நகைச்சுவையாளர்கள்
தேகத் திசுக்களுக்குப்
பட்டாம்பூச்சி சிறகு பூட்டி
ரத்த நாளச் சிற்றோடைகளில்
வளர் ஆயுள் அலைகள் கூட்டி
நெஞ்சக் கூட்டுக்குள்
ஒட்டும் ஒட்டடைகளைத் தட்டி
தளரும் மூச்சுக் காற்றைத்
தாங்கிப் பிடித்து உயிர் ஊட்டி
மொட்டுகளாகிப் பின் மலராமல்
ஒட்டுமொத்த அணுக்களிலும்
பட்டுப்பட்டென்று
பூக்களாகவே வெடித்துக் குலுங்கும்
சிரிப்பென்னும் நாட்டிய நந்தவனம்
பூத்தவிடத்திலேயே முடங்கிவிடாமல்
புவி முழுதும் நிறைக்கும் அற்புதம்
வீடுகளெங்கும் மன விரிசல்கள்
நெருஞ்சி முட்களாய் மண்டிக்கிடக்க
வீதிகளெங்கும் வேதனைகள்
கொடும் விசம்போல கொட்டிக்கிடக்க
நகைச்சுவை ஒளிப்பூக்களை
நகக் காம்புகளிலும்
மத்தாப்பின் வண்ண வண்ண
மின்னல் தெறிக்க ஏற்றி
பகைக்கின்ற இதயங்களிலும்
தித்திப்புத் தேனூட்டி
நாட்களின் நரம்புகளிலும்
பொழுதுகளின் செல்களிலும்
குதித்தோடும் சந்தோச நிறங்கள் ஏற்றி
தாயின் உயிர்ப் பாலாய்
காதலின் பொன்மடியாய்
உயிர்கள் அனைத்திற்கும்
வாழ்வளிக்கும்
நகைச்சுவையாளர்களே
உங்களுக்கெல்லாம்
என் உயிரின் முத்தங்களை
என்றென்றும் உறுதி செய்கிறேன்
4 comments:
நகைச்சுவையாளர்களுக்கு நல்ல அங்கீகாரம்... நகைச்சுவையாளர்கள் இல்லை என்றால்... நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை!! என்னதான் மன அழுத்தம், உடல் சோர்வு, அது இது என்றாலும் ஒரு 5 நிமிடத்துக்கு ஏதோவொரு நாகேஷ் காமெடி முதல் விவேக் காமெடி வரை, சார்லி சாப்ளின் படம் முதல் தொலைக்காட்சியில் ஜே லெனோ நிகழ்ச்சி வரை, ஆனந்த விகடன் நகைச்சுவைத் துணுக்கு முதல் அன்புடன் நகைச்சுவை இழை வரை... படித்தால் மனது லேசாகும் தானே!
எனக்கு மெகாத்தொடர்கள்அறவே பிடிக்காது :-) நகைச்சுவைத் தொடர்கள்தான் பிடிக்கும். நானும் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஃப்ரண்ட்ஸ் நகைச்சுவைத் தொடர் பார்க்கிறேன்... நேற்றுப் பார்க்கும்போது கூட (அதே எபிஸோடை முன்பே 4 முறை பார்த்திருந்தாலும்) சிரித்து மகிழ்ந்தேன்!
நகைச்சுவை விரும்பாதார் யாருண்டு !! எனினும் நகைச்சுவையாளர்கள் பற்றி கவிதை எழுதியது "உலகக் கவிதை வரலாற்றில் முதல் முறையாக...."
நகைச்சுவையாளர்களுக்கு நான் தந்த உயிர் முத்தங்களைப் பாராட்டிய கவிஞர் சேவியருக்கும் அன்புடன் சேதுக்கரசிக்கும் என் நன்றிகள்.
நகைச்சுவை மட்டும் இல்லையென்றால் என் இதயம் எப்போதோ தன் இயக்கத்தைத் துறந்திருக்கும்!
நகைச்சுவையாளர்களுக்கான இந்த வாழ்த்து மிக அருமை .
Post a Comment