9 ஞானியும் தேவதையும்


ஒரு தோல்வியைப் போல்
என்னைக் கேள்வி கேட்கும்
ஞானி வேறொன்றில்லை

நல்ல வெற்றியைப் போல்
எனக்குப் பதில் சொல்லும்
தேவதையும் வேறொன்றில்லை

சின்னச்சின்னத் தோல்விகளும்
மனதில் பெரியப்பெரிய கேள்விகள்

விடைதேடி விடைதேடி
இறுகிப்போன இதயம்
வெற்றி வந்து வாழ்த்துச் சொல்ல
வான்நீலம் கிழியக்கிழிய
சிறகடித்துப் பறக்கிறது

எத்தனையோ அறிஞர்கள்
எப்படியெல்லாமோ கேள்வி கேட்க
எதுவும் சரியாய்ச் சென்றதில்லை
செவிகளுக்குள்

ஆனால் தோல்வி வந்து
ஒரு வினாத் தாண்டவமாட
மனதின் அத்தனைக் கண்களும்
மொத்தமாய் விரிந்து கொள்கின்றன
அதிசயமாய்

ஆயிரம் கருணை விரல்கள்
ஆழ்மனப் புண்களில்
அமுதவருடல் கொடுத்தாலும்
ஒரு வெற்றி வந்து
விருந்து படைத்தாலன்றி
ஆறுதல் பூரணமாவதில்லை

5 comments:

cheena (சீனா) said...

உண்மை உணமை நண்பரே!!

வெற்றியின் சுகமே தனிதான்.

//ஆயிரம் கருணை விரல்கள்
ஆழ்மனப் புண்களில்
அமுதவருடல் கொடுத்தாலும்
ஒரு வெற்றி வந்து
விருந்து படைத்தாலன்றி
ஆறுதல் பூரணமாவதில்லை...//

அடிகள் அருமை அருமை.

சாந்தி said...

ஒரு தோல்வியைப் போல்
என்னைக் கேள்வி கேட்கும்
ஞானி வேறொன்றில்லை

நல்ல வெற்றியைப் போல்
எனக்குப் பதில் சொல்லும்
தேவதையும் வேறொன்றில்லை


எத்தனை நிஜம்... தோல்வியைப்போன்ற ஒரு ஆசான் அடிக்கடி தேவைதான்..

வெற்றி தளர்வை சீர் செய்ய வரட்டும்..

--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..

பூங்குழலி said...

தோல்வியை ஞானி என்றும் வெற்றியை தேவதை என்றும் சொன்ன விதம் நன்றாக இருக்கிறது


விடைதேடி விடைதேடி
இறுகிப்போன இதயம்
வெற்றி வந்து வாழ்த்துச் சொல்ல
"வான்நீலம் கிழியக்கிழிய"

அருமை


ஆயிரம் கருணை விரல்கள்
ஆழ்மனப் புண்களில்
அமுதவருடல் கொடுத்தாலும்
ஒரு வெற்றி வந்து
விருந்து படைத்தாலன்றி
ஆறுதல் பூரணமாவதில்லை

இந்த வரிகள் அருமை .வெற்றி தரும் சுகம் வேறு எதுவும் தருவதில்லை .அதே போல் தோல்வி ஆயிரம் கேள்விகளை எழுப்பிப் போகிறது .அருமை

துரை said...

ஆசானே

வாழ்க்கை நடைப்பயணத்தில் இதுவரை
வழிநெடுகிலும் நான்
ஞானிகளைத்தான் சந்தித்திருக்கிறேன்

எங்கே இருக்கிறாள் ?
எப்படி இருப்பாள் ?
நீங்கள் சொன்ன அந்த
எனக்கான தேவதை

புல்லாங்குழல் said...

ஆயிரம் கருணை விரல்கள்
ஆழ்மனப் புண்களில்
அமுதவருடல் கொடுத்தாலும்
ஒரு வெற்றி வந்து
விருந்து படைத்தாலன்றி
ஆறுதல் பூரணமாவதில்லை!

யதார்த்தத்தின் தரிசனம் உங்கள் வார்த்தைகள்.