நாம் இன்று வாழ்வது விஞ்ஞான யுகத்தில். இன்றெல்லாம் விஞ்ஞானத்தின் வளர்ச்சி ஒளி வேகத்தில் செல்கிறது என்றுரைத்தாலும் அது குறைவோ என்ற ஐயம் வருகிறது.
உண்மையில் விஞ்ஞானத்தால் நாம் பயன் அடைகிறோமா அல்லது அமைதியை இழந்து உழைப்பை இழந்து வீரத்தை இழந்து இயற்கையை இழந்து உறவுகளை இழந்து பண்பாட்டை இழந்து பாரம்பரியத்தை இழந்து அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.
விஞ்ஞானத்தால் இன்று மனிதன் உச்சத்தில் வளர்ந்திருக்கிறான் என்பது நிச்சயம் ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய உண்மைதான். ஆனால், விஞ்ஞானம் வளர வளர மனிதன் மூளையை மட்டுமே பயன்படுத்தினால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டானல்லவா?
முன்பு இந்தியாவில் ஒரு சாதியினர் மட்டும் தங்களை கல்வி, அறிவு போன்றவற்றுக்கே ஆகுமானவர்கள் என்று ஆக்கிக்கொண்டார்கள். அவர்கள் வேறு எந்த உடல் உழைபில் ஈடுபட மாட்டார்கள். தம் அறிவைக்கொண்டு வரும் வருமானத்தில் மட்டுமே உயிர் வாழ்வார்கள்.
ஆனால் இன்று எப்படி? எல்லோருமே அதே நிலைக்கு வந்துவிட்டார்கள் அல்லவா? இனி வருங்காலத்தில் எவருமே உடல் உழைப்பைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை என்ற நிலை வந்துவிட்டதல்லவா?
விஞ்ஞானத்தின் சாதனைகளைப் பட்டியலிட்டால் பட்டியலே மூழ்கிப்போய்விடும் என்பது அப்படியே உண்மை. அவற்றுள் மிக முக்கியமானதாக மனிதனின் ஆயுளைச் சொல்வேன் நான். மனிதனின் ஆயுளை விஞ்ஞானம்தான் உயர்த்தி இருக்கிறது.
கடவுளிடம் கேட்கும் அந்த வரத்தை அருளியிருப்பது விஞ்ஞானம்தான்!
பேய் பிசாசுகளையெல்லாம் விஞ்ஞானம் ஓட்டோ ஒட்டென்று ஓட்டிவிட்டது. அந்தக் கால மனிதர்களை அது படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கடவுளிடம் கேட்ட இன்னொரு பெரிய பாதுகாப்பு இது.
இதை அருளியதும் விஞ்ஞானம்தான்!
இப்படி மனிதன் கடவுளிடம் எதையெல்லாம் கேட்டானோ அதையெல்லாம் அருள்வது இன்று விஞ்ஞானம்தான்... ஆக விஞ்ஞானமே நவீன கடவுள் என்றுகூடச் சொல்லலாம்.
ஆனால் மனிதன் அந்தக் காலம்முதல் இந்தக்காலம் வரை கடவுளிடம் நிம்மதியைத்தானே முதலில் கேட்டான். அதை மட்டும் விஞ்ஞானத்தால் அருளவே முடியவில்ல்லையே.
அது விஞ்ஞானத்தின் மிகப்பெரும் தோல்வியல்லவா?
நிம்மதி மட்டும் மனிதனின் மனதில்தானே இருக்கிறது. அதை அவனிடமே எடுத்துக்கொடுக்க என்ன வேண்டும்? நல்ல மெய்ஞானம் வேண்டும். மனித நேயம் ஒன்றையே போற்றி வாழும் உண்மையான மெய்ஞானம் வேண்டும்.
நாம் உண்மையில் பயப்படுவது கடகடவென்று வளரும் விஞ்ஞானத்திற்கு அல்ல. அதைத் தவறாய்ப் பயன்படுத்தத் துடித்துக்கொண்டிருக்கும் மனிதர்களுக்குத்தான்.
கடவுளிடம் இருந்த பயம்போய் இப்போது மூளை வலுப்பெற்ற கெட்டழியும் மனிதர்களுக்குப் பயப்படுகிறோம்.
விஞ்ஞானம் கெட்டவர்களை கொடூரமான சாத்தான்களாய் ஆக்கிவிட்டிருக்கிறது!
ஆக விஞ்ஞானத்தோடு நமக்குத் தேவை ஜாதி மதம் இனம் கடவுள் என்ற எதனோடும் சார்பில்லாத மெய்ஞானம். இது விஞ்ஞான யுகத்தின் தேவைமட்டுமல்ல. விஞ்ஞானமே இல்லாத அந்தக் காலத் தேவையும்தான்.
எந்த வளர்ச்சி எப்படி வந்தாலும் மனிதநேய உயர்வே மனித வாழ்வைச் சரியாக்கும்... அதற்குத்தான் மதங்கள் இனங்கள் கடந்த உண்மையான மெய்ஞானம் வேண்டும்.
அதோடு இந்த விஞ்ஞான விளையாட்டுகளை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு வருடத்தில் ஒரு மூன்று மாதங்களாவது எந்த விஞ்ஞான வசதிகளுமே இல்லாத கற்கால பூமிக்குச் சென்று நம்மை நாம் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
விஞ்ஞானம் நம்மை வளர்க்கும். மெய்ஞானம் நம்மை எளிமைப்படுத்தும். நம் வாழ்க்கை வளமானதாய் அமையும்.
3 comments:
எந்த வளர்ச்சி எப்படி வந்தாலும் மனிதநேய உயர்வே மனித வாழ்வைச் சரியாக்கும்...
அதோடு இந்த விஞ்ஞான விளையாட்டுகளை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு வருடத்தில் ஒரு மூன்று மாதங்களாவது எந்த விஞ்ஞான வசதிகளுமே இல்லாத கற்கால பூமிக்குச் சென்று நம்மை நாம் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
விஞ்ஞானம் நம்மை வளர்க்கும். மெய்ஞானம் நம்மை எளிமைப்படுத்தும். நம் வாழ்க்கை வளமானதாய் அமையும்.
அருமையா சொன்னீர்கள்... இப்படியான ஆழ்ந்து அலசும் கட்டுரைகள் பல உங்களிடமிருந்து வரணும்.. எம்மில் பலரையும் எழுத தூண்டணும் என்பதே ஆவல்...
--
சாந்தி
கற்றது கைமண் அளவு. கல்லாதது கூகுள் அளவு.
ஆமாம் சாந்தி.
ஆசான் உங்க திறமைகள், அனுபவங்களை நாங்களும் பங்குபோட்டுக் கொள்ள எங்களுக்கும் சந்தர்ப்பம் தாருங்கள். இவ்வாறான கட்டுரைகள் மிகவும் பிரயோசனமாக இருக்கும்.
அன்புடன் ஆயிஷா
ஆசான் புகாரி
அற்புதமான கட்டுரை
உங்கள் கட்டுரையினை நான் அப்படியே இளைய தலைமுறை என்ற பத்திரிக்கைக்கு அனுப்ப உள்ளேன்... உங்கள் சம்மதம் கிடைத்தபிறகு...
அன்புடன் இளங்கோவன்.
Post a Comment