தமிழ் கனடா - 007 வட அமெரிக்கா


இதோ உங்களுக்காக இன்னொரு குட்டிக்கதை. கனடாவுக்குப் பெயர் வந்த காரணம்பற்றியதுதான்.

ஐரோப்பியர்கள், உலகின் ஒரு இடம் விடாமல், பொருள்தேடி அலைந்தார்கள் என்பது நாமெல்லோரும் அறிந்த விசயம்தான். நம்மைப்போல் இருப்பதைக் கொண்டு சிறப்புடன்

வாழ்வோம் என்ற சில்லறைத் தத்துவங்களெல்லாம் அவர்களுக்கு ஆந்தராக்ஸ் கொடுத்து அல்லாடவிட்டாலும் ஒத்துவராத விசயம்.

காடோ செடியோ என்று நாடுவிட்டு நாடு அலைவார்கள் பொருள்தேடி நம்மைப் போல் நாலரையணா சம்பளம் வாங்க அல்ல, நாட்டையே ஒரு போடு போட.

கேட்டால் நாங்கள் எல்லாம் ஆராச்சியாளர்கள் என்று பின்னல் போட்ட கெட்டி நூலை ஒரு பிசிறும் இல்லாமல் நம்முன் விடுவார்கள் மிக இயற்கையாக. ஆனாலும் இந்த உலகத்தை ஒன்றாக இணைத்தவர்கள் அவர்கள்தானே? பின் பிரித்தாளப் பிரித்தவர்களும் அவர்கள்தான் என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

'வெள்ளையர் திருட்டு நன்மையில் முடியும்' என்று ஒரு சந்தர்ப்ப மொழி, பழமொழி போல வந்து என் நெற்றிப் பொட்டை முட்டுகிறது. ஓரமாய் ஒதுக்கிவைத்துவிட்டுத் தொடர்கிறேன்.

வெள்ளையர்கள் இந்தியா வந்திருக்காவிட்டால், நான் ஒரத்தநாட்டின் எட்டாம் சரபோஜி மகராஜாவாகி படிக்குளத்தில் குளித்துக்கொண்டிருக்கும் என்(!) ராணியைச் சுற்றிச் சுற்றி புழுதி பறக்க குதிரை சவாரி செய்து கொண்டிருக்கலாமோ என்னவோ இந்நேரம் :)

அப்படி வெள்ளைக்காரர்கள் பொன்னும் மணியும் தேடி கனடா பக்கம் அலையும்போது ஒரு மண்ணும் கிடைக்கவில்லை அவர்களுக்கு. வெறுப்புகளெல்லாம் ஒன்றாய்க் கூடி ஒரு உலக வெறுப்பு மாநாடே போட்டது அவர்களின் உள்ளுக்குள். இன்னாடா ஊரு இது? டப்பா ஊரு? குளிர் உட்காரும் இடத்தையும் ஊசி குத்தி ஊசி குத்தி உண்டு இல்லை என்று ஆட்டி எடுக்குது. உருப்படியா ஒரு புளியங்கொட்டையும் இல்லையே இங்கே என்று aca Canada என்று வசைபாடினார்கள். அகா கனடா என்றால் அவர்கள் மொழியில் 'ஒரு மண்ணும் கிடையாது' என்று அர்த்தமாம். பிறகு அதுவே பெயராக ஆகிவிட்டதாம். நம்புவோமே? நம்பினால் நமக்கென்ன நட்டம்?


இப்படி கதைகள் உண்டு என்றாலும் இதுதான் உண்மைக்கதை என்று சொல்ல பெரிதாய் சான்றுகள் கிடையாது. ஆனாலும் kanata என்ற முதல் கதையைத்தான் கனடா நம்பி ஏற்றுக்கொண்டுள்ளது. சரித்திரமாகவும் எழுதிவிட்டது.

அகா கனடா என்ற பட்டத்தை குளிருக்குப் பயந்து குளிக்காத சில அவசரக்கார வெள்ளைக்காரர்கள் அன்று சூட்டிச் சென்றார்கள் என்றாலும், இன்று கனடாவின் இயற்கை வளம் கண்டுபிடிக்கப்பட்டதும், கனடா உலகின் மிகப் பெரிய பணக்கார நாடுகளுள் ஒன்று என்று தெரிந்துபோய் விட்டது.

