நவீன தமிழ்ச்சொற்கள்

தமிழ்ச்சொற்களின் வளர்ச்சிக்கு கணினி என்ற சொல்லே ஒரு நல்ல உதாரணம். முதலில் அவசரத் தேவைக்கு உலகின் ஒரு புதிய சொல்லை அப்படியே பயன்படுத்தவேண்டும்.

கம்ப்யூட்டர்

இதனால் நவீன ஆக்கங்கள் தடைபடாது அல்லது ஆக்கப்படுவதற்காகக் காத்திருக்காது. அப்படி ஆக்கப்படுவது எல்லோருக்கும் புரியும். இதற்கு அடுத்த நிலை அந்த புதிய சொல்லின் மொழிபெயர்ப்பு

கணிப்பொறி

இப்போது மக்களிடம் ஓரளவு கம்ப்யூட்டர் என்றால் புரியும் நிலை வந்துவிட்டது. அதை கணிப்பொறி என்று சொல்லும்போது அது கம்ப்யூட்டர்தான் என்று அறிகிறார்கள். அடுத்து சட்டென்று உலகின் ஒரு மூலையிலிருந்து ஒரு சொல் பிறக்கிறது.

கணினி

இது எல்லோருக்கும் ஏற்புடையதாக இருக்கிறது. கணிப்பொறி என்று சொல்வதைவிட கணினி என்பது இனிமையும் பொருள்தரக்கூடியதுமாக இருக்கிறது.

ஆனால் இதை கணனி என்று இலங்கையில் எழுதுகிறார்கள். உலகமே கணினி என்று எழுதும்போது இலங்கையர் கணனி என்று எழுதுவது நெருடலாய் இருக்கிறது. இந்த மனப்பான்மை தமிழர்களிடம் இருந்து மறைய வேண்டும். ஆனாலும் இலங்கை வழக்கு என்று ஒன்று இருந்துவிட்டுப் போகட்டுமே என்று அதை நான் மறந்துவிடுகிறேன்.

பிறமொழிச் சொற்களுக்கு பலரும் கிரந்தம் பயன்படுத்துவதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது இலங்கைத் தமிழர்கள் ரிம் ரேக் அவுட் அண்ட் கேற்றரிங் (Tim Take out and Catering) என்றும் ஸ்ரார் (Star) என்றும் எழுதுகிறார்கள். வாசிக்கும்போது கண்ணுடைந்து கைகளில் விழுகிறது. அவர்கள் கவலையே படுவதில்லை. விளக்கமும் தருவதில்லை.

கணினி என்ற சொல்லை கணி என்றும் பயன்படுத்தலாம். என் கவிதைகளில் நிறைய சொற்களை அப்படி உருவாக்கி இருக்கிறேன்.

கணித்தமிழ், கணிமொழி, கணியெலி, கணிப்பாவை, கணித்திரை என்று சென்றுகொண்டே இருக்கும்.

இந்த நிலைப்பாட்டின்படி தமிழ் 100 சதவிகிதம் நவீனகாலப் பயன்பாட்டிற்கு உகந்தது. ஆனால் இந்த கிரந்த எதிர்பாளர்கள்தான் தமிழை ஒரு கூண்டுக்குள் அடைத்து சிறகுகளை வெட்டியெறியப் பார்க்கிறார்கள். அவர்களைப் பார்த்து வருத்தப்படுகிறேன் ஏனெனில் அவர்கள் தோல்வியாளர்கள். வளரும் தமிழை எவராலும் தோற்கடிக்க முடியுமா?

14 comments:

கோவி.கண்ணன் said...

//இந்த நிலைப்பாட்டின்படி தமிழ் 100 சதவிகிதம் நவீனகாலப் பயன்பாட்டிற்கு உகந்தது. ஆனால் இந்த கிரந்த எதிர்பாளர்கள்தான் தமிழை ஒரு கூண்டுக்குள் அடைத்து சிறகுகளை வெட்டியெறியப் பார்க்கிறார்கள். அவர்களைப் பார்த்து வருத்தப்படுகிறேன் ஏனெனில் அவர்கள் தோல்வியாளர்கள். வளரும் தமிழை எவராலும் தோற்கடிக்க முடியுமா?//

மாறுபடுகிறேன். நானறிந்த வரையில் எந்த ஒரு மொழியிலும் பிறமொழிச் சொற்களாக கடன்வாங்குவது அனைத்தையுமே அதே பலுக்கலில் (உச்சரிப்புடன்) எழுத முடிவது கிடையாது. ஆங்கிலத்தைப் போன்ற பிரெஞ்சு, ஜெர்மனி, ஸ்பானிஷ் மொழிகளுக்கும் இது பொருந்தும். ஆங்கிலத்திலும் அதுவே விதி. நம்ம தூத்துக்குடியை சரியாக சொல்ல முடியாமல் டூட்டுகோரின் என்று எழுதினான். நாம மட்டும் கிரந்தம் பயன்படுத்தி அப்படியே எழுதவேண்டும் என்பது எத்தகையை (வரட்டு)பிடிவாதம் என்று தெரியவில்லை.

ஜெர்மனியை - செருமனி ரஷ்யாவை (உ)ருசியா என்று எழுதுவதால் தவறொன்றும் இல்லை.

இசுலாமியர்கள் கூட முன்பு அரபு சொற்களை தமிழில் எழுதும் போது தமிழ்முறைப்படித்தான் எழுதி வந்தனர். சீறப்புராணம் பெரும அளவில் கிருந்த எழுத்துக்களை தவிர்த்து எழுதப்பட்டதாகும்.

'நவீன' தமிழ்ச்சொற்கள் 'புதிய' தமிழ்ச்சொற்கள் என்று சொல்லப்படுகிறது :)

Unknown said...

கோவி. கண்ணன்,

நீங்கள் எத்தனை கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தி இருக்கிறீர்கள் பாருங்கள்.

விஷன் என்ற சொல்லைக்கூட நான் விசம் என்று எழுதுகிறேன். ஏனெனில் அது தமிழுக்குள் வந்துவிட்ட சொல். ஆனால் ஜார்ஜ் புஷ் என்பதை சார்ச் புழ்சு என்று என்னால் சிதைக்க முடியாது.

உலக அரங்கில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் பெயர்ச்சொற்களை ஒரு நாலு எழுத்துக்களைக் கொண்டு நம்மால் சிறப்பாகப் புரிந்துகொள்ளவும் உச்சரிக்கவும் இயலும் என்றால் அதை ஏன் பயன்படுத்தக் கூடாது? என்ன கெட்டுப்போகப்போகிறது நம்மை நாமே சுருக்கிக்கொண்டு ஒரு தனித்தீவாக்கிக்கொள்வதைத் தவிர?

cheena (சீனா) said...

அன்பின் புகாரி

நல்ல கருத்துடைய விவாதம். எனக்கு உடன்பாடே

கோவியார் கூறுவது போல மனிதர்களின் பெயர்களைச் சிதைப்பது எனக்கு உடன்பாடில்லை

நல்வாழ்த்துகள் புகாரி, கோவி

அன்புடன் நான் said...

பதிவு நல்லயிருக்கு வரவேற்கிறேன்.

Anonymous said...

ஊழல் பேர்வழிகளின் முகத்திரையை கிழிக்கும் ஓர் பதிவு .


http://no-bribe.blogspot.com

கோவி.கண்ணன் said...

//உலக அரங்கில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் பெயர்ச்சொற்களை ஒரு நாலு எழுத்துக்களைக் கொண்டு நம்மால் சிறப்பாகப் புரிந்துகொள்ளவும் உச்சரிக்கவும் இயலும் என்றால் அதை ஏன் பயன்படுத்தக் கூடாது? என்ன கெட்டுப்போகப்போகிறது நம்மை நாமே சுருக்கிக்கொண்டு ஒரு தனித்தீவாக்கிக்கொள்வதைத் தவிர?//

சீனப் பெயர்களை சிதைக்காமல் எந்த ஒரு பிறமொழியாலும் எழுத முடியாது. அவர்களெல்லாம் கவலைப்பட்டது போல் தெரியவில்லை
:)

//ஜார்ஜ் புஷ் என்பதை சார்ச் புழ்சு என்று என்னால் சிதைக்க முடியாது.//

எம்ஜிஆர் என்பதை நம் தமிழ் மக்கள் எம்சிஆர் என்றே தான் அழைத்தார்கள், அவரும் கவலைப்பட்டது போல் தெரியவில்லை. நாம் ஆங்கிலம் அறிந்திருப்பதால் நமக்கு ஜார்ஜ் புஷ் நுழையும். கிராமத்தினர் அதை எப்படி பலுக்குகிறார்களோ அது தான் நம் இயற்கையான பலுக்கல். அவங்க கண்டிப்பாக சார்ச் புச்(சு) என்றே தான் சொல்லுவார்கள்.

படித்தவர்கள் என்பதற்காக நம் பரிந்துரையை பாமரர்களுக்கும் திணிப்பதில் ஞாயம் இல்லை. எங்க ஊரு கிராமத்தில் ஜானி என்ற பெயரை சானி என்றே சொல்லுவார்கள் அதற்காக அவர்களுடைய நாக்கை மிளகாய் தடவி உறிக்க முடியுமா ? அல்லது சூடுதான் போட முடியுமா ?
:)

Unknown said...

//சீனப் பெயர்களை சிதைக்காமல் எந்த ஒரு பிறமொழியாலும் எழுத முடியாது. அவர்களெல்லாம் கவலைப்பட்டது போல் தெரியவில்லை :)//

நாமும் கவலைப்படவில்லை. தமிழில் உலக மொழிகளில் உள்ள எல்லா சொற்களையும் அதே உச்சரிப்போடு தமிழில் எழுத முடியாது. Balan, Zoo, Xerox என்று எத்தனையோ உண்டு. ஆனால் கிரந்தம் என்ற 4 எழுத்தைக்கொண்டு நம்மால் ஓரளவு நெருக்கமாகச் செல்லமுடியும்? அதனால்தான் 1500 வருடங்களாக இந்த நான்கு கிரந்தங்களும் தமிழில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

//எம்ஜிஆர் என்பதை நம் தமிழ் மக்கள் எம்சிஆர் என்றே தான் அழைத்தார்கள், அவரும் கவலைப்பட்டது போல் தெரியவில்லை. நாம் ஆங்கிலம் அறிந்திருப்பதால் நமக்கு ஜார்ஜ் புஷ் நுழையும். கிராமத்தினர் அதை எப்படி பலுக்குகிறார்களோ அது தான் நம் இயற்கையான பலுக்கல். அவங்க கண்டிப்பாக சார்ச் புச்(சு) என்றே தான் சொல்லுவார்கள்.//

எம்சியார் எமுக்கியார் என்பதெல்லாம் படிப்பறிவில்லாத கிராம மக்கள் அன்று கூறியது. தமிழில் வட்டார வழக்கில் இதுபோல் ஆயிரம் வகை உண்டு. எங்கள் பக்கத்து கிராமத்தில் ஷாலக்கெழமே என்பார்கள் வியாழக்கிழமையை. நாம் கற்பது திருத்தம் கொள்ளத்தான். கற்றவர்களெல்லாம் மீண்டும் கற்காதவர்களைப் பின் தொடருவோம் என்று எப்படி முடிவெடுப்பது?

தமிழன் இன்று கிணற்றுத்தவளையாய் இல்லை. அவன் சர்வதேச அரங்கில் நோபல் பரிசுகளையும் ஆஸ்கார் அவார்டுகளையும் பெறுபவனாக இருக்கிறான். அவன் உலக அரங்கில் சார்ச் புழ்சு என்று சொல்லமாட்டான். சொல்லவும் கூடாது. இயன்றவரை உச்சரிக்க நெருங்குவான். எவரும் 100% பிறமொழி உச்சரிப்புகளோடு நெருங்கமுடியாது என்றாலும் இயன்றவரை நெருங்குதல் இன்றைய அறிவியல் கணினி உலகிற்கு அவசியம்.

//படித்தவர்கள் என்பதற்காக நம் பரிந்துரையை பாமரர்களுக்கும் திணிப்பதில் ஞாயம் இல்லை. எங்க ஊரு கிராமத்தில் ஜானி என்ற பெயரை சானி என்றே சொல்லுவார்கள் அதற்காக அவர்களுடைய நாக்கை மிளகாய் தடவி உறிக்க முடியுமா ? அல்லது சூடுதான் போட முடியுமா ? :)//

பாமரர்களை மாமரர்களாகவே வைத்திருக்கலாம் என்கிறீர்களா? 50 வருடங்களுக்கு முன் பாமரர்களின் எண்ணிக்கை எத்தனை இப்போது எத்தனை? பாமரர்கள் படித்தவர்கள் என்ற வேறுபாடே எப்படி வந்தது? படித்தவன் சரியானதைச் சொல்வான் என்பதால்தானே? அவனையும் பாமரனைப்போல் பேசச்சொல்லி வற்புறுத்துவது சரியா?

