ஹ ஷ ஸ ஜ ஸ்ரீ க்ஷ


நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம். அதை இங்கு கேட்டு விடலாம் என பார்க்கிறேன். மொழி என்பது ஓசைகளை உள்ளடக்கியது. சரிதானே. ஓசைகளே எழுத்துக்களாகின்றன. இப்படி இருக்கையில், சில ஓசைகளுக்கான எழுத்து வடிவங்கள் நமது மொழியில் ஏதோ ஒரு காரணத்திற்காய் இல்லாமல் ஆகிறது எனில், அதை நிரப்புவது தானே முறை? ஜா, ஷா போன்றவை அப்படிபட்ட எழுத்துக்கள் தானே. இவற்றை உபயோகிப்பதில் என்ன தவறு? ழ நமது மொழிக்கே உள்ள ஓர் எழுத்து என்பதில் பெருமை படும் அதே நேரத்தில நமது மொழியில் இல்லாத எழுத்துக்கள் குறித்து கவலையும் பட வேண்டும் இல்லையா... z போன்ற இன்னும் எழுத்து இல்லாத சில ஓசைகளுக்கு எழுத்தை உருவாக்குவது நல்லது. இது எனது கருத்து மட்டுமே. இதன் மறுபக்கம் எனக்கு தெரியாது. இது குறித்த உங்களது பார்வையை எதிர்பார்க்கிறேன். - சித்தார்த்.

*

அன்பிற்கினிய சித்தார்த்,

அருமையான கேள்வி கேட்டிருக்கிறீர்கள். எனக்கும் பலகாலமாய் இந்தக் கேள்வி உண்டு. இந்தக் கேள்வி அந்தக் காலத்திலேயே எழுந்ததால்தான் கிரந்த எழுத்துக்களான ஹ ஷ ஸ ஜ ஸ்ரீ க்ஷ ஆகியவற்றைத் தமிழுக்குள் இழுத்துவந்தார்கள்.

ஆனால் என்னிடம் வேறு ஒரு கேள்வி உண்டு. நீங்களே கூறி இருக்கிறீர்கள். தமிழின் தனி எழுத்து ழ என்பதை. இந்த ழ வை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவீர்கள்?

ஆங்கிலத்துக்கு ஒரு புது எழுத்து தேவையில்லையா?

நான் சவூதி அரேபியாவில் வாழ்ந்த காலங்களில் கொஞ்சம் அரபிக் பரிச்சயம் ஏற்பட்டது. கொஞ்சம் எழுதவும் வாசிக்கவும் பயின்றேன். அதிலுள்ள சில எழுத்துக்களை ஆங்கிலத்தில் எழுதவே முடியாது.

கத்தான் என்ற ஓர் ஊர் உண்டு. அதை ஆங்கிலத்தில் Qatan என்று எழுதுவார்கள். ஆனால் அராபியர்கள் உச்சரிப்பது முற்றிலும் வேறு மாதிரி இருக்கும். அதற்கொரு எழுத்து ஆங்கிலத்தில் வேண்டாமா? இதெல்லாம் இல்லாமல் உலக மொழி அங்கீகாரம் எப்படி ஒரு மொழிக்கு வருகிறது?

முஅஅல்லம் என்று பெயர் அரபியில் வரும். அதை ஆங்கிலத்தில் Mu'allam என்று மேலே ஒரு குறியிட்டு எழுதுவார்கள். அராபியர்கள் சொல்லித்தந்தபிந்தான் அதன் உச்சரிப்பு நமக்குத் தெரியும். இல்லாவிட்டால் திண்டாட்டம்தான்.

எப்படிப்பார்த்தாலும், அராபியர்கள் அரபியை உச்சரிப்பதுபோல் நம்மால் உச்சரிக்கமுடியாது.

சைனாகாரர்கள் பேசக் கேட்டிருக்கிறீர்களா? பல எழுத்துக்களை உங்களால் பிடிக்கவே முடியாது. தமிழில் புதிய எழுத்துக்களைக் கொண்டு வர விரும்பும்போது எந்த மொழியிலிருந்து உள்ள சொல்லை உச்சரிக்க நாம் கொண்டுவரவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

இந்தியில் ழ என்ற எழுத்து இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது. இல்லை என்றுதான் நான் நினைத்திருக்கிறேன். தெரிந்தவர்கள் கூறுங்களேன்.

பிரஞ்ச் மொழி வாசகங்களைப் பார்த்திருக்கிறீர்களா? எல்லாம் தெரிந்த எழுத்துக்கள் போலவே இருக்கும். ஏனெனில் பெரும்பாலானவை ஆங்கில எழுத்துக்கள். ஆனால் நாம் உச்சரித்தால் அப்படியே தப்பாய்ப்போய் முடியும். பிரஞ்சுக் காரர்கள் அல்லது பிரஞ்சு அறிந்தவர்கள்தாம் நமக்குச் சரியானதைச் சொல்லித்தரமுடியும்.

சரி எழுத்துக்களை விடுங்கள். மனிதர்கள் எத்தனை வித்தியாசமாய் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு ஒரு ஆங்கிலப் பெண் தமிழ்ப்பெண் சைனா பெண் ஆப்பிரிக்கப் பெண் ஆகிய நால்வரையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

அவரவர் அவரவர் நிலையில் அழகல்லவா? இவள் அழகு இவள் அழகில்லை என்று சொல்லமுடியுமா? ஆனால் அவர்களுக்குள் எத்தனை வித்தியாசங்கள். அந்த வித்தியாசங்கள்தானே அவர்களைத் தனித்தனியாய் அடையாளம் காட்டுகின்றன.

வெள்ளைக்காரி: சற்று உயரமாக இருப்பாள். கால்கள் வலுவாக அழகாக இருக்கும். எனவே அவள் கால்களை வெளிக்காட்டியே உடை உடுத்துவாள். மார்புப்பகுதி பெரும்பாலும் பாலைவனமாய்க் கிடக்கும். முடி சொல்லவே வேண்டாம். கருப்பாய் இருக்காது, குறைவாய் இருக்கும்.

தமிழ்ப்பெண்: சுமாரான உயரமாய் இருப்பால். கால்கள் நோஞ்சானாய் இருக்கும். ஆனால் இடையும் இடை சுமக்கமுடியாத அழகுமாய் இருப்பாள். கண்கள் பெரியதாய் பேசும் கண்களாய் இருக்கும். நிறைய கூந்தலோடு இருப்பாள்

சைனா பெண்: குள்ளமாக இருப்பாள். பெரும்பாலும் சப்பை மூக்கு. சின்னச் சின்னப் பொருள்களாய்ப் பார்த்துப் பார்த்து தேடி கண்ணாடிப் பெட்டிக்குள் அலங்கரித்து வைத்திருப்பார்கள் பார்த்திருப்பீர்கள். அப்படி இருப்பாள்

ஆப்பிரிக்கப்பெண்: கருப்பு. வாட்டசாட்டமான உருவம் அதில் மிகையான பின்புறம். சீப்புக்குச் சிக்காத சுருள் கூந்தல். நல்ல உயரம்.

ஆனால் பாருங்கள் எல்லாப் பெண்களுமே அழகு. இப்படித்தானே ஒவ்வொரு மொழியும் அழகு எந்த மொழி அழகில்லாதது? சொல்லுங்களேன் பார்க்கலாம்.

தாய்முலைப்பாலோடு, தாய்மண் வாசனையோடு, மூதாதயர் மரபணுக்களோடு எந்த மொழி மூச்சின் உட்செல்கிறதோ அந்த மொழிதான் அவனவனுக்கு உயிர். இதனால் அடுத்த மொழிகளெல்லாம் அழகல்ல என்று பொருளல்ல.

எனக்குத் தமிழ்த்தாய்தான் மிக மிக இனிப்பானவள். அவள் மடியில்படுத்து பொன்னூஞ்சலாடுவதில்தான் என் ஆன்மாவுக்கு நிறைவு. அடடா தமிழ்த்தாய் எத்தனை அழகு என்று நான் நாளெல்லாம் அதிசயிக்கிறேன்!

சரி மீண்டும் உங்கள் கேள்வியின் மையப்பகுதிக்கு வருவோம்.

முகம் மாசம் சனி சக்கரம் என்றெல்லாம் எழுதுகிறோம். இதில் முகம் என்ற சொல்லில் க வுக்கு என்ன உச்சரிப்பு தருகிறீர்கள்? க என்றா ஹ என்றா? மாசம் என்ற சொல்லில் ச வுக்கு என்ன உச்சரிபு sa வா cha வா? சனி என்பதன் ச வும் சக்கரம் என்பதின் ச வும் உச்சரிப்பில் ஒன்றா?

இது தமிழில் மட்டுமல்ல அனைத்து மொழிகளிலும் உண்டு.

Cut Put இதில் u வுக்கு என்ன ஓசை? இரண்டிலும் ஒன்றா?

Sun Son எப்படி வித்தியாசப்படுத்துகிறீர்கள்?

hire, here, hear, heir, hair நுனுக்கமாக எப்படி உச்சரிக்கிறீர்கள்?

Station இதில் ti க்கு என்ன உச்சரிப்பு? ஏன்?

