தமிழ் கனடா - 002 இலங்கை 1983


இலங்கையில் சிங்கள அடக்குமுறைகள் அவ்வப்போது வரும் போகும். ஆனால் 1983ல் வந்ததோ கொடூரமாய் இருந்தது. பொழுதுகளெல்லாம் ஒரே இருட்டு. இருட்டுக்குள் வெளிச்சம் போட்டுக்கொண்டு அலைந்தவையோ ஒப்பாரிகள் மட்டும்தான்.

வாழ்வின் மீதான நம்பிக்கை அன்று மொத்தமாய் மூர்ச்சையாகி விட்டிருந்தது. அவற்றின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப, எவரோ இருக்கிறார்கள் என்பதை பதறிப்போன எந்த ஈழத் தமிழனும் ஏற்பதாய் இல்லை.

பிறந்த பூமியை முத்தமிட்ட ஈர உதடுகளில் இரத்தம் கசியக் கசிய, தாய் நாட்டை விட்டு வெளிச்சம் வந்த திசைகளெங்கும் சிதறி ஓடும் கட்டாயத்துக்குள் அவன் தள்ளப்பட்டான்.

இலங்கையில் அன்று நடந்த அந்த ராணுவ அட்டூலியங்களால் திரள் திரளாய் இலங்கைத் தமிழர்கள் உயிரின் முகவரி தேடி தமிழ்நாடு, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்விசர்லாண்ட், நார்வே, மற்றும் டென்மார்க் நாடுகளுக்குப் புறப்பட்டார்கள்.

இலங்கையிலிருந்து, சுமார் நான்கு லட்சம் தமிழர்கள் மேலை நாடுகளுக்குச் சென்று குடியேறியிருக்கிறார்கள். இந்த நான்கு லட்சம் தமிழர்களில் சுமார் இரண்டு லட்சம் பேர், அதாவது ஐம்பது சதம் தமிழர்கள் கனடாவில்தான் வாழ்கிறார்கள் என்றால் அது எத்தனை இனிப்பான விசயம்.

கனடாவின் டொராண்டோ , மாண்ட்ரியல், வேங்கூவர் போன்ற பெரு நகரங்களிலெல்லாம் தமிழ், தமிழன் என்றால் அறியாத ஆள் இருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு அதிக எண்ணிக்கையில் வாழ்கிறார்கள்.

கனடாவில் தமிழன் அகதியாய் முதன்முதலில் அடியெடுத்து வைத்த நகரம் எது? அதைக் காண்பதற்கு முன் கனடாவை மேலோட்டமாக ஒரு சுற்றுசுற்றிவரலாமே. அமெரிக்காவின் தலையில் ஓர் அழகிய கிரீடத்தைப் போல அமர்ந்திருப்பதே கனடா.

கனடா உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடு. முதல் நாடு எது என்று கேட்கிறீர்களா? ரஷ்யாதான். கனடா ஒரு கோடி சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. அம்மாடியோவ்! அதாவது, ஏழாவது மிகப் பெரிய நாடான இந்தியாவைப் போல கிட்டத்தட்ட மூன்று மடங்கு பெரியது.


ஆனாலும் இங்கு வாழும் மக்கள் தொகை வெறும் 3 கோடியே முப்பதுலட்சம்தான். ப்பூ...! அதாவது, இந்தியாவின் மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது வெறும் 3 சதவிகிதம்தான். மூன்று மடங்கு பெரிய நாட்டில் மூன்றே சதவிகித மக்கள். இந்தியாவின் மக்கள்தொகை ஒரே ஒரு கோடிதான் என்றால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள்.

அதாவது கனடாவில் வாழும் மனித விகிதாசாரப்படி இந்தியாவிலும் வாழவேண்டும் என்று நாம் ஒரு கனவு கண்டால், இப்போதிருப்பதைப் போல நமக்கு நூறு மடங்கு நிலப் பரப்பு வேண்டும். என்ன சிரிப்பா ஆச்சரியமா? இந்த விசயத்தில் நம் முன்னேற்றத்தின் முன் எவரும் நிற்க முடியுமா என்ன? பக்கத்தில் கையைக் காட்டி கௌரவப் பட்டுக்கொள்ள வேண்டாம் என்றாலும் ஒன்று மட்டும் நிச்சயம்.

