இசைக் கவிதைகளும் மரபுக் கவிதைகளும்


சிங்கைக் கவிஞர் இக்பால் அவர்களோடு நான் இசைக்கவிதைகள் பற்றி மேற்கொண்ட ஓர் உரையாடலின் தொகுப்பு
கவிஞர் இக்பால்:உங்கள் கவிதை மரபுக்கவிதைபோல் இருக்கும் மரபைப் பின்பற்றாத கவிதை. மரபின் ஓசை ஒழுங்கு சரியாக இருக்கும்படி மாற்றங்கள் செய்தால் இன்னும் மின்னும்.

நான்:நான் மரபு இலக்கணம் பார்த்து எழுதுவதில்லைதான். அவற்றை எந்தக்காலமோ மறந்தும்போய்விட்டேன். மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆவலும் இல்லை. ஆனால் இசையில் மயக்கம் உண்டு நிறைய. எனவே திரையிசைப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் போல நான் என்பாட்டுக்கு ஓர் இசையை மனதில் வைத்துக்கொண்டு எழுதுகிறேன். இவற்றை இசைக்கவிதைகள் என்று சொல்கிறேன். மரபுக் கவிதைகள் என்று சொல்வதில்லை. எழுதினால் மரபுக்கவிதை அல்லது புதுக்கவிதைதான் எழுதவேண்டுமா? இடையில் இசைக்கவிதை என்று மெல்லிசையில் பாட இயலும் வண்ணம் எழுதக் கூடாதா?

கவிஞர் இக்பால்:தாராளமாக இசைக்கவிதைகள் எழுதலாம். அது கவிதையின் இன்னொரு முகம். ஒரு காலத்தில் "மரபுக் கவிதை , புதுக் கவிதை பற்றிய சர்ச்சைகள் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் நடந்த போது "திரைப்படப் பாடல்கள் அனைத்துமே புதுக்கவிதைகள்தாம்., அவற்றையெல்லாம் வரவேற்றுவிட்டு இப்போது ஏன் புதுக்கவிதையை எதிர்க்கிறீர்கள் ?" என்று மரபுக்கவிதை நண்பர்களிடம் நான் பேசியிருக்கிறேன்.

இதோடு இன்னொன்றையும் நான் சொல்ல வேண்டும்- மரபுக் கவிதைகளில் இசை பூரணமாக, கம்பீரமாக , வழுக்காமல் முழு அழகோடு ஜம்மென்று வீற்றிருக்கும். மரபு இலக்கணம் -யாப்பு என்பதெல்லாம் இசையை ஒழுங்குபடுத்துவதற்காக வந்ததுதான். மரபுக் கவிதையை இசைக்கவிதை என்று அழைப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

ஒரு சின்ன அனுபவம்:

சிங்கப்பூர் வானொலியில் மாணவர்களுக்காகப் " பாடிப் பழகுவோம் " என்னும் நிகழ்ச்சிக்கு ஏறத்தாழ 200 இசைப் பாடல்கள் எழுதினேன். அனைத்தும் சந்த ஒழுங்கு கொண்ட பல்வகைச் சிந்துப் பாடல்கள்., புதுப்புது யாப்பில் எழுதப்பட்டவை. இவற்றுக்கு இசையமைத்தவர் நல்ல இசையறிஞர். அவர் ஒருமுறைகூட 'இங்கே இடிக்கிறது, அங்கே சொல் கூடுகிறது; மாற்றித் தாருங்கள்' என்று என்னிடம் வந்ததில்லை. ஆனால் அதே நிகழ்ச்சிக்கு யாப்பு பின்பற்றப்படாமல் எழுதிய வேறு சிலரின் பாடல்களில் அடிக்கடி 'கூட்டல், குறைத்தல்,' வேலைகளுக்கு உட்பட்டன.

மரபு இசையை வற்புறுத்துவதுதான் கவிஞரே.

நான்:மரபுக்கவிதையில் இசை கம்பீரமாய் பூரணமாய் அமர்ந்திருக்கும் என்பது உண்மை. அதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது. மரபுக்கவிதைகள்
இசைக்கவிதைகள்தாம்.

மெல்லிசைக்குள் இருக்கும் கவிதைகளையும் இசைக்கவிதைகள் என்றுதான் நான் ஏற்றுக்கொள்கிறேன். அவற்றுக்கு மரபின் யாப்பிலக்கணம் அச்சுமாறாமல் இருக்கவேண்டும் என்பதில்லை என்பதையும் உணர்கிறேன்.

ஒருமுறை எம் எஸ் விஸ்வநாதனிடம் பாரதியாரின் பாடலைக்கொடுத்து இசையமைக்கச் சொன்னார்களாம். "யாருய்யா இதை எழுதினது? கூப்பிடுய்யா அந்த ஆளை கொஞ்சம் மாத்தணும்" என்றாராம்.