இன்னும் எனக்கு ஓர் ஒரு லட்சம் கேள்வியும் சொச்சமும் இருக்கிறது சித்தார்த்.

எனவே மிகவும் அவசியமான இடத்தில் மட்டும் கிரந்தம் பயன்படுத்துவேன் நான். அதாவது புஹாரி என்பதை புகாரி என்று எழுதுவேன். இதனால் உச்சரிப்பில் பாதிப்பில்லை. ஆனால் ஹாசன் என்பதை காசன் என்று எழுதமாட்டேன். சிலர் ஆசன் என்று எழுத முயல்வர். நான் ஹாசன் என்று எழுதுவதையே விரும்புகிறேன்.

6 comments:

N Suresh said...

அன்பினிய புஹாரி,

சித்தார்த்தின் கேள்வியில் இருக்கும் ஆழமான அர்த்தம் என்னை உங்களை புஹாரி என்று சந்தோஷமுடன் அழைக்க சுதந்திரம் தந்துள்ளது!

தமிழுக்கு "ழ்" அழகு!
உண்மை தான்.

இந்தியாவில் ஏறத்தாழ எல்லா இந்திய-மொழிகளிலும் "ழ" இருந்தாலும் தமிழ் என்ற மொழியிலேயே "ழ" என்ற எழுத்து இருப்பதால், தமிழுக்கு "ழ" அழகு!

மொழிகளை நான்கு நாட்டு பெண்களின் அழகோடு வர்ணனை செய்வதைக் கண்டு வியந்துபோய் விட்டேன். பெண்ணியத்தை கையில் வைத்துக்கொண்ட்டு பெண்ணியம் தெரியாமல் பேசிக்கொண்டிருக்கும் சிலரின் பார்வைக்கு இது படாமல் இருப்பதே நல்லது:-)

மனதில் எழும் எண்ணங்களின் சப்த வடிவத்தை அப்படியே எழுத்துவடிவத்திலும் கொண்டுவர வசதிகள் இருப்பின் அந்த மொழியை உபயோகிக்கும் சமுதாயத்திற்கு அது மிகவும் சௌகரியமாக இருக்கும்.

உங்களை புகாரி என்றெழுதி அழைப்பதை விட எனக்கு அன்பினிய புஹாரி என்றழைப்பதே மிகவும் பிடிக்கிறது என்பது எனது கருத்து.

தமிழுக்கு ழ அழகு
புஹாரிக்கு ஹ அழகு!

நல்வாழ்த்துக்கள்.

அன்புடன் என் சுரேஷ்

கோவி.கண்ணன் said...

//எனவே மிகவும் அவசியமான இடத்தில் மட்டும் கிரந்தம் பயன்படுத்துவேன் நான். அதாவது புஹாரி என்பதை புகாரி என்று எழுதுவேன். இதனால் உச்சரிப்பில் பாதிப்பில்லை. ஆனால் ஹாசன் என்பதை காசன் என்று எழுதமாட்டேன். சிலர் ஆசன் என்று எழுத முயல்வர். நான் ஹாசன் என்று எழுதுவதையே விரும்புகிறேன்.//

பலுக்குதல் (உச்சரிப்பு) முறையில் படிப்பது ஆங்கிலத்தில் வழக்கில் உள்ளது நம் தமிழில் நாம் பழகிக் கொள்வதில்லை.

வெற்றி என்ற சொல்லை ஒருவருக்கு தமிழ் சொல்லிக் கொடுத்துப் படிக்கச் சொன்னால் வெ.ர்..ரி என்றே படிப்பார். நாம வெ..ட்...ரி என்பதாகப் படிப்போம். இருக்கும் எழுத்தை வைத்து பிற மொழி சொற்களை அமைக்கும் போது படிக்கும் முறையில் மாற்றிப் படிக்கலாம். நடப்பில் கொண்டுவருவது கடினம் தான்.

ஜீஸஸ் என்பதை வீரமாமுனிவர் ஏசு என்று மொழிப் பெயர்த்தார். பிற மொழிச் சொற்கள் தமிழ் சொற்களை அந்த குறிப்பிட்ட ஒலி இல்லாது அமைத்து பேசுவது ஒன்றும் குறை அல்ல என்பதும் என் எண்ணம்.

ஆங்கிலத்தில் நெடில் எழுத்துக்களே கிடையாது ஆலமரம் என்பதை aalamaram என்று எழுத வேண்டி இருக்கும், ரேவதி - revathi என்றே எழுதுகிறார்கள். இவற்றையெல்லாம் தமிழுக்கு புது எழுத்துக்கள் வேண்டும் என்று சொல்லுபவர்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதே இல்லை.

ஆங்கிலம் கடன்வாங்கி அல்லது பிற மொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்துகிறது என்கிறார்கள், அதுவும் ஆங்கிலம் மாற்றியே பயன்படுத்தும் நாம தோசை என்று எழுதுவதை ஆங்கிலம் Dosa என்றே எழுதும்.

பிற மொழிச் பெயர் சொற்கள் அனைத்தும் பயன்பாடு மிகுதியானால் தமிழிலேயே அமைக்க முடியும் என்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை. விதண்டாவததிற்காக மிதிவண்டியின் அனைத்து பாகங்களையும் தமிழில் எழுத முடியுமா ? என்று கேட்பார்கள். அது தேவைபடுவது மிதிவண்டிக்காரருக்கும் அதன் பாகங்களை விற்பவருக்கும் மட்டுமே, தமிழர்கள் அனைவருக்குமே அது பயனாகவும் இருக்காது, ஆனால் இது போன்ற வீம்புக் கேள்விகள் தமிழ் குறித்து மிகுதியாகவே கேட்கப்படுகிறது.

எல்லாச் சொற்களையும் ஏற்றுக்கொண்ட ஆங்கிலம் மிகவும் கடினமாகப் போய்கொண்டு இருப்பதை யாருமே பேசுவதில்லை. Simplified English என்று எதிர்காலத்தில் ஆங்கிலத்தை மாற்றி அமைத்தால் தான் எல்லோருக்கும் எளிதாக இருக்கும் என்கிற நிலை வரும். ஒரு மருத்துவ மாணவனுக்கு தெரிந்திருக்கும் மருத்துவம் தொடர்பான ஆங்கிலம் பொறியல் மாணவனுக்கும் தெரிந்திருக்காது. இதையெல்லாம் தமிழ் குறித்து பரந்த மனப்பான்மை வேண்டும் என்று பொத்தாம் பொதுவாக எழுதுவோர் எண்ணிப் பார்ப்பது இல்லை.

அனைத்துச் சொற்களையும் ஒரு மொழி ஆங்கிலம் போல் சேர்த்துக் கொண்டே செல்லுமானால் அது மற்றொரு ஆங்கிலம் போல் தானே இருக்கும், மொழியின் தனி அடையாளமே காணாம்ல் போய்விடும் என்பதை மொழி குறித்து புரிந்துணர்வு குறைந்தவர்கள் எண்ணிப் பார்ப்பது இல்லை.

Unknown said...

thiru buhari avarkale, mika nalla arumayana katturai.ithu ponra pan muga thanmai than ulagin azhagu.

Anonymous said...

ayya sidhardh..varavekka vendiya maatrangal,sha,ja vendum tamilukku..mozhi manidhanin thodarbu saadhanam.saadhagamaahum batchathil andha yezhuthukkalai serpadhu nalladhey!sirappu zhagaram yenbadhu azhagiya aaravadhu viralaagavey yenakku thondrugiradhu..vaazh thukkal sidhardh.

Unknown said...

அன்புள்ள புகாரி, முதலில் தமிழ் மணம் இந்த வார நட்சத்திர பதிவராக தேர்ந்து எடுத்ததில் பாராட்டு தெரிவிக்கிறேன். நான் ஒரு மலையாளம் ப்ளோக்கர். தமிழ் பதிவாளர்களை மலையாளம் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் முயற்ட்சியில் ஈடுபட்டிருக்கிறேன். முதன்முதலாக ஹாய் நலமா என்ற பதிவை எழுதுகின்ற Dr M.K.Murukanandan அவர்களை அறிமுகம் செய்திருக்கிறேன். அடுத்தபடியாக உங்களை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். எனக்கு ஓரளவுக்கு தான் தமிழ் தெரியும். செந்தமிழ் அவ்வளவு வராது. இந்த இடுக்கையும் மலையாளத்தில் மொழி பெயர்த்து எனது ப்ளோகில் பப்ளிஷ் செய்ய விரும்புகிறேன். இதற்க்கெல்லாம் நான் உங்கள் அனுமதி கோருகிறேன். உங்களை பற்றிய விவரங்களும் உங்களது ஃபோட்டோவும் எனக்கு இ-மெயில் வாயிலாக அணுப்பித் தந்தால் மிக உதவியாயிரிக்கும்.

இப்படிக்கு,
கெ.பி.சுகுமாரன்.
kpsuku@gmail.com
http://kpsukumaran.blogspot.com

ஆயிஷா said...

அன்புடன் ஆசான்
அற்புதமான விளக்கம். இதனை விட ஒரு விளக்கம் யாராலும் தந்துவிட முடியாதுங்க. இது போன்ற கட்டுரைகள் உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கின்றேன்.
அன்புடன் ஆயிஷா