யார் வெறியன்?

பிறந்து
ஐம்பத்துநாலு தினங்களே ஆன
பெண் குழந்தையைத்
தந்தையே கற்பழித்துக்
கொன்றானாம்
அது செய்தியில்லையாம்

அவன் ஒரு கிருத்தவனாம்
அதுதான் செய்தியாம்

யார் வெறியன்?

குடிவெறியில்
மகன் தன் தாயையே
தகாத உறவுக்கு அழைத்தானாம்
அது செய்தியில்லையாம்

அவன் ஓர் இந்துவாம்
அதுதான் செய்தியாம்

யார் வெறியன்?

தந்தை தன் மகளை
அடித்து அடித்துக் கிழித்தே
கொன்று முடித்தானாம்
அது செய்தியில்லையாம்

அவன் ஒரு முஸ்லிமாம்
அதுதான் செய்தியாம்

யார் வெறியன்?

16 comments:

cheena (சீனா) said...

செய்தியின் நாயகன் வெறியனா ? செய்தியாக்கியவன் வெறியனா ? அருமையான கேள்வி . செய்திகள் பரபரப்பை உண்டு பண்ணத்தக்க வகையில் தான் வெளியிடப்படுகிறது. செய்திகள் அதிக மக்களைச் சென்றடையச் செய்யும் உத்தி இது. விற்பனையைத் தவிர வேறு எந்த உள்நோக்கமும் செய்தியாக்கியவனுக்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

சேதுக்கரசி said...

இதன் தாக்கம் எங்கிருந்து வந்ததென்று தெரியுமென்று நினைக்கிறேன் :-) ஒரு வலைப்பூவில் இந்தக் கருத்துடைய ஒரு பதிவை இரண்டொரு மாதங்களுக்கு முன்பு பார்த்தேன்!

Unknown said...

உண்மைதான், கண்டுபிடித்ததற்கு நன்றி. தங்கமுலாம் பூசலாம், விசமுலாம் பூசலாமா? அந்த வேதனை தந்ததே இக்கவிதை

Anonymous said...

இப்படித்தான் நல்ல மதங்களை வெறியாக்கி மனிதர்களிடையே புகுத்தி விட்டார்கள்...
--
நட்புடன்

ரமேஷ்

வீ. எம் said...

அருமை, நல்ல கேள்வி..
எப்படித்தான் இந்த மதமும் அதன் அடித்தளமாக இருக்கும் கடவுளும் வந்ததோ.. புரியாதா புதிராகவே உள்ளது...

பூங்குழலி said...

எல்லாவற்றிற்கும் இப்போது இங்கே மதச் சாயம் பூசப்படுகிறது ....இதற்கு ஊடகங்கள் முக்கிய காரணம் என்று நான் நினைக்கிறேன் ...அவர்கள் வாசிப்பதெல்லாம் செய்தியாவதால் இந்த நிலை .

Gurudev said...

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

வள்ளுவம் தழைத்திடுக!

குருமூர்த்தி

சக்தி said...

அன்பின் நண்பர் புகாரி,

கேள்விகளின் மூலம்
கவிதை தந்து
ஞானத்தை ஊட்ட முயலும்
நல்லதென் இனிய நண்பரே
வாழ்த்துக்கள்

அன்புடன்
சக்தி

ஜெயபாரதன் said...

நண்பர் புகாரி,

ஜிஹாத்" என்று சொல்லிக் கொண்டு மதப் போர்வையில் ஒளிந்து கொண்டு மடி வெடியில் தன்னையும் அப்பாவி மக்களையும் தொடர்ந்து கொல்வதற்கு மதம் காரணமா ? இனம் காரணமா ? தனி மனிதன் காரணமா ?


அன்புடன்
சி. ஜெயபாரதன்

Unknown said...

