தமிழ் கனடா - 010 அடமான வீடுகள்


ஒரு நடுத்தர வர்க்கத்தின் வசதியான வீடு சுமார் 5 லட்சம் கனடிய டாலர்கள் ஆகும். சராசரியாக ஒரு கனடிய டாலர் என்பது 40 இந்திய ரூபாய்கள். அதாவது இரண்டு கோடி ரூபாயில் ஒரு நல்ல வீடு வாங்கிவிடலாம் இங்கே.

அதற்காக அம்மாடியோவ் என்று வாய் பிளக்கவேண்டாம். முன்பணம் மட்டும் கட்டினால் போதும் அடமான பணத்தை வங்கி உடனே கட்டிவிட்டு மாதா மாதம் அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை என்று ஒரு தவணைமுறையில் உங்கள் சம்பளத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்.

எப்படியும் இங்கே மாதம் சுமார் 1200 டாலர்கள் அடுக்கு மாடி கட்டிடத்தின் இரண்டு அல்லது மூன்று படுக்கையறைகள் கொண்ட வீடுகளுக்கு (apartment) வாடகையாகக் கொடுக்க வேண்டிவரும். வீட்டு வாடகை என்பது இங்கே பல விசயங்களை உள்ளடக்கியது. அதனால்தான் வாடகை அதிகம் இங்கே.

கனடா குளிர் நாடு என்பதால், குளிர்காலத்தில் பயன்படுத்தும் வெப்பக்காற்றுக் கருவிகள் (Heating Systems), வெயில் காலத்தில் பயன்படுத்தும் குளிர்க்காற்றுக் கருவிகள் (Air Condition Systems), மின்சாரம், மின்சார அடுப்பு, தண்ணீர், துவைத்து உலரவைக்கும் கருவிகள், அடுக்குமாடிக் கட்டிடம், தோட்டம், அவற்றைச் சுற்றியுள்ள பாதைகளின் பராமரிப்பு, உடற்பயிற்சி அறை, பொழுதுபோக்கு அறை, நீச்சல் குளம், பாதுகாவலர்கள், தீயணைப்புக் கருவிகள் என்று இவற்றுக்கு மட்டுமே 400 லிருந்து 600 வரை ஆகிவிடும்.

இப்படி கட்டும் வாடகையை (சுமார் 1000 லிருந்து 1600 வரை) முறையாக வங்கிக்கு (mortgage) அடமானத் தொகையாக கட்டினால், இருபத்தி ஐந்து வருடங்களில் அழகான வசதியான தனி வீடு உங்களுடையதாகிவிடும். தனியாகக் கணக்குப் போட்டுப் பார்த்தால், வட்டி சேர்த்து நீங்கள் வங்கிக்கு வீட்டின் விலையைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமாகவே கட்டுவீர்கள்.

எப்படியும் அது வாடகையாகப் போகப்போகிற பணம்தான் என்பதால் இங்கே வீடு வாங்கிவிடுவதே புத்திசாலிகளின் செயல். எனவே இங்கே அனைவரும் புத்திசாலிகளாகிவிடுவார்கள்.


வீடு வாடகைக்கு எடுக்கும்போது, உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்பது மிக முக்கியம். ஆண் பெண் குழந்தைகளுக்கு தனித்தனி அறைகள் என்றால்தான் கனடா ஒத்துக்கொள்ளும். எல்லோரையும் சேர்த்து ஒன்றாகப் படுக்க வைக்கிறீர்கள் என்றால் நீங்கள் சட்டத்தை மீறுகிறீர்கள் என்று அர்த்தம். எனவே, நம்மூரில் 'பதினாறும் பெற்று' (இதன் பொருளை இங்கே தவறாகப் பயன்படுத்துவதற்காக என்னை மன்னிக்கலாம்) பெருவாழ்வு வாழ்பவர்கள் இங்கே வீடு வாடகைக்கு எடுப்பது இயலாத காரியம்.

அகதிகளாக இங்கே வந்த இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இன்று சொந்த வீடுகள் வாங்கி வசதியாகவே வாழ்கிறார்கள். அந்த அளவுக்கு இங்கே முன்னேற்றப் பாதைகள் மிகவும் விசாலமானவை.