சமீபத்தில், கவிஞர் வைரமுத்துவின் புதுக்கவிதைகளை ஒரு திரைப்பட இசையமைப்பாளர் அருமையாய் இசையமைத்து மேடையேற்றினார். கலைஞர்தான் அதற்குத் தலைமை. நல்ல இசையமைப்பாளரும் திறமையான பாடகர்களும் எப்படியும் எதையும் பாடிவிடுவார்கள் என்பதற்கு அது சான்றாய் அமைந்தது

எம். எஸ். விஸ்வநாதன் தன் வீட்டின் முகவரியைக் கேட்டால், அப்படியே பாட்டாய்ப் படிப்பார். நானே கேட்டிருக்கிறேன்.

மரபின் இசை ஒரே தாளலயம் கொண்டது. இதை நீங்களே ஒரு முறை சொல்லியிருப்பதாக ஞாபகம். தண்டவாளத்தில் ரயில் ஓடுவதைப் போல கடைசிவரை ஓடி நிற்கும்.

மெல்லிசையின் சுகமே அதன் மாறுபாடுகள்தான் என்று நினைக்கிறேன். எனக்கு இசையறிவு கிடையாது. தெரிந்தவரையே எழுதி இருக்கிறேன்.

கவிஞர் இக்பால்:நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துகளில் எனக்கு முழு உடன்பாடே. நீங்கள் சொன்னதுபோல நல்ல இசையமைப்பாளர்களும் திறமையான பாடகர்களும் எதையும் எப்படியும் பாடிவிடுவார்கள் என்பதில் ஐயமில்லை. விஸ்வநாதன் தன்னுடைய வீட்டு முகவரியைக் கேட்டால் அப்படியே இசையாய்ப் பாடி
விடுவார் என்பதையும் நான் பூரணமாக ஏற்றுக் கொள்கிறேன். அதுமட்டுமல்ல. சாண்டில்யனின் " கடல்புறா" கல்கியின் "சிவகாமியின் சபதம்" போன்றவற்றையும் கூட இசைக்குள் திறமையான இசையறிஞர்களால் கொண்டுவர முடியும் என்பதிலும் எனக்குத் துளியளவும் சந்தேகம் கிடையாது. ஏன், தினத் தாள்களைக் கையில் கொடுத்து செய்திகளை இசையமைத்துத் தாருங்கள் என்றால் அதனைச் செவ்வனே செய்து முடிக்கும் இசைவாணர்கள் ஆயிரக் கணக்கில் இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர்களின் கற்பனை கலந்து இசைவடிவமேற்று வெளிவரும் போது பாடல்கள் பலரும் பாடிக் களிக்கும் நிலையை எய்தும்.அப்படி இசைவடிவம் பெறாத, இசையமைப்புக்குப் போகும் நிலையில் இல்லாத பாடல்ளுக்கு மரபு "இசை" கொடுக்கும் என்பது என் கருத்து. என்ன இசை, என்ன மெட்டு என்று தெரிவதற்கு முன்னால் கையில் வந்த பல பாடல்களை ரசிக்க முடியாமல் சங்கடப்பட்டிருக்கிறேன்.

இசையையும் குரல் இனிமையையும் அப்புறப் படுத்தினால், பல பாடல்கள் என்ன நிலையெய்தும் என்பதைக் கற்பனை செய்வது கடினமல்ல.

இசை, குரல்வளம் இல்லாமல் தனியே நிற்க வேண்டிய நிலையிலுள்ள பாடல்கள் மரபை ஏற்றால் அழகு பெறுமே என்பதே என் ஆதங்கம்.

நான்:
உங்கள் கருத்தோடு நான் உடன்படுகிறேன். மரபு நிச்சயமாய் அழகுதான். நான் மரபை மதிக்கிறேன். விரும்புகிறேன். இசைக்கவிதைகளால் (மரபு +
திரையிசைப்பாட்டு) ஈர்க்கப்பட்டுத்தான் நான் கவிதையே எழுதினேன். பிறகுதான் புதுக்கவிதை எழுதினேன். அதனுள்ளும் பரவலாய் இருக்கும் மெல்லிய இசையை நான் ரசிக்கிறேன். என் திசையில் தெளிவாக நான் செல்கிறேன்.

நல்லதொரு கலந்துரையாடல் கொண்டோம். நன்றி கவிஞரே.

கவிஞர் இக்பால்:
மிக்க மகிழ்ச்சி கவிஞரே. மரபு பற்றியும் இசைப்பாடல்கள் பற்றியும் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் நல்ல சந்தர்ப்பத்தை எனக்கு வழங்கினீர்கள், நன்றி

No comments: