அருங்கலை மாமயில் நடிகை பத்மினியோடு ஒரு சந்திப்பு
ஜனவரி 11, 2003 டொராண்டோ , கனடா.
ஒரு நேர்காணலுக்காக நான் அவரிடம் சென்றிருக்கவில்லை. நேர்காணலின் எந்த நுணுக்கமும் எனக்குத் தெரியாது. துண்டுக் காகிதமோ எப்போதும் ஞாபகமாய் எடுத்துச் செல்லும் என் பேனாவோ அப்போது என்னிடம் இருக்கவில்லை. ஆனால், அவரைப் பார்த்தபோது வந்த பரவசத்தால் என் மனப் புல்வெளிகளில் மிக இயல்பாய்ப் பூத்த சின்னச் சின்ன மூக்குத்தி மலர்க் கேள்விகளை ஆர்வம் மணக்க மணக்கக் கேட்டுவைத்தேன். அவரிடமிருந்து வந்த பதில்களும் இயல்பு ஒளிரும் வெள்ளை ரோஜாக்களாய்ப் பூத்துப் பூத்து மனம் நிறைத்தன.
வார இறுதியின் முதல் நாள் எனக்கு. சனிக்கிழமையின் நெட்டிமுறிக்கும் பிற்பொழுது. கனடா உதயன் ஆசிரியருக்கு ஒரு வணக்கம் சொல்ல அவர் அலுவலகத்தை நான் எட்டிப்பார்த்தபோது, "நல்ல சமயத்தில் வந்தீர்கள் புகாரி, நாட்டியப் பேரொளி பத்மினியைச் சந்திக்கப் போகிறேன். நீங்களும் வாருங்களேன், பேசிக்கொண்டே போவோம்" என்று நட்போடு அழைத்தார். அதுவரை அந்தப் பேரொளியை நான் நேரில் தரிசித்ததில்லை என்பதாலும் அவர்மீது கொண்ட அபிமானத்தாலும் மனம் பூம்பூம் மாடாய்ச் சலங்கைகட்டித் தலையாட்ட உடனே ம்ம்ம்ம் சொன்னேன்
கண்கள் கொண்டாட நான் அவரைச் சந்தித்ததும், காதுகள் கொண்டாட நான் அவருடன் உரையாடியதும், ஆச்சரியங்கள் கொண்டாட நான் அவரை நேரில் அறிந்ததும், மனம் திண்டாட நான் அவரிடமிருந்து விடைபெற்றதும் தித்திப்பு நிகழ்வுகள்.
திரும்பும் வழியில், "கவிதைகளே எழுதுகிறீர்களே கவிஞரே, இதையே ஒரு நேர்காணலாய் நினைத்துக் கொண்டு ஏன் ஒரு கட்டுரை எழுதக்கூடாது என்று தூண்டில் வீசினார் உதயன் ஆசிரியர். அவரிடம் மறுத்துப் பழக்கமில்லாத நான், சரி என்று ஒரு கெண்டை மீனாய்க் கணித்திரைக் கரைகளில் எழுத்துக்கள் சிதறத் துள்ளினேன்.
உரையாடியபோது எந்தக் குறிப்பும் எடுத்துக் கொள்ளாததால், கணினி மொழிகள் திருடிக்கொண்ட என் ஞாபகங்களுடன் கயிறிழுக்கும் போட்டியில் இறங்கவேண்டியதாயிற்று.
அக்கறையாய்த் தயார் செய்த நறுக்குக் கேள்விகளோடு சென்றிருந்தால் அசத்தியிருக்கலாமே என்ற நெருடல், நிலவுப் பாதையில் மேகம் குறுக்கிடுவதைப் போல கறுப்பாய் நீண்டாலும், இதுதானே இயல்பு இதுதானே வித்தியாசம் இதுதானே அழகு என்று மனம் சமாதானம் கொண்டது.
ஜனவரி 17, 2003 உதயன் வார இதழில் வெளியான என் முதல் திடீர்ச் சந்திப்பு. சுருக்கமாக இருக்கட்டுமே என்று நான் சில தகவல்களை மட்டுமே தந்துவிட்டு பெரும்பாலான கேள்வி பதில்களை அவசியமற்றவை என்று நீக்கிவிட்டேன்.
