10 அறிதலில்லா அறிதல்


மீன் தொட்டிகள் அழகானவை
அதனுள் நீந்தும் தங்க மீன்
காண்பதற்குக் கொள்ளை அழகு

ஆனால்
திமிங்கிலங்களுக்குச்
சரிப்படாது மீன் தொட்டிகள்
அது சுதந்திரமாய்
நீலக் கடலில் நீளப்பாயும்
இயற்கை அழகோடு
கம்பீரமாய் நீந்தித் திரியும்

சிலைகள் அழகானவை
செதுக்கச் செதுக்க அழகு கூடும்
செதுக்குபவன் கைகளில்
சிலிர்ப்போடு பேசும்

ஆனால்
அந்த நீல மலைத்தொடரை
செதுக்குவதென்பது நடவாது
அது தானே தடம்போட்டு
நீண்டு வளர்ந்த நீல மலைகள்
இந்தச் சிலை அதன்
இயற்கை அழகின்முன்
காணாமல் போய்விடும்

ஒரு குரங்கைக் கண்டேன்
அழகழகாய் சட்டை மாட்டிக்கொண்டு
சிங்காரமாய்ச் சீவிக்கொண்டு
குச்சைப் பார்த்துக் குட்டிக்கரணம் போட்டு
நிறைய சம்பாதிக்கிறது
கைதட்டும் கூட்டம் ஏராளம்

ஆனால்
அதன் தந்தைக் குரங்குபற்றி
அதற்குத் தெரியாமலேயே
போய்விட்டது

குட்டைமரம் பார்த்திருப்பீர்கள்
ஜப்பானியர் கிள்ளிக் கிள்ளியே
குள்ளமாக்கியிருப்பார்கள்
அதைப் பார்வையிட உலகில்
பல்லாயிரம் மக்கள்
அதைப் படைத்துவிட்ட பெருமை
ஆயுளுக்கும் போதும்

அந்த அருங்காட்சியகத்தில்
அணிவகுத்த கும்பலிடம்
காட்டு மரங்களுக்கும் இதற்கும்
என்ன வித்தியாசம் என்பதுமட்டும்
மறைக்கப்பட்டு மறக்கடிக்கப்பட்டுவிடும்

2 comments:

பூங்குழலி said...

"எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்"
இதை உணர்ந்து சிலர் தவித்தாலும் இதை உணராமலேயே காட்சிப் பொருளாகி விட்டோம் என்பதை அழகான உவமைகள் கொண்டு (தொட்டி மீன் -திமிங்கலம் ,சிலை -மலை ,போன்சாய் -மரம் ,குரங்கு )சொல்லியிருக்கிறீர்கள் புகாரி .

(வேர்களுக்கான தேடல் உங்கள் கவிதைகளில் அதிகமாக இருப்பதாக எனக்கு தோன்றுகிறது புகாரி )

சக்தி said...

அன்பின் நண்பரே புகாரி,

உங்கள் கவிதையின் அற்புத சாரத்தை அழகாய்


>> அந்த அருங்காட்சியகத்தில்
அணிவகுத்த கும்பலிடம்
காட்டு மரங்களுக்கும் இதற்கும்
என்ன வித்தியாசம் என்பதுமட்டும்
மறைக்கப்பட்டு மறக்கடிக்கப்பட்டுவிடும் >>


என்னும் வரிகளுக்குள்ளேயே புதைத்து விட்டீர்கள்.

அருமையான் கவிதை. பாராட்டுக்கள்

அன்புடன்
சக்தி