கண்ணதாசனின் திரையிசைப்பாடல்கள் இலக்கியத்தரம் வாய்ந்தவை. அவர் எழுதிய சிலேடைப் பாடல்கள் பல. அதில் ஒன்றுதான் இந்த எந்த ஊர் என்றவனே என்ற பாடல். தமிழ்நாட்டையே தன் பாடல்களால் உண்டு இல்லை என்று ஆக்கியவர் கண்ணதாசன். இவர் பாடலைக் கேட்டுவிட்டு காதலென்றால் என்னவென்றே தெரியாதவர்கள் காதலிக்கத் தொடங்கினர். இதுதான் உறவு இதுதான் வாழ்க்கை என்று உறுதி செய்துகொண்டார்கள். நிலையாமையின் தத்துவத்தில் நிலைபெற்றனர்.
இலக்கியத்தை அப்படியே ஒரு சொட்டும் சிந்தாமல் ரசித்துப் பருகி அதை சொற்பத் தமிழறிவே உள்ள சாதாரண தமிழர்களுக்கும் சுவையோடு பரிமாறுவதில் கண்ணதாசனுக்கு நிகர் இன்னொருவர் உண்டு. ஆச்சரியமாய் இருக்கிறதா? ஆம் அப்படி ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் முத்தையா. சிறுகூடல் பட்டியில் பிறந்தவர். அதிகம் பள்ளிப்படிப்பு இல்லாதவர். ஆனால் வாழ்க்கையின் சாரத்தை துளித் துளியாய் அனுபவித்தவர்.
அவரின் பொழுதுபோக்கு மதுவா மாதுவா என்று ஒரு பட்டிமன்றம் வைத்தால் இரு பக்கப் பேச்சாளர்களும் நிச்சயம் வெல்வர். முத்தையா விட்டு வைக்காதது எதுவுமில்லை. மது மாது மட்டுமல்ல போதைமருந்து பழக்கமும் உண்டு அவருக்கு. சூதாட்டம் அரசியல் கடவுளே இல்லை என்று பகுத்தறிவில் சிலநாள் பின் நெகிழ்ந்த ஆன்மீக மதப்பற்று என்று வாழ்வின் பின்நாள் என்று அனைத்தினுள்ளும் தன்னைக் கரைத்தார். அனுபவிக்க அனுபவிக்க அவர் ஞானியானார். ஞானியாக ஞானியாக தத்துவக் கவிதைகளும் தரமான பாடல்களுமாக எழுதிக் குவித்தார். சித்தரானார்.
அழுவதில் ஆனந்தம் கண்டவர் முத்தையா. நாளெல்லாம் அழுதார். அழுது அழுது இந்த உலகம் மனிதர்களுக்கு ஏன் சொர்க்கமாக மட்டுமே இல்லை என்று கோபம் கொண்டார். தன் வாழ்க்கை மண்ணில் காணும் சொர்க்கத்தை நோக்கியதாய் மட்டுமே இருக்க வேண்டும் என்று எதையெல்லாம் தனக்காகச் செய்யவேண்டுமோ அனைத்தையும் செய்தார். ஆனால் அவர் யாருக்கும் ஒரு தீங்கும் விளைவித்ததே இல்லை. எல்லோர் மனங்களிலும் அன்போடும் மதிப்போடும் வாழ்ந்தார்.
தன் தவறுகளை தவறுகள் என்று தைரியமாக ஒப்புக்கொண்டு உலகுக்கே சொன்ன ஒரே கவிஞர் முத்தையா மட்டும்தான். வாழ்வின் தத்துவங்களை மிக எளிமையாக எழுதும்போது முத்தையாவைப்போல் மிக மிக உயரத்தில் நின்ற இன்னொரு கவிஞன் கிடையவே கிடையாது. அந்தக் கவிஞர் வேறு யாருமல்ல கண்ணதாசனேதான். ஆமாம் கண்ணதாசனின் இயற்பெயர்தான் முத்தையா.
