தமிழனின் பெயர் தமிழ்ப் பெயரா?


சரஸ்வதி
ஈஸ்வரி
மீனா
சிவகாமி
கலைமணி
தேன்மொழி

ஆங்கில மோகத்துக்கும், சமஸ்கிருத பிரியத்திலும், தமிழ்ப்பெயரைத் துறக்கும் சூழலில், சில சீனர்கள் தமிழ் மீதான காதலால் வைத்துக் கொண்ட பெயர்கள் இவை என்று தமிழமுதம் குழுமத்தில் ஒரு மடல் வந்து விழுந்தது.

இதுதான் தமிழ்மீதான காதலா? இந்தப் பெயர்களில் கடைசிப் பெயரைத் தவிர வேறு எந்தப் பெயரும் தமிழ்ப்பெயர் இல்லையே. இப்படித்தான், தமிழ் எது என்றே அறியாமல் பல தமிழர்கள் இருக்கிறார்கள் என்று மறுமொழி இட்டேன்.

ராஜேந்திரன்
சுஜாதா
சம்பத்
விக்னேஷ்
சாந்தி
கிருஷ்ணன்
சுந்தரேசன்
வாணி
துர்கா
சியாமா
நீலா
விஜயா
கேசவன்

போன்ற பெயர்கள் எல்லாம் தமிழ்ப்பெயர்கள் என்று தவறாக நினைத்துக்கொள்கிறார்கள். இவையெல்லாம் சமஸ்கிருதப் பெயர்கள்.

தனித்தமிழ்ப் பெயர்கள் இல்லை என்று சொல்லுங்கள் புகாரி என்றார் உடனே நண்பர் ஒருவர். சமஸ்கிரதமும் தமிழ்தான் என்பது அவர் நினைப்பாக இருக்கலாம் :)

புகாரி
சாதிக்
அகமது
முகமது
ஜமீல்
ரிஷான்

எல்லாம் தமிழ்ப்பெயர்களா? அவை அரபுப் பெயர்கள் அல்லவா? தமிழனுக்கு வைத்துவிட்டால் அது தமிழ்ப்பெயர் ஆகிவிடுமா?

பூங்குழலி
முத்தழகு
கனிமொழி
தமிழரசி
புகழேந்தி
தேன்மொழி

போன்ற பெயர்களல்லவா தமிழ்ப்பெயர்கள்?

தமிழில் உள்ள சொற்களைக் கொண்டு தமிழில் பொருள் வரும் வகையில் உருவான பெயர்களே தமிழ்ப்பெயர்கள்.

இந்துக்கள் சமஸ்கிருதப் பெயர்களையும், முஸ்லிம்கள் அரபுப் பெயர்களையும், கிருத்தவர்கள் லாடின், ஆங்கில பெயர்களையும் வைத்துக்கொள்கிறார்கள்.

மதம்தான் மனிதனை ஆள்கிறது.
மொழியை யார் மதித்தார்கள்!

அகமது, கமல ஆசன் என்று தமிழ் இலக்கணத்திற்கு ஏற்ப கிரந்தத்தையும் தவிர்த்து தமிழ்ப்படுத்தி எழுதிவிட்டால், எல்லாம் தமிழ்ப்பெயர்களாகிவிடும் என்பது நண்பர் தொடர்ந்த கருத்து.

தமிழர்களுக்குச் சூட்டப்படும் பெயர்கள் அத்தனையும் தமிழ்ப்பெயர்களே என்று அடித்துச் சொன்னார் அவர்.

அப்படியென்றால்

ஜேம்ஸ் பாண்டு
ஜோன்ஸ்
பெர்னாண்டஸ்
ஜான்

எல்லாம் தமிழ்ப்பெயர்களாக வேண்டும். அது மட்டுமல்ல உலகில் உள்ள அத்தனை பெயர்களும் தமிழ்ப் பெயர்களே என்றும் ஆகவேண்டும்.

ஏனெனில் தமிழரில் கிட்டத்தட்ட அனைத்து மதத்தினரும் உண்டு. சீனர்களையும், ஜப்பானியர்களையும், கொரியர்களையும் மணக்கும் ஆட்களும் உண்டு அவர்களுக்கு அந்தந்த நாட்டுப் பெயர்களைக் கலந்து பெயரிடுவதும் உண்டு.

