தமிழ் கனடா - 006 கானடா கனடா


1535ல் பிரெஞ்சுக்காரரான ஜாக் கார்டியர் (Jacques Cartier) என்பவர் செயிண்ட் லாரன்ஸ் நதிக்கு வடக்குப் பகுதிக்கு வந்துசேர்ந்தார். அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த இரண்டு பழங்குடிப் பொடியர்களிடம் அவர்களின் இருப்பிடத்தைக் காட்டும்படி கேட்டார் கார்டியர்.

எப்படிக்கேட்பது? மொழிப்பிரச்சினை இருக்கிறதே? இவர் பிரெஞ்சு பேசினால் பொடியர்களுக்கு மூக்கில் பொடி வைத்தது போல் இருக்காதா? எனவே சர்வதேச மொழியில் பேசினார் - ம்கூம் - ஆடினார். ஊமை பாசை என்பது ஓர் அற்புத அபிநய நடனம்தானே?

பழங்குடியினரின் மொழியில் kanata என்றால் கிராமமாம். தொலைவில் இருந்த தங்கள் கிராமத்தை அவர்கள் சுட்டிக்காட்டி அதுதான் தங்களின் kanata என்று பீதியுடன் கூறிப் பின்வாங்கியதைத் தவறாகப் புரிந்து கொண்ட பிரெஞ்சுக்காரர் அந்தப் பிரதேசம் முழுவதற்கும் Kanata என்று பெயரிட்டு விட்டார். காசா பணமா?

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு


என்ற வள்ளுவன் குறள் அவருக்குத் தெரியாததால், தீர்மானமான ஒரு முடிவுக்கு அவரே வந்து kanata என்று திட்டவட்டமாக எழுதிவிட்டார் சரித்திரத்தில். நான் சரித்திரம் படிக்கும் போதெல்லாம் ஒரு சந்தேகத்துக்குள் அடைபடுவேன். யாரோ ஒருவரின் கூற்றை எப்படி மக்கள் சரித்திரம் இதுதான் என்று ஒப்புக் கொள்கிறார்கள் என்று. வேறு எவரும் எதையும் கூறாதபோது காக்கைக் குரலே பொற்குரல், அப்படித்தானே?

1547ல் தேசபடங்கள் வரையும் ஐரோப்பியர்கள் kanata என்று அழைக்கப்பட்டு வந்த நாட்டை Canada என குறிப்பிட ஆரம்பித்தார்கள்.


நல்லவேளை Canda என்றுதான் மாற்றினார்கள், கர்நாடகா என்று அல்ல. அப்படி மாற்றியிருந்தால், இந்நேரம் அமெரிக்காவுடன் ஒட்டியிருக்கும் ஏரிகளிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீரையும் அமெரிக்கர்களைக் குடிக்க விடமாட்டோம் என்று ஒரு தடுப்புச் சுவர் இங்கேயும் கட்டியிருப்பார்கள். அது சீனப் பெருஞ்சுவரைவிட பலமடங்கு பெரியதாகி உலகத்தின் மிகப்பெரிய அதிசயமாகி இருக்கும்.

எப்படியோ, 1550ல் வரைபடங்களில் ஐரோப்பியர்கள் Canada என்றே மிகத் தெளிவாக எழுதிவிட்டார்கள். ஆனாலும் 1791 துவங்கித்தான் Canada என்ற பெயர் அலுவல் பெயராக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இன்னொரு குட்டிக்கதை வேண்டுமா? இத்தோடு கதை கேட்பதை நிறுத்திக்கொள்கிறோம் என்று சத்தியம் செய்தால்தான் இன்னொரு கதை. இந்தக் கதை சொல்வதெல்லாம் எனக்குச் சரிப்பட்டுவராது. ஏதோ கட்டுரை என்றால், இங்கும் அங்கும் அறிந்த உண்மைகளை ஒட்டி ஒட்டி சொந்தக் கருத்துக்களையும் கொஞ்சம் ஊறுகாயாய்ச் சேர்த்துக்கொண்டு ஒப்பேற்றிவிடுவேன்.

இதுதான் கடைசி குட்டிக்கதை. என்ன, ஒப்புக் கொள்கிறீர்களா?

3 comments:

ரமேஷ் முருகன் said...

படிக்க நல்லா இருக்கு....தொடர்ந்து எழுதுங்கள்....

Thanks & regards,
Ramesh

Rathi said...

நண்பரே, உங்கள் பதிவு சுவாரஸ்யமாக உள்ளது, நன்றி. எனக்கு கனடாவின் பூர்விக குடிகள் இங்கே புறந்தள்ளப்பட்டு விட்டார்களோ என்றோர் ஆதங்கம் எப்போதுமே உண்டு. அதன் தொடர்பாக ஓர் கேள்வி. கனடாவின் தேசியகீதம் Oh, Canada, our home and native land.. என்று தொடங்குகிறது. இதில் என்னை உறுத்தும் விடயம், Native என்றால் அது பூர்வீகம் என்று தானே பொருள்படும். கனடாவின் பூர்வீக குடிகளை (செவிந்தியர்கள்) தவிர பிரான்சிலிருந்தும், பிரித்தானியாவிலிருந்தும் வந்தவர்கள் மற்றும் இப்போது உலகின் எல்லாப்பாகங்களிலும் இருந்து வந்தவர்கள் எப்படி இந்த நாட்டை தங்கள் பூர்வீக நாடு என்று பாடலாம். நான் ஆங்கிலம் புரியாமல் இதை குழப்பி கொள்கிறேனா? அல்லது இப்படி வரலாறு ஓர் தேசிய கீதத்தின் மூலம் திரிக்கப்படுகிறதா? எனக்கு புரியவில்லை. என் கேள்வி புரிந்தால், பதில் தெரிந்தால் சொல்லுங்களேன். நன்றி.

அன்புடன் புகாரி said...

அன்புள்ள ரதி,

தொடர்ண்டு ‘தமிழ் கனடா’ வை வாசித்து வாருங்கள். உங்கள் கேள்விகளுக்கு பதில் உண்டு. இது மட்டுமல்ல உங்களின் அனைத்துக்களையும் நீங்கள் இந்தப் பதிவுகளில் முன்வைக்கலாம். நான் பெரும்பாலும் அவற்றுக்கான பதில்களை உள்ளடக்கி இருப்பேன். அப்படி நான் விட்டிருந்தாலும், உங்கள் கேள்விகளால் தூண்டப்பட்டு எழுதுவேன் உங்களுக்கான நன்றியோடு