நகமும் நாட்டியம் ஆடிடும்
நாட்டியப் பேரொளி கண்டேன்
அகமும் அவிழ்ந்தே பறந்திட
அருங்கலை மாமயில் கண்டேன்
முகமும் முற்றிய சொல்லும்
முழுதாய்ப் பொழிந்தது பரதம்
சிகரம் தாண்டிய நர்த்தகி
சிந்தை சிதைத்த பத்மினி
திரைக்குள் விருந்தாய் வந்தவர்
தேனும் பாலும் தந்தவர்
நரைக்குள் மூழ்கிய போதிலும்
நாட்டிய ராணியாய் வாழ்பவர்
கரைகள் இல்லாக் கலைகளில்
கலைமா மணியும் வென்றவர்
வரையா ஓவியம் போலவே
வாழ்கிறார் வாழ்வார் என்றுமே
அது ஓர் இனிய பனி மாலைப் பொழுது. வீதிகளெங்கும் இயற்கை வெண்பட்டுக் கம்பளம் விரித்திருந்தது. வீடுகளோ வெண்ணையில் நனைந்த பன்னீர்ச் சொம்புகளாய்ப் பேரழகினுள் மூழ்கி மிளிர்ந்தன.
உதயன் ஆசிரியர் லோகன் அவர்களோடு, உதயன் கனடா தமிழ் வார ஏட்டின் சார்பாக நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களைச் சந்திக்கச் சென்றேன். முதல் சந்திப்பு.
எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களின் இல்லத்தில் அந்த நாட்டியக் கால்கள் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தன.
நான் பிறந்தபோது இவர் சலங்கை ஒலி என் அழுகையை நிறுத்தியிருக்கிறது. நான் வளர்ந்த போது இவர் நடிப்பும் நாட்டியமும் என்னை ஆக்கிரமித்திருக்கின்றன. ஆயினும், நான் இன்றுதான் முதன் முதலில் அருங்கலை மாமயில் பத்மினியைச் சந்திக்கிறேன். இதுவரை சந்திக்காத துரதிர்ஷ்டத்தை, இப்போது சந்தித்த அதிர்ஷ்டம் விழுங்கி விருந்தாக்கிக்கொண்டது.
நாட்டிய ராணி பத்மினியைப் பற்றி நான் எந்தத் தமிழருக்கும் அறிமுகம் செய்யத் தேவையில்லை என்றாலும், பதின்வயதினரும் அறியும் வண்ணம் ஓரிரு வார்த்தைகள் சொல்வதே சரி என்று படுகிறது.
எம்.ஜி.ஆர். - சிவாஜி காலத்தில், தன் நாட்டியத்தாலும் அழகிய நடிப்பாலும் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்த மிகச் சில கதாநாயகிகளுள் இவரும் ஒருவர். சிவாஜி கணேசனோடு மட்டும் 60 படங்களுக்கு மேல் நடித்து, ஒப்பற்ற இணையாய் உலா வந்தவர். எம். ஜி. ஆரோடும், ஜெமினி கணேசனோடும் பல படங்கள் அற்புதமாய்ச் செய்தவர். 1952 தொடங்கி இன்றுவரை, ஐந்து மொழிகளில் மொத்தம் 250 படங்களுக்கும் மேல் நடித்தவர்.
சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் காதல் இளவரசன் கமலஹாசனை ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் அவரின் கனவு என்ன என்று கேட்டபோது, 'அந்தக் கால பத்மினியோடு ஒரே ஒரு பாடல் காட்சியிலாவது ஜோடியாக நடிக்கவேண்டும்' என்று கூறியதாகக் கேள்விப்பட்டேன். அத்தனைக் கவர்ச்சியான தோற்றமும் நாட்டியமும் நடிப்பும் ஒருங்கே அமையப்பெற்று கனவுக்கன்னியாய்த் திகழ்ந்தவர் நடிகை பத்மினி.
'வணக்கம்' என்று அன்போடு வரவேற்ற பத்மினியைக் காண எங்களுக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது. முதுமை தன் அடையாளத்தை அவரிடம் பதித்துவிட்டிருந்தபோதும், கணீர் குரலும், அயராத கையசைவுகளும், கூர்ந்த பார்வையும், அத்தனைச் சுருக்கங்களையும் மீறிக்கொண்டு நின்ற பேரழகும், எனக்குள் ஒரு கேள்வியைக் கேட்கத்தூண்டியது.
'உங்கள் வயதென்ன?'
'வயதை யாரும் சொல்லமாட்டார்கள். ஆனால் நான் அப்படியல்ல. என் வயதைச் சொல்லுவேன். அதற்கு முன் நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம். எனக்கு என்ன வயதிருக்கும்?'
'பதினாறு' என்றேன் நான் பரவசப் படபடப்போடு.
'எழுபது' என்றார் அவர் சிரித்துக்கொண்டே.
அவர் தேகத்தில்தான் முதுமை தெரிகிறதேயொழிய, அவர் வார்த்தைகளில், திடீர் என்று பாவத்தோடு பாடும் பாட்டில், மின்னல் வேகத்தில் வீசும் கையசைவில், நடையில், ஞாபக சக்தியில் வயது பதினாறாகத்தான் நிலைத்து நிற்கிறது.