அதுமட்டுமா, ஒரு சீனப்பெண் தன் மகளுக்கு மலர்விழி என்று பெயரிட்டால் அது சீனப்பெயர் ஆகவேண்டும். அதை நாம் தமிழ்ப்பெயர் என்று கூறமுடியாது. இது சரியா? வேடிக்கையாய் இல்லையா?

சமஸ்கிரதப் பெயர்களைத் தமிழ்ப்பெயர் என்று நிறுவுவதற்காக பலரும் ஏதேதோ காரணங்களை அடுக்கினார்கள். ஆனால் அவை அத்தனையும் ஆட்டமே கண்டன.

அன் என்று முடிந்தால் அது தமிழ்ப்பெயரின் அடையாளம் என்றார் ஒருவர். என்றால் ஜான்சன் என்ற ஆங்கிலப்பெயர் தமிழ்ப்பெயரா? அத்னன் என்ற அரபுப் பெயர் தமிழ்ப்பெயரா? ஆலன் என்ற சீனப்பெயர் தமிழ்ப்பெயரா?

மதமெல்லாம் பெயர் வைக்கக் காரணமில்லை கூப்பிடும் அழகுக்காகத்தான் பெயர் வைக்கிறார்கள் என்று சட்டென்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் நண்பர்.

எத்தனை இந்து வீட்டில் கூப்பிடும் அழகுக்காக சுஹைல் என்று பெயர் வைப்பார்கள்? எத்தனை முஸ்லிம் வீட்டில் கூப்பிடும் அழகுக்காக மகரிஷி என்று பெயர் வைப்பார்கள்?

மதம்தான் உலகெங்கிலும் பெயர் வைப்பதில் முதன்மையாய் நிற்கிறது. மிகக் குறைவான சதவிகிதத்தினர் மட்டுமே மதம் கடந்து ஏதோ பெயர் சூட்டுகிறார்கள்.

ஆனால் மதம் கடந்து பெயர் சூட்டும் வழக்கம் அதிகரித்தால் அது சிறப்புதான். அப்படியானவர்கள் விரைந்து பெருகிவருகிறார்கள் என்பதும் ஓரளவு உண்மைதான்.

ஆனாலும், எது தமிழ்ப்பெயர் என்றே அறியாத தமிழனின் நிலை சற்று கவலைக்கிடமானதாய்த்தான் இருக்கிறது. அப்படி அவர்களைப் பழக்கிவைத்திருக்கிறார்கள் சமஸ்கிரதப் பெயர்களைத் தமிழர்களுக்குச் சூட்டி. அரபுப் பெயர்களைக் கண்டால் இவர்கள் அவை தமிழ்ப் பெயர்கள் இல்லை என்று சட்டென்று சொல்லிவிடுவார்கள். இது வேடிக்கை இல்லையா?

கலைஞர் தன் மகனுக்கு ஸ்டாலின் என்று பெயரிட்டார். ஸ்டாலின் தமிழனின் பெயர் ஆன காரத்தால் அது தமிழ்ப் பெயர் என்று ஆகாது அல்லவா?

கமலுக்கு ஹாசன் என்று சேர்த்து அவர் தந்தை பெயரிட்டார். ஹாசன் தமிழனின் பெயர்தான் ஆனால் தமிழ்ப்பெயரா?

5 comments:

Unknown said...

உங்கள் ஆதங்கம் உண்மைதான் நம்மில் பல பேருக்கு தமிழ் பேர் எது தமிழில் கலந்து தமிழால் அழைக்கப்படும் பெயர் எது என் தெரியாமலேயே இருக்கின்றார்கள்

mohamedali jinnah said...

உமக்குள்ள மொழி அறிவுடன் விரிவான ஆய்வு செய்திருப்பது பாராட்டதக்கது

சாலிசம்பர் said...

நித்திலா,மீனாள் போன்றவை தமிழ்ப்பெயர்கள் தானா?

Unknown said...

அவை தமிழ்ப்பெயர்கள் இல்லை சாலிசம்பர். ஆனால் தமிழர்களின் பெயர்கள்தாம்

Anonymous said...

நித்திலமும் மீனும் தமிழ் இல்லையா ??