ஆழ்மனதில் உள்ள காழ்ப்புகளை எல்லாம் இணையத்தில் கொட்டுகிறார்கள்


இணைய விவாதங்களில் நான் மனக்கசப்புகளையே அதிகம் சந்தித்தேன். இணையம் ஒரு சுதந்திர வெளி. நமக்கு சுதந்திரத்தை எப்படி பயன்படுத்துவதென தெரியாது. திண்ணை விவாதங்களிலும் ·பாரம் ஹப் என்ற தளத்தின் விவாதங்களிலும் நான் நேர்மையாகக் கலந்துகொண்ட நாட்களில் பலர் புனைபெயரில் வந்து என்னை வசைபாடினார்கள். என் கருத்துக்கள் திரிக்கப்பட்டன. மீண்டும் மீண்டும் நான் சொல்லியவற்றையே விளக்கிச் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானேன்

இணைய வெளியில் ஒருவகையான மனப்பிறழ்வு அளவுக்குச் சென்று பிறரை வசைபாடும் மனிதர்கள் அதிகம் உலவுகிறார்கள். இவர்களுக்கு கருத்துக்கள் எவையும் முக்கியமில்லை. எதையாவது ஒன்றை தங்கள் தரப்பாக வகுத்துக்கொண்டு வசையை கொட்டவேண்டியதுதான் இலக்கு. இணையம் அவர்களுக்கு ஓர் இடத்தை அளிக்கிறது. அவர்கள் ஒளிந்து கொள்ள வாய்ப்பும் அளிக்கிறது. தங்கள் ஆழ்மனதில் உள்ள காழ்ப்புகளை எல்லாம் இணையத்தில் கொட்டுகிறார்கள்.

பொதுவாக இணையவசைகளின் பாணியை கவனித்தால் ஒன்று புரியும். எந்தவகையிலும் பொருட்படுத்தத்தக்க எதையுமே எழுதும் திராணி இல்லாதவர்கள்தான் அதிகமும் தீவிரமான விமரிசனங்களில் ஈடுபடுகிறார்கள். குறிப்பிடத்தக்க விஷயங்களை எழுதிப் புகழ்பெற்றவர்கள்தான் இவர்களின் இலக்கு. இது ஒருவகை ஆற்றாமையின், தாழ்வுணர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமே. ஆனால் இத்தகைய மனச்சிக்கல்கள் இணையம் அளிக்கும் அற்புதமான விவாத வாய்ப்பை பயன்படுத்தமுடியாமல் செய்கின்றன.

இன்று இணையத்தில் நமக்கு வாசிக்கக் கிடைப்பவற்றில் தொண்ணூறு விழுக்காடு குப்பையே. ஒன்று அவதூறுகளும் வசைகளும் கலந்த விஷமயமான குப்பைகள். அல்லது எந்தவிதமான பொருளும் இல்லாமல் போகிறபோக்கில் எதையாவது எழுதித்தள்ளும் சருகுக் குப்பைகள்.

தமிழ்ச்சமூகத்தின் குப்பைக்கூடையாக இணையத்தை ஆக்கியவர்கள் படித்த , பதவிகளில் இருக்கும் உயர்நடுத்தர வற்கத்தினரே என்பது நாம் வெட்கி தலைகுனியவேண்டிய விஷயம். இன்று ஒருவர் தமிழ் இணையத்தை மட்டும் பலவருடங்கள் வாசித்தார் என்றால் அவர் எந்தவகையான பொது அறிவும் இலக்கிய அறிவும் இல்லாத பாமரராகவே இருப்பார். தமிழில் உள்ள பல மூத்த வலைப்பதிவர்களின் வலைப்பூக்களை பார்த்தால் இது தெரியும், ஒரு பொதுப்புத்தி கொண்ட வாசகன் மதிக்கும் ஒரே ஒரு பதிவுகூட இல்லாமல் பல வருடங்களாக அவை செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன! இத்தனை வருடங்கள் அவர் குமுதம் போன்ற ஒரு வணிக அச்சிதழை வாசித்தால்கூட அடுத்தகட்டத்தை நோக்கி நகர முடியும்.