குன்றாத பொருளாதார வளம் ஒருபுறம் இருக்க, உயர்ந்த வாழ்க்கைத் தரத்தில் கனடா தொடர்ந்து முதலிடம் வகித்துக்கொண்டே இருக்கிறது. இது உலக ஐக்கிய நாட்டுச் சபையின் Human Development Index (மனித மேம்பாட்டு அட்டவணை) காரர்களால் கல்வி, செல்வம், வீரம் (உடல் நலமும் ஆயுளும்தான்!) ஆகிய மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

சுருக்கமாகச் சொன்னால், சுத்தமான சுகாதாரக் காற்று, குறைவான குற்றங்கள், உயர்ந்த உடல்நலம், அற்புதமான கல்வி. இதுதான் கனடா என்ற சொர்க்க பூமியின் கூறுகள்.

கனடியர்கள் அவ்வளவு எளிதில் மேலோகப் பயணச் சீட்டு வாங்கி விடுவதில்லை. கோடுபோட்ட கசங்கள் காகிதங்களைப் போல, உடலெங்கும் சுருக்கங்களோடு ஏராளமானவர்களை இங்கே காணலாம். ஆமாம், உலகத்திலேயே கனடியர்கள்தான் மிக அதிக காலம் உயிரோடு வாழ்கிறார்கள். ஜப்பானும் ஐஸ்லாண்டும்தான் கனடாவுக்கு இந்த விசயத்தில் மல்லுக்கு நிற்கின்றன. கிழங்களுக்கு இங்கே கௌரவம் அதிகம். Senior Citizens (உயர் குடிமக்கள்? - உயர் அதிகாரி போல) என்று அழைத்து நிறைய சலுகைகளை வழங்குவார்கள்.

இன்னொரு விசயம். உலகத்திலேயே படித்தவர்களின் விகிதம் எங்கே கொடிகட்டிப் பறக்கிறது தெரியுமா? அதுவும் கனடாதான். அமெரிக்காவெல்லாம் மெல்லமாக அப்புறம்தான் வரும்.

கனடாவின் கல்வியைப் பற்றி நான் நிறைய சொல்லவேண்டி இருக்கிறது. அந்தக் கல்விச் சாலைக்குள் இலங்கைத் தமிழர்கள் இன்றுவரை என்ன சாதித்திருக்கிறார்கள் என்றும் வேறு பல அருமையான தகவல்களையும் சேகரித்து வைத்துக்கொண்டு சொல்ல முட்டும் வார்த்தைகளோடு காத்திருக்கிறேன். இது முடியட்டும். கொஞ்சம் பொறுங்கள்.

நான் இங்கே அமெரிக்கா, அமெரிக்கா என்று குறிப்பிடும்போதெல்லாம் விசயம் தெரிந்தவர்கள் USA (அமெரிக்க ஐக்கிய நாடுகள்) என்று மொழிபெயர்த்துக்கொள்ளுங்கள். நான் உலகெங்கும் வழங்கி வரும் வழக்கப்படி, இனியும் அமெரிக்கா என்றே குறிப்பிடுவேன்.

அமெரிக்கா என்பது ஒரு நாடு அல்ல, அது ஒரு கண்டம் என்பதை நாம் சின்ன வயதிலேயே படித்திருக்கிறோம். அதுவும் தென் அமெரிக்கா, வட அமெரிக்கா என்று இரண்டு கண்டங்கள். ஆனாலும் வட அமெரிக்கா அல்லது அமெரிக்கா என்றால் உலகெங்கும் USA என்றுதான் அர்த்தமாகிவிட்டது. வட அமெரிக்கா கண்டத்தில் தெற்கே மெக்ஸிகோ, வடக்கே கனடா. நடுவில்தான் ஐக்கிய அமெரிக்கக் கூட்டு நாடுகள் (USA).

அதாவது வட அமெரிக்காவுக்குள்ளேயே ஒரு வட அமெரிக்காதான் கனடா. வட அமெரிக்காவின் தென் அமெரிக்காவான(!) மெக்சிகோவுக்கும் வட அமெரிக்காவின் வட அமெரிக்காவான(!) கனடாவுக்கும் இடையில்தான் USA இருக்கிறது.

