அணிந்துரை - எல்லோருக்கும் சேவியரை பிடித்திருக்கிறது


இலையுதிர்கால இளமாலைப் பொழுதுகளில், மெல்லிய காற்றின் மிருதுவான தொடுதல்களில், இருப்பைத் துறந்து மிக இயல்பாய் நிலத்தை முத்தமிட வரும் வண்ண வண்ண வசீகர இலைகளாய் சேவியர் கவிதைகள்.

ஒவ்வோர் இலையிலும் அனுபவ நரம்புகளின் அழகிய ஊர்வலம், மனிதர்களை நேசிக்கும் உயர்ந்த உணர்வுகளின் கோட்டோ வியங்களாய்.

எல்லோருக்கும் மழை பிடிப்பதில்லை என்று கவிதைக் குடை விரிக்கும் சேவியரை எல்லோருக்கும் பிடித்திருக்கிறது.

"தவற விட்ட பத்துகாசு போலத்தான்
என் கவிதைகளும்"

என்று தன் கவிதைகளுக்கு கவிதையாலேயே ஒரு முன்னுரை வழங்குகிறார் சேவியர் ஓர் கவிதையில். பிறகு...

"தேவைப்படும் பாத்திரம் தேடி வருமென்றே
காத்திருக்கின்றன என் கவிதைகள்"

என்று அழகாக ஓர் அணிந்துரையையும் அவரே வழங்கிவிடுகிறார். இனி நான் என்ன எழுதுவது?

ஏராளமான வெள்ளிப் பாத்திரங்களில் தாராளமாகவே விழும் பொற்காசுகளாய் மின்னுகின்றன சேவியரின் பல கவிதைகள் என்பதை என் பங்குக்கு நானும் சொல்லத்தானே வேண்டும். சொல்லுகிறேன்... சொல்லுகிறேன்...

"இலட்சியமில்லாமலேயே
வாய்த்திருக்கிறது கவிதை"

என்கிறார் இன்னொரு கவிதையில். அப்படி இலட்சியமில்லாமலேயே வாய்க்கப் பெற்ற இவரின் கவிதைகள், மனிதநேயம் என்ற முதன்மை இலட்சியத்தை நோக்கி அக்கறை நடைபோடுவதை அனேகமாக அனைத்துக் கவிதைகளிலுமே காணலாம்.

"யார் வீட்டுக் கஷ்டத்தையோ கைப்பிடி அளவு
குறைத்திருக்கிறேன் என்றே அமைதி கொள்ளும் மனசு"

என்று தன் பொருளை இழந்தபோது பிறர் நலனுக்காய் தன் ஏமாற்றத்தையும் கருணையோடு ரசிக்கும் கவிஞர்,

"வழக்கம் போலவே இந்த முறையும்
எதிர்பார்த்து ஏமாந்தேன். கவிதை பேசும் சகபயணியை"

என்று கவிதைகளில் மூழ்காத கட்டாந்தரை மனங்களைக் கண்டுமட்டும் ஏகமாய் ஏமாறுகிறார். எது கவிஞனை உண்மையாய் ஏமாற்றுகிறது என்பதை அறியும்போதே ஆனந்த வெள்ளம் வழிகின்றது இதய ஓடைகளில்.

"எப்போதும் தோன்றியதே இல்லை
அவருக்கும் ஓர் வாழ்த்துக் கடிதம் அனுப்ப"

என்று தபால்காரரைப் பார்த்து ஒரு கவிதையில் சொல்வதைப்போல் தொகுப்பெங்கும் பல பொன்மனப் பார்வைகள்...

"முக்கியமற்றதாய் தோன்றும் நிகழ்வுகளின் கூட்டுத் தொகையில்
வாங்க முடிகிறது முக்கியமான சில இலட்சியங்களை"

என்பது போன்ற நறுக்கென்ற வாழ்க்கைத் தத்துவங்கள்

"காதலுக்காக நழுவ விட்ட கணங்களை இறுகப் பிடித்திருந்தால்
ஒருவேளை முற்றத்தில் பூத்திருக்கக் கூடும் சில காதல்கள்"

என்று காதலைச் சொல்லும்போதும்,

"மூன்று வார மழையில் தெருவோரப் பிள்ளையார்
ஆல மர அழுக்குகளோடு கவனிப்பாரற்று"

என்று பக்தியைச் சொல்லும்போதும், கச்சிதமாய்த் தேன் எச்சமிட்டிருக்கின்றன இவரின் கவிதைகள்.

"அவன் கந்தலாடைக் கன்னிக்கு
பத்து பைசா பிச்சையிடும்போது கவனித்தேன்.
அவன் பார்வையை"

போன்ற தேள் தீண்டல்கள்...

"கிடைக்காத ஒரு கவளச் சோறு
உயிரைத் தின்று சடலம் துப்பும் போது
அரசு விளம்பரம் சிரிக்கும்.
கருத்தடைச் சாதனம் இலவசம்"

போன்ற சுளீர் சொடுக்குகள்...

"கழுதைக்கு முன்னால் குச்சியில் கட்டி நீட்டப்படும்
உணவு பற்றி பள்ளிக் கூட வயதில் எதுவும் புரியவில்லை.
தேர்தல்கள் தான் தீர்த்து வைக்கின்றன சந்தேகங்களை"

போன்ற அரசியல் சிதறு தேங்காய்கள்...

"உடைந்து வழியும் நிலவை
கிழியாத இலையில் ஏந்திப் பிடித்திருக்கும் பனைமரம்"

"நீ பற்றவைக்கும் பார்வைகளை என் மீது உரசிப் போடாமல்
புறக்கணிக்கும் போதெல்லாம் எரிந்து போகிறேன்".

"நடுக்கூடத்தில் நாற்காலியில்
குட்டி மரணம் போடுபவனை"

போன்ற ரசனை மேயும் நயங்கள்...

"நீளமான கருப்புக் கூந்தலோடு யாரேனும் நடந்தால்
சிரிக்கக் கூடும் எதிர்கால வீதிகள்"

போன்ற வளரும் நவீனத்தில் அழியும் அழகை எடுத்து வீசும் கவிதை மூச்சுகள்...

"முன்பெல்லாம் பத்து மைல் என்றாலே
பதட்டப் படாமல் நடந்து சென்றனராம்.
இப்போது அது இல்லை, அதனால் தானோ என்னவோ,
ஆயுளிலும் தரப்படுகிறது ஐம்பது சதம் தள்ளுபடி".

மூளையை மட்டுமே நடக்கவிடும் நவீனயுகத்தில் ஆயுள் கேள்விக்குறிதான். கிழியும் உடலை மருத்துவத்தால் தைத்துத் தைத்து கந்தலாய் ஒரு வாழ்க்கை என்பதை இந்தக் கவிதை சொல்லாமல் சொல்வது எத்தனை உச்சம்.

பல கவிதைகளில் கடைசி வரிகளில் ஒளித்துவைத்திருக்கிறார் கன்னிவெடிகளை. அவற்றை நம் கண்கள் மிதித்ததும் வெடித்துச் சிதறி வாசிப்பு வெறுமைகளைக் கொன்றுபோட்டுவிட்டு, எண்ணங்களில் மத்தாப்பு கொளுத்திவிடுகின்றன.

"நூறு ரூபாய்க்குக் கேட்டிருக்கலாமோ ?"

ஏமாற்று உலகில் மன நிறைவென்பது கிடைக்காத ஒன்று என்பதை இந்தக் கேள்வி ஒரு திடமான பதிலாகவல்லவா தருகிறது.

"ஒரு முள்ளுக்காய் எப்படி வெறுக்க முடிந்தது
உன்னால் அத்தனை மலர்களையும்?"

அறுபட்ட இதயத்தின் வேதனையை எப்படி அருமையாய்ச் சொல்கிறார் பார்த்தீர்களா?

தனக்கு, தாரம் வரும் 'கல்யாணக் கணக்குகள்' கவிதையில் பொருளாதார விளையாட்டு, மைதானம் காண்கிறது. 'அனுமதிக்கப் படாதவைகள்' கவிதை யோசித்துப் பார்க்காத நம் நடைமுறை தவறுகளில் நெருப்புக்குச்சி உரசுகிறது. காதலை எப்படியெப்படியெல்லாமோ சொல்லிவிட்டார்கள் ஓர் அறுந்த செருப்பாகப் பார்க்கும் 'காதல்' என்ற கவிதை இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளுள் வித்தியாசமானது.

"இப்போதெல்லாம் வருவதில்லை ஆத்தா.
மகாலட்சுமியின் மகளுக்கு
அமெரிக்காவில் வேலை கிடைத்திருக்கிறதாம்."

போன்ற குட்டிக்கவிதைகளில் சகட்டுமேனிக்குக் கொட்டிவைத்திருக்கிறார் அழுத்தமான உணர்வு வேட்டுகளை.

"என் மனைவிக்கு ரசனையில்லையென்று நான் சொல்லும்போது,
என் புருஷனுக்கு பொறுப்பே இல்லை என்பாள் மனைவி."

இந்தக் கவிதை எதைச் சொல்கிறது? பார்க்கும் வேறு வேறு கோணங்களையா? இருவேறு இதயங்களின் திருமணக் கோளாறுகளையா? எல்லோருக்கும் பார்வைகள் உண்டு என்பதைதா? ஒன்றை வைத்துக்கொண்டு இன்னொன்றை கோட்டைவிட்டுவிடாதே என்ற தத்துவத்தையா? குறைகூறும்முன் உன் குறையைக்கொஞ்சம் பார் என்பதையா? சகிப்புத்தன்மையே வாழ்க்கை என்பதையா? இன்னும் என்னென்ன விசயங்கள் இந்தப் பொடிக் கவிதையில் மூடிக்கிடக்கின்றன?