சுமார் எட்டுப் பத்திரிகைகள் நடத்தி தமிழர்களோடு இலக்கியம் பேசியவர். அவர் பிறந்ததென்னவோ இந்துமதம்தான். ஆனால் எம்மதமும் சம்மதம் என்று வாழ்ந்த நவீன சித்தர் அவர். ஏசு காவியம் பாடினார். இஸ்லாமிய கீதம் இசைத்தார். புத்தனைப் புகழ்ந்தார். அவர் எந்த நல்லதையும் போற்றாமல் விட்டதில்லை.
சாகித்ய அகாதமி அவரைத் தேடிவந்து கௌரவித்ததில் ஏதும் ஆச்சரியம் இருக்கமுடியுமா சொல்லுங்கள். அத்திக்காய் காய் காய், பார்த்தேன் ரசித்தேன் பக்கம் வரத் துடித்தேன் உனைத்தேன் என நான் நினைத்தேன் என்பதுபோல கண்ணதாசன் எழுதிய இலக்கியத் தரம் மிக்க சிலேடைப் பாடல்கள் அதிகம். அதில் ஊர் ஊர் என்று வர்ணித்தே அவர் ஒரு மனிதனின் முழு வாழ்க்கையையும் பாடலாய்த் தந்தது அற்புதம்.
எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா!
உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்!
கண்ணூரில் தவழ்ந்திருந்தேன்
கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன்
காளையூர் வந்துவிட்டேன்!
வேலூரைப் பார்த்து விட்டேன்
விழியூரில் கலந்து விட்டேன்
பாலூறும் பருவமென்னும்
பட்டினத்தில் குடிபுகுந்தேன்!
காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்!
பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்று கொண்டாள்!
கீழுரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா
மேலூரு போவதற்கும்
வேளை வரவில்லையடா!
இதுதான் முழுப்பாடலும் இனி ஒவ்வொரு வரியாகப் பார்ப்போம்.
*
எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரைச் சொல்லவா
அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா
அது ஓர் அழகான கிராமத்தின் மரங்கள் வரவேற்கும் வீதி. நம் கதாநாயகன் இளமை அழகு நிரம்பித் ததும்பி வழியும் ஒரு வாலிபன். துக்கத்தைத் தன் முகத்தில் மேட்டூர் அணை வெள்ளமாய்த் தேக்கிவைத்து மனம்போன போக்கில் வெறுமையின் தாலாட்டுக்கு ஏற்ப மெல்ல நடந்துவருகிறான்.
அவன் யாரென்று அறியாத அந்த ஊர்வாசி ஒருவன் அவனிடம் விசாரிக்கிறான். இன்றைய நகரம் போலல்ல அன்றைய கிராம வாழ்க்கை. ஓர் ஊரில் ஒருவன் புதியதாய் வந்தால் அந்த ஊர் சிறுவர்களுக்கும் தெரிந்துவிடும் இவன் புதியவனென்று. தம்பி நீ எந்த ஊருப்பா என்று சட்டென்று வினவும் வெகுளித்தனமும் கொண்டவர்கள் அவர்கள். சில நேரம் அதில் விவகாரமும் இருக்கும். அது அந்தக் கிராமத்துக்கான பாதுகாப்பு.
அந்தக் கேள்விக்குப் பதிலாக, நம் கதாநாயகன் சொல்கிறான் இப்படி. என்னை எந்த ஊர் என்றவனே, நான் இருந்த ஊரைச் சொல்லவா? நான் இருந்த ஊர் எது? என் தாயின் கருவறை. ஆம் நான் முதன் முதலில் இந்த உலகில் வந்து இருந்த ஊர் என் தாயின் கருவறைதான். அங்கேதான் நான் பத்துமாதங்கள் வளர்ந்தேன் வாழ்ந்தேன். அதற்கு வாடகை நான் தரவில்லை. என்றால் அந்த ஊர் எனக்குச் சொந்த ஊரா?
அது என் சொந்தம் சொந்தம் என்றுதான் பிதற்றுகிறேன் என்றாலும் அந்த ஊரில் அதன் பின் வந்து குடியேறியவர்கள் இருக்கிறார்கள். பின் அவர்களுக்கும் அது சொந்தமாகி விடவில்லை. அந்த ஊர் எப்படி சொந்த ஊர் ஆகும்? நான் அங்கே வாடகை தராமல் குடிஇருந்தேன் அவ்வளவுதான். அதுதான் உண்மை. ஆனால் அந்த ஊரை நீயும் அறிவாய். ஏனெனில் நீகூட அந்த ஊரில்தானே பத்துமாதம் தங்கி இருந்தாய் என்கிறான்.
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா?
*
உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்!
அடடா இங்கே கண்ணதாசன் தன் பாடலை அறிவியல் தளத்துக்கு அப்படியே எடுத்துச் செல்கிறார் பாருங்கள். உடலூரில் வாழ்ந்திருந்தேன் என்கிறான் அந்தப் புதியவன். உடலூரில் வாழ்ந்திருந்தேன் என்றால் என்ன பொருள்? ஆணிடம் விந்தாகவும் பெண்ணிடம் கருமுட்டையாகவும் நான் ஆரம்பத்தில் வாழ்ந்திருந்தேன் என்கிறான்.
அதோடு நின்றானா? உறவூரில் மிதந்திருந்தேன் என்கிறான் அடுத்த வரியில். இங்கேதான் காதல் வந்து தன் விளையாட்டின் முக்கியமான காரியத்தைச் செய்கிறது. ஆணின் உடலிலும் பெண்ணின் உடலிலும் தனித்தனியாகத்தான் இருந்தேன், ஆனால் காதல் என்ற உறவினால் நான் மிதக்கத் தொடங்கினேன். அப்படியே மிதந்து மிதந்து கருவூரில் குடி புகுந்தேன் என்கிறான். அதாவது தாயின் கருவறையில் நான் கருவாக உருவாகிவிட்டேன் என்கிறான். ஊர் என்ற சொல்லை வைத்து கண்ணதாசன் ஆடும் இந்த விளையாட்டு
சுவாரசியமானதல்லவா?
சரி உடல் என்ற ஊரிலிருந்து புறப்பட்டு உறவு என்ற ஊரில் மிதந்து கரு என்ற ஊரும் வந்தாகிவிட்டது. இனி அடுத்தது எந்த ஊர்? கருவூரிலிருந்து மண்ணூரில் விழுந்துவிட்டேன் என்கிறான் அந்த வாலிபன். கரு என்பது பத்துமாதம் வளர்ந்து பின் இந்த மண்ணில் அதாவது இந்த உலகில் வந்து குழந்தையாய்ப்
பிறந்துவிடுகிறதல்லவா. அதைத்தான் சொல்கிறான் அவன். எத்தனை இலக்கிய முத்துக்கள் இந்த கண்ணதாசன் சிலேடைப் பாடல்களில்?
ஓ அப்படியா மிகுந்த சுவாரசியமாய் இருக்கிறதே உன் கதை. சபாஷ்! சரி சரி மீதக் கதையையும் சொல். இன்னும் எத்தனை ஊர்களில் சுற்றித் திருந்தாய் என்கிறான் அந்த ஊர்க்காரன் கதை கேட்கும் ஆவலில்.
கண்ணூரில் தவழ்ந்திருந்தேன்
கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன்
காளையூர் வந்துவிட்டேன்!
வயிற்றுக்குள் வைத்துக் கனவுக்குள் மிதந்தவள் பிள்ளையாய்ப் பெற்றெடுத்ததும் என் தாய் என்னைக் கண்ணுக்குக் கண்ணாக வைத்திருந்தாள் என்பதை எப்படி அழகாகச் சொல்கிறான் அவன். கண்ணூரில் தவழ்ந்திருந்தேன் - தன் தாயின் கண்ணுக்குள்ளேயே மணியைப்போல அவன் தவழ்ந்த நாட்களைவிட இனிமையான நாட்கள் வேறேதும் இருக்க முடியுமா?