தமிழ் இணைய உலகின் இந்த இழிநிலையை மாற்ற என்ன செய்யமுடியும் என்றுதான் இப்போது கவனிக்க வேண்டும். நமக்குப்பிடிக்காதவர்களை தாக்குகிறார் என்ற ஒரே காரணத்துக்காக அவதூறுகள் செய்பவரையும், வசைபாடுபவரையும் நாம் அங்கீகரித்து ஆதரித்தோம் என்றால் தமிழுக்கு ஒரு பெரும் கெடுதலை அளிக்கிறோம் என்று நாம் உணர்ந்தாக வேண்டும்.

ஜெயமோகன் எழுதிய இணைய உலகமும் நானும் என்ற கட்டுரையிலிருந்து சில பகுதிகள்

Comments

ஈஸ்வரன் said…
கட்டுரையை படிக்கும்போது இவளவு அருமையாய் இருக்கிறதே என்று நினைத்துகொண்டேன். ஆஹா நல்லதொரு புது வலைத்தளத்தை கண்டுபிடித்துவிட்டோம் என்று மகிழ்ந்தேன். கடைசி வரிகளை படித்தவுடன்தான் புரிந்தது இது ஜெமோ எழுதியது என்று. No wonder it is great..
உங்கள் கருத்தென்ன புகாரி?
இது எந்தளவிற்கு உண்மை(யில்லை) என்பது, இணையத்தில் புழங்கிக் கொண்டிருப்பவர்களுத் தெரியும்தானே...
புகாரி ஐயா,

ஜெமோவின் அந்தக் கட்டுரை குறித்த எனது விமர்சனம்
வெறுப்போடு உரையாடுதல் என்ற கட்டுரையின் ஒரு பகுதி என்று நினைக்கிறேன்.

பழைய நாட்களில், டூரிங் கோட்டை என்று இருந்தது நினைவுக்கு வருகிறதா? பெரும்பாலான டூரிங் கொட்டைகளில் சிங்கிள் ப்ரொஜெக்டர் தான். அதனால் படத்தை நான்கு பகுதிகளாகத் தான் போடுவார்கள். அந்த ரீல் மாற்றிப் போடும் இடைவெளியைக் கூட நம்முடைய தரை டிக்கெட்டு மகாஜனங்களுக்குப் பொறுத்துக் கொள்ள முடியாது. ஒரே கூச்சலும் விசில் சத்தமுமாகத் தான் இருக்கும். படம் போட்டவுடனேயே சலசலப்பு அடங்கி விடும்!

அதுபோலத் தான், இணையத்திலும், எதைத் தேடுகிறோம், எப்படித் தேடுகிறோம் என்ற பிரக்ஞையே இல்லாமல் உலவும்போது எழும் ஆரம்பகாலப் பிரச்சினைகள் இவை! கொஞ்ச காலம் கத்திவிட்டு, அப்புறம் தங்களுடைய ரசனைக்குத் தகுந்த இடத்தில் ஒதுங்கி விடுவார்கள், அல்லது ஒதுங்கிக் கொண்டுவிடுவார்கள். இணையத்தில் அதிகரித்துவரும் சகிப்புத்தன்மையற்ற விமரிசனங்கள், பின்னூட்டங்கள் தனிநபர் தாக்குதல்களாகவே மாறிப் போனதால் நிறைய உளவியல் பிரச்சினைகள், தற்கொலைகள் என்று அதிகரித்ததை, அங்கே உள்ளவர்கள் கவலையோடு கவனித்து, உற்சாகமூட்டும் எழுத்துக்களாக மாறவேண்டி ஒரு இயக்கமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மின் தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில், முனைவர் நா.கண்ணன் நல்லதே எண்ணுக என்ற தலைப்பில் இது பற்றி ஒரு இழையை ஆரம்பித்து வைத்தார். அதே மாதிரி, இது ஒரு இயக்கமாகவேநடத்தப்படவேண்டும்!
ஜெயமோகனின் கருத்துடன் எனக்கு ஒப்புதல் உண்டு...

