மரணத்தாய் - மரணம் உன்னைக் காதலிக்கிறது


மண்ணில் நீ இருக்கப்போகும்
உன் கர்ப்ப நாட்கள்
எத்தனை என்ற கணக்கினை
நீ அறியமாட்டாய்
கருவின் நாட்களைச்
சிசு அறியாது
தாய்தான் அறிவாள்
நீ மரணித்து தன் கரங்களில்
நிம்மதியாய் தவழும் நாளுக்காக
கடுந்தவத்தோடு காத்திருக்கிறாள்
உன் மரணத்தாய்

5 comments:

சிவா said...

கருவின் நாட்களைச்
சிசு அறியாது
தாய்தான் அறிவாள்


ஆகா அருமை ஆசான் ....

சிவா said...

ஆசான்,


நாம் என்று நம் தாயின் வயிற்றில் கருவாகிறோமோ அன்றிலிருந்தே மரணத்தை நோக்கிய நம்முடைய பயணம் ஆரம்பமாகிறது. இது நமக்கு மட்டுமல்ல இந்த உலகில் உள்ள அத்தனை உயிர்களுக்கும் பொருந்தும். அத்தனை உயிர்களுக்கும் மரணத்தை பற்றிய பயம் உண்டு. எல்லா உயிர்களுக்கும் உண்டான பொதுவான ஒரே உணர்வு அடிப்படை பாதுகாப்பு உணர்வு மட்டும் தான். இருந்தாலும் மனிதனை போல மரணத்தை பற்றி சிந்திக்கும் உயிர் வேறேதும் இல்லை .
என்னை பொறுத்த வரையில் மரணம் பயப்பட வென்டிய விஷயம் இல்லை. மரணம் இயற்கையாக இருந்தால் அது உண்மையிலேயெ ஒரு அற்புதமான விஷயம் தான். துர்மரணம் உண்மையிலேயெ துயரப்பட வேண்டிய விஷயம். இறைவன் நம்மை படைத்த காரணம் அவன் தந்த வாழ்க்கையை மகிழ்சியாக வாழ்ந்து முடிப்பதற்கே. வாழ்ந்து முடித்த உடன் மரணம் எனும் வாயில் நம்மை அவன் இடத்தில் சேர்க்கும்.

மரணத்தை பற்றிய உங்கள் கவிதைகளில் என்னுடைய எண்ணங்களை மேலும் மெறுகேற்றுகின்றன என்று தான் சொல்வேன். தொடருங்கள் ஆசான்

சக்தி said...

அன்பின் புகாரி,

அருமையான கவிதை.


>> நீ மரணித்து தன் கரங்களில்
நிம்மதியாய் தவழும் நாளுக்காக
கடுந்தவத்தோடு காத்திருக்கிறாள்

உன் மரணத்தாய் >>

சிந்தனைத் தீயை ஆரம்பிக்கும் தத்துவார்த்தமான வரிகள்.

பாராட்டுக்கள்

அன்புடன்
சக்தி

துரை said...

///மண்ணில் நீ இருக்கப்போகும்
உன் கர்ப்ப நாட்கள்
எத்தனை என்ற கணக்கினை
நீ அறியமாட்டாய்////

உண்மை ஆசான்



///கருவின் நாட்களைச்
சிசு அறியாது ////

மிகவும் உண்மை ஆசான்

///தாய்தான் அறிவாள்////

இல்லை ஆசான் ! தவறு என்று நினைக்கிறேன் .
காலம் நிர்ன்யம் செய்து குழந்தையை வெளியேற்றுவது தாயின் கையில் இல்லை .
சிசு பிறந்து வெளிக்காற்றை சுவாசிக்கும் அந்தத் தருணம் யாராலும் நிச்சயிக்கப்பட்டதல்ல .அது தாய் நிர்ணயிக்கும் காலக் கெடுவும் அல்ல .கடவுள் நம்பிக்கை உண்டெனில் அது கடவுள்மட்டுமே அறிவார் எனக் கொள்ளலாம் :)


///நீ மரணித்து தன் கரங்களில்
நிம்மதியாய் தவழும் நாளுக்காக
கடுந்தவத்தோடு காத்திருக்கிறாள் ////


கடுந்தவம் - மிரட்டும் வார்த்தை !
நமது சாவைமட்டுமே எதிர்பார்த்து ஒருவர் காத்திருக்கிறார் என்பது...................!!!!

உன் மரணத்தாய்
இதில் தாய்மையின் கருனையை , மரணத்தின் கடுமைக்கு ஒப்பிட்டுள்ளது சிந்தனையைக் குழப்பிவிட்டது :(

Unknown said...

///இல்லை ஆசான் ! தவறு என்று நினைக்கிறேன் .
காலம் நிர்ன்யம் செய்து குழந்தையை வெளியேற்றுவது தாயின் கையில் இல்லை .
சிசு பிறந்து வெளிக்காற்றை சுவாசிக்கும் அந்தத் தருணம் யாராலும் நிச்சயிக்கப்பட்டதல்ல .அது தாய் நிர்ணயிக்கும் காலக் கெடுவும் அல்ல .கடவுள் நம்பிக்கை உண்டெனில் அது கடவுள்மட்டுமே அறிவார் எனக் கொள்ளலாம் :)////

மரணம் கடவுளின் கருணையல்லவா துரை


///கடுந்தவம் - மிரட்டும் வார்த்தை !
நமது சாவைமட்டுமே எதிர்பார்த்து ஒருவர் காத்திருக்கிறார் என்பது...................!!!! ////

கரு உருவானதுமே அது குழந்தையாய் ஆவதற்கு முன்பே மரணம் நிழலாகிவிடுகிறது என்பதுதானே உண்மை. அதைவிடக் கடுந்தவம் வேறேதும் உண்டா?

//உன் மரணத்தாய்
இதில் தாய்மையின் கருனையை , மரணத்தின் கடுமைக்கு ஒப்பிட்டுள்ளது சிந்தனையைக் குழப்பிவிட்டது :(/////

குழம்பவேண்டாம்.

மண்ணின் கருணை வாழ்க்கை
வாழ்க்கை துக்கமும் சந்தோசமும் கொண்டது
மரணத்தாயின் கருணை மரணம்
மரணம் பரிபூரண நிம்மதி கொண்டது

அன்புடன் புகாரி