என்றாலும், மத்திய அமெரிக்கா என்று ஐக்கிய அமெரிக்கக் கூட்டு நாடுகளை(USA) நாம் குறிப்பிட்டால், புதிதாக வடிவமைத்து இன்னும் பரிட்சித்துப் பார்க்காத ஒரு நாசமாய்ப் போன ஏவுகணையுடன் வந்துவிடக்கூடும் அவர்கள்.

4 comments:

வேந்தன் said...

அமெரிக்கா என்றால் யூ எஸ் ஏ தான்.
தன் பெயரில் அமெரிக்கா என கொண்டிருக்கும் நாடு பிறிது இல்லை
கனடா பரப்பில் அமெரிக்காவை விட மானப்பெரியது. ஆனால் மக்கள் தொகையில் ஒரு மாநில தகுதி பெறாது
கனடாவின் முன்னேற்றம் அமெரிக்க தொழில் முனைவோர்களால்
ஒரு காலத்தில் அமெரிக்காவின் ஒத்து நாயனம்.

கனடாவின் பிரதமர் பேர் ஏமி?

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”

அன்புடன் புகாரி said...

//அமெரிக்கா என்றால் யூ எஸ் ஏ தான். //

அது பழக்கம் காரணமாக வந்த உங்கள் அறியாமை. அமெரிக்கா என்பது கண்டம். நாடு அல்ல.

India of Asia
Canada of America

உங்கள் நாடு எது என்று கேட்டால் நீங்கள் ஆசியா என்று சொல்வீர்களா? அப்படிச் சொன்னால் நீங்கள் கத்துக்குட்டி ஆக மாட்டீர்களா :)


//தன் பெயரில் அமெரிக்கா என கொண்டிருக்கும் நாடு பிறிது இல்லை//

அமெரிக்கா என்று தன் நாட்டில் பெயரை ஐக்கிய நாடு கொண்டிருக்கவில்லை. அமெரிக்காவின் ஐக்கிய நாடு என்றுதான் கொண்டிருக்கிறது. இது தெரியாதா வேந்தன் உங்களுக்கு :)

//கனடா பரப்பில் அமெரிக்காவை விட மானப்பெரியது. ஆனால் மக்கள் தொகையில் ஒரு மாநில தகுதி பெறாது//

சைனாவோடு ஒப்பிட்டால் அமெரிக்கா ஜனத்தொகையில் ஒரு ஊரின் அளவுகூடை கிடையாது என்று சொல்லலாமா :)) ஏன் வேந்தன் இப்படி சின்னப்பிள்ளை மாதிரி :))) ஹாஹாஹா

//கனடாவின் முன்னேற்றம் அமெரிக்க தொழில் முனைவோர்களால்
ஒரு காலத்தில் அமெரிக்காவின் ஒத்து நாயனம்.//

கனடாவின் முன்னேற்றம் அதன் அகிம்சையில் இருக்கிறது. பொருளாதார முன்னேற்றத்திற்கு அதன் குறையாத வளமே காரணம்.

//கனடாவின் பிரதமர் பேர் ஏமி?//

ஹாஹாஹா.... இதுதான்.... இதுதான் சரியான சான்று. அமெரிக்கர்களுக்கு உலகமே அமெரிக்காதான். அதைத்தண்டி ஒரு மண்ணும் தெரியாது. அமெரிக்கா என்றால் உலகம். உலகம் என்றால் அமெரிக்கா. இவர்களோடு நீங்களும் சேர்ந்துவிட்டது வருத்தம் தருகிறது வேந்தன் :)))

Rathi said...

நண்பர் புகாரி,

நண்பர் வேந்தனின் பதில் படித்தவுடன் CBC-Rick Mercer Show வில் கனடாவை பற்றி பொது அறிவு கேள்விகளை அமெரிக்கர்களிடம் கேட்டபோது அவர்கள் சொன்ன பதில் உண்மையிலேயே சிரிப்பு கலந்து, அமெரிக்கர்களின் கனடா பற்றிய பொது அறிவு எவ்வளவு தூரம் உள்ளது என்பது பார்ப்பவர்களின் சிந்தனையை தூண்டுவதாக இருந்தது. தேடிப்பார்த்து கிடைத்தால் அதை வேந்தனுக்காக இணைக்கிறேன். நன்றி.

Rathi said...

This is the clip, I was talking about. View this. It's called Rick Mercer talking to americans.

http://www.youtube.com/watch?v=BhTZ_tgMUdo