சிவப்பும் வெள்ளையும்தான் கனடாவின் தேசிய நிறங்கள். இங்கே மிகப் பெரிய அரசியல் மாற்றங்களைச் செய்த மக்கள் பிரான்சிலிருந்தும் பிரிட்டிசிலிருந்தும் வந்தவர்கள்தாம். ஏன் சுற்றி வளைக்க வேண்டும்? அவர்கள்தான் கனடாவே. இவர்களின் ஒருங்கிணைப்பில்தான் கனடா உருவானது. பிரான்சின் நிறம் சிவப்பு. பிரிட்டிசின் நிறம் வெள்ளை. இவை இரண்டும் சேர்ந்ததே கனடிய நிறங்கள்.
எனவே கனடாவின் கொடி சிவப்பும் வெள்ளையும் கொண்டதாக இருக்கும். அதன் நடுவே மிக அழகான சிவப்பு மேப்பிள் இலையும் இருக்கும். அதுமட்டுமல்ல, கனடியர்கள் தங்களின் வேண்டுதல்களுக்காக நீரினுள் எறியும் ஒற்றைக் காசில் (penny) மேப்பிள் இலை பிரகாசிக்கும். இவர்கள் இதுவரை நயாகராவில் விட்டெறிந்த சல்லிகளைச் சேகரித்தால் 'இது போதுமே' என்று புறப்பட்டு ஊருக்குச் சென்று ஒரு மாநிலம் வாங்கிக்கொண்டு வசதியாய் தங்கிவிடலாம்.
மனதின் ஆசைகள் நிறைவேற இவர்கள் நீரில் சில்லறைகளைச் சுண்டுவார்கள். பெரும்பாலும் ஒற்றைக் காசுதான். என்ன, கஞ்சம் கஞ்சம் என்று கூறத் தோன்றுகிறதா?
நீரில் வீசினாலும் நிதானமாகவே வீசுவார்கள் என்று ஒரு புதிய பழமொழியை இவர்களுக்காக நாம் உருவாக்கிக்கொள்ளலாமா? ஆக, தண்ணீர் என்பது இங்கே திருப்பதி உண்டியல் மாதிரி.
கனடாவில் சுமார் 8 சதவிகித நிலமே விவசாய நிலம். ஆனாலும் இதன் அளவு எவ்வளவு தெரியுமா? 8 லட்சம் சதுர கிலோ மீட்டர்கள். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று தமிழர்கள் முடிவெடுத்தால் பற்பல வசதிகளோடு உடனே கனடாவில் அவர்களுக்கு வயல்கள் தயார். கோதுமைதான் கனடாவில் பெருமளவில் உற்பத்தியாகின்றது. அதனால் உலக நாடுகளிடையே கோதுமையில் முன்னணியில் நிற்படு கனடாதான்.
மனிதனும் மரமும் ஒண்ணு. எப்படி? கனடாவில் மரங்கள் மிகவும் அதிகம். இதை மரங்களின் நாடு என்றும் கூறலாம். தொட்டதற்கெல்லாம் மரம்தான். இதனால்தான் காகித விலை இங்கே மிகக் குறைவு. வீடுகளெல்லாம் மரங்களால்தான் கட்டப்படுகின்றன.
இங்கே வீடு கட்டுவதைப் பார்த்தால் வேடிக்கையாய் இருக்கும். ஆதி வாசிகள் கம்புகளைக் கட்டி குடிசை போடுவதைப் போல இவர்கள் புதிய தொழில் நுட்பத்தை வைத்து மரங்களால் வீடு கட்டுகிறார்கள். கொஞ்சம் மரம் கொஞ்சம் கண்ணாடி அவ்வளவுதான் அருமையான வீடுகள் தயார். குளிருக்கும் வெயிலுக்கும் இதுவே சொர்க்கமாக இருக்கிறது இங்கே.
நேற்று வந்து இன்று வீடு வாங்கிய என் நண்பர் ஒருவர் இந்த மரவீடுகளைப் பார்த்து வெறுத்துவிட்டார்.
'என்ன புகாரி இது? இவ்ளோ பணத்தை வாங்கிக்கிட்டு ஒரு கான்கிரீட் போட்டுத்தர மாட்டேங்கிறானுவ. தட்டுனா எல்லாம் கொட்டிப் போயிரும் போல இருக்கே? பம்மாத்து வேலையால்ல இருக்கு. இது சரிப்பட்டு வருமா?' என்றார். அண்ணே! இதுதான் இங்கே சரிப்பட்டு வரும் அவை உறுதியானவைதான் என்று சத்தியம் செய்து சமாதானப் படுத்தினேன்.
சரி நம் கேள்விக்கு வருவோம்: மனிதனும் மரமும் ஒண்ணு. எப்படி? மரத்துக்குத்தான் கை இல்லையே மனுசனுக்கு இருக்கே என்று யாராவது பழிப்புக் காட்டுவதாய் இருந்தால், நான் இந்தக் கட்டுரையை இத்தோடு நிறுத்திவிடுவேன்.
கனடாவின் தென்பகுதிகளில் மிக உயரமாக வளர்ந்து கிடக்கும் மரங்கள் குளிரான வடபகுதிக்குச் செல்லச் செல்ல குட்டையாகவும் எண்ணிக்கையில் குறைவாகவும் இருக்கும். அதையும் தாண்டி துருவக்கடல் நோக்கிச் சென்றால் மரங்களே இருக்காது. மனிதனும் இருக்கமாட்டான். இப்போது தெரிகிறதா, ஏன் எஸ்கிமோக்கள் குட்டையாக இருக்கிறார்கள் என்று. எனவே மனிதனும் மரமும் ஒண்ணுதான் :)
1 comment:
சுவாரஸ்யமான கட்டுரை ஆசான். விரும்பிப் படித்தேன்.
அன்புடன் ஆயிஷா
Post a Comment