரசிக்க இங்கே பலர் இருக்க நான் அதில் உள்ள இலக்கியத்தை ரசித்துத் திளைக்கிறேன்.

"பழைமையின் லயமும் புதுமையின் வீச்சும்" என்பதே சதவசந்தச் சாரதி இலந்தையார் என் கவிதைகளுக்கு தந்த ஒற்றைவரி விமரிசனம். அதை நான் பெரிதும் வரவேற்றேன்.

"பழைமையின் மூச்சும் புதுமையின் வீச்சும்" என்று அவர் கூறியிருந்தால் நான் மேலும் மகிழ்ந்திருப்பேன். ஏனெனில் எனக்கு மூச்சுத்தந்தது மரப்புப்பாக்களின் இலக்கிய நயங்கள்தாம்.

ஓடிவிளையாடிக்கொண்டிருந்தபோதே, மரபுப்பாவின் சந்தமும் நயமான சொல்லாட்சியும் என்னை இழுத்தணைத்தன. இலக்கணம் அறியேன் அப்போது (இப்போதும் அரைகுறைதான்)

என்னை ஈர்ப்பது எதுவோ அதனையே பருகி நான் அன்னப்பறவையாய் வாழ்ந்துவருகிறேன்.

எனக்குப் பாரபட்சம் கிடையாது. நான் எப்போதும் கூறுவேன். எனக்குக் கவிதை என்றால் அதனுள் கவிதை இருக்க வேண்டும் என்று இதை ஒரு வரையறைக்குள் கொண்டுவந்து நிறுத்த முடியுமா? வாழ்க்கையைப் போல, காதலைப்போல, மரணத்தைப் போல கவிதையும் திட்டமிட்ட தட்டுக்குள் சிக்காத லட்டு என்று நகைச்சுவையாய்ச் சொல்லிவைப்போம்

வெற்றுச் சொல்லாடல்களில் என் மனம் லயித்ததில்லை. ஒரு விசயத்தைச் சொல்ல சுற்றுச் சுற்றி சொற்களைத் தொந்தி கட்டும் கலையில் எனக்கு விருப்பமில்லை.

பாரதிபோல், ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் ஒரு கவிதையைப் பொத்தி வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் நான் ரசிப்பேன்.

அதேபோல, ஒரு கதையை எழுதிவிட்டு அதை மடக்கிமடக்கி எழுதுவதும். ஒரு நகைச்சுவையை ஒடித்து ஒடித்து எழுதுவதும் ஒரு விடுகதையை துளிப்பா என்று எழுதுவதும்

எனக்குப் பிடிப்பதில்லை. அதாவது கவிதைக்குள் கவிதை இருக்கவேண்டும்.

களைகளின் ஊடே பயிர் வளரவே செய்யும். ஒரு தனி மனித வீச்சைத் தடைசெய்யும்போது நல்ல பயிர் வளர்வதில்லை. அவனின் தனித்துவம் ரசிக்க நமக்கு கண்கள் வேண்டும்.

எல்லாவற்றுக்கும் எங்க தாத்தா, இப்படித்தான் கோவணம் கட்டுவார் என்றே பேசுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அட இந்தக் கோவணத்துல, இடதுபக்கம் லேசா கிழிஞ்சு இருக்குபாரு என்றால், எங்கள் கொள்ளுத்தாத்தா ஒரு சமயம் இப்படிக் கட்டியிருக்கிறார். எனவே அது விலக்கு, அது கோவணத்தின் கட்டமைப்பைப் பாதிக்காது என்றும், நீ மட்டும் அதைக் கழட்டிட்டு ஜட்டி போட்டுடாதே கண்றாவியா இருக்கு என்று தூற்றுவதையும் நான் ஏற்பதில்லை.