சந்தேகமே இல்லை தனிமனிதனின் வெறிதான் காரணம். நீங்களே சொல்லி இருப்பதுபோல அது மதம் இனம் என்ற போர்வையைப் போர்த்திக்கொள்கிறது. நீங்கள் ஒரே ஒரு மதத்தை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லாமல் இருந்தால் இந்தக் கேள்வியை இதைவிட அதிகமாக விரும்பி இருப்பேன். என் கவிதையைப் பார்த்தீர்களா. இந்தியாவின் பிரதான மூன்று மதக்களையும் காட்சிக்குள் கொண்டு வந்துவிட்டேன்

இப்போது உங்களிடம் ஒரு கேள்வி ஜெயபாரதன்:

அரசியல் என்ற போர்வையில் ஒழிந்துகொண்டு லஞ்சம் ஊழல் அதிகார துஷ்பிரயோகம் செய்து நாடு வீடு சமுதாயம் அனைத்தையும் தொடர்ந்து அழிப்பதற்கு காரணம், தனிமனிதனா? அரசியலா? சமுதாயமா?


அன்புடன் புகாரி

ஜெயபாரதன் said...

நண்பர் புகாரி,

இப்போது இந்தியாவிலும் உலக நாடுகளிலும் மத இனக் கலாச்சாரப் போர்வைக்குள் பல கொலைகள் அனுதினமும் நிகழ்கின்றன. இது தனி மனிதனின் தூண்டலாக எனக்குத் தெரியவில்லை.

தனிப்பட்ட காதல், கள்ளக் கடத்தல், வீட்டுச் சண்டை, பொருள் சண்டை சம்பந்தப் பட்ட மனிதக் கொலைகளைப் பற்றித் தர்க்கம் இல்லை.

மத இனக் கலாச்சாரப் போராட்டத்தில் புத்த இந்து கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய மதங்கள் எதுவும் விதி விலக்கல்ல.

Unknown said...

மதம் மொழி இனம் என்று ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன வன்முறை செய்ய அல்லது இணங்கி வாழ. ஒரு தனி மனிதர்களின் சீற்றமே வன்முறை ஆகிறது.

ஹிந்தி பேசும் மாநிலங்களில் தமிழ் பேசும் ஒருவன் வெடுகுண்டுகளாய் வைத்துத் தகர்த்தால் த்வறு தமிழிடம் இல்லை. அந்தத் தனிமனிதன். அல்லது அவன் போன்றவர்களால் அமைந்த அறிவற்று குழுவே காரணம். தமிழ் ஒருபோதும் காரணமாகிவிடாது.

அதே போலத்தான் மதமோ இனமோ நிறமோ வன்முறைக்குக் காரணம் அல்ல. மனிதர்களின் மனம்தாம் காரணம்.

ஜெயபாரதன் said...

/// அரசியல் என்ற போர்வையில் ஒழிந்துகொண்டு லஞ்சம் ஊழல் அதிகார துஷ்பிரயோகம் செய்து நாடு வீடு சமுதாயம் அனைத்தையும் தொடர்ந்து அழிப்பதற்கு காரணம், தனிமனிதனா? அரசியலா? சமுதாயமா? ////

கேள்வியிலே கேள்வியும் பதிலும் உள்ளதால் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

Unknown said...

//கேள்வியிலே கேள்வியும் பதிலும் உள்ளதால் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.//


என் கேள்வியில் மூன்று பதில்கள் உள்ளன ஜெயபாரதன். அந்த மூன்றில் எது சரியான பதில் என்று சொல்லுங்கள். ஏன் என்று சொல்லுங்கள். உங்களின் மதம் இனம் சம்மந்தமான கேள்விபோலத்தானே இதுவும். நான் ஒரே ஒரு பதில் கூறியிருக்கிறேனே.


அன்புடன் புகாரி

சாதிக் அலி said...

ஆஹா அருமையான விளக்கம். புஹாரி சார் தாங்கள் கொஞ்சம் காதலை ஓரங்கட்டிவிட்டு இது போன்ற சமுதாய, சமூகக் கவிதைகளைத் தாருங்கள். காதல் கவிதைகள் போதும் போதும் எனுமளவுக்கு நிறைந்துக் கிடக்கிறது. இப்படிப்பட்ட கவிதைகளால் நீங்களும் ஒரு புரட்சிக்கவிஞராக பரிமளிப்பீர்கள்.


வாழ்த்துக்கள்.

Unknown said...

நன்றி சாதிக்,

காதலை ஓரங்கட்டினால் பிரபஞ்சமே அழிந்துபோய்விடும். புல்லும் பூண்டும் காதலின் பரிசு. காதலென்ற சுவாசம் இருக்கும் வரைதான் உயிர்.

அன்புடன் புகாரி