தூத்துக்குடியில் முத்துக் குளித்தேன்


புகாரி, நீங்கள் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் படித்தவரா? குற்றால அருவியைவிட இந்தச் செய்தி எனக்கு இனிக்கிறது. வ.உ,சி கல்லூரி நான் படித்த இடம் மட்டுமல்ல. நான் முதலில் அங்குதான் ஆங்கிலத்துறையில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தேன்.(1962-1965). அந்தக்கல்லூரி என்னோடு உயிர்த் தொடர்பு கொண்டது எப்பொழுது நான் தூத்துக்குடி சென்றாலும் மாலைப் பொழுதில் அந்தக்கல்லூரி வளாகத்திற்குச் சென்று அதன் உயிர்க்கற்களோடு பேசிவிட்டு வருவேன், அங்கே மல்லாந்து படுத்திருந்து பழைய நினைவுகளை அசைபோடுவேன். அங்கேதான் பேரசிரியர் அ.சீ.ரா 1951லிருந்து முதல்வராக இருந்தார். இன்னும் நெருங்கிவிட்டீர்கள் என்றார் சந்தவசந்த இணைய குழுமத்தின் உரிமையாளர் இலந்தை இராமசாமி. அவருக்கு நான் இட்ட மறுமொழி இதோ:

இலந்தையாரே, நான் எப்போதும் உங்களோடு நெருங்கித்தான் இருக்கிறேன். எனக்கும் என் கல்லூரிக்குச் சென்று அப்படியே சுற்றிச்சுற்றி வந்து நிம்மதியாய் அமரவேண்டும்போல் இருக்கிறது.

BBA (Bachelor of Business Administration) இளங்கலை வணிகவியல் படிப்பதற்காக நான் தஞ்சைமாவட்டத்திலிருந்து தூத்துக்குடி சென்றேன். அப்போது அது சென்னைப்பல்கலைக்கழகத்தில் இல்லை.

பேருந்துகளில் சில முறை சென்றிருக்கிறேன். ஆனால் ரயில் பயணங்கள் எனக்குப் பிடிக்கும். மணியாச்சியில் மணியாச்சு மணியாச்சு என்று படுத்திருந்த நாட்கள் இனிமையானவை. பேருந்தில் வரும்போது மதுரை, அருப்புக்கோட்டை என்று வித்தியாசமான பயணம்.

வழியில் வரும் 'எப்போதும் வென்றான்' என்ற ஊரின் பெயர் என்னைக் கற்பனையில் ஆழ்த்தும். அது போல இன்னும் பல ஊர்கள். எங்களூர்ப் பகுதிக்கும் அந்தப்ப குதிகளுக்கும் நிறைய வித்தியாசம். வேடிக்கை பார்த்துக்கொண்டெ செல்வேன்.

தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் சென்றிருக்கிறேன். குற்றாலம் சென்றிருக்கிறேன். நாகர் கோவில் சென்றிருக்கிறேன். பாளையம்கோட்டை சென்றிருக்கிறேன். திருவனந்தபுரம் சென்றிருக்கிறேன். திருநெல்வேலி சென்றிருக்கிறேன். பாபநாசம் சென்றிருக்கிறேன். இப்படியாய் இனிப்பான நாட்கள் நிறைய. இனிப்புக்கு முதன்மைக்காரணம் கல்லூரி நாட்களும் அதில் உருவாகும் நண்பர்களும் என்பதே சரி.

தூத்துக்குடி உணவகங்களில் செட் சென்று சொல்லும் பரோட்டா உணவு எங்களுக்கு மிகவும் பிடிக்கும். அங்குள்ள திரையரங்குகளில் நிறைய பழைய படங்கள் பார்த்திருக்கிறேன். நான் 76 - 79 ல் அங்கிருந்தேன். என் தலைமைப் பேராசிரியரின் பெயர் நெஸ்டர். இளைஞர். தூத்துக்குடிகாரர்தான்.

Father of Economics என்று நாங்கள் செல்லமாக அழைக்கும் ஒரு பேராசிரியர் இருந்தார். அவரை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவர் பெயர் சட்டென்று நினைவுக்கு வரமறுக்கிறது. தூத்துக்குடிக்கு உங்களோடு சென்றால் இன்னும் இனிப்பாய் இருக்கும்போல் தெரிகிறது. ஆனால் கட்டாயம் செல்லவேண்டும். குமரியனந்தனை நான் தூத்துக்குடியில்தான் நேரில் சந்தித்தேன்.

அபூர்வமாக மழைபெய்யும் தூத்துக்குடியில். முட்காடுகளுக்குள் நண்பர்களோடு பேசிக்கொண்டே செல்வது வழக்கம். அந்தப் பக்கத்துப் பழக்க வழக்கங்களையெல்லாம் ஆசையாய்க் கேட்டுக்கொண்டு நடப்பேன். "ஏ மக்கா எங்கல போவுதே குண்டக்கமண்டக்க பேசாதவே" என்று அவர்கள் என்னைப் பழக்கப்படுத்திவிட்டார்கள். அவர்களைப் போலவே நான் பேசிவந்தேன். ஊருக்கு வந்ததும் என்ன ஒரு மாதிரி பேசுகிறாய் என்றார்கள் வீட்டில்.

நான் யாருடனும் சட்டென்று பழகுவேன். எங்கும் ஒட்டிக்கொள்வேன். செம்புலப்பெயல்நீராய் கொஞ்சமேனும் கலப்பேன். ஆகையால் எனக்கு நண்பர்கள் அதிகம்தான். ஆனால் யாரையுமே அதன்பின் என்னால் சந்திக்க முடியவில்லை. விரட்டிப்பிடித்து ஓரிருவரை மட்டும் சந்தித்தேன். ஒருவன் நான் அசிஸ்டெண்ட் கமிசனராகிவிட்டேன் புகாரி என்று மகிழ்வோடு கடிதம் போட்டான். (பரமேஸ்வரா எங்கிருந்தாலும் என்னைத் தொடர்பு கொள்வாயாக. நீ மட்டுமல்ல நம் நண்பர்கள் அனைவரையும் சந்திக்க ஆவலாக இருக்கிறேன். எவரையேனும் நீ சந்தித்தாயா?)

ஆக, ஒரு தூத்துக்குடி வாழ்க்கையை நான் வாழ்ந்திருக்கிறேன். திருச்சி சென்னையைப்போல் மாணவர்களுக்கு அங்கே சுதந்திரம் கிடையாது. ஒரு மாதிரி அடக்குமுறை தெரியும். தூத்துக்குடியில் நான் முத்துக்குளித்து எடுத்த முத்துக்கள் BBA வும் பல நல்ல அனுபவங்களும்.

4 comments:

துரை said...

அன்பின் ஆசான்

நானும் தூத்துக்குடிதான் என்று இங்கே சத்தமாய் சொல்லிக்கொள்ளுவதில் பெருமை அடைகிறேன்

சக்தி said...

அன்பின் நண்பரே புகாரி,

உங்கள் அனுபவங்கள் இனிக்கின்றன.

வாழ்த்துக்கள்

அன்புடன்
சக்தி

வேல் said...

ஹ்ம்ம்ம் பழைய இனிக்கும் ஞாபகங்கள்.... அருமையா எழுதிருக்கீங்க....

educations said...

Nice memories! please visit my blog
http://adf.ly/1CN3

note; please click-skip ad- after page loaded