தமிழ் கனடா - 012 நீர்வளம்


ஹட்சன் விரிகுடா, செயிண்ட் லாரன்ஸ் நதி ஆகிய இரண்டும் கனடாவின் முக்கிய நீர்வழிப் போக்குவரத்துகளாகும். இவற்றின் வழியே உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் கப்பல்கள் நாட்டின் நடுக் கூடம் வரை வர இயலும்.

கனடாவின் சரித்திரத்தில் நீர்வழிப் போக்குவரத்துகள் மிக மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன. தார்ச் சாலைகள், ரயில் பாதைகள், ஆகாய மார்க்கங்கள் எல்லாம் தலை காட்டுவதற்கு முன் மக்கள் பயணங்கள் மேற்கொள்வதற்கும் வணிகப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கும் நீர்வழிகளைத்தான் பயன்படுத்தினார்கள். செயிண்ட் லாரன்ஸ், மெக்கென்ஸி, பிராஸர், சஸ்காட்சேவன், ஒட்டாவா, செயிண்ட் ஜான் ஆகிய நதிகள் கனடாவின் மிக முக்கிய நீர்வழிகளாகச் செயல்பட்டன.


உலகின் ஏனைய சரித்திரங்களைப் போல நதிக்கரையில்தான் கனடாவிலும் மக்கள் வாழத் தொடங்கினர், நாகரிகம் கண்டனர். கனடாவின் நதிகள்தான் உலகின் நீர்வழி உற்பத்தியாகும் மின்சாரத்தில் 15 சதவிகித மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. கனடாவுக்குத் தேவையான மின்சாரத்தில் மூன்றில் இரண்டு பங்கைத் தருகின்றன.

கொபெக் மாகாணத்தில் லா கிராண்ட் ஆற்றில் உள்ள ராபர்ட் பொரசா என்ற நீர்மின்சக்தி நிலையம்தான் கனடாவிலேயே அதிக மின்சக்தி உற்பத்தி செய்யும் நீர்மின்சக்தி நிலையமாகும். அதற்கு அடுத்தது சர்ச்சில் நீர்வீழ்ச்சியில் அமைந்த நீர்மின்சக்தி நிலையமாகும்.

கனடாவின் மீன்வளமும் குறிப்பிடத்தக்கது. நதிகள், ஏரிகள், கடல்கள் ஆகிய மூன்று வழிகளிலும் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. உலகில் சுமார் 20 ஆயிரம் வகை மீன் வகைகள் உள்ளதாகச் சொல்கிறார்கள். அதில் இருநூறு வகை மீன்களே கனடாவில் ஏரிகளிலும் நதிகளிலும் உண்டு. கடலைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.


கனடாவின் மீன்பிடித் தொழில் அதிக வருமானத்தையும் வேலை வாய்ப்பையும் தருவதாக இருக்கிறது. உலகில் மீன் உற்பத்தியில் கனடா 20 இடத்தை வகிக்கிறது.

குளிர்பதனம் செய்யப்பட்ட பட்ட குடிநீர் மீன்களை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்காவுக்கும் நார்வேக்கும் அடுத்தபடியாக கனடா மூன்றாவது இடத்தில் நிற்கிறது. உலகின் மிகப்பெரிய மீன்பிடி தளங்களில் இரண்டு கனடாவில்தான் அமைந்துள்ளது.

கடல் உணவு வகையில் விலை உயர்ந்ததும் மிகவும் சுவையானதுமான லாப்ஸ்டர் அதிகமாக கனடாவில் கிடைக்கின்றது. பலநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடல்வாழ் உணவுவகையில் எனக்கு மிகவும் பிடித்ததும் லாப்ஸ்டர்தான். இது கடினமான ஓடுகளுடன் கூடிய பெரிய இரால் போல இருக்கும்.


மீன்பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை என்ற பாட்டு கேட்டிருப்பீர்கள். கனடா அமெரிககாவிலெல்லாம் அப்படித்தான். பொழுது போக்கிற்காக, மீன் பிடிக்க விரும்புவோர் மீனைப் பிடிக்கலாம் ஆனால் மீண்டும் அதை உயிருடன் பிடித்த நீரிலேயே விட்டுவிடவேண்டும்.

மீன்களை எப்போது பிடிக்கலாம் எங்கே பிடிக்கலாம் என்பதற்கு கனடாவில் இடத்திற்கு இடம் வேறு வேறு சட்டங்கள் உண்டு. மீன் பிடிப்பதற்கு அனுமதி அட்டையும் பெற்றிருக்க வேண்டும்.

கனடியர்கள் மீன்களைவிட மற்ற உணவுகளையே அதிகம் உண்கிறார்கள் என்பதால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி வாரம் ஒரு நாளாவது மீன் உண்ணவேண்டும் என்று கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள்.


மீனி எண்ணையிலிருந்து உருவாக்கப்படும் மாத்திரைகள் உடல் நலத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் மிக முக்கியமானதாகும். நிறைய மீன் உணவு உட்கொள்பவர்களுக்கு இதுபோல மாத்திரைகளை விழுங்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் நம் தமிழ் மக்கள் அதிகம் மீன் உண்பதில் அக்கறை காட்டுகிறார்கள். கனடாவின் மீன்கள் போதாதென்று ஊரிலிருந்து வரவழைக்கும் மீன்களையும் வாங்கி உண்கிறார்கள். கடல்மீன், ஏரிமீன், இரால், நண்டு, லாப்ஸ்டர் என்று எதையும் விட்டுவைக்காமல் உண்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான விசயம்.

No comments: