தமிழ் கனடா - 008 முதல் கனடா 1867


எல்லாம் சரிதான், கனடா எப்போதுதான் உருவானது?

1867 ஜூலை முதல் தேதிதான் இன்றைய ஒண்டாரியோ, கியூபக், நியூ பிரன்ஸ்விக், நோவா ஸ்கோசியா ஆகிய மாகாணங்களை ஒன்றாய்ச் சேர்த்து முதன் முதலில் ஒரு நாடாக கனடாவை உருவாக்கினார்கள். இன்றைய கனடாவில் இது கால்வாசிக்கும் சற்றே அதிகம். அவ்வளவுதான்.

பிறகுதான் கனடாவின் கட்டுக்கோப்பான அரசியல் என்னும் காந்த சக்தியால் ஈர்க்கப்பட்டு மெல்ல மெல்ல மற்ற இடங்களும் வந்து சேர்ந்து கொண்டன. இதனால் கனடா, உலகின் இரண்டாம் மிகப்பெரிய நாடாகிவிட்டது.

இதில் சில வலுவான அரசியல் காரணங்களும் உண்டு. அவற்றில் முதன்மையானது, ஒன்று சேர்ந்த நாடாக கனடா உருவாகாவிட்டால், அதன் பலபகுதிகளும் அமெரிக்காவுக்கு பெப்பரோணி பீட்சாவாக ஆகிவிடக் கூடும் என்ற ஐயம். அமெரிக்கர்களுக்கு பீட்சா ரொம்பப் பிடிக்கும். துண்டுபோடாமலேயே தின்று முடிப்பார்கள். பக்கத்தில் ஒரு கோக் இருந்தால் போதும். அதான் ஏழு ஏரிகள் இருக்கின்றனவே. அவை சோக்கான கோக் ஆகாதா?

இந்த ஒண்டாரியோவையும் கியூபக்கையும் பற்றி நாம் மீண்டும் பார்ப்போம். மற்ற இரு மாகாணங்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாதீர்கள். அவை குட்டியூண்டு மாகாணங்கள்தான். இலங்கைத் தமிழருக்கு அவ்வளவாக சம்பந்தமில்லாத இடங்களும் கூட. ஆனால் அவை பாரம்பரிய பண்பாடுகள் கொண்ட இடங்கள்.


இலங்கைத் தமிழர்கள் கொத்துக் கொத்தாக வாழ்வது முக்கியமான மூன்று இடங்களில்தான். அவற்றில் முதன்மை இடம் டொராண்டோ தான். சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள். இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?

அடுத்தது மாண்ட்ரியல். அதன் பிறகு என்றால் வேங்கூவரைச் சொல்லலாம். பிறகு சில்லறையாக இங்கும் அங்குமாக சிதறிக் கிடப்பார்கள் வேலை நிமித்தமாக. அதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

மேப்பிள்(maple) இலைதான் கனடாவின் அடையாளச் சின்னம். ஏனெனில், சில நூறு வருடங்களாகவே மேப்பிள் இலை கனடியர்களின் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வருகிறது. மேப்பிள் மரங்களிலிருந்து உணவு எடுக்கும் கலையை பழங்குடியினர் கண்டுபிடித்திருந்தனர்.


மேப்பிள் மரங்கள் கனடாவில் ஏராளமான இடங்களில் தாராளமாக வளர்ந்திருக்கும். மரபு உரிமைகளுக்கும் போர்க்கால அடையாளத்திற்கும் கனடியர்கள் அந்தக் காலம் தொட்டே மேப்பிள் இலையைத்தான் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

மிகவும் அழகான வடிவம் கொண்ட மேப்பிள் இலையின் பெயரை ஞாபகம் வைத்துக்கொள்ள 'மாப்பிள்ளை' என்ற நம்ம ஊர்ச் சொல்லை நீங்கள் நியாயமாகப் பயன் படுத்திக்கொண்டால் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை.

புகுமுக வகுப்பில் விஞ்ஞான பாடத்தில் வந்த 'அவகாட்ரோ ஹைபதீசிஸ்' மூளையில் அறைகளில் தங்க மறுக்கிறது என்பதற்காக, என் நண்பன் ஒரு எளிமையான உத்தியைக் கையாண்டான். 'அவ காட்றா சப்பாத்தி' என்றான். முதலில் கேட்கும் போது வந்த சிரிப்பை எனக்கு அடக்க முடியவில்லைதான். ஆனால், அந்த அவகாட்ரோ ஹைபதீசிஸ் பிறகு ஒருநாளும் எனக்கு மறக்கவே இல்லை. அதோடு அதைக் கேட்கும்போதெல்லாம்கூட என் நண்பனின் ஞாபகமும் அதோடு இணைந்த சிரிப்பும் பொத்துக்கொண்டு வரும். நண்பனின் இந்த அரையணா வேலைக்கு ஆயுள் வெற்றியா?

மேப்பிள் மரங்களிலிருந்து தேன் போன்று ஒரு சாறு எடுப்பார்கள். அதன் ருசி தரமாகவே இருக்கும். நயாகராவின் இடப்புறக் கடை களில் பல்வகை அழகு சீசாக்களில் அடைக்கப்பட்டு, விற்கப்படும் மேப்பிள் பானத்தை (maple syrup) பெரும்பாலும் எல்லோருமே வாங்கிச் செல்வார்கள்.

பருவ மாற்றத்திற்கு ஏற்றாற்போல மேப்பிள் இலை தன் முக அழகை வண்ண வண்ணமாய் மாற்றுவது பேரழகு. அதுவே கனடிய தேசியக் கொடியின் உள்ளேயும் கவர்ச்சியாய்ச் சிரிக்கிறது.

பிப்ரவரி 15, 1965 அன்றுதான் சிவப்பு மேப்பிள் இலையை கனடா தன் கொடிக்குள் குடியேற்றியது. இந்த சிவப்பு மேப்பிள் இலையை, கருணை உள்ளம் கொண்ட கனடா, நிர்கதியானவர்களுக்கு நம்பிக்கை தரும் சின்னமாகவும் பயன்படுத்தி வருகிறது.

2 comments:

நா. கணேசன் said...

நண். புகாரி,

ஒரே வாரத்தில் இவ்வளவு இடுகைகளும் ஒரு சாதனைதான்.

பிற வாசித்த பின்.

நா. கணேசன்

ராம சாமி said...

புகாரியைப் படித்தால் புகாரியிடம் உள்ள துள்ளலும் துடிப்பும் என்னிடமும் ஒட்டிக்கொண்டு அதிகம் தேடச் செய்கின்றது; வயதிலும் 10 குறைந்திட்ட உணர்வு ஏற்படுகின்றது. நான் ஒரு ஓய்வு பெற்ற PSU. கால் தாமாதமாகிவிட்டாலும் அறிமுகமானது குறித்துப் பெரு மகிழ்ச்சியே.
திறந்த வெளிப் பல்கலக் கழகங்களில் முதுகலைப் பட்டம் பெற்று் பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ள 100 வழக்கறிஞர்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. 2008-லிருந்தும் மீண்டும்ப் சரிபார்ப்புநடக்கின்றது. தி.வெ.பல்கலைக்க்ழகங்களும் பெருகிக் கொண்டே போகின்றன. தங்களப் போன்றோர் உண்மையை உலகிற்குக் கொண்டு செல்ல வேண்டும். rssairam99@gmail.com