இணையத்துக்கு இல்லை இணை - கவியரங்கம்


சந்தவசந்தம் குழுமத்தில் என் தலைமையில் நடந்த கவியரங்கத்தில் தலைமைக் கவிதையாகவும் அழைப்புக் கவிதைகளாகவும் நன்றிக் கவிதைகளாகவும் நான் எழுதியவை

துவக்கவுரை
கோள்கள் பால்வீதியில்
கதிர்கள் பகல்வீதியில்
இலைகள் மரக்கிளையில்
விழிகளோ யௌவனத்தில்
ஓயாமல் கொண்டாடும்
கவியரங்கம் கவியரங்கம்

பயிர்கள் ஏரெழுத்தில்
மழைநீர் விளைநிலத்தில்
உயிர்கள் உறவுகளில்
உயர்வோ பண்பாட்டில்
தவறாமல் கொண்டாடும்
கவியரங்கம் கவியரங்கம்

நெருப்பு சத்தியத்தில்
ஞானம் அனுபவத்தில்
விதிகள் இயலாமையில்
வெற்றியோ நம்பிக்கையில்
கணந்தோறும் கொண்டாடும்
கவியரங்கம் கவியரங்கம்

காதல் மனத்துடிப்பில்
கவிதை உயிர்த்துடிப்பில்
மடல்கள் குழுமங்களில்
வசந்தமோ சந்தங்களில்
உயர்வாகக் கொண்டாடும்
கவியரங்கம் கவியரங்கம்

கவியரங்கில்லா இடமேது
கவியரங்கில்லாப் பொ஡ழுதேது
இருந்தபோதும் இதயங்களே
எத்திசையும் கூடிப்பாடும்
இணையில்லாக் கவியரங்கம்
இணையக் கவியரங்கன்றோ !



நன்றி சந்தவசந்தமே
பஞ்சபூதங்களும்
பவித்திரமாய்க் கவிபாட
ஓர் வானவில்
தலைமை ஏற்கும்
இது என்ன வைபவம் !

யானை கட்டிப்
போரடிக்கும் பேருழவில்
ஓர் எறும்பு வந்து
கயிறிழுக்கும்
இது என்ன அதிசயம் ?

நயாகராக்கள்
கூடிக் கொட்ட
ஓர் குற்றாலம்
தலைமை ஏற்கும்
இது என்ன குதூகலம் ?

நன்றி நிறைந்த நயனங்களோடு
நான் அரங்கேறி
இக்கவித் தமிழிருக்கையில்
இன்றோர் பிறப்பெடுக்கிறேன்

மேகத் துளியொன்றில்
முழுமொத்த ஆகாயத்தையும்
கவிக்கண்ணால் காண வந்தத்
தமிழ்ச்சுடர்களே

சந்தவசந்தப் படிப்பறையில்தான்
நான் கவியரங்கம் கற்றேன் - அதன்
தலைவனையே அழைத்தின்று
கவிபாடு கவிஞனே என்று கூற
இன்றெனக்குத் தலைமையா?

ஆழிசூழ் அகிலமெல்லாம்
அருங்கணிக்குள் கூடுகட்டி
அருகருகே அமர்ந்திருக்கும்
அழகவைக்கு என் வணக்கம்

தலைமை ஆசனத்திலென்னை
ஏற்றிவைத்த இலந்தையார்க்கும்
நெய்யூற்றித் தூண்டி நிற்கும்
நற்கவிப் பெருமக்களுக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்



கவியரங்கம்: இணையத்துக்கு இல்லை இணை
முதல் அழைப்பு
நினைவிலேறி
நிறைந்து கொள்ளும்
ஆகாய முழுச் சிரிப்பு

வருத்தமேனடா
விருத்தமெழுதவென்றே
வினவும்
ஆசிரியத்தாயுள்ளம்

விழிதிறந்தால் விமரிசனம்
வாய்திறந்தால் கவியரங்கம்

ஏறிய மேடைகளுக்கோ
எழுதிய பாடல்களுக்கோ
கணக்கு வைத்துக் கொள்ளாத
சந்தவசந்தச் சாரதி

கற்க கசடற என்று
கவியேற்றக் கற்றுத்தரும்
கவிமாமணி இலந்தையாரே
வருக வருக

பொன்னும்
புதுவைரமும் இழைக்கும்
உங்களின்
முற்றியச் சொல்வளத்தால்
கவியரங்கின்
முதற் கவிதையைத்
தருக தருக



முதலழைப்பை அன்புடன் ஏற்றுக் கவிபாடிய இலந்தையாருக்கு
சந்தவசந்தத் தேரின் சொந்தக்காரர்
இலந்தை கவிமாமணியின் பாராட்டுகளுக்கு
எண்ணிடங்கா என் இதய நன்றிகள்

இது என் தலைப் பிரசவம்தான்
இருப்பினும் என்
பொட்டிலெடுத்த வலியெல்லாம்
இனிப்பாய்க் கொட்டுகிறது
இப்போது

கவியரங்கின் முதலழைப்பிற்கே ஒரு
திமிங்கிலம் வந்துத் துள்ளியாடிப் போவது
யான் பெற்ற பேறல்லவா?

இந்தக்
கவியரங்கக் கடல் மொத்தமும்
குதூகலிக்கிறது அலைகளெழுப்பி

அடடா....
இலந்தையாரின்
கவிமேகங்கள்
மெல்ல மெல்ல விரிந்து
முழுமொத்த வானையும்
மூடிக்கொண்டன
வாழ்க வாழ்க



இரண்டாம் அழைப்பு
இவர்
பரிட்சித்துப் பார்க்காத
பாவகை ஒன்றில்லை

அதில் தனிக்கொடி
நாட்டாத தருணங்கள்
என்றில்லை

நேற்றே முளைத்தப் புதுக்கவிஞனையும்
தேற்றும் விமரிசனத்தால்
ஊற்றெடுத்துக் கவிபாடப்
போற்றி வளர்க்கும் பேராசிரியர்

இனிய அனந்தர்

ஆம்...
மெய்யாகவே இவர்
பழகு தளத்தில்
இனிப்பள்ளி வழங்கும்
அன்பினிய அனந்தர்

அயல்மண்ணில்
ஆண்டுகள் பல
உருண்டோடியபோதும்
சற்றும் தடம்புரண்டுவிடாத
சுத்தத் தமிழர்

ஐயா அனந்தரே வாங்க
அற்புதக் கவியமுதை
அள்ளி அள்ளித் தாங்க


இரண்டாம் அழைப்பை அன்புடன் ஏற்று கவிபாடிய அனந்தருக்கு
வெண்பாப் புலியின் சீற்றம் - கொதிமனம்
உண்ணும் தமிழின் ஏற்றம்
பொன்னாய் விளையும் சொல்லை - உருக்கி
மின்னல் செய்தீர் வியந்தேன்

என்
சின்னப் பெயரை வைத்து
வண்ணக் கோலம் காட்டி
ஆடிய ஆட்டத்தில் நான்
ஆட்டங்கண்டு போனேன்

அருமையான வெண்பாக்கம்
அழகான சிந்துகள்

வளைத்தெடுத்த கரத்தையா
வளைந்துகொடுத்த தமிழையா
எதைப் போற்ற ?

காணுமிடமெல்லாம் உங்களுக்குக்
காவடிச் சிந்தா?

என் அழைப்பையும் விட்டுவைக்காமல்
அதனுள் காவடிச் சிந்துகாணும்
அன்பு அனந்தரே

கொட்டிய கவியமுதில் - மனதைக்
கூத்தாட வைத்தீர்கள் அனந்தரே
நன்றி நன்றி


மூன்றாம் அழைப்பு
இலக்கு வைத்து
இலக்கண மூச்சு விடும்
இலக்கியவாதியே

மரபோடு மரபாய்
உருமாறிப் போன
மரபு ராசரே

ஆழமான எண்ணங்களை
அழகெளிமைச் சொற்களால்
அழுத்தமாகச் சொல்லும்
சிந்தனைக் கவியே

மூசி (mouse) புகா
வலைத்தளங்களுக்குள்ளும்
முந்திப் புகுந்து அலசிப் பார்த்து
அகப்பட்ட அயிரைகளை
சந்தவசந்தக் கரை சேர்க்கும்
சமர்த்தரே

அயல்மண் பேராசிரியராய்க் கழியும்
ஆண்டுகள் நாற்பதைத் தொட்டும்
பெற்றமண் ஊட்டிய தமிழை
நெற்றியில் வட்டமாய் ஏற்றி
வெற்றியின் முகவரிகளோடு - இணையம்
சுற்றிவரும் சூரியத் தமிழரே

அன்புக் கவிமணித்தேரே
அருமைப் பசுபதியாரே
அன்புடன் வாருங்கள் - வந்து
அவையினைக் கவருங்கள்


மூன்றாம் அழைப்பை அன்புடன் ஏற்று கவிபாடிய பசுபதியாருக்கு
கால்கள் நிலத்தில்
விழிகள் ஆகாயத்தில்
வானமும் பூமியுமில்லாதொரு
வாழ்க்கையா ?