இவரைப் பலரும் நினைவு கூர்வது 'தில்லானா மோகனாம்பாள்' என்றுதான். அது ஒரு காலத்தால் அழியாத காவியம். சிவாஜியும் இவரும் அதில் நடித்திருக்க மாட்டார்கள். அப்படியே வாழ்ந்திருப்பார்கள்.
தன் நான்காம் வயதிலிருந்தே கேரள நாட்டின் கதகளி நடனத்தைப் பயின்றவர். ஒன்பதாம் வயதில் பரத நாட்டியம் கற்றார். பத்தாம் வயதில் அரங்கேற்றமே கண்டுவிட்டார்.
1974ம் வருடம் முதல், அமெரிக்காவில்தான் வாழ்கிறார். இதுவரை 82 மாணவிகளுக்கு அரங்கேற்றமும், நாற்பதாயிரம் மேடை நிகழ்ச்சிகளும் நிகழ்த்தியிருப்பதாகக் கூறினார்.
கதகளி, குச்சுபிடி, கதக், போன்ற இந்தியாவின் பல்வகை மாகாணங்களின் நடனங்களிலெல்லாம் பரதமே மிகவும் பழமையானது என்று பெருமையோடு கூறினார். தான் கற்றதும் கையாள்வதும் தஞ்சாவூர் பாணி என்றும் கூறினார்.இப்போது பெருமிதம் என் முகத்திலும்.
'அன்று முதல் இன்றுவரை உங்களுக்கு எத்தனையோ பாராட்டுகள் கிடைத்திருக்கும், அவை அத்தனையிலும் மிக உயர்வானதாய் தாங்கள் எதனைக் கருதுகிறீர்கள்' என் ஆர்வம் இப்படி ஒரு கேள்வியாய்த் திரிந்தது.
'சிவாஜி கணேசன் அவர்களின் பாராட்டுகள். ஒவ்வொரு படத்திற்கும் பாராட்டுவார். ஒவ்வொரு அசைவுக்கும் பாராட்டுவார்.' கண்கள் விரிய, ஆனந்தப் புன்னகையோடும், அவர் இன்று இல்லையே என்ற வருத்தத்தோடும், அந்த நடிப்புச் சக்கரவர்த்தியை நினைவுகூர்ந்து அவர் கூறும் போது எங்களுக்கும் புல்லரித்தது.
'சிவாஜி, நல்ல வேட்டைக்காரர். ஒரு நாள் திரைக்காட்சி எடுத்துக் கொண்டிருப்பதற்கு இடையில் கிடைத்த நேரத்தில், ஒரு முயலை வேட்டையாடி பிடித்துக் கொண்டு வந்துவிட்டார்' என்றவர், சிவாஜியோடு தனக்கு மிகவும் நல்ல நட்பு இருந்தது என்று பெருமையோடு சொன்னார். அதையும் தாண்டி புனிதமானது இருந்ததாய் அவர் விழிகள் மொழிந்தன.
'பணம்' என்ற படம்தான் சிவாஜி கணேசனோடு அவர் நடித்த முதல் படமாம். 1950ல் வெளிவந்த 'மணமகள்' தான் இவர் நடித்த முதல் படமாம்.
எம்.ஜி.ஆர். அவர்களின் தர்ம குணத்தையும், கம்பீரமான தோற்றத்தையும், தங்க நிறத்தையும் புகழ்ந்தார்.
'ஈழத் தமிழர்களுக்கு, நாட்டியத்தில் நல்ல ஈடுபாடு இருக்கிறது. ஆர்வத்தோடு கற்றுக் கொள்கிறார்கள். பல முறை நான் இங்கே நாட்டிய அரங்கேற்றத்திற்கு வந்திருக்கிறேன். இனியும் வருவேன்' என்று கணகள் மலர்ந்தார்.
நாட்டியப் பேரொளி, அருங்கலை மாமயில், நாட்டிய ராணி, கலைமாமணி (இரண்டு முறை) என்று இவர் பெற்ற பட்டங்களும் பாராட்டுக்களும் பெரிதாகவே நீளும். இவர் ஞாபக சக்தியைப் பற்றி கூறியே தீரவேண்டும். ஒரு விசயமும் விடாமல், தன் எழுபதாவது வயதிலும் பட்டுப்பட்டென்று ஒவ்வொன்றாய் எடுத்து விடுகிறார்.
வைஜெயந்தி மாலாவோடு 'சாதுர்யம் பேசாதடி... என் சலங்கைக்குப் பதில் சொல்லடி!' என்று போட்டி போட்டுக்கொண்டு நடனமாடும் பாடல்தான் சினிமா உலகத்திலேயே மிக நீளமான பாடல் என்று கூறி அதன் வெற்றியை நினைவுகூர்ந்தார். இவர் ஆண்வேடமிட்டு மஞ்சுளாவை மனைவியாக்கி நடித்திருக்கிறாராம், ஆங்கில நாடகங்களில் நடித்திருக்கிறாராம்.
