பிறவியிலேயே முழுப் பார்வையும் அற்றவருக்கு கனவு வருமா?
வரும். கட்டாயம் வரும்.
எப்படி?
பார்வையற்றவருக்கும் அம்மா உண்டு அப்பா உண்டு உறவுகள் உண்டு. அவனுக்கு நாய் தெரியும், பூனை தெரியும், இட்லி தெரியும், வடை தெரியும். சரிதானே? மாற்றுக்கருத்து உண்டா?
எப்படித் தெரியும்?
பார்த்தானா? இல்லை. அறிகிறான். எப்படி? ஒவ்வொன்றும் அவனுக்கு அறிமுகமாகும் போதும் ஒவ்வோர் எண்ணத்திட்டு உண்டாகிறது. கண்ணைத் தவிர்த்த மற்ற நான்கு புலன்களினாலும் அவன் கொள்ளும் எண்ணத்திட்டுகள் அவை.
அம்மா என்றால் ஓர் எண்ணத்திட்டு. அப்பா என்றால் ஓர் எண்ணத்திட்டு. நாய் என்றால் ஒன்று, பூனையென்றால் ஒன்று... இப்படியாய்...
ஒரு நாயோ பூனையோ அவன் அருகே வரும்போது முதலில் வாசனையின் வித்தியாசமே அவனுக்கு அவற்றைக் காட்டிக்கொடுக்கலாம். இவை இரண்டும் நடந்து வரும்போது கிடைக்கும் துள்ளிய ஓசை வேறுபாடு அவனுக்கு அதைக் காட்டிக் கொடுக்கலாம். பிறகு தொடு உணர்வால் அறியலாம். இப்படியாய் ஏதோ ஒன்று அல்லது அத்தனையும்.
இது செயல்களுக்கும் பொருந்தும். ஓடுவது, அமர்வது, ஆடுவது, பாடுவது அடிப்பது, கொஞ்சுவது இப்படியாய் எல்லாம் ஒவ்வோர் எண்ணத் திட்டுக்குள் வட்டமடித்துக்கொண்டிருக்கும்.
"டேய்... ஒரு நாய் வருகிறது. கவனமாய் இரு" என்று அவனிடம் சொன்னால். உடனே அவன் சேர்த்து வைத்திருந்த எண்ணத்திட்டுக்கள் எல்லாம் செயல்படத் துவங்கிவிடும். நாய் என்பது நமக்குக் காட்சிப் பொருள் மூலம் வரும் விளக்கம். அவனுக்கோ எண்ணத்திட்டுகளின் விளக்கம். நாயை அவன் எப்படி எண்ணி வைத்திருக்கிறானோ அப்படித்தான். மீண்டும் கவனம். இங்கே உருவத்தைப் போட்டுக் குழப்பிக்கொள்ளக்கூடாது.
அவன் உறங்கும் போது அவனின் உள்ளத்தின் உணர்வுகளுக்கு ஏற்ப எண்ணத்திட்டுகளின் ஊர்வலமே அவன் கனவுகள்.
"அம்மா! தங்கச்சி கல்யாணம் பண்ணிப் போறாமாதிரி கனவு கண்டேன்" என்று ஒரு பார்வையற்றவன் சொல்லமாட்டான் என்று நினைக்கிறீர்களா?
நம்முடைய எண்ணங்களில் மண்டிக்கிடப்பதுதான் காட்சிப் பொருள்கள். பார்வையற்றவனின் எண்ணங்களில் என்ன இருக்கும்? எப்படி இருக்கும்? என்று எண்ணிப்பாருங்களேன்! தானே விளங்கிவிடும்.
இன்னொரு விளக்கமும் தரமுடியும். அம்மாவையும் அப்பாவையும் பார்வையற்றவன் எப்படி வித்தியாசப் படுத்தி தெரிந்து வைத்திருப்பான்? சாதாரணமாகச் சொன்னால், குரல் பதிவினால் என்று கொள்வோமா? எனில் அவன் கனவு காணும்(?)போது உருவங்கள் வராமல், குரல்கள் வரலாமில்லையா?
கனவு கண்டான் - இது கண்தெரிந்தவர்கள் உருவாக்கிய வார்த்தை.
