தமிழ் கனடா - 011 ஆயிரம் தீவுகள்


பல விசயங்களில் கனடா ஒரு சொர்க்க பூமிதான். இங்கே நதிகளுக்கும் குறைவில்லை. நதிகள் என்றால் சாதாரண நதிகளா? மெக்கென்ஸி என்பது கனடாவின் மிகப் பெரிய நதி. அதன் நீளம் 4241 கிலோ மீட்டர்கள். வடஅமெரிக்கா மொத்தத்திற்கும் இதுதான் இரண்டாவது மிகப்பெரிய நதி. மிசிசிப்பி-மிசௌரி என்ற நதியே முதலிடம் வகிக்கிறது. அது அமெரிக்காவில் ஓடும் ஒரு பிரமாண்ட நதி.

இப்படி நன்னீர் ஏரிகளும் ஆறுகளும் சேர்ந்து உலகின் 30 சதவிகித குடிநீரை கனடாவுக்கே சொந்தமானதாக ஆக்கிவிட்டிருக்கின்றன. அதாவது விக்கல் என்றால் என்ன என்று தெரியாமலேயே வாழலாம் இங்கே.

இந்தக் குடிநீரையெல்லாம் கனடாவின் நிலத்தில் பாய்ச்சினால் - சும்மா ஒரு கற்பனைக்குத்தான் - உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடான கனடா இரண்டு மீட்டர் ஆழத்தில் மூழ்கி மூச்சற்றுக் கிடக்கும்.


இந்த ஆறுகளிலும் ஏரிகளிலும் இடையிடையே ஆயிரக்கணக்கில் குட்டிக் குட்டியாய்த் தீவுகள் உண்டு. அவற்றைக் காண்பதைப் போல் ஒரு சுகம் வேறு எதிலும் இருக்கமுடியாது. ஒரு குலுக்கல் பரிசில் இங்கே ஒரு குட்டித் தீவு ஒருவருக்கு அவர் வாங்கிய 2 டாலர் சீட்டுக்கு விழுந்திருக்கிறது. இன்று அவர் ஒரு தீவின் சொந்தக்காரர்.

தீவுகளில் வாழ்பவர்கள், விசைப்படகுகள் வைத்திருப்பார்கள். சில தீவுகளில் பள்ளிக்கூடங்கள் கூட உண்டு. தீவுகளிலும் இங்கே அவ்வளவு மக்கள் வாழ்கிறார்கள். ஆயிரம் தீவுகள், முப்பதாயிரம் தீவுகள் என்று இரண்டு இடங்களுக்கு நான் சென்றிருக்கிறேன். சுற்றுலாப்பயணிகளை வெகுவாக ஈர்க்கும் தலங்கள் அவை.

முதன் முதலில் செயிண்ட் லாரண்ஸ் நதியில் இருக்கும் ஆயிரம் தீவுகளைக் காணச் சென்றது எனக்கு ஒரு கனவு போன்ற அனுபவம். இந்தத் தீவுகளில் பல கனடாவுக்கும் சில அமெரிக்காவுக்கும் சொந்தமானவை. ஏனெனில், செயிண்ட் லாரண்ஸ் நதி இந்த இரு நாடுகளுக்கும் இடையில்தான் ஓடுகிறது.

ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த நதியின் 200 கிலோமீட்டர் தூரம் அமெரிகாவுடன் இணைந்துள்ளது. செயிண்ட் லாரன்ஸ் நதியின் ஆயிரம் தீவுகளில் நான் மேற்கொண்ட குதூகலமான சுற்றுலாப் பயணத்தில், நான் கொண்ட அதிசயத்தை அன்று இரவே இப்படி நான் எழுதி வைத்தேன்...

ஆயிரம் தீவுகள்

கனடாவின் கிழக்கில், கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் செயிண்ட் லாரன்ஸ் என்ற அழகிய நதி எல்லையாய் அமைந்திருக்கிறது. சுத்தமான குடிநீருடன் அகன்று நீண்ட இந்த நதியின் 50 மைல் தூரத்திற்கு 1865 தீவுகள் அமைந்து பேரழகினைச் சொரிகின்றன. ஆரம்பத்தில் ஏகப்பட்டத் தீவுகளை ஒரே இடத்தில் கண்ட அதிசயத்தில் ஒரு பிரஞ்சுக்காரர் அவசரமாய் இட்ட பெயர்தான் ஆயிரம் தீவுகள். அவற்றைக் கண்டுவந்த அதே இரவு என் ஆனந்தத்தில் எழுதிய கவிதையே இது.


வரம் தரும் தேவதை
வாரி வாரி இறைத்த
வைரமணித் தொட்டில்களோ

வசந்தங்கள் தாலாட்ட
யொவனம் ததும்ப
நனைந்து நனைந்து மிதக்கும்
நந்தவனங்களோ

வனப்புகள் புடைசூழ
மாலை வெயில் மஞ்சள் பூசி
நீராடி நாணுகின்ற
தங்கத் தாமரைகளோ

நிச்சயப் படுத்திய
அழகுப் போட்டிக்கு
அணி வகுத்த கன்னியரோ

தீர்வுக்குத் திணறித்
தப்பியோடியத் தலைவனைத்
தேடித்தான் நிற்கிறீரோ

அடடா...
பொழியும் அழகினில்
மூழ்கி மூழ்கியே நானும்
சிலிர்ப்புக்குள் சிக்கிக்கொண்டேன்

பறவைகள் மாநாட்டை
வேடந்தாங்களில் கண்டேன்
பூக்களின் மாநாட்டை
ஊட்டியில் கண்டேன்
அருவிகளின் மாநாட்டை
குற்றாலத்தில் கண்டேன்
தீவுகளின் மாநாட்டை
முதன் முதலில்
இங்குதான் காண்கிறேன்

இயற்கையே
என்றென்றும் உனக்கு என்
முதல் வணக்கம்

தீவுகளை இணைக்கும்
சின்னஞ்சிறு பாலம்
இங்குமட்டுமே என்றறிந்தபோது

விலகி விலகி என்றும்
வீணாகிப் போகும்
நம் மனிதமனங்களையும்
இணைத்துப் போட
புதுப் பாலங்கள் வாராதோ
என்ற ஏக்கம் எழுந்தது

நதியால்
தீவுகளுக்குப் பெருமையா
தீவுகளால் நதிக்கு மகுடமா
என்றொரு பட்டிமன்றமே போடலாம்

அப்படியோர் அழகு
அந்த லாரன்ஸ் நதிக்கு

ஓடாத ஓடங்களாய்
எங்கெங்கும் தீவுகள்... தீவுகள்...

அவற்றில் ஓடிப்போய் நின்று
ஓகோ வென்று உச்சக்குரலெழுப்ப
உள்ளம் மனுப்போடுகிறது

சிற்றோடைக் கரைகளில்
சின்னஞ்சிறு பருவத்தில்
காகிதக் கப்பல் விட்டுக் களித்த நாட்களை
மனம் இன்று ஒப்பிட்டுப் பார்க்கிறது

எந்தச் சிறுவனின்
அற்புத விளையாட்டோ
இந்தத் தீவுகளின் சுந்தர ஊர்வலம் ?


திசைகளெங்கும் பரவித்
திளைத்தோங்கியத் தீவுகளே... தீவுகளே...

நீங்கள் நீராடி முடித்ததும்
மெல்ல எழுந்து என்முன்
நடக்கத் துவங்கிவிடுவீர்களோ

காத்திருக்கவா
நானிந்த நதிக்கரையில் ?

இந்த நதியை சுத்தமாக வைத்திருப்பதில் கனடா அதிக அக்கறை காட்டுகிறது. ஏனெனில் துருவ மாகடலில் (ஆர்க்டிக்) வாழும் உலகின் மிக மிக அரிய மீன்வகையான வெள்ளை திமிங்கிலத்தைப் (Beluga) பாதுகாப்பதே நோக்கம்.

5 comments:

வடுவூர் குமார் said...

என்னுடைய கனவு தேசங்களில் இது தான் இன்னும் முதலிடத்தில் இருக்கு.

Keddavan said...

நீங்கள் விபரிக்கும் போதே தீவுகளை பார்க்கவேண்டுமேன ஆவல் ஏற்படுகின்றது..நன்றாக இருக்கிறது உங்கள் எழுத்து நடை..

Unknown said...

வருக வடுவூர் குமார். உங்கள் ஊர் தஞ்சையில் உள்ள வடுவூரா?

ராஜீபன் வருகைக்கு நன்றி

செல்வன் said...

கவிதை அருமை..பயணத்தை நன்கு அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்.

mohamedali jinnah said...

தீவுகளை பார்க்கவேண்டுமேன ஆவல்.கவிதை அருமை.
கொடுத்து வைக்க வேண்டும். அறிவைத் தேடி இடங்களைப் பார்ப்பது இஸ்லாம் விரும்புகின்றது . சீனா தேசம் சென்றாயினும் சீர் கல்வியை கற்றுக்கொள்" (நபி மொழி)