அதிகாரம் 001
 
*கடவுள் வாழ்த்து*


தமிழுக்கு அகரம்போல் மண்ணில்
உயிருக்கு இறைவனே
முதல்வன்

அனைத்தும் அறிந்த
அவனடி தொழாதான் கல்வி
வெறும் குப்பை

பூமனத்தில் பூத்திருக்கும்
அவன் பாதம் பணியாமல்
புகழென்பதோ எவர்க்கும்
கிட்டாத முல்லை

விருப்பும் வெறுப்புமற்ற
அவனைப் பணிந்தாலோ
துன்பங்கள் வாழ்வில்
இல்லவே இல்லை

துயர்தரும் வினைகளெல்லாம்
தூரமாகி ஓடும்

ஐம்புலன்களையும்
அடக்கியாளும் தூயவனின்
அருமை வழிச் செல்வொரே
அகிலம் வெல்வர்

நிகரற்ற அவனின்
வழி செல்லா மாந்தரோ
துயரப் பிடியினிற் சிக்கியே
துருப்பிடிப்பர்

நீதிநெறியாளன்
அவனை வணங்காமல் எவர்க்கும்
இன்பமும் பொருளும் வெல்லும்
வல்லமையோ இல்லை

தலையிருந்தும் இல்லா மூடரே
இறைவனைத் தொழா மானிடர்

இவ்வுலக இன்னல்களில் மூழ்கியே
கரைசேரும் வழியற்று
காணாதொழியும் பாவிகள்

*
*

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனில்.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ்வார்

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்


*
*

அதிகாரம் 001
அறத்துப்பால் - பாயிரம் - கடவுள் வாழ்த்து

*
*

வல்லோன் வள்ளுவனுக்கு
என் புதுக்கவிதைப் பூமாலை


அன்புடன் புகாரி

No comments: