டொராண்டோ கனடாவின் முக்கிய நகரங்களில் ஒன்று. சுறுசுறுப்பிலும் சரி நவீனமயங்களிலும் சரி இமைகள் கிழியக்கிழிய மொத்த விழியையும் முழுமையாய் மேலே உயர்த்திப் பார்த்தும் திருப்தி கொள்ள முடியாத அற்புத நகரங்களில் ஒன்று.
ஒரு பத்து இருபது ஆண்டுகளாய், இங்கே திரும்பிய இடங்களிலெல்லாம் தமிழ் மணம் கமழ்கிறது. 24 மணிநேரமும் ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் வானொலிகள், தமிழ்த் தொலைக்காட்சிகள், தமிழ்ச் செய்தித் தாள்கள், 'அவசர சிகிச்சைப் பிரிவு' என்று தமிழிலும் எழுதப்பட்ட உலகத் தரம் மிக்க மருத்துவமனைகள், இங்கே நீங்கள் தமிழிலேயே பேசலாம் என்று கூறும் கனடிய வழக்கு மன்றங்கள், 'வருக வருக' என்று தன் முகப்பில் தமிழிலும் எழுதிப்போடப்பட்ட உலக அதிசய கனடா தேசக் கோபுர நுழைவாயில். ஓ... இதை சீனச் சுவர்போல நீட்டிக்கொண்டே போகலாம்.
எப்படி வந்தது எங்கிருந்து வந்தது கனடாவில் இத்தனை தமிழ்?
அதுபற்றி கொஞ்சம் எழுதினால் என்ன என்று தோன்றியது எனக்கு. ஏனெனில் நான் கனடா வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. உள்ளே சேர்ந்து கிடக்கும் தகவல்கள் கண், காது, முக்கு, நாக்கு, தோல் என்று எல்லாதிசைகளிலும் முட்டிக்கொண்டு நிற்கின்றன. எல்லாவற்றையும் நயாகராவைப் போல் கொட்டித் தீர்க்க(?) வேண்டும் எனக்கு.
இன்று தமிழ்நாடு, கேரளா என்று தனித்தனி மாநிலங்களாய் கோடுகள் கிழிக்கப்பட்டுக் கிடந்தாலும், முன்னெல்லாம், தமிழ்நாடும் கேரளாவும் தமிழர்கள் வாழும் ஒரே தமிழகமாகத்தான் இருந்தது. அதுவே பூர்வீகத் தமிழகம் என்றாலும் இலங்கைத் தீவில் தமிழன் பல நூற்றாண்டுகளாகவே வாழ்ந்துவருகின்றான்.
அவன் அங்கே எப்போது சென்றான், அல்லது அங்கேயேதான் தோன்றினானா என்பதெல்லாம், எனக்கு ஏழாத எட்டாத விசயங்கள். பலரும் பல கருத்துக்களை இதில் சொல்லக் கேட்டிருக்கிறேன். குறுக்கே வந்த கடல் செய்த சதியும், அதன் விளைவும் என்னவென்று ஆராய்வதற்கு என் கட்டுரையில் இடமில்லை.
முதன் முதலில் தமிழன் தோன்றிய இடம் எது? அது இப்போது நிலத்தில்தான் இருக்கிறதா? அல்லது நீருக்கடியில் சென்றுவிட்டதா? இந்த ஆராய்ச்சிகளை நானும் ஆவலோடு வாசிப்பேன். ஆனாலும் ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வருவதென்பது நடக்கின்ற காரியமா? எனவே அதை விட்டுவிட்டு நான் அடுத்த கட்டத்திற்கு ஓட்டம் பிடிக்கலாம் என்று முடிவெடுப்பதில் தப்பில்லைதானே?
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று பாரதி பாடும் போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாலம் இல்லைதான். ஆனால், எப்போதுமே பாலம் இருந்ததில்லையா என்ன?
சில ஆண்டுகளுக்கு முன், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருந்த கைப்பாலம் அமெரிக்காவின் நாசாவால் செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படமாகக் காட்டப்பட்டது. அந்தச் செய்தியை பலரும் பலவிதமாக எடுத்துக் கையாண்டு, அது இணையத்தின் மூலைமுடுக்குகளிலெல்லாம் அல்லோலகல்லோலப் பட்டதை நாம் அறிவோம்.
நான் தான் அதைக் கட்டினேன் என்று இமயமலையிலிருந்து வயதை கணக்கில் வைத்துக்கொள்ளாத ஒரு பாபா வரவில்லையே தவிர மற்றதெல்லாம் நடந்தது.
வெள்ளைக்காரர்களின் ஆட்சிக்காலத்தில், சுட்டுப் போட்டாலும் வெளியே செல்லாமல் கிடந்த தமிழன் கட்டாயமாகக் கடத்தப் பட்டான் வெளிநாடுகளுக்கு.
தாத்தாக்களின் தாத்தாக் காலங்களிலெல்லாம் எங்கள் ஊரான ஒரத்தநாட்டிலிருந்து இருபத்திரண்டு கிலோ மீட்டர் தூரமே இருக்கும் தஞ்சாவூருக்குச் சென்று வேலை செய்ய வேண்டும் என்றால், ஒப்பாரி வைத்து ஊரே அழும்.
'போகாதே போகாதே என் கணவா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்' என்று மனைவி தலையை அவிழ்த்து விட்டுக்கொண்டு அந்தக்கால இசையழுகையை கண்ணீரில் மிதக்கவிட்டுவிடுவாள். பட்டினி கிடந்தாலும் பத்தடிக்குள்ளேயே வாழ்வோம் என்று சபதம் எடுத்து மடியிலும் மார்பிலும் போட்டுக்கொண்டுதான் தாய்மார்கள் வாழ்வார்கள்.
கப்பல் ஏறிச்சென்று வணிகம் செய்தான் தமிழன் என்பதெல்லாம் சும்மா வெறுமனே சொன்ன கதைகள் இல்லைதான் என்றாலும், பெரும்பாலான குடும்பங்களில் இதுதான் பயக்க வயக்கம் (பழக்க வழக்கத்திற்கு எங்கள் ஊர் கிராம மொழி).
ஆனால், உலகமே என்னூட்டு (என்னுடையது) என்று சொல்லும் வெள்ளைக்காரன் சும்மா இருப்பானோ? அந்த நல்லவன்/பாவி இவர்களை அப்படியே விட்டுவைக்கவில்லை. 'கட்டு மூட்டையை. புறப்படு என்னோடு' என்றான் கோபமாக.
பெட்டிப் பாம்பாய் அடங்கி (வேறு வழி?) அவன் இட்ட கட்டளைக்கு அப்படியே தலையாட்டிக்கொண்டு (அன்றைய முழுநேர உத்தியோகம்) அவனோடு சென்று, சிங்கப்பூர் மலேசியா, இலங்கை, மொரீசியஸ், பிஜி தீவுகள், தென் ஆப்பிரிகா போன்ற இடங்களுக்கு பொதுப்பணி செய்வதற்காக அங்கே குடியேறினார்கள்.
இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகுதான் திறமைமிக்கத் தமிழர்கள் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு தங்களின் சொந்தத் தகுதியை முன்வைத்து கப்பல் விமானம் என்று பெரிய பெரிய விசயங்களில் எல்லாம் தாமே முன்வந்து கால் வைத்தார்கள்.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கு இவர்களே சான்று என்றால் அதில் அமீபா அளவும் தவறில்லை. இப்படி தமிழன் தென்னிந்திய மூலையிலிருந்து உலகமெங்கும் மெல்ல மெல்ல நத்தைபோல் நகர்ந்து கொண்டிருக்கும்போதுதான், திடீரென்று அது நடந்தது.
6 comments:
இந்த நல்ல முயற்சியை இலக்கிய உலகம் விரும்பும். வாசகர்களுக்கு ஒரு நல்விருந்து.
""வானூறி மழை பொழியும்
வயலூறி கதிர் வளையும்
தேனூறி பூவசையும்
தினம்பாடி வண்டாடும்
காலூறி அழகுநதி
கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலங்கூட பசியாறும்
உரந்தையில் நான் பிறந்தேன்.
தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால் சிரிக்கும் பூசணிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும்.
தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்குப் பேரழகு.
உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும். ""
சுவையான அறிமுகம். நன்று. நன்றி நண்பரே!
தாள லயங்கள் முடிந்த போது மொத்த ஆலாபணையும் பூபாளமாக இருந்தது. நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்.
நண்பர் சுப்பையாவின் கவிதை வழிப் பாராட்டு அருமை. நன்றி
பெ.சந்திர போஸ்
நம் கரங்களைப் பிடித்து புகாரி கனடாவிற்கு அழைத்துச் செல்கிறார். வாருங்கள்
செல்வோம்.
நல்ல கட்டுரை. இன்னும் பல தமிழ் இளைஞர்களைப் பயமின்றி கனடாவிற்கு அனுப்பலாம்.
தங்கள் பிள்ளைகளுக்கு இனி பலர் வரன்களை கனடாவில் தேடுவார்கள்.
தொடருங்கள் புகாரி. நன்றி.
பெ.சந்திர போஸ்
அன்புமிகு சகோதரர் புகாரி,
மலேயேவிற்கு (அப்போது மலேசியா இல்லை - சிங்கப்பூர் காலனித்துவ ஆட்சியினர்
மலேயாவின் ஒரு பகுதியாகவே ஆட்சி நடத்தி வந்தனர்) பெரும்பாலும் தோட்டத்
தொழிலாளர்களாகவும் சாலைப் பணிகள் போன்றவற்றை மேற்கொள்வதற்காகவும் மட்டுமே
தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது பலரால் கருதப்படுகிறது. அது
தவறு. இந்தியாவில் ஆட்சி நடத்திய கிழக்கிந்தியக் கம்பெனியினர், பின்னர்
மன்னர்/அரசி ஆட்சியின் கீழ் நாட்டை ஆண்டவர்கள், அங்கு
எழுத்துவடிவத்தினாலான அவர்களின் முதல் அரசியலமைப்புச் சட்டத்தை
உருவாக்கினர், நீதித்துறையை உருவாக்கினர் (இதிலும் இங்கிலாந்தில்
செய்யாதவனவற்றைச் செய்தனர் - இந்தியன் பீனல் கோடு - இந்திய தண்டனை
விதித்தொகுப்பை உருவாக்கினர். நிர்வாக்ததுறையை உருவாக்கினர். இப்படிப்
பலவற்றைச் சொல்லலாம்.
அவற்றை எல்லாம் தங்களின் மற்ற காலனித்துவ நாடுகளிலும் அமல்படுத்த
விரும்பினர். ஆகவே அந்ததந்தத் துறைகளில் சிறந்து விளங்கியவர்களையும்
தமிழ்நாட்டிலிருந்தும் இலங்கை-யாழ்ப்பாணத்திலிருந்தும் மலேயாவிற்கு
ஆங்கிலேயர்கள் தமிழர்களை - மலையாளிகளை - தமிழ்நாட்டுத் தெலுங்கர்களை
இங்கு கொண்டுவந்தனர். அத்தகையவர்களில் பல நிர்வாக, சட்டத்துறை,
கல்வித்துறை சார்ந்த தொழிலில் ஈடுபட்டவர்கள் இருந்தனர். வடநாட்டவரும்
சிறிய எண்ணிக்கையில் சிப்பாய்களாக எழுத்தர்களாகவும் கொண்டு வரப்பட்டனர்.
தாங்கள் பொதுப்பணி என்று கூறுவது public works என்பது சாலை, கட்டட
மராமத்து வேலைகளை மட்டும் குறிப்பிடடுவதாக இருக்காது என நம்புகிறேன்.
Post a Comment