காதலும் கொஞ்சம் கவிதைகளும்


(கனடா கீதவாணி வானொலி வழியே)

காற்றுச் சிறகேறி
காதுகளின் உயிர் தீண்டி
வேற்றுமொழி தேசத்தில்
ஊற்றுத் தமிழ் கூட்டி
ஒய்யாரமாய் உலாவரும்
உயர் கீத வாணியே
உயர்வாய் நீ நாளுமே


வணக்கம்

கீதவாணியும் தமிழ்நாடு கலாச்சார சங்கமும் இணைந்து வழங்கும் இந்த தமிழக நேரத்தில் என் கவிதைகளோடு உங்களைச் சந்திப்பதில் நான் பெருமிதமடைகிறேன்.

கனடாவில் தமிழனை உயர்த்தவும் தமிழ்ப் பண்பாட்டைக் காக்கவும் பல வழிகளில் தொண்டாற்றும் தமிழ்நாடு கலாச்சாரச் சங்கம் என்றென்றும் வாழ்க

இனி காதலும் கொஞ்சம் கவிதைகளும் என்ற தலைப்பில் உங்கள் உள்ள வனங்களில் மெல்லப் பூக்க வருகிறேன் உங்கள் செவி மொட்டுக்களை என்பால் கொஞ்சம் மலரச் செய்யுங்கள்

முதலில் காதலைப் பற்றிய ஒரு சிறு விளக்கமாய் ஒரு வரியில் எனக்குள் உருவான ஒரு கவிதை

காதல் எனப்படுவது யாதெனில்

இதயங்களின்
புனிதமான பகுதியிலிருந்து
நெகிழ்வான பொழுதுகளில்
இயல்பாகக் கழன்றுவிழும்
மிக மெல்லிய உயிர் இழைகளால்
சாட்சியங்களோ
சட்டதிட்டங்களோ இல்லாமல்
சுவாரசியமாய்ப் பின்னப்படும்
ஓர் உறுதியான உணர்வுவலை


உலகம் என்றோ துவங்கிவிட்டது துவங்கிய நாள் முதலாய் இந்த பூமி சுழல்கிறது அந்த நிலா தேய்கிறது வளர்கிறது. மலர்களெல்லாம் பூக்கின்றன் வண்டுகள் எல்லாம் பாடுகின்றன என்று எத்தனையோ விசயங்கள் தங்களின் இயல்பு மாறாமல் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அப்படித்தான் காதலும்.

காதல் அரும்பாத மனித மனம் இருக்கவே முடியாது. காதலை ஆராதிக்காத இதயங்கள் படைக்கப்படவே இல்லை

பிறக்கும், ஒவ்வொரு ஜீவனும் மீண்டும் ஒரு முறை பிறக்கிறது என்றால் அது காதலிக்கும்போது மட்டும்தான். நிஜமான காதல் தீண்டிய இதயம் மட்டுமே தான் மீண்டும் ஒரு முறை பிறந்துவிட்டதாய் அதிசயிக்கிறது.

காதலைப் பாடாத கவிஞர்கள் இல்லை. கம்பன் இளங்கோ பாரதி பாரதிதாசன் வள்ளுவன் காளிதாசன் கண்ணதாசன் வைரமுத்து என்று காதலில் மூழகி மூழ்கி கவிதை முத்துக்களைக் கோர்த்தெடுக்காத கவிஞர்கள் இல்லை

காதல் பலருக்கும் பலமுகம் காட்டும் நூதன கண்ணாடியாய் இருக்கிறது. ஆளுக்கொரு எண்ணமாய் காதலில் பவனிவரும் மானுடம் அதனாலேயே வாழ்கிறது காதலில்லையேல் இந்த மானுடம் இல்லை. ஜீவராசிகளே இல்லை.

உண்மையான அன்பே காதல் என்பார் சிலர். வெறும் இனக் கவவர்ச்சியே காதல் என்பார் சிலர். பசி துக்கம் போல காதலும் உயிர்களின் ஒரு தேவை என்பார் சிலர். இப்படியாய்க் காதலைப் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லச் சொல்ல அவற்றுள் ஏதோ ஒன்று குறைவதாகவே காதலிப்போர் சொல்வர். அதுதான் காதல். அனைத்து உணர்வுகளையும் ஒருசேரப் பெற்ற ஒரு முழுமை காதல். காதலுக்கு விளக்கம் தேடி அலைவதைவிட அதில் சுகித்துக் கிடப்பதே புத்திசாலித்தனன் எனலாம்.

உயிரினம் தோன்றிய நாள் முதலாய் ஆண்கள் பெண்களைப் பார்த்தும் பெண்கள் ஆண்களைப் பார்த்தும் அதிசயிக்கிறார்கள். ஏழு அதிசயங்கள் என்று எதை எதையோ காட்டினாலும் ஓர் ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் தரும் அதிசயமே முதலாவதாகிப் போய்விடுகிறது.

காதல் புனிதமானது. எத்தனயோ முட்கள் காதலில் விழுந்தபின் ரோஜாக்களாய் மாறிவிடுகின்றன. காதல் என்ற ரோஜா மல்ர்ந்துவிட்டால், அத்தனை முட்களும் உதிர்ந்துவிடுவது காதலின் பெருமைதானே? காதலுக்குத் தவிப்பும் துடிப்பும் தவிர்க்க இயலாதது. இதில், ஒருதலைக் காதலில் உள்ளாடும் சோகம் மிக மிகக் குடிமையானது. களத்தில் இறங்காமலேயே தோல்வியென்றால் எந்த இதயம் துடிக்காது. அது எத்துணைப் பரிதாபம் உதாரணத்திற்கு ஒரு கவிதை

ஏன்

நான் உன் விழி தீபத்தின்
விட்டில் பூச்சி

உன் சூரிய நெற்றியில்
விழும் பனித்துளி

உன் கன்னக்
கண்ணாடி மாளிகையில்
உணர்வு இழைகளால்
காதல் வலை பின்னிய சிலந்தி

என்னை எற்றுக் கொள்ளாதது
சத்தியமாய் உன் தவறில்லை

பின் ஏன் நானுந்தன்
அனல் முகத்தின் முன்
மெழுகாய்
இன்னமும் நிற்கின்றேன்


சிலருக்குக் காதல் சட்டென்று வந்துவிடுகிறது. அதைச் சொல்லும் தைரியமோ மிக மிகத் தாமதமாய் வருகிறது. காதல் தகிக்கும் போதெல்லாம், தன் காதலை தான் காதலிப்பவளிடம் சொல்லிவிடத் தீர்மானமெடுப்பான் நாளை நிச்சயம் சொல்லிவிடுவது என்று. ஆனால் நேரில் பார்த்ததும் சப்த நாடியும் ஒடுங்கி மௌனித்துவிடுவான். காலன் காத்திப்பானா. அவன் தன் பணியைச் செய்து கொண்டுதானே இருப்பான். விளைவு, பலநேரம் மனதைக் கண்ணாடிப் பாத்திரமாய் நொருங்கச் செய்துவிடுகிறது.

என் நண்பர் ஒருவருக்கு இக்கதி நிகழ்ந்த போது நான் ஒரு முழு இரவும் உறங்காமல் கிடந்தேன். காலையில் எனக்கோர் கவிதை மிச்சமானது. அதுதான் 'வார்த்தைகள் உயிர்த்த போது' என்ற இந்தக் கவிதை.

வார்த்தைகள் உயிர்த்தபோது

அன்பே
என் வீட்டுத்தோட்டத்தில்
புதியதாய் மலரும்
பூக்களையெல்லாம்
உன் பெயரிட்டே அழைத்தேன்.

உன் கூந்தல் தோகையினின்று
பறந்து வந்து ஒற்றை முடி இறகை
என் பாடப் புத்தகத்தில்
பத்திரப் படுத்தினேன்

உன் தாவணிச் சோலையில்
பொட்டுப் பொட்டாய்த் தெரியும்
பூக்களில்
ஒரே ஒரு சின்னப் பூவாகவேனும்
இருந்துவிட ஏங்கினேன்

உன் கைகளுக்கு
எண்ணெய் தடவுவதை விட
என்னைத் தடவுவதே அழகு என்று
சினிமா வசனங்களெழுதி
சந்தோசப் பட்டேன்

ஆனால் நீ உன்
கல்யாணப் பத்திரிகையுடன்
என் கனவுகளை மிதித்துக் கொண்டு
யதார்த்த வாசலில் வந்து
நண்பரே என்று நின்றபோதுதான்
தெரிந்துகொண்டேன்
நான் செய்திருக்க வேண்டியவை
இவைகளல்ல என்று


மனங்கள் இணைந்து, வெறும் விழிச்சுடர் தொட்டே முழுச் சுகம் காணும் காதலர்களும் உண்டு. எல்லாம் சரிவரப் பொருந்திய அற்புதக் காதலர்கள்கூட நம் சமுதாய, சம்பிரதாய சடங்குகளாலும் சாதி மதம் என்ற பேதமைகளாலும் வீரியம் இழக்கிறார்கள்.

பல நேரங்களில் காதல் வாழ காதலர்கள் வாழ்வதிலை. நெஞ்சில் குடியேறியக் காயங்களோடு காலமெல்லாம் கண்ணீரில் நீந்துகிறார்கள்.

