7. நீங்கள் ரசித்துப் படிக்கும் கவிதை எத்தகையவை? சமீபத்தில் ரசித்த கவிதை எதுவென்று சொல்ல முடியுமா?


லண்டன் கவிஞர் சக்தியின் கேள்விக்கு கனடா கவிஞர் புகாரியின் பதில்

ஆழமான பொருள் கொண்டவை. அழுத்தமான உணர்வு கொண்டவை. இறுக்கமான நடை கொண்டவை. ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் புத்தம் புதியாய் இருப்பவை. என்றென்றும் என் உயிரைவிட்டு விலகாத நிரந்தர உயிர் கொண்டவை.

அவை எவையென்று சொல்வது அத்தனை எளிதான காரியமல்ல. அங்கங்கே அவற்றின் கண்ணசைப்புகளைக் கண்டிருக்கிறேன். எங்கெங்கோ அவற்றின் முகவரித் துண்டுகளை முகர்ந்திருக்கிறேன். இன்னும் எழுதப்படவில்லையோ என்றுகூட சிற்சில பொழுதுகளில் தேடல் தவத்தால் விழி வதை கொண்டிருக்கிறேன்.

மற்றபடி, என்னைச் சில கவிதைகள் இழுத்தணைத்து முத்தமிட்டிருக்கின்றன. சில உரசிக்கொண்டு போயிருக்கின்றன. சில ரகசியமாய்ப் புணர்ந்திருக்கின்றன. சில கைகோத்து நடந்திருக்கின்றன. சில கண்ணீரோடு கண்ணீரை விசாரித்திருக்கின்றன. என் ரசிப்பு வட்டம் மிகவும் அகலமானது. அதனுள் நேற்றே முளைத்த பசும்புல் பச்சை தலைகாட்டிச் சிரிக்கும். என்றோ எழுதிய ஓலை வரிகளின் வாசனை மொட்டுகள் அவிழும்.

எழுதிய எழுத்துக்களில் சில என்னை எட்டிப் பார்த்துப் புன்னகைக்கும். எழுதப்படாத மௌனத்தில் சிலிர்ப்பள்ளி வீசும்.

4 comments:

thiyaa said...

நல்ல பதிவு

சீதாம்மா said...

உண்மை ஒலிக்கின்றது
உம் உரை நடையிலும் கவிதை கொஞ்சுகின்றது
ரசிக்கின்றேன்
சீதாம்மா

சாத். அப். ஜப்பார் said...

திடீரென்று என்னவாயிற்று நண்பர் புகாரிக்கு..?

இப்படி அடுக்கடுக்காக அள்ளிக் கொட்டுகிறார்...?

குறள்கள் என்ன, பின்னூட்டங்கள் என்ன, கருத்துரைகள் என்ன....!

ஜமாய்ங்க...!!!

அன்புடன் சாத். அப். ஜப்பார்

சக்தி சக்திதாசன் said...

அன்பு நண்பர் புகாரி இவ்வாரம் மட்டுமல்ல எவ்வாரமும் நட்சத்திரமே. அவருடைய புதுக்கவிதை புனலாய் நெஞ்சங்களைத் தடவிக் குளிரூட்டிக்கொண்டு ஓடும் வல்லமை கொண்டவை. ஆழமான் கருத்துக்களை தன்னுள்ளே அடக்கி சிப்பிக்குள் தியுலும் முத்துக்களைப் போல மிளிர்பவை.

அன்பு நண்பருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்
சக்தி