மல்லிகை வாடிடுமே என்று
மனைவியைத் தொடாதிருக்கலாமா
மனைவி வாடிடுவாளேயென்று
மல்லிகையைத் தொடாதிருக்கலாமா
என்று தவித்த கனத்த பொழுதுகள்
எனக்கு ஏராளம் ஏராளம்
நிறைமாத நெடுங் கூந்தலாய்
தள்ளாடும் மல்லிகையோடு வரும்போது
எனக்கென் மனைவி தெரிவதே இல்லை
வெள்ளை வெள்ளை விழிகளை
வாசம் உதிரச் சிமிட்டும்
மல்லியொளியழகே தெள்ளெனத் தெரியும்
வடிவெழிற் நிலவுப் பெண்களே
நீங்கள் மல்லிகையை அள்ளிச்சூடி
இலைப் படகுகளாய்
மெல்ல மிதந்து வரும்போதும்
கடையிமை முடியளவும் நானுங்களைக்
கண்ணுயர்த்திக் காண்பதே இல்லை
என் மல்லிகையின் அழகைத்தான்
மந்தகாச உதிர்வோடு
உள்ளுறிஞ்சி உணர்வெழ நிற்பேன்
முத்தமிழ் வளர்த்த மதுரையில் மலரும்
மயக்கு மல்லிவாசம்
எனக்கு இங்கிருந்தே வீசுகிறதென்றால்
நீங்கள் தாராளமாய் நம்பலாம்
எனக்கும் மல்லிகைக்கும் இருக்கும் பந்தம்
அந்த மல்லிகைக்கே
தெரியுமோ தெரியாதோ வென்ற
ஐயமுண்டெனக்கு
வாடிய மலரையும்
கீழெறிந்ததில்லை நான்
சருகான நிலையிலும்
இறுகணைத்தேதான் உருகுவேன்
எனக்குக்
காதலியுண்டா இல்லையா
என்ற சில்லறைக் கேள்வியை
அப்படியே கிள்ளிப் பின்வையுங்கள்
என் நாசிக்கு மட்டுமே தனியே ஒரு
தொடர் ஜென்மக் காதலியுண்டு
அதை வந்து கேளுங்கள்
அவள்தான் என் மல்லிகை
கண்டு நுகர்ந்த நாள்முதலாய்
அவள் வாசமடி மட்டுமே கிடந்தும்
துளியின் துளியளவும்
எனக்கு அலுங்கவே இல்லை
மல்லிகையை அள்ளியென்
மார்மீது மழையாய்ப் பொழிந்துவிட்டு
என் சொத்துக்கள் மொத்தத்தையும்
எவரும் சட்டென எழுதி
எடுத்துச் சென்றுவிடலாம்
மல்லிகையை அவிழ்த்து
என் மீசைமேல் கிடத்திவிட்டு
அந்த உயிர் மயக்கப் பொழுதில்
என் மூச்சையும் நிறுத்திப் போட்டுவிடலாம்
மல்லிகை எனக்கொரு
மலரல்ல மலரல்ல
வாசமாய் என் தேகத்திற்கு
வெளியில் உலவும்
என் உயிர்தான் உயிர்தான்
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
6 comments:
மல்லிகை எனக்கொரு
மலரல்ல மலரல்ல
வாசமாய் என் தேகத்திற்கு
வெளியில் உலவும்
என் உயிர்தான் உயிர்தான்
அருமை அருமை கவிகருவின் உச்சக்கட்டம்
வாழ்த்துக்கள்
மல்லிகை மணம் போலவே உங்கள் கவிதையும்....
ரொம்ப அழகா இருக்கு... மீண்டும் சொல்றேன்.. என்னுடைய பல விருப்பங்கள் உங்கள் கவிதையாய் வெளிப்படுகிறது.... நன்றி ஆசான்...
--
பிரார்தனைகளுடன்...
M.I.B
Visit : http://mohamedismailbuhari.googlepages.com
கடையிமை முடியளவும் நானுங்களைக்
கண்ணுயர்த்திக் காண்பதே இல்லை
கவிதைக்கு பொய்யழகா ?? :)
வாடிய மலரையும்
கீழெறிந்ததில்லை நான்
சருகான நிலையிலும்
இறுகணைத்தேதான் உருகுவேன்
என்னிடம் இன்றும் சில மல்லிகை சருகுகள் உண்டு... :)
எனக்குக்
காதலியுண்டா இல்லையா
என்ற சில்லறைக் கேள்வியை
அப்படியே கிள்ளிப் பின்வையுங்கள்
என் நாசிக்கு மட்டுமே தனியே ஒரு
தொடர் ஜென்மக் காதலியுண்டு
அதை வந்து கேளுங்கள்
அவள்தான் என் மல்லிகை
கண்டு நுகர்ந்த நாள்முதலாய்
அவள் வாசமடி மட்டுமே கிடந்தும்
துளியின் துளியளவும்
எனக்கு அலுங்கவே இல்லை
அழகு ஆசான்
மல்லிகையை அள்ளியென்
மார்மீது மழையாய்ப் பொழிந்துவிட்டு
என் சொத்துக்கள் மொத்தத்தையும்
எவரும் சட்டென எழுதி
எடுத்துச் சென்றுவிடலாம்
ஆசான் பத்திரம் .. மதுரையில் நீங்க பார்த்து தான் இருக்க வேண்டும் :)
நிறைமாத நெடுங் கூந்தலாய்
தள்ளாடும் மல்லிகையோடு வரும்போது
எனக்கென் மனைவி தெரிவதே இல்லை
வெள்ளை வெள்ளை விழிகளை
வாசம் உதிரச் சிமிட்டும்
மல்லியொளியழகே தெள்ளெனத் தெரியும்
அற்புதமான வர்ணனை
மல்லிகை எனக்கொரு
மலரல்ல மலரல்ல
வாசமாய் என் தேகத்திற்கு
வெளியில் உலவும்
என் உயிர்தான் உயிர்தான்
நிஜம். நல்ல கவிதை ஆசான். கண்டு கொண்டேன் உங்க காதலி யாரென்று. நீங்கள் மல்லிகையின் காதலனா?
அன்புடன் ஆயிஷா
மீண்டும் சொல்றேன்.. என்னுடைய பல விருப்பங்கள் உங்கள் கவிதையாய் வெளிப்படுகிறது.... நன்றி ஆசான்...
அதே... எனக்கும் இந்த நினைப்பு பல தடவைகள் ஏற்பட்டுள்ளது I.B.M.
அன்புடன் ஆயிஷா
Post a Comment