'ப என்னும் முதல் எழுத்து பாவம், ர என்னும் இரண்டாம் எழுத்து ராகம். த என்னும் மூன்றாம் எழுத்து தாளம்' என்று துவங்கி பரதம் பற்றி பல விசயங்களையும் பகிர்ந்து மகிழ்ந்தார்.
'இந்த எழுபதாம் வயதிலும், இளமைத் துடுக்கோடு இருக்கும் ரகசியம் என்ன?' என்ற வழக்கமான கேள்வியையும் கேட்டுவைத்தேன்.
'நடனம்' என்று சட்டென்று பதில் வந்தது. கனடா இளசுகள் இதைக் கொஞ்சம் கேட்டு நடந்தால்/நடனமாடினால் என்றும் இளமையோடு வாழலாமே?
'நாளை அரங்கேற்றத்தில் சந்திப்போம்' என்று நாங்கள் விடைபெற்றுக் கொண்டபோது, மனம் நிறைவாகவும் குதூகலத்தோடும் இருந்ததை நாங்கள் அனைவருமே உணர்ந்தோம்.
அரங்கேற்றம் மிக அற்புதமாக நடந்தது. எதிர்பார்த்ததைவிட இரு மடங்கு மக்கள் குவிந்ததும் அரங்கத்தின் வெளி வாயிலை ஆறு மணிக்கே இழுத்து மூடிவிட்டார்கள். அதிசயமாய் இந்தக் குளிரிலும் வெளி வாசலிலேயே காத்திருந்தவர்கள் அங்கே பலர். விரக்தியோடு திரும்பியவர்களும் அதில் சிலர்.
உலக நாட்டியப் பேரொளி மேலும் பல்லாண்டுகள் இளமையோடு வாழ உதயன் சார்பாக என் நல் வாழ்த்துக்கள்.
5 comments:
அருமை நண்பர் புகாரி,
நாட்டியப் பேரொளி பத்மினியைப் பற்றிய பதிவு, என்னைக் காலச் சக்கரத்தில் ஏற்றி நாற்பதாண்டு காலம் பின்னோக்கி அனுப்பி விட்டது. அவரது தெள்ளத் தெளிவான தமிழ் உச்சரிப்பு, அருமையான நடிப்பு, அபாரமான நாட்டியம், நடனம் எல்லாம் மனதில் ஒன்றன் பின் ஒன்றாக ஓடுகின்றன. நினைத்து, ரசித்து, அசை போட்டு மகிழ்ந்தேன். தில்லானா மோகனாம்பாள் மறக்க முடியுமா ? எத்தனை தடவை பார்த்திருப்பேன் ? மறைந்திருந்து பார்க்கும் மர்மம் - ரயில் பயணத்தில் சரசம் - தில்லானாவின் சவால் - சந்திக்கும் சாதுரியம் - நலந்தானா நலந்தானா ?? நலம் பேணும் நற்பண்பு - இன்னும் இன்னும் பலப்பல.
துண்டுக்காகிதமோ, பேனாவோ இல்லாத காரணத்தால் - சிறு குறிப்பு கூட இல்லாது, இத்தனை அழகாக ஒரு நேர்காணல் கட்டுரையை வடித்த விதம் அருமை அருமை.
நகமும் நாட்டியம் ஆடும் - உண்மை.
70 வயதிலும், சிந்தனை மாறாது பரதத்தைப் பேணும் பாங்கு - சொல்ல சொற்கள் இல்லை.
நல்லதொரு கட்டுரைப் பதிவு.
நன்றி ஆசான். நேர்காணலின் சுவாரஸ்யத்தைவிட உங்க வர்ணணை ரொம்ப அழகு. மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றும் விந்தை.
அன்புடன் ஆயிஷா
உங்க வர்ணணை ரொம்ப அழகு. மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றும் விந்தை.
உண்மை தான் புகாரி .ஆனால் இறுதி நாட்களில் இங்கு வந்தவர் இறந்த போது அவருக்கு உரிய மரியாதை செய்யப்படவில்லை என்று வருத்தமாக இருந்தது .ஸ்ரீவித்யா இறந்த போது கேரளா அரசு அவரை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தது .பத்மினியின் மரணம் உதாசீனபடுத்தப்பட்டதாக தோன்றியது .நடிகர் சங்கம் கூட பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை .இறப்பதற்கு முன்தினம் இவர் தமிழக முதல்வருடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் .அதன் தொகுப்பில் கூட இவரைக் காண்பிக்கவில்லை .
அருமையான பதிவு.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
Post a Comment