
வீரர்படை உயர்மக்கள் செல்வச்செழுமை
அமைச்சரவை அயல்நாட்டுறவு உள்நாட்டுக்காவல்
இவை ஆறும் நிறைவாய்க் கொண்டதே
சிங்கம் போன்ற அரசாங்கம்
அஞ்சாத நெஞ்சுரம்
கொடுத்துச் சிவக்கும் கரங்கள்
தெளிந்த நல்லறிவு தளராத ஊக்கம்
இவை நான்கும் நல்லரசனின் இயல்புகளாம்
கணப்பொழுதும் கண்ணயராமை
உயர்தரக் கல்வி எதையும் தாங்கும் இதயம்
இம்மூன்றும் மண்ணாளும் மன்னரிடம்
நிறைந்திருக்கும் சிறப்புத் தகுதிகளாம்
அறவழி காப்பதில் தவறிழைத்து விடாமலும்
அறமற்ற அநீதிகள் ஏதும் நிகழாமலும்
வீரம் மிகக்கொண்டும்
மானம் பெரிதெனப் போற்றியும்
நாடாள்பவனே நல்லதோர் அரசனாவான்
வருவாய்க்கு வழியமைத்தலும்
வந்த பொருளைச் சேமித்துக் காத்தலும்
காத்த செல்வத்தைத் திறம்பட
செலவிடுதலுமே நல்லாட்சியாகும்
எளிதில் காட்சி தருபவனும்
எவரிடத்தும் கடுஞ்சொல் கூறாதவனும்
ஆளுகின்ற நாட்டை சிறந்த நாடென்று
உலகமே போற்றும்
அன்போடு பேசி அளவற்றுக் கொடுத்து
எளியோரைக் காக்கும் வள்ளல்களுக்கு
இந்த உலகம் புகழனைத்தும் தந்து
அவர்களின் விருப்பம் போல் அமையும்
நீதி நிலைநாட்டி மக்களைக் காக்கின்ற
மன்னவன் கடவுள் என்றே கருதப்படுவான்
கேட்கப் பொறுக்கமுடியாத
விமரிசனங்களையும்
கேட்டுப் பொறுக்கின்ற மன்னவனின்
ஆட்சியின் கீழ் இந்த உலகமே தங்கும்
ஏழைக்குப் பொருள் அள்ளிக் கொடுப்பதும்
எதிரிக்கும் கருணை அன்பு தருவதும்
தவறாமல் நீதி நிலைநாட்டுவதும்
நலிவுற்றோரின் நலம் பேணிக் காத்தலும்
ஆகிய நான்கும் உடைய அரசன்தான்
அரசர்க்கெல்லாம் ஒளிவிளக்கைப் போன்றவன்
படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசு ளேறு
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு
தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு
காட்சிக் கெளியன் கருஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கிழ்த் தங்கும் உலகு
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி
அதிகாரம் 039
பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி
வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை
No comments:
Post a Comment