(ஆனா உங்கள் கருத்து என்னன்னு தெரியலையே...நீங்கள் ஜெயமோகனின் கருத்தை ஒப்புக் கொள்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா??)
ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ, தெகா, கோவி.கண்ணன், அது சரி (இப்படியும் ஒரு முகமூடியா),

ஜெயமோகனோடு நான் ஒத்துப்போகிறேன். அதனால்தான் படித்ததில் பிடித்தது என்று என் வலைப்பூவில் இதை பதிவு செய்தேன். ஆனாலும், எனக்கு வேறுபல கண்ணோட்டங்களும் உண்டு. அதில் ஒன்று இது:

http://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_8003.html

என் இரண்டாவது கவிதை நூலுக்கான முன்னுரையாக எழுதியது. இன்னும் சில பதிவுகளும் இணையம் பற்றி எழுதி இருக்கிறேன். அவை என் வலைப்பூவில் காணக்கிடைக்கும்.

அன்புடன் புகாரி
கிருஷ்ணமூர்த்தி,

நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள். நான் எழுதிய கவிதை ஒன்று உங்கள் பார்வைக்கு:

புழுக்களையும் சேர்த்துத்தான் எரு
-----------------------------

புண்படத் தேவையில்லை
புழுக்களையும் சேர்த்துத்தான் எரு
மரங்களின் வேர்களில் புழுக்களும் உணவு
தீயவை விழுங்கி
நல்லவையாய் நிமிர்கின்றன மரங்கள்
காற்றைச் சுத்திகரிக்கின்றன
நீரை நிறைக்கின்றன
நிலத்தைப் புதுப்பிக்கின்றன
நெருப்பின் உணவாகின்றன
வானம் தொடுகின்றன
சரித்திரம் மரங்களுக்கே!

அன்புடன் புகாரி
அது சரி என்பதை மட்டும் ஏன் முகமூடியாகக் கொள்ளவேண்டும்? அந்த நாளைய எம்ஜியார் படங்களில் கேணத்தனமாக ஐசரி ஐசரி என்று ஒரு காமெடிப் பீஸ் போல உளறி வழியாமல் தன்னுடைய முரண்தொடை வலைப்பதிவில் தன்னுடைய மனவோட்டத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்..!
அன்புள்ள கோவி.கண்ணன்,

//வலைப்பதிவுகள், இணைய எழுத்துகள் அனைத்தையுமே பொதுப்படுத்திவிட முடியாது, பொதுவிலும் அடங்காது,யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை, கட்டுப்பாட்டிலும் வராது.//

என்று நீங்கள் எழுதி இருப்பது முற்றிலும் உண்மை.

பெரும்பாலும் படைப்பாளிகள் இணையத்தை மிகுந்த ஆர்வத்தோடு அனுகுகிறார்கள். நிறைய எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கான தீனி எளிதில் கிடைப்பதில்லை என்பது உண்மைதான். அதோடு அவர்களுக்கான தனி அங்கீகாரமும் குறைவு. அச்சு உலகம்போல் இல்லை.

இணையத்தில் முகமூடிகளின் லூட்டிகள் அறிந்தவிசயம்தான். குழு மனப்பான்மையும் இருக்கவே செய்கிறது.

எனவே கற்பனையில் இருந்த மகோன்னத இணையத்தை எதிர்பார்த்து அது கிடைக்காததால் வரும் ஆதங்கம் வெளிப்படவே செய்யும். அவற்றில் உண்மையும் மிக உண்டு.

அன்புடன் புகாரி
கிருஷ்ணமூர்த்தி,

”அது சரி” என்பது புனைபெயர் என்றால் நான் வரவேற்பேன். முகமூடி என்றால் முதலில் அச்சமே தோன்றும்.

