13. "புலம்பெயர் இலக்கியம்" என்றொரு பிரிவு தமிழிலக்கியத்திற்கு அவசியமா?



லண்டன் கவிஞர் சக்தியின் கேள்விக்கு கனடா கவிஞர் புகாரியின் பதில்


அவசியம் அவசியம் இல்லை என்பது இரண்டாம் பட்சம். எப்போதும் தானே வளர்வதைத் தாங்கிப்பிடிப்பதே இலக்கியத்தில் உச்சம். இதுகாறும் தமிழில் உருவான இலக்கியங்களெல்லாம் வரலாமா என்று உத்தரவு கேட்டுக்கொண்டு வந்ததில்லை. வந்தபின் அதற்கொரு பெயர் சூட்டிப் பார்க்கிறோம். இலக்கியத்தில் ஒரு போட்டி மனப்பான்மை இருப்பது அதன் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. எனவே இலக்கியத்தில் பிரிவுகள்
வரவேற்புக்குரியவை. புலம்பெயர்ந்தவர்களைப் பற்றி புலம்பெயர்ந்தவர்கள்தான் எழுதவேண்டும் என்று ஒன்றுமில்லை. புலம்பெயர்ந்தவர்களே எழுதினால் அதில் வீரியம் அதிகம் இருக்கும் என்பதும் உண்மை. நாடுவிட்டு நாடு நடக்கும்போதே பாட்டு கூடவே வருகிறது என்றால் அதில் எத்தனை உண்மை இருக்கும், உணர்ச்சி இருக்கும், ஆழம் இருக்கும், அதிசயம் இருக்கும்?

அதே வேளையில், புலம்பெயர்ந்தது தமிழனா தமிழா என்றொரு கேள்வியை நான் எனக்குள் கேட்டுவைத்தேன். தமிழனைக் காட்டிலும் அதிகம் தமிழே புலம்பெயர்ந்தது என்று தீர்மானித்தேன். அதற்காக ஒரு கவிதையும் எழுதினேன்.

புலம்பெயர்ந்தாள் புலம்பெயர்ந்தாள்
புலம்பெயர்ந்தாள் தமிழ்த்தாய்
இளமையோடும் புதுமையோடும்
தலைநிமிர்ந்தாள் தமிழ்த்தாய்

ஓசைகளாய் இருந்தவள்தான்
ஓலைகளில் பெயர்ந்தாள்
ஓலைகளாய்ப் பெயர்ந்ததனால்
சங்ககாலம் கொண்டாள்

ஓலைகளில் வாழ்ந்தவள்தான்
தாள்களுக்குள் பெயர்ந்தாள்
தாள்களுக்குள் பெயர்ந்ததனால்
தரணியெங்கும் நிறைந்தாள்

காகிதத்தில் கனிந்தவள்தான்
கணினிக்குள் பெயர்ந்தாள்
கணினிக்குள் பெயர்ந்ததனால்
அண்டவெளி வென்றாள்

அழிந்திடுவாள் என்றோரின்
நரம்பறுத்து நின்றாள்
இணையமென்ற மேடைதனில்
மின்னடனம் கண்டாள்

அயல்மொழியைக் கலந்தோரை
வெட்கியோட வைத்தாள்
அழகுதமிழ் அமுதத்தமிழ்
ஆட்சிமீண்டும் பெற்றாள்

4 comments:

செல்வன் said...

புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்பு தமிழ் இலக்கியத்துக்கு கட்டாயம் புது பரிணாமத்தை சேர்க்கும்.எத்தனைநாள் தான் குண்டுசட்டியிலேயே குதிரை ஓட்டுவது?



--
செல்வன்

Unknown said...

நன்றி செல்வன்

என் கருத்தோடு ஒருமித்தீர்கள்

வவேசு said...

அன்புள்ள புகாரி
தமிழ்த்தாயின் புலப்பெயர்ச்சி ஓர் அருமையான கவிதை. இனி எங்குப் பெயரப்போகிறாள் என்ற கேள்விக்கே இடமில்லை. புதிய ஊடகங்கள் கிடைத்தால் அங்கும் பெயர்வாள் என்ற நம்பிக்கையை உங்கள் கவிதை வரைகிறது. இந்தப் புலப்பெயர்ச்சி வெற்றிக்குக் காரணம் தமிழ்த்தாய் தன் சேய்களின் இதயங்களிலிருந்து புலம் பெயராமல் நிலைபெற்றுள்ளாள் என்பதுதானே உண்மை!
வாழ்த்துகள்
மிக அன்புடன்
வவேசு

தமிழ்ப்பயணி said...

துருவ பென்குயின் அழகையும்,
பாலை ஒட்டகத்தின் சகிப்பையும்,
குழந்தை நிகர் டால்பின் அன்பையும்
எம் தமிழன்னை கூறலாகாதோ..?

தமிழுக்கு இயல்பாய் ஏற்படும் ஒவ்வொரு பிரிவும் அணிகலன்களே.