அதுதான் கவிதை. அப்படித்தான் கவிதை இருக்கவேண்டும். அப்படித்தான் கவிதைகள் நம் செழுமையான மரபிலும் வளமாக விளைந்திருக்கின்றன. கவிஞன் காலத்துக்கு ஏற்ப கவிதையின் நடையை மாற்றுகிறான் ஆனால் கவிதைகள் என்னவோ அப்படியே உயரத்தில்தான் கம்பீரமாய் உட்கார்ந்திருக்கின்றன. யாரும் கவிதையை கீழே விழச் செய்துவிடமுடியாது. விழுவதும் விழப்போவதும் எப்போதும் கவிதை என்ற பெயரில் குவித்துப் போடும் குப்பைகளும் குவிக்கும் 'கண்டிருந்த' வான்கோழிகளும்தான்.

"ரசனையை விலை நிர்ணயிப்பதில்லை என்பதை
மழலைதான் முதலில் கண்டு கொள்கிறது."

இப்படி எளிமை எளிமை எளிமையிலும் எளிமை. அவற்றுள் இனிமை இனிமை இனிமையிலும் இனிமை. இவைதாம் சேவியரின் கவிதைகள். வாசகனைத் தன்னோடு கட்டியணைத்து கவிதை காட்டுவதில் எப்போதுமே வெற்றிகாண்கிறார் சேவியர்.

"சிப்பி பிடிக்காது என்பதற்காய்
முத்தை நிராகரிக்கும் உன் முட்டாள் தனம்"

உயர்வான எழுத்துலகிலும் இப்படியான துர்நாற்ற அவலங்கள் தூய்மைப் படுத்தப்பட வேண்டும். கவிஞன் தன் மனச்சிப்பிக்குள் வந்துவிழும் உணர்வுகளை வளர்த்தெடுத்து முத்துக்களாய் உருவாக்குவதும், அவை வக்கற்ற வெற்று ஓடுகளின் வயிற்றெரிச்சல்களை வாரிக்கொள்வதும் வாடிக்கைதான். அவற்றை ஓர் எதுகை மோனையால் தூக்கி ஓர் ஓரமாய் எறிந்துவிட்டு நடக்கத் தெரிந்தவன்தான் நல்ல கவிஞன்.

சேவியர், வெற்றி நடையையே தன் நடையாக்கிக்கொண்டவர்.

இனிப்பாக இதயம் பேசும் சேவியர் கவிதைகள் மேலும் இறுக்கமாக விளைந்து என்றென்றும் நிலைத்து வாழ என் வாழ்த்துக்கள்

அன்புடன் புகாரி
ஜனவரி 2005

Comments

பூங்குழலி said…
தீர ஆராய்ச்சி செய்திருக்கிறீர்கள் புகாரி
சாந்தி said…
> "என் மனைவிக்கு ரசனையில்லையென்று நான் சொல்லும்போது,
> என் புருஷனுக்கு பொறுப்பே இல்லை என்பாள் மனைவி."
>
> இந்தக் கவிதை எதைச் சொல்கிறது? பார்க்கும் வேறு வேறு கோணங்களையா? இருவேறு
> இதயங்களின் திருமணக் கோளாறுகளையா? எல்லோருக்கும் பார்வைகள் உண்டு என்பதைதா?
> ஒன்றை வைத்துக்கொண்டு இன்னொன்றை கோட்டைவிட்டுவிடாதே என்ற தத்துவத்தையா?
> குறைகூறும்முன் உன் குறையைக்கொஞ்சம் பார் என்பதையா? சகிப்புத்தன்மையே வாழ்க்கை
> என்பதையா? இன்னும் என்னென்ன விசயங்கள் இந்தப் பொடிக் கவிதையில்
> மூடிக்கிடக்கின்றன?


அற்புதம்....

விழுவதும் விழப்போவதும் எப்போதும் கவிதை என்ற பெயரில்
> குவித்துப் போடும் குப்பைகளும் குவிக்கும் 'கண்டிருந்த' வான்கோழிகளும்தான்.அதே... ...:(((

>
> "ரசனையை விலை நிர்ணயிப்பதில்லை என்பதை
> மழலைதான் முதலில் கண்டு கொள்கிறது."
>

ஆஹா

>
> "சிப்பி பிடிக்காது என்பதற்காய்
> முத்தை நிராகரிக்கும் உன் முட்டாள் தனம்"அழகு...


--
சாந்தி
கற்றது கைமண் அளவு. கல்லாதது கூகுள் அளவு.
சீனா said…
அன்பின் புகாரி

அருமை நண்பர் சேவியரின் கவிதைகளை விமர்சித்து அறிமுகம் செய்தமை நன்று நன்று

நல்வாழ்த்துகள் புகாரி
சிவா said…
சேவியர் அண்ணனை பற்றி அருமையான கட்டுரை .. ஒரு சில கவிதைகளை மட்டுமே படிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது
nidurali said…
நீடூர்.அ முஹம்மது அலி ஜின்னாவுக்கும் சேவியரை பிடித்திருக்கிறது

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்