கடிதமெழுதாத காதலர்கள் இருக்க மாட்டர்கள். ஆயிரம் தூது இருந்தாலும் அந்தக் காகிதத் தூதே கிளுகிளுப்பான தூது.

எழுதி எழுதி நிற்கும் காதலர்கள் என்றும் ஓய்வதே இல்லை. ஆனால் அவர்கள் தங்களின் கடைசி கடிதம் என்று தங்களின் கோழைத்தனத்தைக் காதலை எரித்து அதன் சாம்பலில் எழுதுவதே நம் சமூகத்தின் சாபக் கேடு. இங்கே

ஒரு காதலன் காதலிக்கு எழுதும் கடைசிக் கடிதம் ஒரு காதலி காதலனுக்கு எழுதும் கடைசிக் கடிதம் இருவேறு கவிதைகளாய் மலர்கின்றன. அல்ல அல்ல கண்ணீரில் நனனைகின்றன.

தீயில் கரையத்தானே

புனிதமானதெனினும்
கற்பூரப் பிறப்பெடுத்தால்
ஒரு நாள் தீயில் கரையத்தானே

உன்மீது நான் வளர்த்த
என் காதலைப்போல

கனவுப் பாதங்களின்
பிரிய அசைவுகளால்
நிலாத் தளங்களில்
புல்லரிக்கப் புல்லரிக்க
சஞ்சரிப்பது மட்டுமே
போதுமானதாகிவிடுமா

கறுத்த மேகங்களை
விரட்டுகின்ற
அடர்ந்த மூச்சுக்களையும்
அடைந்திருக்க வேண்டாமா

என் கையெலும்புகளோ
கோடிச் சுக்கல்களாய்
நொறுக்கப் பட்டவை

என் பிஞ்சுப் பாதங்களோ
உதவாக் கரிக்கட்டைகளாய்
கருக்கப் பட்டவை

என் ஆசைவிழிப் பயணங்களோ
செக்கு மாட்டு எல்லைகளாய்
சுருக்கப்பட்டவை

நின்று நோக்கி
நானும் வரக் காத்திருக்காமல்
ஒடுவதொன்றே குறிக்கோளாய்
ஒடும் கால வெள்ளத்தின்
உடன் செல்லுவதே
மூச்சுத் திணறலில் இருக்க
எதிர்த்து நீந்த
எனக்கேது உர உயிர்

அன்பே
மறந்துவிடு என்னை

நான் உன்னை மறக்காமல்
அமைதி புதைந்த
மயான மேடைகளில்
அழுது கொண்டிருந்தாலும்
என்னை நீ தொடரத் துடிக்காமல்
வெகு தூரமாய்ச் சென்று
மறந்துவிடு என்னை

*

காதலியின் கடிதம்

என்னுயிர்க் காதலனே
காதல் என்ற
பரவசப் பட்டாம்பூச்சியை
இந்தப் பெண்மைக்குள்
பறக்க விட்ட
என்னழகுக் கள்வனே

துளையில்லா என் இதயத்துள்
ஊரறியாத் தருணத்தில்
தேர்பூட்டி நீ மெல்ல
ஊர்ந்ததுதான் எப்படி

என் நாவினில் சுரப்பில்லை
நடனமாடிய விழிகளில் அசைவில்லை
உன் முகம் மட்டுமே காட்டும்
கண்ணாடிச் சில்லானேன்

நீ உதிர்க்க உதிர்க்க
உயிர்ப்போடு சிறகடிக்கும்
உன் வண்ணத்து மொழிகள்

நீ சிரிக்கச் சிரிக்க
சிலிர்ப்புக்குள் சிக்கவைக்கும்
உன் கன்னத்துக் குழிகள்

நீ அசைய அசைய
அங்குமிங்குமாய்த் தெறிக்கும்
பொற் கவிதை வரிகள்

அப்பப்பா
நான் எப்படிச் சொல்ல

நீ என்னை
அகலும் இமைப்பொழுதோ
இந்தச் சின்னஞ்சிறு மெல்லிதயம்
அகதியாய் அலறிக்கொண்டு
உயிரின் வேர்களில்
ஓங்கி ஓங்கி இடிக்க
மொத்தமாய்த் தகர்கின்றன
எனக்குள் அத்தனையும்


என் ஆருயிர்க் காதலனே

நீ என் உயிருக்குள்
உதடு வைத்து
ஒத்தி ஒத்தி எடுப்பதனால்தானோ
என்னைச் சுற்றி
புரியாத காற்றொலிகள்
ரிதம் மீட்டுகின்றன

அவை மல்லியைப்போல்
என் மனம்தொட்டு
மங்கா மணம்வீச நீ
எந்நாளும் என்னருகே
இருப்பாயா என்
காதலனே காதலனே காதலனே