மரபு இரத்தத்தில்
நவீனம் சிந்தனையில்
பழமையும் புதுமையுமில்லாதொரு
கலையா ?

வாழ்த்துக்களுக்கு
நன்றி பசுபதியாரே

நானென்ன கள்ளா பாலா என்று
இணையத்தைக்
கதறியழ வைத்துவிட்டீர்

பால்தான்
பால் தேடினால் கள்ளாகுமோ
கள்தான்
கள் தேடினால் பாலாகுமோ

உஷார் உஷார் என்று
உசுப்பிவிடும்
எச்சரிக்கைக் கவிதையினை - தட்டி
அச்சேற்றித் தந்தமைக்கு
நன்றிகளும் வாழ்த்துக்களும்
பசுபதியாரே


நான்காம் அழைப்பு
நீரூத்துப் பொங்கிவர
நெஞ்சூத்துக் குதிபோடும்
நெஞ்சூத்துக் குதிபோட
சொல்லூத்துக் கரையாடும்
சொல்லூத்துக் கரையாட
ஆசாத்துக் கவியாகும்

கானா மயிலாட
காணாத ஆளேது
தானாத் தெருக்கூடி
தேனாகச் சொல்லாடி
நானா நீயான்னு
கானாவில் துள்ளுவதை
ஆனானப் பட்டோ னும்
வேணான்னு சொல்வானோ?

கானா மகராசனே - கல்நெய்யூறும்
பாலை வனவாசனே - ஆசாத் என்னும்
அருமைக் கவிதாசனே - எழுந்து நீ

வாராய் வாராய் விழைகிறேன் - கவிச்சோலை
தாராய் தாராய் அழைக்கிறேன்


நான்காம் அழைப்பை அன்புடன் ஏற்று கவிபாடிய ஆசாத்துக்கு
வட்ட வலைநிறைத்தெழில்
மொட்டு விட்டப் பூந்தமிழை
எட்டு எட்டாய் எடுத்தாண்டுத்
தொட்ட பெட்டா உச்சிமுகில்
தொட்டு நின்றத் தோழனே - உன்
கொட்டும் கவிவளம் வாழ்கவாழ்க

அன்பினிய எண்சீர் இளவரசே ஆசாத்
அழகள்ளித் தூவுகிறதுங்கள் வியப்பு
ஆனந்தம் கொள்கிறதிவ்விணையமே
வாழ்த்துக்கள். நன்றி


ஐந்தாம் அழைப்பு
மென்மைமனத் தூரிகையால்
உண்மையினைத் தீட்டுபவர்
வண்ணவண்ணக் காவியங்கள்
மின்னல்போலப் பாடுபவர்

சந்தங்களின் பந்தங்களில்
சிந்தைதனைச் சிதைப்பவர்
புதுமைகளின் செழுமைகளில்
பொங்கித்தினம் திளைப்பவர்

பாடுபொருள் தேடாமல்
தேடிவரும் யாவுக்கும்
காடுகொள்ளாக் கவியெழுதி
வாடுந்தமிழ் வளர்ப்பவர்

காவிரியில் நீர்நிறைந்தால்
களத்துமடிப் பொன்நிறையும்
தூயமனப் பெண்சிரித்தால்
துயரவலை அறுந்துபோகும்
சேவியரும் கவியுரைத்தால்
செவிமடலும் பூப்பூக்கும்
தாவிவரும் கடலலையும்
தங்கிநின்று தலைசாய்கும்

ஆறைந்து வயதுக்குள் சாதனையாய்
ஆயிரம் பக்கக் கவிநூல் படைத்த
வெற்றிமகன் சேவியரே வாராய்
முற்றியநல் கவிமணிகள் தாராய்


ஐந்தாம் அழைப்பை அன்புடன் ஏற்று கவிபாடிய சேவியருக்கு
காதலானாலும் கவிதையானாலும்
உருவங்களை மட்டும் நேசித்து
உயிரைத் தவறவிட்டுவிட்டால்
இழப்பு நிவர்த்திசெய்யக்கூடியதா

இரண்டையும் நேசிக்கிறேன் நான்
உயிருக்காக உருவம் வளைக்க
ஒருபோதும் தயங்குவதில்லை
உருவத்திற்காக உயிர்சிதைக்க
ஒருபோதும் இணங்குவதில்லை

தலையில் வளரும் முடியை
இயன்றவரை வெட்டிவைக்கிறேன்
நெஞ்சில் வளரும் முடியை
பெருமையாக விட்டுவைக்கிறேன்

பழைய சுவடுகளின் மீதே
கவனமாய்க் கால்வைத்து நடந்தால்
புதிய சுவடுகள் பதிப்பதெப்போ

பழைய சுவடுகளைப்
பாடமாக்கிக்கொள்வோம்
புதிய சுவடுகளைப்
பயணமாக்கிக்கொள்வோம்

முக்கியத் தளம் தொட்டுப்
பக்குவமாய்க் கவிதொடுத்தீர்

கணினிச் சாளரங்கள்
காதலின் விழிகளாகி
படபடவென அடித்துக்கொள்ள
தடதடவென நடக்கிறது
தட்டச்சும் உற்சவங்களென
அற்புதமாய்ச் சொல்லிவிட்டீர்

வாழ்த்துக்களையும் நன்றிகளையும்
வாரி வழங்குகிறேன் சேவியரே


ஆறாம் அழைப்பு
விதை கொடுத்துப் பாருங்கள்
மரம் கொடுக்கும் மண்
விழி கொடுத்துப் பாருங்கள்
ஞானம் தரும் ஆகாயம்
அழுக்கு கொடுத்துப் பாருங்கள்
தூய்மை தரும் நீர்
கரியமிலம் கொடுத்துப் பாருங்கள்
உயிர் கொடுக்கும் காற்று
உடல் கொடுத்துப் பாருங்கள்
ஆன்மா தரும் நெருப்பு

எதை வேண்டுமானாலும்
கொடுத்துப் பாருங்கள் - சுடச்சுடத்
தமிழ்ச்சொல் மாத்திரமே
தருவார் இராமகி

இயந்திர மொழியின்
இரும்புச் சொல்லுக்கும்
கரும்புத் தமிழேந்தும்
அருந்தமிழ்க் காவலர்

பத்துப் புதுச்சொல்லேனும் ஏற்றிப்
பக்கத்திலோர் அகராதியும் தந்து
பாட்டுப் புனைந்து
பாடம் நடத்துவதில் வல்லவர்

சொல்லித்தரத் துடிக்கும் தவிப்பில்
இவரிடம் இருப்பது
ஜல்லிக்கட்டுக் காளையின் வேகம்

விளக்கம் சொல்ல
வந்துவிட்டால் - இவர்
வேர் முடிந்த ஆழம் தாண்டி
நூறடிக்கும் செல்வார்

தூயதமிழ்த் தீபமேற்றித்
தொழுதுநிற்கும்
உண்மைத் தமிழர்

அன்பிற்கினிய கவிஞர் இராமகியாரெ
வாருங்கள் வாருங்கள்
வந்து வழக்கம்போல்
வேலிக்கு அப்பால் ஓடிப்போனவற்றையும்
வளைத்துப் போட்டுப் பாடுங்கள்


ஏழாம் அழைப்பு
அடடா
இதயத்தின் உள்ளே வந்து
இணக்கமாய்
உட்கார்ந்து கொள்கிறார் இவர்

இவரை உறவல்ல என்று
என்னால் எப்படி
நினைக்க முடியும்?

இத்தனைக் காலமும்
தன் இளமையைத்
துளியும் துவண்டுபோகாமல்
எப்படிப் பாதுகாப்பாய்
வைத்திருக்கிறார் மனிதர்?

ஓ... அவர்தான் கவிஞரோ?

தோகை விருக்கும்
மயிலின் உணர்வுகளை
அதன் இறகுகள் சொல்லும்

மழை பொழியும்
மேகத்தின் உணர்வுகளை
அதன் துளிகள் சொல்லும்

மனம் நெகிழும்
யோகியாரின் உணர்வுகளை
அவரின் மடல்களே சொல்லும்

இத்தனைக் காலம்
சிலிர்ப்போடிருக்க
உங்களுக்கு எந்த தேவதையய்யா
வரம் தந்தது?

என் போன்ற சின்னஞ்சிறு
சிறுவர்களோடு சிறுவர்களாய்
ஆடிப்பாடி மகிழ்கிறீர்களே
உங்களுக்கு
ஆயிரம் வணக்கங்கள் ஐயா

அப்பாடா
கிடைத்த சந்தர்ப்பத்தில்
என்னையும் சிறுவன் என்று
நிலைநாட்டிக்கொண்டேன்
வாய்ப்பளித்த யோகியாரே
நன்றி நன்றி

வாருங்கள் கவிமாமணி யோகியாரே
வந்து உங்களின்
உணர்வுப் பதிவுகளை
நெருப்பாய் இறக்குங்கள்
இந்தப் பொடியனின் தலைமைக்கு
ஓர் அர்த்தம் பிறக்கட்டும்

*

ஏழாம் அழைப்பை அன்புடன் ஏற்று கவிபாடிய யோகியாருக்கு
மாதவள் துடிக்கிறாள் கணிவலையே
மன்னவன் முகவரி சொல்லிவிடு
வேதனை கொன்றிடும் வழியுரைத்தே
வேதத்தின் வாதத்தைச் செயலாக்கு

ஆதவக் கதிர்களை வீசுகின்றார்
அருவிச் சொற்களைக் கொட்டுகின்றார்
சாதனை வேந்தராம் யோகியார்க்கு
சட்டென்று பதிலைத் தந்துவிடு

நன்றிகள் யோகியாரே
உங்கள் கவிவளம் வாழ்க வாழ்க


எட்டாம் கவியரங்கத்தின் எட்டாம் அழைப்பு
பாரதிக்குத் தெரியாது - இந்த
ஹரியாரைப்பற்றி

தெரிந்திருந்தால்
கண்ணம்மா கண்ணம்மா
என்ற தன் அடிக்குரலை
அப்படியே
ஒடித்துப் போட்டுவிட்டு
ஹரிகிருஷ்ணா ஹரிகிருஷ்ணா
என்றே
ஆர்ப்பரித்துப் பாடியிருப்பார்

அப்படியொரு தாசன் இவர்
பாரதிக்கு!

கவிதைக்கான சொற்களை
இவர் அகராதிகளில் தேடுவதில்லை
கரும்புத்தோட்டம் சென்று
கடித்துப்பார்த்துக்...
கடித்துப்பார்த்துக்...
கண்டெடுக்கிறார்

கட்டுக் கட்டாய்க் கட்டுரைகள்
கங்கை கொள்ளாக் கவிதைகள்
விட்டு வைக்காக் குழுமங்களில்
விரல் நகத்திலும் விவரங்கள்

அறிஞர் அண்ணாவுக்குப்பின்
இவர்தான் அதிகமாக
அண்ணா என்று அழைக்கப்பட்டவராய்
இருப்பாரோ என்று நான்
ஐயப்படுவதுண்டு

பாரதி புரஸ்கார் ஹரியாரே - உங்கள்
பாயாசப் பாட்டோடு வாருமய்யா



ஒன்பதாம் அழைப்பு
இனிப்புத்தேடி இனிப்புத்தேடி
எறும்புளின் கூட்டங்கள்
உப்புநாடி உப்புநாடி
மனிதர்களின் நாக்குகள்

புளிப்புகேட்டு புளிப்புகேட்டு
கர்பிணியர் எச்சில்கள்
கசப்புபோதும் கசப்புபோதும்
என்பவரோ துறவிகள்

சிரிப்புதந்து சிரிப்புவாங்கிச்
சிகரமேறும் ராஜரே
சிரித்துவைத்துச் சிரிக்கவைக்கும்
சிரஞ்சீவி ரங்கரே

மரித்துப்போகும் தருணம்கூட
சிரித்துவைக்கச் சொல்கிரீர்
சிரித்துச்சிரித்து சிரித்துவாழ
மரிப்பதில்லை என்கிறீர்

கற்றகலை கொஞ்சமில்லை
கடலைக்குடித்து நிற்கிறீர்
மற்றெவர்க்கும் இல்லாமல்
மொத்தமாக வெல்கிறீர்

வற்றிமணல் ஓடும்நதி
வெள்ளவளம் பொங்கிட
வழக்கமான சிற(ரி)ப்பெடுத்து
வண்ணக்கவி தாருங்கள்

அன்பின் ராஜரங்கரே
அருமை நெஞ்ச வேந்தரே
இணையம் உங்கள் கைகளில்
இன்பம் அள்ளிப் பாடுங்கள்