வங்கிக்கு கடன் தருவதற்கு முக்கியமாகத் தேவை ஒரே ஒரு விசயம்தான். நீங்கள் சம்பாதிக்கிறீர்களா? நிரந்தர வருமானத்தில் இருக்கிறீர்களா? அவ்வளவுதான். அப்படியானால், இந்தா பிடி என்று வீட்டு மதிப்பில் 95 சதவிகிதம் வரை கடனாகக் கொடுத்துவிடும். மீதம் 5 சதவிகித பணத்தை முன்பணமாகக் கட்டினால் போதும். இதோ முன்பணம் என்று கட்டிவிடுவார்கள் சமர்த்துக் கனடியர்கள்.


இங்கே ஒரு லட்சம் டாலருக்குக் கூட வீடு வாங்கலாம். அடுக்குமாடிக் கட்டிடங்களில் உள்ள ஒற்றையறை கொண்ட வீடுகள். கணவன் மணைவி இருவருக்கும் அது போதுமல்லவா? படுக்கையறைதான் ஒன்றே தவிர, சமையலறை, முற்றம், பலகனி, குளியலறை என்ற மற்றவிசயங்கள் கட்டாயம் இருக்கும்.

இங்கே அடுக்குமாடி கட்டிட வீடு வாங்கினாலும், ஒரு விசயத்தைப் பார்த்து நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். அது முன்பு சொன்ன குளியல் அறை சமாச்சாரம் மட்டுமல்ல, சமையலறையும்தான். நம்மூரில் சமையலறை எங்கே இருக்கும்? வீட்டின் பின்புறம்தானே? இங்கே நீங்கள் உள்ளே நுழைந்ததும் சமையலறையைத்தான் பார்ப்பீர்கள். அதுவும் சிறியதாகவே இருக்கும். தனி வீடுகளில் சமையலறை வீட்டின் பின்புறமும் இருக்கும்.

நம்மூர் பெண்மணிகள்தானே சமையல் கட்டிலேயே முழுப் பொழுதையும் கழிப்பார்கள் (முன்பெல்லாம்?). ஆனால், இங்கே உள்ள பெண்கள் பெரும்பாலும் முட்டையை அரைவேக்காடாய் ஆக்குவதைத் தவிற வேறெதுவும் செய்வதில்லை.

ஆனால், நம்மூர் வாசிகள் சும்மா இருப்பார்களா? கடுமையான மசாலா சமையலால் வீட்டை ஒரு வழி பண்ணிவிடுவார்கள். வீடு முழுதும் வீசும் சமையல் வாசனையிலிருந்து உடைகளைக் காப்பது மிகவும் கடினமான காரியம். அடைபட்ட வீட்டுக்குள்ளிருந்து எதுவும் எளிதில் வெளியில் செல்லாது. தலை முடியெல்லாம் கூட சாம்பார் வாசனையில் சிலிர்த்துக்கொண்டு நிற்கும். நம்மூர் சமையல் வாசனை வீசும் உடையோடு அலுவலகம் சென்றால் அதைவிட தொல்லை வேறெதுவும் இருக்க முடியாது.

4 comments:

பூங்குழலி said...

எனவே இங்கே அனைவரும் புத்திசாலிகளாகிவிடுவார்கள்
:)))))))

என் அம்மாவின் தோழி ஒருவர் ....தோசை சுட போய் அது தீய்ந்து போக ..ஸ்மோக் அலாரம் வந்து ..பெரிய களேபரம் ஆகி விட்டதாம்

செல்வன் said...

நல்ல பதிவு.இன்னும் இரண்டு வருடத்தில் வீடு வாங்கணும்.குளிர்காலத்தில் பனியை வழிப்பதை நினைத்தால் தான் நடுக்கமா இருக்கு.

ஆனால் 25 வருஷமெல்லாம் கடன் கட்டும் உத்தேசமில்லை.கைல காசு வர்ரப்ப டக்கு, டக்குன்னு அசலில் ஒரு பகுதியை கட்டிகிட்டே இருக்கவேண்டியதுதான்.ஐஞ்சாறு வருஷத்துல மொத்த கடனையும் கட்டி முடிக்கணும்.


--
செல்வன்

Unknown said...

நல்லது. சீக்கிரம் வீட்டி வாங்குங்க செல்வன். அதான் முதல் படி. கடன் அடைக்க எப்படியும் 10, 15 வருடம் ஆகிவிடும்:)

நான் முதலில் நகரவீடு (town house) வாங்கினேன் இப்போது தனிவீடு. சுகம் சுகம்!

சீக்கிரம் உஜாலுக்கு வாங்க :)

அமுதா கிருஷ்ணா said...

நல்லாயிருக்கு கனடா வீடுகள் பற்றிய தகவல்..இன்னும் கொஞ்சம் ஃபோட்டாக்கள் போட்டு இருக்கலாம்..