என்று நான் உன்முன்
உருகி உருகி நின்றதெல்லாம்
சத்தியம் சத்தியம் சத்தியமே

ஆனால்
என் காதலனே

என் இதயத்தின்
ஒவ்வோர் அணுவையும்
ஆக்கிரமித்த உன்னையும்
உன் இதயத்தின்
ஒட்டுமொத்தத் துடிப்புகளுக்கும்
சொந்தக்காரியான என்னையும்

இன்று நானே
சிலுவையில் அறைந்துவிட்டேன்

காதல் என்ற தெய்வீகத்தையும்விட
இங்கே சமுதாயம் என்ற
சாத்தான் தானே வலிமையானவன்

அவன் சட்டங்களுக்குள்
சிக்கிக் கிடக்கும்
பிணக் குவியல்களில்
இன்று நானும் ஒருத்தி

முனகவும் அனுமதியில்லாத
இந்தப் பெண்மை
மௌனிப்பதையே துறவாய்ப் பூண்டது

இன்று எனக்குள்
பரிதவித்துத் துடிக்கும்
ஒவ்வோர் அணுவும் நீ
என்னை மறந்து எங்கேனும்
நிம்மதியாய் வாழமாட்டாயா என்றே
கணந்தவறாது தவித்துக்கொண்டிருக்கும்
நான் மண்ணுக்குள் புதைந்த பின்னும்


நன்றி வணக்கம்

8 comments:

பூங்குழலி said...

கவிதையாய் ...

ஆயிஷா said...

உங்கள் அலசல் நன்று. எனினும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் காதல் என்பது வெறும் மாயை என்பது புரியும். ஒரு வகை கவர்ச்சியே தவிர வேறு ஒன்றும் இல்லை. காதல் காதல் என மாய்ந்து போகும் கவிஞர்களை ஒரு சததுக்கும் பிரயோசனப் படாதவர்கள் என்றே சொல்லத் தோன்றும். இவர்களால் இந்தப் பூமிக்கு என்ன பயன் என்ற கேள்வி என் மனதில் அடிக்கடி எழும்புவதுண்டு ஆசான். மொத்த‌த்தில் காத‌லால் துன்ப‌மேய‌ன்றி இன்ப‌மில்லை. இத‌னால் யாருக்கும் இலாப‌முமில்லை.
அன்புட‌ன் ஆயிஷா

இளங்கோ said...

அற்புதம் புகாரி அண்ணா

அன்புடன் இளங்கோ.

பிரசாத் said...

காதல் என்பது மாயையா. நீங்கள் சொல்லும் மாயை காதல் இளமையில் பாலின
ஈர்ப்பால் உன்டானவையாக இருக்கும். இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு பொருளையும்
காதலியுங்கள். காதலின் அருமை புரியும். பாரதியின் தமிழ் காதல் அவனது
எழுத்து புலமையில் தெரியும். கன்னதாசனின் வாழ்க்கை மீதான காதல்
அர்த்தமுள்ள இந்துமதத்தை படித்து பார்த்தால் புரியும்.


காதலித்துப் பார்! அது
உனக்குள் ஒளிந்துள்ள
திறமையை உனக்கு
உணர்த்தும்
காதலித்துப் பார்! அது
உலகுக்கு உன்னை
உன்னத மனிதனாய்
காட்டும்
காதலித்துப் பார்! அது
உள்ளத்தை இணைத்து
உறவை வளர்க்க
செய்யும்
காதலித்துப் பார்! அது
மதங்களை அழித்து
மனித நேயத்தை
வளர்க்கும்

இளங்கோ said...

ஆஹா அற்புதம் பிரசாத்

வாழ்த்துக்கள்

அன்புடன் இளங்கோவன்

Unknown said...

இந்த பூமிக்கு எது பயன் ஆயிஷா?

துன்பம் என்பது காதலால் வருவதில்லை நல்ல காதலனனோ காதலியோ கிடைக்காததால் வருவது. நீங்கள் செய்த பிழையால் வருவது.

காதல் உங்களின் உயிரோட்டம். அது இல்லாமல் நீங்கள் யார்? யோசித்துப் பாருங்கள்!

அன்புடன் புகாரி

அன்புடன் மலிக்கா said...

காதலுக்குள் காவியம் படைக்கும் கவிஞர்களில் ஆசானே நீங்களும் ஒருவர்

உங்கள் காதல் கவிகளை படிக்கும்போது நிஜமாய் காதலை காதலிக்கத்தோன்றுகிறது...

Unknown said...

KATHALUKKU KAN ELLAI ENRU SELVARKAL ADHU UNTHA KAVITHAI PADITHAL THERIKIRATHU MOTTHAIL SUPAR