மனித வாழ்க்கை என்பதோ குறைகுடம் - மரணம் உன்னைக் காதலிக்கிறது


மனித வாழ்க்கை
என்பதோர் குறைகுடம்
மரணமே அதில் நிறைகுடம்
நீ தழும்பித் தழும்பி
இன்று ஏன் அழுகிறாய்
மரணத்தாய் தன்
மார்நிறைத்த நிம்மதியோடும்
மடிநிறைத்த மகிழ்ச்சியோடும்
உனக்காகக் காத்திருக்கிறாள்
மரணம் இறப்பல்ல பிறப்பு
இறக்கும் வரைக்கும்
யாதொரு கவலையுமின்றி
இன்பம் தேடித் திரி

19 comments:

சாந்தி said...

நான் மரணத்தை விரும்பினால் இப்படி கவிதைகளை வாசிக்க முடியுமா?..

மரணமே உனை வெறுக்கிறேன்..

நிறை பிரசவமாக ( ஆயுள் நல்லபடியாக முடியும்) இருக்கணும்.. குறை பிரசவ
மரணத்தை ( குழந்தை நடுவயதினர், போரில்..)வெறுக்கிறேன்..

--
சாந்தி
கற்றது கைமண் அளவு. கல்லாதது கூகுள் அளவு.

Unknown said...

//மரணமே உனை வெறுக்கிறேன்..//

என்றால் மரணத்தின் மீது உங்களுக்கு பயம் என்று பொருள்

///நிறை பிரசவமாக ( ஆயுள் நல்லபடியாக முடியும்) இருக்கணும்.. குறை பிரசவ
மரணத்தை ( குழந்தை நடுவயதினர், போரில்..)வெறுக்கிறேன்.///

ஆமாம் எல்லோருக்கும் சுகப்பிரசவமே ஆகவேண்டும். நீங்கள் குறைப்பிரசவம் கருக்கலைப்பு இரண்டையும் நிச்சயம் வெறுக்கவே செய்யவேண்டும். மாற்றுக்கருத்தில்லை

அன்புடன் புகாரி

சீனா said...

மரணம் என்று வரும் என்பது தெரியாத வரை எக்கவலையும் இன்றி இன்பம் தேடித் திரியலாம் . தெரிந்து விட்டாலோ அவ்வளவு தான்

Unknown said...

மிகவும் உண்மை சீனா. மரணம் துயரமானதல்ல ஆனால் மனம் பற்றிய பயம் மிக மிகத் துயரமானது.

துரை said...

அன்பின் ஆசானே

மரணத்தை வரவேற்பதென்றால்.........?


தறிகெட்டு வரும் வாகனத்தை தவிர்க்காமல் நிற்பதா !
விரட்டும் வேங்கைக்கு வழிவிடாமல் மரிப்பதா !!

மரணமே சிறந்ததென்றால் அதுவே வரும் வரைக் காத்திருப்பானேன் ?
வீணாய்க் காலம் கடத்துவானேன் ??

Unknown said...

அன்பிற்கினிய துரை,

//மரணத்தை வரவேற்பதென்றால்.........?
தறிகெட்டு வரும் வாகனத்தை தவிர்க்காமல் நிற்பதா !
விரட்டும் வேங்கைக்கு வழிவிடாமல் மரிப்பதா !!//

இவை தற்கொலையல்லவா?


//மரணமே சிறந்ததென்றால் அதுவே வரும் வரைக் காத்திருப்பானேன் ?
வீணாய்க் காலம் கடத்துவானேன் ??//

மலர் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த மலர் என்பது மலரும் முன் ஒரு விதை மண்ணில் விழுகிறது. அது முளைக்கிறது இலை கிளை விடுகிறது மொட்டு வருகிறது பிறகுதான் மலர் மலர்கிறது.

மலர் வர ஏன் காத்திருக்க வேண்டும் என்று விதையையே வெட்டியெறிவதென்பது எப்படி தவறானதோ அப்படித்தான் இதுவும்.

மரணத்தைக் கண்டு பயப்படக்கூடாது. மரணம் பரிபூரண நிம்மதியைக் கொண்டது. அதன்பின் நரகமில்லை என்று உணரவேண்டும். அப்படி உணரும்போது மனதில் ஒரு அமைதி கிடைக்கும்.

ஜெயபாரதன் said...

மனித வாழ்க்கை என்பது
வளர் பிறை !
மனித வளர்ச்சி எழும்
முழுப் பிறை !
மனித மூப்பு என்பது
தேய் பிறை !
மனித இறப்பு என்பது
கரு நிலவு !


சி. ஜெயபாரதன்

Unknown said...

