தமிழ் கனடா - 003 துருவக்கடல்


கனடாவின் அட்லாண்டிக் கடற்கரைக்கும் பசுபிக் கடற்கரைக்கும் இடைத்தூரம் 5000 கிலோ மீட்டர்களுக்கும் அதிகம்.

சீட்டியடித்துக்கொண்டே ஒரு சாதனை நடை நடப்பதாக இருந்தால் ஒரு காப்புறுதி (insurance) எடுத்துக்கொள்வது நல்லது. ஆனால் தெற்கிலிருந்து வடக்கே நடக்கப் போகிறீர்கள் என்றால் காப்புறுதி பெறுவது கடினமாகலாம். அவ்வளவு குளிர் அங்கே.

தெற்கே அமெரிக்கா அன்புடன் உங்களை வரவேற்கும். வடக்கே துருவக்கடல் (ஆர்க்டிக்) உங்களை ஒரு வழியாக்கிவிடும். கறுப்புக் குளிருக்கு வெள்ளை முகம்! வித்தியாசமாக இல்லை?

கனடாவின் வடக்கு எல்லையிலும் மக்கள் வாழ்கிறார்கள். சுமார் ஒரு லட்சம் மக்கள் மட்டுமே. இங்கே பல்லாயிரம் வருடங்களாய் வாழ்ந்து வந்த செவ்விந்தியர்களை அபாரிஜினல் (Aboriginal) மக்கள் என்றே அழைக்கவேண்டும் என்பது இங்கே சட்டம். எஸ்கிமோக்கள், செவ்விந்தியர்கள் என்றெல்லாம் கூறினால் அரசு கோபித்துக்கொள்ளும். ஏனெனில் அது அவர்களை அவமதிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுவிட்டது.

மொத்த கனடாவின் மூன்றில் ஒரு பகுதி, இந்த முப்பெரும் பனி நிலப்பரப்புகளைக் கொண்ட வடபகுதி. இங்கே என்ன இருக்கிறது வெறும் பனிதானே என்று யாராவது நினைத்துக்கொண்டால், அவர் நெற்றியில் 'அச்சச்சோ ஆசாமி' என்று ஒரு முத்திரையைக் குத்திவிடலாம். தங்கச் சுரங்கம், வைரச் சுரங்கம், ஈயச்(lead) சுரங்கம், துத்தநாகச்(zinc) சுரங்கம் எண்ணை வளங்கள் (oil and gas) எல்லாம் இங்கே ஏராளம் ஏராளம்.

'நடு இரவுச் சூரியனின் நிலம்' Land of Midnight Sun என்று செல்லமாக இதனை அழைப்பார்கள். ஏன்? வெயில் காலத்தில் சில நாட்கள் சூரியன் 24 மணிநேரமும் மேலதிக நேரம் (overtime) போட்டு வேலை பார்க்கும்.

ஆனால் குளிர்காலம்தான் இங்கே மிக அதிகம். -63 பாகை செல்சியஸ் குளிரைத் தாங்குவீர்களா? குளிர் பதனப் பெட்டிக்குள் சென்று இறுக மூடிக்கொண்டால் கொஞ்சம் சூடாக உணர்வீர்கள்தானே? 0 பாகை செல்சியசில் நீர் உறைந்துவிடும். நீங்கள் எப்போது உறைவீர்கள்? வாசிக்கும்போதே உறைவீர்கள் :)

கோடையில் மேலதிக நேரம் வேலைபார்த்த சூரியன் குளிர்காலத்தில் விடுப்பெடுத்துக்கொண்டு ஓடிவிடும் ஒரு மூன்று மாதங்களுக்கு. பிறகென்ன, அங்கும் இருட்டு இங்கும் இருட்டு. நினைச்சுப் பாத்தா எல்லாம் இருட்டு என்று பாட்டுப் பாடவேண்டியதுதான்.

அங்கே போய் தங்கி உங்கள் உத்தியோகத்தை நிரந்தரப் பணி (Hire and no Fire) என்று மாற்றிக்கொள்ளப் போகிறீர்கள் என்றால், ஏராளமான சலுகைகளை கனடா உங்களுக்கு வாரி வழங்கும். அங்கே செல்ல இதுவரைக்கும் நான் தயார் இல்லை, நீங்கள் தயாரா?