ஒன்பதாம் அழைப்பை அன்புடன் ஏற்று கவிபாடிய இராசரங்கனாருக்கு
வந்து விழுந்த நந்தவனத் தந்தனச் சிந்துவால்
தொந்தியுதிரக் குதித்தாடத் துவங்கியதுதான்
இன்னுமே குந்தவில்லை கவி ராசரங்கரே
உங்கள் நையாண்டி வாழ்க வாழ்க

உயர்த்திப் பிடித்தீர்கள் இணையத்தை
நன்றி இராசரங்கரே



பத்தாம் அழைப்பு
ஒன்று வாங்கினால்
இரண்டு இனாம் என்கிறது
வணிக முன்னேற்றம்

முகத்தில்
பிரகாச நிலவுகள்
முகாமிட்டுக் கூத்தாட
ஓடிச்சென்று
மூன்று வாங்கி
ஒன்பதோடு வீட்டுக்கு வரும்
ஒய்யாரப் பொழுதுகளைப் போல

ஒரு கவிஞரை அழைத்தால்
இரு இளைய கவி மொட்டுக்களையும்
இறுக அணைத்துக்கொண்டு
கொத்தாக வந்து
கொட்டோ கொட்டென்று
கவிதைகள் கொட்டும்
மூவருவிக் கவிக்குடும்பமே

வருக வருக

புஷ்பமும்
புஷ்பத்தின் புஷ்பங்களும்
புஷ்டிக் கவிதைகளை
அள்ளித் தருக தருக

கனிகள் மூன்று
முடிச்சுகள் மூன்று
தமிழும் மூன்றுதான்

இவைபோல்
புஷ்பா, செசில், பஸ்ரன்
ஆகிய முக்கவிமலர்களையும்
இணையத்துக்கு இல்லை இணை
என்றே முழங்கிட அழைக்கிறேன்


பத்தாம் அழைப்பை அன்புடன் ஏற்று கவிபாடிய புஷ்பா, செசில், பஸ்ரன் ஆகிய மூவருக்கும்
அழகழகு வரிகளிலே
ஆச்சரியக் குறிகளேந்தி
அரும்புகளை அணைத்துக்கொண்டு
அன்னை மனம் அள்ளித்தந்த
அல்லிமலர்க் கவிதைகட்கு
அவையோரின் சார்பிலென்
அகமேந்தும் நன்றிகள்

இந்த
மலர்மடி மொட்டுக்கள்
தமிழ்
மன்றங்கள் பலதொட்டு
நிதம்
வளர்கின்ற நிலைகொள்ள
சந்த
வசந்தத்தின் வாழ்த்துக்கள்



பதினோராம் அழைப்பு
மரபெடுத்துச்
சொல்
மதுவடித்துப்
புதுக்
கவிதொடுக்கச்
சபை
வாருமையா
அருண்
சிவனையா
அதன்
சுவைநினைத்து
மனம்
துடிதுடித்து
இங்
கிவனையா
தமிழ்
மவனையா



எட்டாம் கவியரங்கின் நிறைவு
எட்டுக் கவிமணிகள்
கொட்டியே முழங்கினர்
எட்டுத் திக்கும்
கேட்டதடா - வெற்றி

எட்டாம் கவியரங்கின்
எட்டா உயரிலெனை
ஏற்றி வைத்தார்
இலந்தையடா - நன்றி

குட்டிப் பார்த்தார் சிலர்
கொஞ்சி நின்றார் பலர்
குறைந்தழியாச்
செல்வமடா - கணினி

விட்டில் பூச்சல்ல
வெற்று விளக்குமல்ல
விலகிடாதச்
சூரியனடா - இணையம்

கிட்டும் சுகவாய்ப்போ
கிட்டாமல் எட்டிப்போகக்
கட்டுண்டார்
கடும்பணியால் - மூவர்

எட்டில் விட்டாலுமே
இலந்தையார்ப் பூவனத்தில்
இன்னுமின்னும்
வாய்க்குமடா - வருவார்

தொட்டில் பிள்ளையிவன்
துள்ளித் தலைமையேற்றுத்
தத்திவந்தநல்
அரங்கமடா - சிலிர்த்தேன்

மொட்டின் தலைமையிலும்
மலரின் மதுவாரிக்
கவிச்சொட்டாய்க்
கொட்டினரடா - நன்றி!

1 comment:

சேவியர் said...

பசுமையான நினைவுகளைக் கிளறி விட்டீர்கள்.