சரி, அதற்காக, மறைக்கவேண்டியதை மறைக்கவேண்டாமோ? அது அசிங்கமல்லவோ என்றால், அட... அதில் மட்டும் நான் ரொம்பத் திடம். கட்டாயம் மறைக்கவே வேண்டும். கோவணமோ ஜட்டியோ இல்லாமல், நேரடியாய் ஓர் மேலாடை கட்டமுடிந்தால், அப்படிக் கட்டினால் எனக்குச் சரிதான். நான் சட்டம் பேச மாட்டேன். இதுவரை இப்படி யாரும் கட்டவில்லை, அபச்சாரம் என்று கதறமாட்டேன்.

ஆக, என்னை நான் இயன்றவரை என் மொழியில் எடுத்து வைத்து விட்டேன். இதுதான் முடிவென்றில்லை என்றாலும் ஏதோ சொல்லி விட்டேன்.

நான் எந்தவகைக் கவிதைக்கும் எதிரியல்ல. எந்த வகைக் கவிதையும் தூற்றுபவனல்ல. ஆனால் எந்தவகைக் கவிதைக்குள்ளும் நான் தேடும் கவிதை இல்லாவிட்டால், என்னால் ரசிக்கமுடிவதில்லை. அவ்வளவுதான்.

நான் எழுதுவேன். அது மரபு மாதிரி இருக்கும் சில நேரம் மரபின் அத்தனை இலக்கணத்துக்குள்ளும் உட்பட்டதாயும் அமைவதுண்டு. ஆனால் நான் இலக்கணம் பார்த்து எழுதியது கிடையாது. செவிகளின் விருப்பமாகவும் நாவின் கனவாகவுமே அவை வந்திருக்கின்றன.

இவையேதான், நான் புதுக்கவிதை, குறுங்கவிதை, இன்னபிற கவிதைகள் எழுதவும் பயன்படுகிறது.

என் கவிதைகள் மரபுக்கவிதையாய் இல்லை, என் கவிதைகள் புதுக்கவிதையாய் இல்லை, என் கவிதைகள் துளிக்கவிதையாய் இல்லை, என் கவிதைகள் நவீனகவிதையாய்

இல்லை என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையிலிருந்து சொல்லிச் செல்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு நவீனகவிதை படைப்பாளர் என்னை போட்டு வாட்டி எடுத்துவிட்டார். எப்போ நீங்க கவிதை எழுதுவீங்க புகாரி. இதையெல்லாம் தூக்கி குப்பையில போடுங்க.

இசையே சுத்தமாக இருக்கக்கூடாது. கவிதை எளிமையாய் புரியும்படி இருக்கக்கூடாது. கவிதை முடிந்ததும்தான் கவிதை தொடங்குகிறது எனவே முற்றுப்புள்ளி வைக்காதீர்கள், கமாவோடு நின்றுவிடுங்கள். கவிதைக்குக் கவிஞன் விளக்கம் தரக்கூடாது. புரியலேன்னா போடா என்றுவிடுங்கள். அடடா இன்னும் ஏராளமாகச் சொன்னார்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொள்கிறேன். எல்லாவற்றிலும் ஏதோ இருக்கிறது. ஒரு புறம் மரபு, ஒரு புறம் நவீனம், இன்னொரு புறம் துளி, இன்னொரு புறம் இசை. நான் சுதந்திரப் பறவை, தொடும் வானம் தொடுவேன், நுகரும் காற்றை நுகர்வேன், இன்பமாய்ப் பறப்பேன். என் கவிதைகளை விரும்புவோர் பாராட்டுங்கள். விரும்பாதோர்

விமரிசியுங்கள். எனக்கு இரண்டுமே தேவைதான். இவையெல்லாம் சேர்ந்து என்னை ஏதோ ஒரு புதுக்கலவையாய்ப் படைக்கிறது. அதையே நான் விரும்புகிறேன்.

நான் யாருக்கும் எதிரியல்ல. எவ்வகைக் கவிதைக்கும் விலக்கானவன் அல்ல.

அட, சனிக்கிழமை காலை இப்படிப் போய்விட்டதா? யாருக்கு வேண்டும் இந்த விளக்கம். அவரவர், அவரவர் எண்ணங்களில் இருப்பார்கள். யார் கேட்கப்போவது என் நியாயத்தை? அவர்களின் நியாயத்துக்குத்தானே அவர்களால் தலை சாய்க்கமுடியும்? அதுதானே உலகம்.