எனக்கு டொராண்டோ குளிரே கட்டுபடியாகவில்லை. அவ்வப்போது கடித்துத் துப்பிவிட்டுப் போய்விடுகிறது. இப்போதும் கதவைச் சாத்திக்கொண்டு வீட்டைச் சூடேற்றி நிலைப்படுத்திக்கொண்டுதான் இதை எழுதுகிறேன்.


தனி விமானத்தில் மட்டுமே சென்று உல்லாசப் பயணம் மேற்கொள்ள வேண்டிய இடங்கள் இந்த கடும் பிரதேசத்தில் சில உண்டு. நாம் ஏன் இப்போது அங்கே நடுங்கிக்கொண்டே போகவேண்டும்? நம் தமிழ் ஈழத்துக்குள் விரைய வேண்டாமா?

4 comments:

nidurali said...

தங்கள் கட்டுரைப் படிக்கும்போழுது இளமை எண்ணங்கள் எனக்கும் வந்து மனம் மகிழ்வை தருகின்றன.

எழுத தொடங்கினால் நானும் உங்களுடன் இருக்க விருப்பம் வந்துவிடும். அசை போடுவது போதும்.

செல்வன் said...

இங்கே இன்று - 10 F.காலையில் அசால்டா டிஷர்ட் செருப்புடன் குழந்தையை ஸ்கூலுக்கு விட போனேன்.பத்து நிமிஷ நடைக்குள் காதுக்குள் குளிர் புகுந்து ஜிலீர் என்று ஆகிவிட்டது.

ஆனால் எனக்கு அலாஸ்காவில் ஒரு குளிர்காலத்தையாவது கழிக்கணும்னு ஆசை.சும்மா எப்படி இருக்கும்னு பாக்கதான்:)--
செல்வன்

அன்புடன் புகாரி said...

செல்வன்,

குளிர் கவிதையை வாசித்திருக்கிறீர்களா தெரியாது. இல்லையென்றால் இப்போது வாசிக்கலாம்


குளிர் குளிர் குளிர்
ஆடை துளைத்து
தோல் துளைத்து
தசைகள் துளைத்து
இரத்த நாளங்கள் துளைத்து
இருதயம் துளைத்து
உயிர் துளைத்து

இதோ
உள்ளே ஊசிகளாய்
உறைய வந்துவிட்டது
அந்தக் கனடியக் குளிர்

ஓ தீக் குழம்பே
நீதான்
எத்தனைச் சுகமாகிப் போனாய்
இப்போது

உன்னையே
ஆடையாய் நெய்து நான்
உடுத்திக் கொள்ளத் தவிக்கிறேன்
இந்தக் குளிருக்கு

காற்றே
உனக்குக் குளிர் தாளாவிட்டால்
வேறு எங்கேனும் போய்த் தொலை
கதறிக் கொண்டு வந்து
என்னை ஏன் குதறுகிறாய்

நானோ
துளைகளே இல்லாத
இன்னுமோர் கவசத் தோல் கேட்டு
இங்கே தவமிருக்கிறேன்

திமு திமுவென வந்திறங்கும்
வேற்றுக் கோளின்
வெள்ளைப் சிப்பாய்களாய்
எங்கும் பனி

கொட்டுகிறது
கொட்டுகிறது

அன்று
பூத்துப் பூத்துக் குலுங்கிய
பூக்களெல்லாம் இன்று எங்கே

சிகப்பும் மஞ்சளுமாய்
வர்ணங்கள் மாறி மாறி
சின்னச் சின்னக் கன்னியராய்
கைகோர்த்தும் முகம்முட்டியும்
ஆடி ஆடி
உள்ளத்தின் உட்தளங்களையும்
கொள்ளையடித்த
அந்த இலைகள் எங்கே

எழிலத்தனையும் இழந்துவிட்டு
எங்கெங்கும்
சிலுவையில் அறைந்த ஆணிகளாய்
கண்ணீர்க் கசிந்து நிற்கும்
மூளி மரங்களே
இன்று மிச்சம்

