அதிகாரம் 109 தகையணங்குறுத்தல்


கனத்த காதணி அணிந்த இவள்
தேவ மகளோ அரியதோர் மயிலோ
அடடா இவள் மானிடப் பெண்தானோ
மயங்கித் தவிக்கிறதே என் நெஞ்சு

பார்த்தேன் அவளை பார்த்தாள் அவளும்
வெறுமனே பார்த்தாலே அந்தப் பார்வை
எனைக் கொன்று குவிப்பதாய் இருக்க
அவளோ ஒரு படையையே விழிகளில் திரட்டி
என்னைப் பார்த்துத் தொலைத்தாளே

உயிர் பறிக்கும் காலனைக் கண்டிருக்கவே
இல்லை நான் முன்பெலாம் இப்போதோ
மாபெரும் விழிகளோடு படையெடுத்துப் போரிடும்
பெண்ணென்று கண்டுகொண்டேன்

இதென்ன முரண்பாடு
பெண்மையெனும் மென்மை அழகை
பரிபூரணமாய்க் கொண்டிருக்கிறாள் இவள்
ஆனால் இவள் கண்களோ
காண்போரின் உயிர் உண்ணும்
தோற்றத்தையல்லவா கொண்டிருக்கின்றன

உயிரைக் கொல்லும் எமனா
காதல் பொழியும விழியா
மிரண்டு நிற்கும் மானா
இந்த இளையவளின் பார்வை
இந்த மூன்றையும்
ஒன்றாய்க் கொண்டிருக்கின்றதே

இவளின் வளைந்த புருவங்கள் மட்டும்
வளையாமல் நேராய் இருந்திருந்தால்
என்னை நடுங்க வைக்கும் துயரத்தை
இவள் விழிகள் செய்யாதிருக்குமே

சற்றும் சாயாமல் நிமிர்ந்து நிற்கும்
இவளின் முலை மேல் கிடக்கும் துப்பட்டா
வெறி கொண்ட ஆண் யானையின்
முகம் மீது இட்ட
பட்டாடை போலக் காட்சி தருகிறதே

அடடா, போர்க்களத்தில்
பகைவர்களைப் பயந்தோடச் செய்யும்
என் வீரம் இவளின் பேரொளி வீசும்
நெற்றியினைக் கண்டதும்
ஒன்றுமற்றதாகிப் போனதே

பெண் மானின் கவர்ச்சிப் பார்வையையும்
இதயத்தில் அகலாத வெட்கத்தையும்
இயற்கையாகவே ஆபரணங்களாய்க் கொண்ட
இந்த அழகிக்கு செயற்கை அணிகலன்கள் ஏன்

உண்டால்தான் மயக்கம் தரும் மது
கண்டாலே மயக்கம்தரும்
காதலைப்போல் அல்ல அது



அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்

கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும்என் பீடு

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணிஎவனோ ஏதில தந்து

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று


அதிகாரம் 109
காமத்துப்பால் - களவியல் - தகையணங்குறுத்தல்

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

1 comment:

hayyram said...

நல்ல பதிவு.

அன்புடன்
ராம்

www.hayyram.blogspot.com