7 வட அமெரிக்க நேர்முகத் தேர்வு


வான பீட்சாவை
மேக வெண்ணை தடவி
நட்சத்திர மேல்பூச்சு தூவி
ஒரே வாயில் உள்ளே தள்ளும்
சாகசம் வேண்டும்

கட்டபொம்மனின் கம்பீரமும்
நம்மூர் அரசியல்வாதியின்
கூழைக் கும்பிடும் அவசியம்

குலுக்கும் கரங்களில்
நெருப்புத் தெறிக்க வேண்டும்

நயாகராவை நான்கே மடக்கில்
குடித்துவிடுவேனென்று
வல்லரசுப்பண் பாடவேண்டும்

தண்டவாளம் பெயர்த்து
காது குடைவேனென்றும்
சம்பளமென்பது
சட்டைப்பொத்தானென்றும்
சாதிக்கவேண்டும்

அப்பாடா ஆச்சு ஒருவழியாய்
நேர்முகத் தேர்வு

இனி உன் வார்த்தைகளை
மாநகரக் குப்பைத் தொட்டிக்குள்
அழுக்குத் திசுத்தாள்களாய்க் கடாசிவிட்டு
அப்பழுக்கில்லாத அரையணா
அரசியல் செய்யலாம்

கேட்பவன் மூளைக்குள் சதுரங்கம் ஆடும்
நுனிநாக்குச் சொற்கள் நான்கும்
காரணம் விளங்காத ஜானிவாக்கர் சிரிப்பும்
உயிரழிய பணிசெய்வதாய்க் காட்டும்
ஓரங்க நாடகத்திறனும் இருந்தால் போதும்

பணி செய்பவர்களைவிட
பணி செய்வதாய் அபிநயிப்பவர்களுக்கே
பணி நிரந்தரம் பல நிறுவனங்களில்

4 comments:

Anonymous said...

அந்த நெலாவத்தான் நான் கையில புடிச்சேன்...என் ராசாத்திக்காக என்பதைப்போல்தான் இதுவும் :-)

ILA (a) இளா said...

இது அமெரிக்கா மட்டும் இல்லீங்க, எல்லா ஊர்லயும்தான்

குடுகுடுப்பை said...

இளா சொல்றது சரிதான், ஒரத்தநாட்டாருக்கு தெலுங்கன் குடிக்காட்டினால் தொல்லொயோ?

பூங்குழலி said...

வான பீட்சாவை
மேக வெண்ணை தடவி
நட்சத்திர மேல்பூச்சு தூவி
ஒரே வாயில் உள்ளே தள்ளும்
சாகசம் வேண்டும்


இந்த வர்ணனை அருமை ,புதுமையாக இருக்கிறது


கட்டபொம்மனின் கம்பீரமும்
நம்மூர் அரசியல்வாதியின்
கூழைக் கும்பிடும் அவசியம்
குலுக்கும் கரங்களில்
நெருப்புத் தெறிக்க வேண்டும்

நயாகராவை நான்கே மடக்கில்
குடித்துவிடுவேனென்று
வல்லரசுப்பண் பாடவேண்டும்

தண்டவாளம் பெயர்த்து
காது குடைவேனென்றும்
சம்பளமென்பது
சட்டைப்பொத்தானென்றும்
சாதிக்கவேண்டும்

அந்த பக்கமும் வேலைக்கு முன் இப்படித்தானே வாய் வீசுகிறார்கள்


அப்பாடா ஆச்சு ஒருவழியாய்
நேர்முகத் தேர்வு

இனி உன் வார்த்தைகளை
மாநகரக் குப்பைத் தொட்டிக்குள்
அழுக்குத் திசுத்தாள்களாய்க் கடாசிவிட்டு


அருமை


அப்பழுக்கில்லாத அரையணா
அரசியல் செய்யலாம்

கேட்பவன் மூளைக்குள் சதுரங்கம் ஆடும்
நுனிநாக்குச் சொற்கள் நான்கும்
காரணம் விளங்காத "ஜானிவாக்கர் சிரிப்பும்"


ஹா ஹா ஹா


உயிரழிய பணிசெய்வதாய்க் காட்டும்
ஓரங்க நாடகத்திறனும் இருந்தால் போதும்

பணி செய்பவர்களைவிட
பணி செய்வதாய் அபிநயிப்பவர்களுக்கே
பணி நிரந்தரம் பல நிறுவனங்களில்


உண்மை தான் புகாரி .உங்கள் வர்ணனைகளை கூட அமெரிக்கனைஸ் செய்திருக்கிறீர்கள் அருமையாக ......