அன்பின் துரை,

இத் தொடரில் என் கவிதைகள் மேலும் வரட்டும். அனைத்தையும் வாசியுங்கள். பிற்கு உங்கள் எண்ணங்களைப் பார்க்கலாம்.

உங்களின் உயர்ந்த நோக்கம் தெளிவு. அதை தெளிவாகவே சொல்லியும் விட்டீர்கள். அதில் எனக்க்கு மாற்றுக்கருத்தே கிடையாது.

இதில் நான் புரியவைப்பதில்தான் தவறு தெரிகிறது. எனவே இனி வரும் என் கவிதைகள் அதைச் செய்கிறதா என்று பார்க்கலாம்

நன்றி துரை

அன்புடன் புகாரி

Unknown said...

மண்ணில் உள்ள வாழ்க்கையை தெளிவாகக் கூறியுள்ளீர்கள் ஜெயபாரதன்.

ஆனால் மனித மூப்பை தேய்பிறை என்று என்னால் ஏற்க முடியாது. உங்களின் மூப்பு உங்களைப் பௌர்ணமியைத் தேடிச்செல்லும் வளர்பிறையாகவே காட்டுகிறது எங்களுக்கு.

அமாவாசையும் ஓர் முழுநிலாதான். கறுப்பு முழுநிலா. மிகுந்த நிம்மதியுடையது!

ஜெயபாரதன் said...

புகாரி,

மனித வாழ்க்கை "குறைகுடம்" என்றால் மனித வாழ்வின் எச்சமான மரணம் "நிறைகுடம்" என்பது எனக்குப் புரியவில்லை.

குறைகுடத்திலிருந்து எப்படி நிறைகுடம் உண்டாகும் ?

மனிதப் பிறவியின் முடிவு இறப்பாயினும் அதன் குறிக்கோள் மரணமா ?


சி. ஜெயபாரதன்

Unknown said...

ஜெயபாரதன்,

//மனித வாழ்க்கை "குறைகுடம்" என்றால் மனித வாழ்வின் எச்சமான மரணம் "நிறைகுடம்" என்பது எனக்குப் புரியவில்லை.//

மரணம் மனிதவாழ்க்கையின் எச்சமல்ல.

நம் பிரபஞ்சத்தின் நியதிப்படி, எந்த ஒரு விசயத்துக்கும் தொடக்கும் என்றோ முடிவு என்றோ ஏதுமில்லை அல்லவா? அதாவது மிகச்சிறு பொருள் ஏதுமில்லை. மிகப்பெரும்பொருள் ஏதுமில்லை. மிகச் சிறு ஏதுமில்லை மிகப்பெரிய எண் ஏதுமில்லை. இந்த ஏதுமில்லை என்று சொல்வதைவிட நமக்குத் தெரியாது என்பது மிகவும் சரி அல்லவா?

ஆகவே பிறப்பு தொடக்கமும் அல்ல இறப்பு முடிவும் அல்ல என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா? அதுதானே பிரபஞ்சத்தின் நியதி. மாற்றங்களை அடைவதை நாம் முடிவு என்று கொள்ளமுடியாதல்லவா?


//குறைகுடத்திலிருந்து எப்படி நிறைகுடம் உண்டாகும் ? //

குறைகுடம் நிரம்பினால் நிறைகுடம் ஆகும்


//மனிதப் பிறவியின் முடிவு இறப்பாயினும் அதன் குறிக்கோள் மரணமா ?///



மரணம் மனிதனின் குறிக்கோள் அல்ல. அவன் அடையும் அடுத்த நிலை.

ஜெயபாரதன் said...

புகாரி,

மரணம் பிறப்பை நிரப்புவதில்லை. பிறப்பென்னும் குறைகுடத்தை உடைக்கும் சிறைக்குடமே மரணம்.

இப்போதுள்ள பிரபஞ்சத்துக்கு ஆதியும் அந்தமும் உள்ளது. பிரபஞ்சத்தில் அடங்கியுள்ள முழுச் சக்தியும் தேய்ந்து "கனல் இழப்பு நியதியால்" (Entropy Theory) பிரபஞ்சம் இறுதியில் ஒளியற்று இருள்மயமாய்ப் போகும். திரண்ட கருந்துளைகள் மீண்டும் ஓர் புதுப் பிரபஞ்சத்தை உண்டாக்கலாம்.

ஆதி அந்தம் இல்லாதது கடவுள் ஒன்றே. பிரபஞ்சத்துக்கும் காலத்துக்கும்
தோற்றமும் முடிவும் உள்ளன.

Unknown said...