இயற்கையாய் வாழத் தகுதியான நாட்டில் மட்டும்தான் மக்கள்தொகைப் பெருக்கம் அதிகமாக இருக்கும். இன்று செயற்கை வழிகளில், வசதிகள் செய்து கொண்டு வாழ முடியும் என்ற நிலையில், இனி கனடாவிலும் ஜனத்தொகை பெருகும் என்பதில் சந்தேகம் இல்லை.


அப்படித்தான் பாலைவனங்களான வளைகுடா நாடுகளிலும் இன்று மக்கள் தொகை அதிகரிக்கத் துவங்கி விட்டது. இங்கே பனிநிலம் அங்கே பாலைவனம் இரண்டிலும் மக்கள் தொகை அதிகரிக்கக் காரணம், விஞ்ஞான, பொருளாதார முன்னேற்றத்தால் வந்த வசதிகள்தான்.

கனடாவின் வடபகுதி கடுமையான குளிரினைக் கொண்டது என்பதால், மக்கள் தென் பகுதிகளில்தான் வாழ்கிறார்கள். அதாவது பெரும்பாலும் அமெரிக்காவை ஒட்டியே வாழ்கிறார்கள்.

கனடா 10 மாகாணங்களையும் (province), பனியால் சூழ்ந்த மூன்று பெரும் நிலப்பரப்புகளையும் (territory) கொண்டது. கனடாவின் கிழக்கே சென்றால் அட்லாண்டிக் கடலைப் பார்க்கலாம். மேற்கே சென்றால் பசுபிக் கடலைப் பார்க்கலாம். இந்தக் கடற்கரையில் நிற்கும் ஒருவனின் கடிகாரமும் அந்தக் கடற்கரையில் நிற்கும் ஒருவனின் கடிகாரமும் நாலரை மணிநேரம் வித்தியாசம் காட்டும்.

சந்தேகப்படவேண்டாம். இரண்டும் சரியாகத்தான் ஓடுகின்றன. கனடாவின் நேர வித்தியாசம் அப்படி. இந்தியாவைப்போல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே நேரம் என்பது இங்கே இல்லை. அதோடு குளிர் காலத்துக்கு முன்னும் வெயில் காலத்துக்கு முன்னும் நேரத்தை ஒரு மணிநேரம் மாற்றியும் வைப்பார்கள்.

வெயில் காலத்தில் இரவு பத்து மணிக்கும், கழுத்தைப் பிடித்துத் தள்ளி 'போ போ' என்று விரட்டினாலும், வெளிச்சம் போகாமல் நின்றுகொண்டு அடம் பிடிக்கும். குளிர்காலத்தில் மாலை ஐந்து மணிக்கே விட்டேனா பார் என்று ஓடிவந்து ஒரு பேயைப் போலத் தழுவிக்கொள்ளும் இருட்டு. இதைச் சரிக்கட்டத்தான் ஒரு மணி நேரத்தை முன்னும் பின்னும் மாற்றிவைப்பார்கள்.

திடீர் என்று ஒரு நாள் காலை எழுந்து அலுவலகத்திற்கு ஒரு மணிநேரம் முன்னதாக ஓடவேண்டி வருவது துரதிர்ஷ்டம் என்றால், அலறும் அலாரத்தின் தலையில் செல்லமாக ஒரு தட்டுத் தட்டிவிட்டு, இன்னும் ஒரு மணி நேரம் நிம்மதியாய் தூங்குவது அதிர்ஷ்டமான விசயமில்லையா?

பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருந்து நியூஃபவுண்ட்லேண்ட்தான் கனடாவில் அதிக நேர வித்தியாசம் கொண்டது. நாலரை மணி நேரம்.

1 comment:

ஜோதிஜி said...

மிக அற்புதமாக படைத்து உள்ளீர்கள். உங்கள் தனிப்பட்ட அக்கறைக்கு நன்றி.