சில முகமூடிகள் அச்சம் தராமல் ஆக்கம் தருபவர்களாய் இருக்கிறார்கள் என்பது உண்மைதான் என்றாலும் முதலில் வருவது அச்சமே.

http://anbudanbuhari.blogspot.com/2009/10/blog-post_3265.html

இதை வாசித்துப் பாருங்கள். இதோடு முகமூடியைப் பற்றி ஒரு கவிதையும் எழுதி இருக்கிறேன். என் வலைப்பூவில் உண்டு.

அன்புடன் புகாரி
i too can agree with Jayamohan in some aspects.

The 1st step we should do is to reduce cinema reviews post.

Now for vettaikaran alone 60 reviews posts are here.
உங்கள் கருத்தும் அதுவேதானா? என் கருத்தும் அதுவே - சில மாற்றங்களுடன்.

எழ்துபவர் யார் என்பதைப் பொறுத்துத்தான் அவர் எழுதியது செல்லுபடியாகும்.

எழுதுபவர் ஜெயமோகன்.

என்ன எழுதுகிறார்:

//நான் நேர்மையாகக் கலந்துகொண்ட நாட்களில்...

எதையாவது ஒன்றை தங்கள் தரப்பாக வகுத்துக்கொண்டு,,,//

செயமோகனின் தரப்பு என்னவென்று எல்லாருக்கும் இன்று தெள்ளத்தெளிவாகவே தெரியும்: இந்துத்வா. பார்ப்பனீய ஆதரவு..இந்துமதம் மற்ற மதங்களைவிட சிறந்தது. இசுலாம், கிறுத்துவம் அன்னிய மதங்கள். இந்தியக்கிருத்துவர்கள் அன்னிய நாடுகளின் கைக்கூலிகள்..வருணாசிரமதருமம் நாட்டிற்கு நன்மை அதை கழகவிஷமிகள் மாற்றிசொல்லி மக்கள் மனதைக்கெடுக்கிறார்கள்...இந்தியத்தலித்துகளுக்கு ஹீரோ அம்பேத்கர் அல்ல. காந்தியே...’

இவையல்லாம் இவர் பயணிக்கும் வண்டிகள். இவர் வலைபதிவுகளின் நீண்ட கட்டுரைகள் வரைந்து இக்கருத்துகளை எழுதிவருகிறார். அவர் பின் ஒரு கூட்டம் உண்டு. அது, நீங்கள் செய்த்ததைப்போல அவர் எழுத்துகளை எடுத்துப்போடுகிறது.

இவர் என்ன எழுதுவார் என்பது முன்கூட்டியே தெரியும்போது, ’நான் நேர்மையாக...’என்று சொல்கிறார். இவரின் கபடநாடகத்தை பிறர் வெளிச்சம்போட்டுக்காட்டுகிறார்கள். அவர்களின் வார்த்தைப்பிரயோகம் தவறே ஒழிய நோக்கம் தவறில்லை புகாரி.

காந்தி பற்றிய கட்டுரை, பகவத்கீதை கட்டுரைகள் படியுங்கள். தன்னுடைய் பண்டிதத்தமிழைவைத்து இக்கருத்துகள வளரும் தலைமுறைமீது திணித்து மூளைச்சலவை செய்துவருகிறார்.

இப்படிச்சொல்லும் இவர், தனக்கு வரும் எதிர்வினைக்ள் யாரிடமிருந்து பார்த்தே எழுதுவார். அவர் தங்களுக்குச் சாதகமான் மறுவினைதான் போடுவார் என்று தெரிந்தே அவரிடம் கேட்கிறார்கள்.

தன் கருத்தை எதிர்ப்பவர்களை நைசாக மழுப்பிவிடுவார்.

//எதையாவது தங்கள் தரப்பை வைத்து...//என எழுதும் இவரின் த்ரப்புகளை இவரின் கூட்டம் கேட்டு வலபதிவுகளில் பரப்புகிறது.

இந்துத்வாவை எதிர்ப்பவர்கள், சாதி முறை எனும் சண்டாளத்தை எதிர்ப்பவர்கள், இந்தியா இந்துக்களுக்கே என்னும் கொக்கரிப்பை எதிரிபவர்கள் - இவரை எதிர்த்தே தீரவேண்டும் புகாரி.

அவர்கள் செய்வது இணையத்தை இழிவுபடுத்தும் செயலென்றால், அந்த இணையம்தான் எதற்கு?

அது இழி செயலென்றால், இவர் செய்யும் செயல் புனிதமா? இவரை எதிர்ப்பது இன்றைய இந்தியாவில் புனித சேவை, புகாரி. செய்தே ஆகவேண்டும்.

கோட்டும் சூட்டும் போட்டும் ஏமாற்றலாம். கந்தல் உடை போட்டும் ஏமாற்றலாம். இவர் கோட்டு சூட்டு ஆசாமி.

ஒன்றை மட்டும்தான் ஒத்துக்கொள்கிறேன். எதிர்வினைகள் பக்குவமாகவும் நாகரீகமாகவும் இருக்க்வேண்டும். அவ்வளவுதான்.
மணி மணிவண்ணன் said…
http://kural.blogspot.com/2009/12/blog-post.html

தமிழ் இணையம் தமிழர்களுக்குள்ளே உள்ள இடைவெளியைப் பெரிதும் குறைத்திருக்கிறது. இப்போது, ஒருவரை ஒருவர் வெட்டிக் கொள்ளாமல், ஒருவரைப் பார்த்து ஒருவர் கத்திக் கொண்டாவது இருக்கிறோம். இதையும் தாண்டிச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் தன்மை உள்ளவர்கள் ஆங்காங்கே செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வெகுசிலர் தங்களை அடையாளம் கண்டு கொள்ள இந்த இணையம் துணை புரிகிறது. இதுவே மாபெரும் வெற்றிதான். இதற்கு மேலும் வளருவது நம் கையில், நமது பண்பாட்டில்தான் இருக்கிறது.
மறைமலை said…
கணினித் துறையிலும் இணையதளத்திலும்
தனிப்பெரும் சாதனைகள் நிகழ்த்திய
மணிவண்ணன் மிகவும் தன்னடக்கத்துடன் தமது பணிகளை எடுத்துரைப்பது
பாராட்டத்தக்கது.ஏனைய முன்னோடிகளையும் மறவாமல் போற்றும் இப்பண்பு அனைவராலும் பின்பற்றப்படவேண்டும்.
தமிழினம் ஒன்றுபடும் நாள் மிகத் தொலைவில் . . . . . .இல்லை?
அன்புடன்,
மறைமலை
hayyram said…
//தங்கள் ஆழ்மனதில் உள்ள காழ்ப்புகளை எல்லாம் இணையத்தில் கொட்டுகிறார்கள்///

இப்படி பட்டவர்களை நேரில் பார்த்தால் உண்மையில் ரொம்ப டீசன்ட் ஆன ஆளா தெரிய வாய்ப்புண்டு. என்ன செய்வது. முகமூடி மனிதர்கள் அதிகரித்து விட்டார்கள்.
முகமூடி இல்லாமல கருத்து சொன்ன பல பேர் ஊர் ஊராக துரத்தப்படுகிறார்களே, அந்தச்சகிப்புத்தன்மைதான் முகமூடிகளுக்கு காரணம்.

இணையத்தில் உள்ள என் போன்றவர்கள் எழுத்தாளர்கள் கிடையாது, என் உளறல்கள் நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை. நான் தனிப்பட்ட முறையில் மற்றொருவரை தாக்காதவரை எதையும் உளரும் உரிமை எனக்குண்டு இல்லையா? அதே போல் என்னுடையதை உளறல் என்று விமர்சிக்கும் உரிமையும் உங்களுக்குண்டு.

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்