சீக்கிரம் கிளம்பவேண்டும், வங்கி செல்லவேண்டும், இன்று டொராண்டோவின் மாகா தமிழரங்கம்வேறு உண்டு. அங்கே சென்று அதைச் சுவைக்கவேண்டும்.

விடைதாருங்கள் நண்பரே. தேவைப்பட்டால் பிறகு வந்தும் எழுதுகிறேன்!

அன்புடன் புகாரி

3 comments:

சக்தி said...

அன்பின் நண்பரே புகாரி,

உங்கள் கூற்றை நான் முற்று முழுதாக ஏற்கிறேன். உங்களைப் போலவே நானும்
( உங்களைப் போன்ற அற்புதக் கவிதைகள் வடிக்க என்னால் முடியாது) மரபுக்
கவிதைகளின் இலக்கியத்தால் நான் ஈர்க்கப்பட்டேன். மரபுக்கவிதை வடிக்க
மிகவும் ஆவல் கொண்டேன் ஆனால் முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?
இலக்கணம், இலக்கியம் ஆகியவற்றை முறையாகக் கற்றவனல்ல நான். எனவே மரபுக்
கவிதை எப்போது என்னை நழுவிச் சென்று தொலைதூரத்தில் நின்று நகைக்கிறது.

எனக்குத் தெரிந்ததமிழ் கண்ணதாசன் தந்தது. பாரதியார் சொன்னது, பாரதிதாசன்
இயம்பியது,பட்டுக்கோட்டை பகன்றது, வைரமுத்து வடிப்பது, வாலி இசைப்பது.
இவைகளின் அடிப்படையே எனது தமிழறிவு

இன்றும் அந்த இலக்கண, இலக்கிய மரபுகளை நூல்களில் ஆவலாய்ப் படிக்கும் ஒரு
மாணவனாகத்தான் என்னால் இருக்க முடிகிறது.

அன்பின் புகாரி உங்கள் புதுக்கவிதைகள் புத்துயிர் கொண்டவை, கருத்துக்
கனம் கொ|ண்டவை அவற்றின் முழு ரசிகன் நான். தொடரட்டும் உங்கள் அற்புத
படைப்புக்கள்.

அன்புடன்
சக்தி

Unknown said...

நன்றி சக்தி

என்னால் மரபுப் பாக்கள் எழுதமுடியும். எந்த இலக்கணத்துக்குள்ளும் வார்த்தைகளை இடும் கலையை அறிந்தே இருக்கிறேன். ஆனால் அது கவிதைக்கு அவசியமற்றது என்பது என் எண்ணமானபின் நான் யாப்பிலக்கணம் பற்றி கவலைப்படுவதில்லை. ஆயினும் யாப்பின் செழுமையான கவிநய நடைகள் என்னிடம் எப்போதும் இருக்கவே செய்யும்.

அன்புடன் புகாரி

சாந்தி said...

//பாரதிபோல், ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் ஒரு கவிதையைப் பொத்தி வைத்திருக்க வேண்டும்.


ஆனால் நான் இலக்கணம் பார்த்து எழுதியது கிடையாது. செவிகளின் விருப்பமாகவும் நாவின் கனவாகவுமே அவை வந்திருக்கின்றன.//



இதுதான் ரகசியமா?..நன்று.



//இசையே சுத்தமாக இருக்கக்கூடாது. கவிதை எளிமையாய் புரியும்படி இருக்கக்கூடாது. கவிதை முடிந்ததும்தான் கவிதை தொடங்குகிறது எனவே முற்றுப்புள்ளி வைக்காதீர்கள், கமாவோடு நின்றுவிடுங்கள். கவிதைக்குக் கவிஞன் விளக்கம் தரக்கூடாது. புரியலேன்னா போடா என்றுவிடுங்கள். அடடா இன்னும் ஏராளமாகச் சொன்னார்.//


:)))