உயிர்களை
வேர்களில் ஒளித்து வைத்துக் கொண்டு
இன்னும் எத்தனை நாட்கள்தாம்
தங்களையே கரங்களாய் உயர்த்தி
அந்த வானதேவனிடம்
யாசித்து நிற்குமோ
இந்தப் பச்சை ஜீவன்கள்

அங்கிங்கெனாதபடி
எங்கும் பனியின் படர்வு

எண்ணிக்கையில் அடங்காத
வெள்ளை வெள்ளைப் பிரமிடுகளாய்

வெண்ணிற முகமூடிக்குள்
ஒளிந்து கொண்டு
குளிர் மூச்சு விடும் ராட்சச பூதங்களாய்

சிறைப்பட்ட வசந்தங்கள்
வானிலிருந்து சிந்தும்
வெள்ளை இரத்தமாய்
எங்கும் பனியின் படர்வு

எப்படி?

என் கண்கள் பார்த்திருக்க
இந்தக்
காடு மலை மேடுகளெல்லாம்ஒரே நாளில்
வெள்ளை ஆடைகட்டி
விதவைகளாகிப் போயின

ஆடைகளும்
ஆடை உடுத்திக் கொள்ளும் இந்த நாட்களில்
ஆள் அரவமில்லாத அனாதை வீதிகளில்
காற்று மட்டும் கட்டறுந்து ஓடுகிறது

காது மடல்களை
கண்ணில் அகப்படாத கொடிய மிருகம்
தன் விஷப் பற்களால் கடித்துத் துப்பியதுபோல்
ஒரு சுளீர் வலி நிரந்தரமாய் நீள்கிறது

தொடு உணர்வுகளெல்லாம்
எங்கோ தொலைந்துபோயின

கால்களைத் தொட்டுப் பார்க்கக்
கைகளை நீட்டினால்
கால்களையும் காணவில்லை
தொடப்போன கைகளையும் காணவில்லை

இதயத்துக்குள்
இனம்புரியாத ஏதோ ஓர்
இக்கட்டு நிலவுகிறது

நுரையீரல் சுவர்களில்
குளிர் ஈக்கள்
சவப்பெட்டிக் கூடு கட்டுகின்றன

பனிக்குள் காணாமல்போன
போக்குவரத்துச் சாலைகளில்
ஓடமறுக்கும் காருடன்
ஒரு பொழுது சிக்கிக் கொண்டால்
கடைசி ஆசை என்னவென்று கேட்காமலேயே
கொன்றுபோடும் இந்தக் குளிர்

வீதியெங்கும் வெள்ளைச் சகதி
சாலைகளில் உப்பைத்தூவி
உழுது உழுது நின்றால்தான்
இங்கே கார்கள் ஓடும்

குளிர்ப்பதனப் பெட்டிக்குள் அமர்ந்து
இறுக மூடிக்கொண்டுவிட்டால்
இந்தக் கனடியக் குளிரிலிருந்து
கொஞ்சம் தப்பிக்கலாமோ
என்றுகூடத் தோன்றுகிறது

ஒரே ஒருநாள்
இந்த மின்சாரம்
தன் மூச்சை நிறுத்திக் கொண்டுவிட்டால்
ஒட்டுமொத்த மக்களும்
மூச்சின்றிப் போவார்களோ என்ற பயம்
என்னை முட்டுகிறது

பூமியே
கொஞ்சம் வேகமாய் ஓடு

மீண்டும் அந்த
கனடிய வசந்தங்களில்
எங்களைத் தவழவிடு

அங்கேயே நீ
நிதானமாய் இளைப்பாறலாம்.

அரசி said...

ஆஹா... அருமையான வரிகள்.... அழகா இருக்கு கவிதை....
இந்த குளிரில் சபிக்கும் வார்த்தைகளை கவிதையா அழகா சொல்லிற்கிங்க...
எப்பெல்லாம் ஆர்டிக் ப்ளாஸ்ட் என்று சொல்லும் போதெல்லாம், இந்த கனடிய மக்கள் எப்படி இதை
எல்லாம் தாங்கி கொள்கிறார்கள் என்று நினைப்பேன்....

இன்னும் ஒரு மூணு நாலு மாசம் இந்த குளிரில் தள்ள வேண்டுமே!

அரசி...