அந்தத் தாயின் கையணைவில் அவன் வளர்கிறான். கையூரில் வளர்ந்திருந்தேன். மக்களே இது மீளாது மக்களே. இந்த உலக வாழ்வின் உண்மையான இன்பம் இதுதான். ஒரு தாயின் கைகளுக்குள் இருந்து அவளையே உலகமாய்க் கொண்டு வளர்வது. அவள் கீழே இறக்கிவிட்டதும் நம் இன்பங்களெல்லாம் எங்கோ ஓடிவிடுகின்றன. கங்காரு பை இருப்பதால் தன் குட்டியைச் சுமக்கிறது. ஆனால் நம் தமிழ்ப்பெண்கள் கை விட்டுக் கீழே இறக்கிவிடும் மனம் இல்லாமல் பாசத்தோடு கொஞ்சிக் கொஞ்சி சுமக்கிறார்கள்.
பிறகென்ன குழந்தை வளர்ந்து நடக்கத் தொடங்குகிறது. காலூரில் நடந்து வந்தேன் என்கிறான் இதை. அதாவது வெறுமனே காற்றை உதைத்துக்கொண்டிருந்த கால்கள் இப்போது நடக்கும் நிலைக்கு வளர்ந்து விடுகின்றன. அப்படியே நடந்து நடந்து வளர்ந்து வளர்ந்து காளையாக ஆகிவிடுகிறான். அதாவது வாலிபனாக ஆகிவிடுகிறான். அதைத்தான் கவிஞர் காளையூர் வந்துவிட்டேன் என்று இலக்கிய நயத்தோடும் ஊர் என்ற சிலேடையை விடாமலும் சொல்கிறார்.
ம்ம்ம்... சரி அப்புறம்?
*
வேலூரைப் பார்த்து விட்டேன்
விழியூரில் கலந்து விட்டேன்
பாலூறும் பருவமென்னும்
பட்டினத்தில் குடிபுகுந்தேன்!
வாலிபன் என்று ஆகிவிட்டால் நீங்கள் வலை விரிக்கப்பட்டிருக்கிறீர்கள். யாருக்கான வலை எப்படியான வலை என்பதெல்லாம் வலை விரித்தவர்களுக்கேகூட தெரிவதில்லை. ஊரெல்லாம் பெண்கள். பெண்கள் எல்லோரும் வெறும் கண்களோடு மட்டுமே அலைவதுபோல் தெரியும்.
கால்கள் எங்கே கைகள் எங்கே உடம்புதான் எங்கே என்று தெரியாது அவர்களுக்கு. வள்ளுவன் சொல்லும் உயிர் தின்னும் கண்கள் மட்டும் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கும். அதில் அகப்படாமல் தப்பிக்கும் வாலிபனுக்கு வாலிபன் என்று பெயரில்லை.
பெண்களைப் பூக்கள் என்பார்கள். ஆண்களைத்தான் வண்டுகள் என்பார்கள். ஆனால் இந்தக் கண்களைப் பார்த்தால் அந்த நியதி சற்றே மாறிப்போகும். கண்கள் இரண்டும் வண்டுகளாய் கனவுகளிலும் ரீங்கரித்துச் சுற்றிச் சுற்றி வரும். அவள் ஒருமுறைதான் பார்த்திருப்பாள் ஆனால் அது ஓராயிரம் முறை பார்த்ததைப்போல வாலிபன் கிறங்கிப்போவான். தூக்கம் கெட்டு பொடி விழுங்கிய ஓணானைப்போல ஆவான்.
பெண்ணின் ஒவ்வொரு கண்ணும் கூர்மையான வேலைப் போல் வந்து தாக்கும். வாலிபனின் சிந்தனையைத் தகர்க்கும். ஆமாம் வாலிபன் என்று ஆகிவிட்டாலே இந்தப் பெண்களிடமிருந்து தப்பிப்பது என்பது ஓடுமீன் ஓட உறுமீனுக்காகக் காத்திருந்த கொக்கிடமிருந்து தப்பிப்பதைவிட கடினமானது.
அவர்கள் வேல் பாய்ச்சும் விழிகளை எதிர்கொண்டே தீரவேண்டும். இப்ப்படியாய் பல வேல் பாய்ச்சும் விழியுடைய பெண்களைக் கண்டபின் ஒரு பெண்ணிடம் மட்டும் மனம் அப்படியே ஒட்டிக்கொண்டுவிடுவது ஆச்சரியம்தான். அதுதான் காதல்.
அந்தக் காதலில் அப்படியே தன்னை மறந்து கலந்துவிடுகிறான் அவன். அதைத்தான் வேலூரைப் பார்த்துவிட்டேன் விழியூரில் கலந்துவிட்டேன் என்கிறான். பல பெண்களின் வேல் விழிகளைக் கண்டு தித்திப்பாய்க் காயப்பட்டு திசைதெரியாமல் அலைந்தவன் ஒருத்தியின் விழியில் மட்டும் ஒன்றிக் கலந்துவிட்டானாம்.
வேலூரைப் பார்த்துவிட்டு காதல் கன்னியின் விழியூரில் கலந்து சிக்கிக்கொண்டவன் அடுத்த கட்டமாக, பருவத்தின் மேன்மையை உணர்கிறான். அது படுத்தும் பாட்டில் வாழ்வைக் காண்கிறான். அது பாலூறுவதாக இனிமையாக இருக்கிறது.
பருவங்களிலெல்லாம் தாண்டிவரமுடியாமல் நம்மைச் சிக்க வைக்கும் பருவம் வாலிபப்பருவம்தானே? அந்தப் பருவத்தில் பசியில்லை உறக்கமில்லை. ஆனால் அந்தப் பருவம்தான் மிகவும் பிடித்திருக்கிறது.
இருக்காதா பின்னே காதலி கிடைத்துவிட்டால் இந்த உலகில் வேறென்ன வேண்டும்? பால் மட்டுமா ஊறும் உயிரும் ஊர்ந்து வேறு உலகத்தில் சுற்றித் திருயுமே. அப்படிப் பாலூரும் பருவம் தன் தாய் மடியில் பெற்ற இன்பத்தை மீண்டும் தருவதாக அமைவதுபோல சுகமாக இருக்கும்.
அப்படியே அதில் குடிபுகுந்து நிரந்தரம் ஆகிவிடுகிறான் வாலிபன். அதைவிட்டு விலகவோ அதை வெறுக்கவோ அவனால் அதன்பின் எப்போதும் இயலுவதே இல்லை. அதுவே அவனின் நிரந்திரப் பட்டினமாய் ஆகிவிடுகிறது.
இங்கே கண்ணதாசன் ஏன் பட்டினம் என்கிறார் இந்தப் பருவத்தை என்று நாம் கவனிக்க வேண்டும். பட்டினம் என்பது கிராமத்துக்காரர்களின் கனவு. ஒரு வாழ்க்கைத் தரத்துக்கான மேன்மை நிலை. காதலி கிடைத்து அவளுடன் பருவத்தைப் பாலூறக் காண்பதைவிட மேன்மை வேறேது. உலகின் மிக உயர்ந்த நகரத்தில் குடிபுகுவதைப்போல வாலிபன் மகிழ்கிறான்.
இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இதுவரை கதாநாயகன் பல ஊர்களில் குடியிருந்தாலும் அதையெல்லாம் நிரந்தரம் என்று அவன் நினைக்கவில்லை சொல்லவில்லை. இந்தக் காதலியோடு காதலில் கவிழ்ந்து உலகையையே வெற்றிகண்ட இந்த ஊரைத்தான் நிரந்தரமாக தான் தங்கும் இடமாக கூறுகிறான் கதாநாயகன். அதனாலேயே அதைப் பட்டினம் என்கிறான்.
”ஓ... அப்புறம்... அப்புறம்.... சொல்லு... சொல்லு...” என்று அவசரப்படுத்துகிறான் அந்தக் கிராமத்தான் கதாநாயகனிடம்.
*
காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்!
பாலூறும் பருவம் என்னும் பட்டினத்தில் குடியேறி நிரந்தரம் என்று அந்த வாலிபன் நினைத்ததெல்லாம் சரிதான். ஆனால்... நிலைமை அப்படியே இருந்துவிடுவதில்லை
என்பதுதானே பலரும் கண்ட கசப்பான உண்மை. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை என்று கண்ணதாசனே அதற்கும் ஒரு பாடல் எழுதி இருக்கிறார்.
இந்தப் பெண்களை என்னவென்று சொல்வதென்றே தெரியவில்லை. காதல் கனியும்முன் சுத்திச்சுத்தி வந்துவிட்டு காதல் கனிந்தபின் சே... இவ்வளவுதானா என்பதுபோல
விலகிவிடுவார்களோ? அவர்களுக்கே வெளிச்சம். அந்த மர்மம் எவருக்கும் விளங்குவதில்லை. எவருக்கும் என்றால் ஆண்களுக்கு மட்டுமல்ல அந்தப் பெண்களுக்கே விளங்குவதில்லை. இது ஒரு வகையான வேடிக்கை இல்லையா?
தன் காதலூரை (காதல் ஊரை) சுற்றிக் காட்டி குடியமர்த்திக்கொண்ட காதலி சரி போதும் போதும் போய்த் தொலை என்று அவனை திக்குத் தெரியாத காட்டூரில் விட்டுவிட்டு
அவனை மறந்து போயே போய் விடுகிறாள். பாவம் வாலிபன். என்ன செய்வான்? எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்று கண்ணீரோடு
பாடவேண்டியதுதான். வேறென்ன செய்யமுடியும்?
சுகமான பாலூறும் பட்டினத்திலிருந்து வேதனை முட்களே நிரம்பியிருக்கும் காட்டூரில் விடப்படுகிறான் பாடலின் கதாநாயகன். காட்டூர் என்றாலே அங்கே எந்த அமைதியோ நிம்மதியோ கிடையாது என்பதைச் சொல்லித் தெரியவேண்டிய அவசியமே இல்லை. அங்கே வீடில்லை உறவில்லை எந்த சுகமும் இல்லை எல்லாமே காணாமல் போன விச முட்களடர்ந்த கொடிய காடு அது.
காதல் தோல்வி தருகின்றன வலிக்கு நிகரான வலி இந்த உலகில் கிடையவே கிடையாது என்று அடித்துச் சொல்லலாம். அதனால்தான் பாலைத்திணையில் பாடல்கள் அதிகம். இன்றைய திரைப்படங்களிலும் தொட்டதெற்கெல்லாம் ”போகாதே போகாதே நீ இருந்தால் நானிருப்பேன் நீ பிரிந்தால் நான் இறப்பேன்” என்று அழுவாச்சி பாடல்களே அதிகம்.
கன்னியூரில் அதாவது அந்தக் கன்னிக்குள், கன்னியின் மனதுக்குள் அழகாகக் குடியேறி இருந்தான் வாலிபன். புதிதாய்ப் பிறந்தவனைப்போல அவன் ஆனான். ஆனால் அந்தக் கன்னியோ அவனை சுத்தமாய் மறந்தவுடன், மறந்து அவனை விட்டு மறைந்தவுடன் அவன் துக்கம், சோகம், கண்ணிர், அழுகை என்ற மாபெரும் உப்புக் கடலூரில் விழுந்துவிடுகிறான். அதாவது கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகக் கொட்டிக் கொட்டி அப்படியே கடலாகி. அந்த கடலுக்குள் அவனே விழுந்துவிடுகிறான்.
அப்புறம்?
*
பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்று கொண்டாள்!
பிறகென்ன? காதல் தோல்வி என்ற ஒன்று போதாதா கனவுகளையே வாழ்க்கையாய்க் கொண்ட, எந்தக் கபடமும் அறியாத இளைஞனுக்கு. நொறுங்கிச் சிதறிவிடமாட்டானா
அவளையே பிரதிபளித்த அவனது கண்ணாடி இதயம் உடைந்து தூள் தூளாக.
