1 நிரூபிக்க ஏதுமில்லை



நம்புவது இயலுமென்றால்
நிரூபிக்க ஏதுமில்லை
நிரூபித்தல் இயலுமென்றால்
நம்புவதற்கு எதுவுமில்லை

நம்பியது தகர்ந்தால் நிம்மதி தகரலாம்
நம்பும் குணம் தகரலாகாது
நிரூபித்தது தகர்ந்தால் அறிவு தகரலாம்
அறிவது தகரக்கூடாது

நம்பு நம்பினால்
நீ முட்டாள் ஆனாலும்கூட
உனக்கு வாழ்க்கை வசப்படும்
துக்கமே என்றாலும்
வசப்படுவதே வாழ்க்கை

சொந்தம் என்பதே வெறும் நம்பிக்கைதான்
நம்பாதவனுக்கு அவனே சொந்தமில்லை


அறிதலில்லா அறிதல் கவிதை நூலின் முதல் கவிதை

11 comments:

அப்பண்ணா said...

இது ரொம்ப பெரிய மேட்டர்
சொன்ன விதம் மிக எளிமை

செல்வன் said...

சிந்திப்பதை விட நம்பிக்கை வைப்பது எளிதானது.

அதனால் தான் பலரும் சிந்திப்பதை விட்டுவிட்டு நம்பிக்கை வைக்கிறார்கள்.

அதனால்தான் "Man is a cognitive miser" என்கிறது மனோதத்துவ துறை..

Unknown said...

எளிதானது என்பதைவிட வாழ்க்கைக்குத் தேவையானது என்பது என் நிலைப்பாடு!

கருத்துக்கு நன்றி செல்வன்

செல்வன் said...

சிந்திக்காமல் ஒரு விஷயத்தை நம்புவது வாழ்க்கைக்கு எப்படி தேவையானது ஆகும்?

செந்தில் குமார் said...

மிக நன்றாக உள்ளது. சரியென்றே கருதுகிறேன்.

சாந்தி said...

நிரூபித்தல் இயலுமென்றால்
நம்புவதற்கு எதுவுமில்லை

:))



நம்பியது தகர்ந்தால்
நிம்மதி தகரலாம்
நம்பும் குணம் தகரலாகாது

நிரூபித்தது தகர்ந்தால்
அறிவு தகரும்
அறிவது தகரக்கூடாது

நம்பு
நம்பினால்
நீ முட்டாள் ஆனாலும்கூட
உனக்கு
வாழ்க்கை வசப்படும்


மிகப்பெரிய உண்மை இதுதான்...



துக்கமே என்றாலும்
வசப்படுவதே வாழ்க்கை

சொந்தம் என்பதே
வெறும் நம்பிக்கைதான்
நம்பாதவனுக்கு
அவனே சொந்தமில்லை


சரியே.

Unknown said...

>>>சிந்திக்காமல் ஒரு விஷயத்தை நம்புவது வாழ்க்கைக்கு எப்படி தேவையானது ஆகும்?<<<

சிந்திக்காமல் என்று ஒரேயடியாய் சொல்லக்கூடாது,
சிந்தனை என்பது ஓர் எல்லைக்குட்பட்டது.
அதைத்தாண்டி வருவது நம்பிக்கை.

பிறந்ததும் நம்மிடம் இருப்பது நம்பிக்கைதான்.
நம்பிக்கையில்தான் தாயின் பாசத்தைக் காண்கிறோம்
பின் வளர்ந்து நம்பிக்கையில்தான்
ஒரு பெண்ணோடு காதல் கொள்கிறோம்
ஒரு நம்பிக்கையில்தான் நட்பு
இப்படியாய் வாழ்வில் எல்லா நிலைக்ளிலும்
நம்பிக்கையே மின்நிற்கும்
இறுதியாய் நாளை உயிரோடிருப்போம் என்ற
நம்பிக்கையில்தான் வாழ்க்கையே

எத்தனை சிந்தித்தாலும் சரி
வாழ்க்கை என்பது நன்பிக்கைக்குத்தான் வசப்படும்

சீனா said...

அன்பின் புகாரி

முயற்சிகள் தவறலாம் - முயல்வது தகரக் கூடாது


நம்பிக்கை வாழ்க்கையின் ஆணி வேர்
நம்பினார் கெடுவதில்லை
நம்புவது நடக்காமல் போகலாம்
நம்புவதை நடக்காமல் போக விடக் கூடாது

செந்தில் குமார் said...

>>>சிந்திக்காமல் ஒரு விஷயத்தை நம்புவது வாழ்க்கைக்கு எப்படி தேவையானது ஆகும்?<<<

லாஜிக், சிந்தனை வேறு மாதிரி சொன்னாலும் பல இடங்களில் நான் என் உள்ளுணர்வை நம்புகிறேன் செல்வன்.

தஞ்சை மீரான் said...

அழகான
உண்மையான வரிகள்.

நம்பு
நம்பினால்
நீ முட்டாள் ஆனாலும்கூட
உனக்கு

வாழ்க்கை வசப்படும் //

முட்டாள்கள் மட்டும்தான் வாழ்வில் சிறந்தவர்களா? :-)

பூங்குழலி said...

சொந்தம் என்பதே
வெறும் நம்பிக்கைதான்

அருமை புகாரி