தமிழ் கனடா - 004 ஏரிகள் ஏரிகள்


கனடாவில் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலைக்குள் நாம் விரைந்து செல்ல வேண்டும்தான். ஆனாலும், கனடாவுக்குள் இலங்கைத் தமிழர்களை இறக்குமதி செய்யும் முன் நாம் ஒரு முறை அதனுள் இறங்கிப் பார்த்துப் பரிச்சயப் பட்டுக்கொள்ளவேண்டாமா? அப்போதுதானே, இலங்கையர் எங்கே இறங்கினார்கள் எங்கே வாழ்கிறார்கள் எப்படி வாழ்கிறார்கள் இனி என்ன அவர்களுக்குச் செய்ய முடியும் என்பதெல்லாம் நமக்குத் தெரியவரும்.

கனடாவை ஏரிகளின் பொன்நாடு என்று கூறினாலும் அது குறைத்துக் கூறுவதாகவே ஆகும். ஏன் தெரியுமா? சுமார் 3 லட்சம் ஏரிகள் (!!!) இங்கே இருக்கின்றன. (ஒரு லட்சத்திற்கு ஒரு ஆச்சரியம் என்ற விகிதத்தில் ஆச்சரியக் குறிகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன)

அதாவது சுமார் 10 கனடியர்களுக்கு ஓர் ஏரி. உண்மையைச் சொல்வதென்றால் கனடாவில் ஏரிகள் எத்தனை என்பது எவருக்கும் தெரியாத ஒரு கணக்கு. உலகிலேயே ஏரிகள் மிக அதிகம் உள்ள நாடு கனடாதான்.

அத்தனையும் படு சுத்தமான குடிநீர் ஏரிகள். ஒரு பொட்டும் உப்புக்கரிக்காத கடல் பார்த்திருக்கிறீர்களா? தங்களின் முதல் காதலை ஊர்ஜிதப் படுத்திக்கொண்ட கையோடு கடலுக்குள் இறங்கி கண்கள் பளிச்சிட நாக்கு, மூக்கு, காது, தோல் எல்லாம் ஒரே ஒரு காரியத்தை மட்டும் நடு இரவுப் பேய் மாதிரி அக்கறையோடு செய்துகொண்டிருக்க உல்லாசக் குளியல் போடும் நல்லவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் என் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.

அப்படி துளியும் உப்புக்கரிக்காத கடல் போலத்தான் கனடாவின் பெரிய ஏரிகள் இருக்கும். கனடாவில் என் முதல் வியப்பே இம்மாதிரி ஏரிகளைப் பார்த்துத்தான்.

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஐந்து மிகப் பெரிய ஏரிகள் உண்டு. Lake Superior - லேக் சுப்பீரியர் என்ற ஏரிதான் உலகிலேயே மிகப் பெரிய நன்னீர் ஏரி. இதன் அளவை நமக்குப் புரியும் வண்ணம் சுலபமாகச் சொல்லவேண்டுமானால், தமிழ் நாட்டில் முக்கால்வாசி இருக்கும் என்று சொல்லலாம். 'அம்மாம் பெருசு!'

இலங்கையை இதற்குள் உட்கார வைத்து தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டலாம். அப்புறம்... கொஞ்சம் நீச்சலடிக்கவும் வைக்கலாம் :)

அராபியக் கடலில் உப்பு மிகவும் அதிகம். கண்கள் எரிய எரிய அதனுள் நீச்சலடித்திருக்கிறேன் பலமுறை. அப்போதெல்லாம் என் கண்கள் கெஞ்சும், இந்தப் பாழாய்ப் போன உப்பு கொஞ்சம் குறைவாக இருக்கக் கூடாதா என்று. நாக்குக்கு கொஞ்சமேனும் உப்பில்லாமல் சரிப்பட்டுவராது. கண்ணுக்கோ அது சுத்தமாக ஒத்துவராது. இருக்கும் உப்பையும் கண்ணீராய்க் கொட்டிவிடும் கறுப்பு தேவதைகள்தானே கண்கள்.

இந்த ஏரிகளில் எனக்கு நீச்சல் அடிப்பது என்பது தென்றல் காற்றில் மல்லிகைப்பூக்கள் பறப்பதைப் போல பரவசமாக இருக்கிறது. ஆனால், இந்த வட அமெரிக்கர்களைப் பாருங்கள். படு மோசம். முக்கியமான விசயங்களுக்கு தண்ணீரைப் பயன் படுத்தாமல் திசுத் தாள்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். நினைக்க நினைக்க இது எனக்கு வெறுப்புதான்.

சென்னையில் தண்ணீர் இல்லாதவனும் அதிகாலையில் புத்திசாலித்தனமாய் கொலை கொள்ளை கற்பழிப்புகளை ஏந்தி தப்புத் தப்பாய்ச் சுப்ரபாதம் பாடும் அதிகாலைச் செய்தித்தாள்களை இந்த மாதிரி விசயங்களுக்குப் பயன்படுத்த அறுவறுப்பு கொள்கிறான். ஆனால் இங்கே வெள்ளைக்காரர்களின் சுத்தம் என்பது இந்த விசயத்தில் சொதப்பல்தான்.


கனடா வந்ததும் ஒவ்வொன்றாய்ப் பார்த்துப் பார்த்து நான் ஆச்சர்யப் பட்டேன் ஆனந்தப் பட்டேன். ஆனாலும் ஒரு சோடி விசயங்கள் மட்டும் என்னை எப்போதும் படுத்தி வைக்கின்றன. ஒன்று, கை கழுவ மட்டுமே தண்ணீர் இருக்கும் கழிப்பறை. அடுத்தது பரவலாகப் பரிமாறப்படும் பன்றியிறைச்சி. பன்றிக்கறி ரசிகர்கள் என்னை மன்னித்துத்
தொலைக்கவும்.

1 comment:

புலவர் அசோக் said...

உலகில் தண்ணீர் பஞ்சம் வரும், இருபது வருடத்தில் பூமியில் மக்கள் வசிக்க இடம் பத்தாமல் போகும் என்று முப்பது வருடம் முன்பு உலகின் எல்லா செய்தித் தாள்களிலும் தொடர்ந்து தலைப்பு செய்திகள் வந்தது. நாற்பது வருடம் கழிந்து இன்று இடமும் தண்ணீரும் நிறைய உள்ளது போல் அல்லவா உள்ளது.