வாழ்வே படு ஆழமான துக்கங்கள் மட்டுமே நிறைந்த பள்ளமாகிவிடுகிறது அவனுக்கு. அந்த அதலபாதாள பள்ளத்தில் இவனைத் தள்ளிவிட்டுவிட்டு கண்ணீர் கடலுக்குள் இவனை மூழ்கடித்துவிட்டுவிட்டு அவள் மட்டும் எந்தக் கவலையோ வருத்தமோ இல்லாமல் முன்பை விட மகிழ்ச்சியாய் உயர்ந்த இடத்தில் ஏறிக்கொண்டு வாழ்வைச் சுவைக்கிறாள் என்று புலம்புகின்றான்.
கொடும் துயரம் என்ற பள்ளத்தூரில் இவனைத் பரிதவிக்கவிட்டுவிட்டு உயர் வாழ்வு என்ற மேட்டூரின் கீழே கூட இல்லை மேலேறி (மேலே ஏறி) நின்று கொள்கிறாள் அவள்.
காதல் தோல்வி என்பது பெண்ணுக்கு மட்டும் கிடையாதோ என்று அவன் கலங்குகிறான் துடிக்கிறான் துவள்கிறான். காதல் என்பது ஆணின் ஆயுளை அழிக்கும்
எமனாகத்தான் இருக்கிறது என்று் உறுதியாக நம்புகின்றான்.
இவன் வாழ்வை அழித்துவிட்டு அவள் மட்டும் எந்த மனத்துயரும் இல்லாமல் புதிய வாழ்வைத் தேடிக்கொண்டு மேட்டீரின் மேலேறி நின்று கொண்டால் இவன் என்னதான்
செய்வான்? அவள் இவனை மறந்ததுபோலவே இவன் அவளை மறந்து விலகி புதிய வாழ்வைத் தேடுவதுதானே சரி. பாடலின் நாயகன் என்ன செய்யப் போகிறான்?
கீழுரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா
மேலூரு போவதற்கும்
வேளை வரவில்லையடா!
அவள் எப்படியோ எனக்குத் தெரியாது. ஆனால் என் காதல் புனிதமானது. இந்த உலக வாழ்க்கை என்பது துக்கங்களே நிறம்பிய கீழ்மையானதுதான். அதில் உயர்வானதே
காதல் என்ற புனிதம் ஒன்றுமட்டும்தான்.
இந்தக் கீழூரில் வாழ்வதற்கு கிளியைப் போல மொழி பேசும் என் காதலி இல்லை. அவள் இல்லாமல் எனக்கு எதுவுமே இல்லை. எனவே நான் என் மரணத்திற்காகக்
காத்திருக்கிறேன். மரணம் என்ற அந்த மேலூருக்குப் போவதற்கு இன்னும் எனக்கு வேளை வரவில்லையே என்றுதான் நான் இப்படி ஊர் ஊராய்
அலைந்துகொண்டிருக்கிறேன். அங்கே போய்ச் சேரத்தான் நடந்துகொண்டே இருக்கிறேன் என்று தன் கதையை முடிக்கிறான் காதலிலே தோல்வியுற்ற அந்த வாலியன்.
இந்தச் சூழலை எத்தனை அற்புதமாய் தன் சிலேடைப் பாடல் மூலம் பாடுகிறார் கண்ணதாசன் பார்த்தீர்களா? ஆச்சரியமாய் இல்லை? எங்கே எல்லோரும் கண்ணதாசனுக்கு ஒரு பாராட்டு மடல் எழுதுங்கள் பார்க்கலாம்.
- கவிஞர் புகாரி
1 comment:
ஓ.....இது தான் அர்த்தமா? அர்த்தம் தெரியாமலே எத்தனை பாடல்களை ரசிக்காமல் விட்டுவிட்டேன்.
Post a Comment