பார்வையற்றவன் காண்பதில்லைதான்.
கனவு உணர்ந்தான் - இப்படி வேண்டுமானால் மாற்றிப் பாருங்கள்.
5 comments:
அன்பு புஹாரிக்கு
தங்களின் இந்த இழை எனக்கு மிகுந்த மகிழ்வினைத் தந்துள்ளது
பார்வையற்றவருக்குக் கனவு வருமா?
வரும்
இதில் நீங்கள் கூறியது அனைத்துமே உண்மை
ஈகைத் திரு நாளில் இறைவனின்செல்லக் குழந்தைகளைப் பற்றி எழுதியமைக்கு வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
http://tamizhswasam.blogspot.com/
நானே யூகித்து எடுதியதை 30 ஆண்டுகாலம் அவர்களுக்குச் சேவை செய்யும் நீங்கள் ஒப்புக்கொண்டது மகிழ்வினைத் தருகிறது நடராஜன்
அன்பின் புகாரி,
ஒரு குருடனின் பாடல்
=====================
என்னுலகங்கள் காண
எண்ணியிருந்தால் மானிடரே
கண்மூடிக் கொஞ்சம்
கதைபேசிப்பாரும்
அழகிற்கு அங்கே என்றும்
வரைவிலக்கணங்கள் இல்லை
அன்புக்கு அங்கே ஏனோ
பஞ்சமும் இல்லை
எது இல்லை என்றும்
எப்போதும் எண்ணம்
மனம் அங்கு இல்லை
மனம்தானே எல்லை
நான் காணும் கனவு
நீர் காண முடியாது
ஏனெனில் தோழரே
நான் காணும் உலகங்கள்
நீர் காண முடியாது
அன்புடன்
சக்தி
//எனில் அவன் கனவு காணும்(?)போது உருவங்கள் வராமல், குரல்கள் வரலாமில்லையா?//
அய்யமே வேண்டாம். பிறவிக்குருடர்களின் கனவு ஒலித் தொகுப்பாகவே இருக்கும்.
அன்பின் புகாரி,
தற்செயலாக உங்கள் வலைப்பதிவுக்கு வந்து "பார்வையற்றவருக்கு கனவு வருமா?
என்ற பதிவைக் கண்டேன். மிக நல்ல பதிவு. படித்தவுடன் ஒரு கவிதை நினைவுக்கு
வந்தது. இந்தப் பக்கத்தில் இதைக் காணலாம்.
http://www.subaonline.net/nakannan/poem/netk5.html
From:"Thuttumi Chan" rangabashyamp@hotmail.com
To:tamil@tamil.net
Date:Wed, 01 Mar 2000 06:46:08 AKST
Subject:[tamil] Poem (? - yes!): The Light of my Echo
குருடனின் கனவு
- - அல்லது - -
The Light of my Echo
ஓவியத்தின் ஜீவியம் இருட்டில்தான் நெளிகிறது!
வண்ணத்துப்பூச்சியும் இருட்டில் வெறும் விட்டில் பூச்சியே,
பட்டாம்பூச்சியும் வெளியே வந்தால் எட்டாப் பூச்சியே!
அதிர்வேட்டு சப்த ரங்க பளீர்மின்னல்
ஏழுவண்ண வானவில்லின் மாயாஜாலம்
அனந்த ரங்கத்தில் உறங்கும் அந்தகனுக்கு
அமைதியைக் கெடுக்கும் கண்ணாமூச்சிகள்!
பிம்பங்கள் வந்து பம்பரமாய் சுழன்று செல்கின்றன
பாவி இந்த குருடனின் பகற் கனவுகளிலே!
மல்லிகை மணமென்ன, மணக்கும் மசாலாவடையென்ன,
கன்னிகை கூந்தல் வாசமென்ன, கருவாட்டுக் குழம்பென்ன,
சுட்ட வார்த்தையென்ன, இன்னும் சுடாத தோசையென்ன
கொட்டும் மத்தளமென்ன, கொடாமலே சென்ற வள்ளலென்ன,
எதிரொலியின் வெளிச்சம் உள்மனதில்தான் தெரிகிறது
ஓவியத்தின் ஜீவியம் இருட்டில்தான் நெளிகிறது!
- துட்டுமி
Post a Comment