ஜெயபாரதன்,


//மரணம் பிறப்பை நிரப்புவதில்லை. பிறப்பென்னும் குறைகுடத்தை உடைக்கும் சிறைக்குடமே மரணம்.///

மரணம் பிறப்பை நிரப்புவதாகச் சொல்லவில்லை. மரணம் நிம்மதியை நிரப்புகிறது.



//இப்போதுள்ள பிரபஞ்சத்துக்கு ஆதியும் அந்தமும் உள்ளது. பிரபஞ்சத்தில் அடங்கியுள்ள முழுச் சக்தியும் தேய்ந்து "கனல் இழப்பு நியதியால்" (Entropy Theory) பிரபஞ்சம் இறுதியில் ஒளியற்று இருள்மயமாய்ப் போகும். திரண்ட கருந்துளைகள் மீண்டும் ஓர் புதுப் பிரபஞ்சத்தை உண்டாக்கலாம். ///


நீங்கள் சொல்லும் அந்த பிரபஞ்சம் எதனுள் உள்ளது?


//ஆதி அந்தம் இல்லாதது கடவுள் ஒன்றே. பிரபஞ்சத்துக்கும் காலத்துக்கும்
தோற்றமும் முடிவும் உள்ளன. //

தோற்றமும் முடிவும் எதனுள் உள்ளது?

அன்புடன் புகாரி

ஜெயபாரதன் said...

பிரபஞ்சம் கால வெளியையும் ஒளிமந்தைகளையும் காணாத கருமைப் பிண்டம், கருந்துளை, கருஞ்சக்தியைக் கொண்டது. பிரமஞ்சம் என்பது எதற்குள் இருக்கும் ஒரு குமிழியில்லை.

தோற்றம் முடிவு என்பவை பிறப்பு இறப்பு போல் இயக்க நிகழ்ச்சிகள்.

Unknown said...

//பிரமஞ்சம் என்பது எதற்குள் இருக்கும் ஒரு குமிழியில்லை.

தோற்றம் முடிவு என்பவை பிறப்பு இறப்பு போல் இயக்க நிகழ்ச்சிகள். //

இதைத்தான் சொன்னேன். அதற்கு தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை. வெறும் மாற்றங்கள்தான் என்று. எனவே மிகபெரியதென்பதும் மிகச் சிரியதென்பதும் பிரபஞ்சமே!

அன்புடன் புகாரி

ஜெயபாரதன் said...

/// மரணம் பிறப்பை நிரப்புவதாகச் சொல்லவில்லை. மரணம் நிம்மதியை நிரப்புகிறது. ///

துயர்களுக்கு முடிவு காணும் மரணம் நிம்மதி என்பது சரியே. ஆனால் நிறைகுடம் என்பது பூரணம் அடைவது. நிம்மதி எப்படி மனித வாழ்வின் பூரணத்துவம் ஆகும் ?

நிம்மதி என்பது துயர்களின் அத்தமனம், முற்றுப் புள்ளி.


ஜெயபாரதன்.

Unknown said...

//துயர்களுக்கு முடிவு காணும் மரணம் நிம்மதி என்பது சரியே. ஆனால் நிறைகுடம் என்பது பூரணம் அடைவது. நிம்மதி எப்படி மனித வாழ்வின் பூரணத்துவம் ஆகும் ? //

நிம்மதி குறைந்த நிலையையே நான் குறைகுடம் என்று குறிப்பிட்டேன்.


மனித வாழ்க்கை
என்பதோர் குறைகுடம்
மரணமே அதில் நிறைகுடம்
நீ தழும்பித் தழும்பி
இன்று ஏன் அழுகிறாய்


இந்த அழுகை நிம்மதிகுறைந்த துக்கத்தால் வருவது!



//நிம்மதி என்பது துயர்களின் அத்தமனம், முற்றுப் புள்ளி.//

மிகவும் சரி. நிலைத்த நிம்மதி என்றால் மிகவும் பொருந்தும். அதுதான் பரிபூரண நிம்மதி. அதையே நிறைகுடம் என்கிறேன்

ஜெயபாரதன் said...

தற்கொலை செய்து மரணம் அடைந்தோனை நிம்மதி அடைந்த ஒரு மனித நிறைகுடமாகக் குறிப்பிடுவீர்களா ?


ஜெயபாரதன்

Unknown said...

முதலில் இந்த நிறைகுடம் என்பது மனிதனுக்கு இல்லை ஜெயபாரதன். அவனது நிம்மதிக்குத்தான். இப்போது உங்கள் கேள்விக்கான பதிலை உங்களிடமே விட்டுவிடுகிறேன்