”இஸ்த்துக்கினு போனியா” என்று சென்னையில் படிக்காதவன் பேசினால் தமிழை இஸ்துக்கினு நாம் அங்கே செல்லமுடியுமா? அது வட்டார வழக்கு, பாமரவழக்கு என்று முத்திரை குத்தி வைத்துவிட்டு படித்தவர் வழக்கு பள்ளி கல்லூரி வழக்கு என்பதைத்தானே போற்றுவோம்?

உங்கள் கருத்துக்களுக்கு ந்னறி கோவி. கண்ணன்

அன்புடன் புகாரி

கோவி.கண்ணன் said...

//நாமும் கவலைப்படவில்லை. தமிழில் உலக மொழிகளில் உள்ள எல்லா சொற்களையும் அதே உச்சரிப்போடு தமிழில் எழுத முடியாது. Balan, Zoo, Xerox என்று எத்தனையோ உண்டு. ஆனால் கிரந்தம் என்ற 4 எழுத்தைக்கொண்டு நம்மால் ஓரளவு நெருக்கமாகச் செல்லமுடியும்? அதனால்தான் 1500 வருடங்களாக இந்த நான்கு கிரந்தங்களும் தமிழில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. //

திரு புகாரி ஐயா,

மொழி அந்நிலப்பரப்பு இன மக்களின் உள் நாக்கு, அடி நாக்கு, தொண்டை ஒலிகளுடன் தொடர்புடையது, இந்தியர்கள் தவிர்த்து மங்கோலிய இன மக்க்களுக்கு 'R' என்ற எழுத்தின் ஒலி சொல்லவே வராது. தமிழில் இருக்கும் 'ழ' வை மலையாளியையும் தமிழனையும் தவிர்த்து எவரும் சொல்ல முடியாது. தமிழனை தமிலன் என்றே எழுதுகிறார்கள். பிற மொழியில் இருக்கும் ஒரு ஒலிப்பு எழுத்து நம் மொழியில் இல்லை என்பது மொழியின் குறை அல்ல அது மொழியின் தனித்த இயல்பு.
1500 ஆண்டுகளாக நான்கு கிரந்த எழுத்துகளும் தமிழில் வாழ்ந்து கொண்டு இருக்கிறது என்பதை விட தமிழில் நுழைந்து இருக்கிறது என்பதே பொருத்தமான கூற்றாகும். வெறும் 26 எழுத்தை வைத்து அனைத்து ஒலிகளையும் பலுக்கல் முறையில் படிக்கும் முறை போன்று 31 எழுத்தை வைத்து நம்மால் பலுக்க முடியாமல், பயிற்சி கொள்ளாமல் போவது நம்முடையே குறையே அன்றி மொழியின் குறைபாடு இல்லை. எழுதுவது போலவே படிக்க வேண்டும் என்கிற முறைகளை மாற்றி எழுதுவதற்கும் படிப்பதற்கும் வேறுபாடுகளை நாம் அமைத்துக் கொண்டால் கிரந்தத்தின் பயன்பாடு தேவையற்றதாக ஆகும். World என்று எழுதிவிட்டு எவரும் வேர்ல்ட் என்று படிப்பது இல்லை வேல்ட் என்றே படிக்கும் முறை என்று பயிற்சி கொடுக்கிறார்கள், நாமும் 'சார்ச் புழ்ச்' என்று எழுதிவிட்டு அதை ஏன் 'ஜார்ஜ் புஷ்' என்று படித்துப் பழகக் கூடாது ? என்பதே என் பரிந்துரை.

//எம்சியார் எமுக்கியார் என்பதெல்லாம் படிப்பறிவில்லாத கிராம மக்கள் அன்று கூறியது. தமிழில் வட்டார வழக்கில் இதுபோல் ஆயிரம் வகை உண்டு. எங்கள் பக்கத்து கிராமத்தில் ஷாலக்கெழமே என்பார்கள் வியாழக்கிழமையை. நாம் கற்பது திருத்தம் கொள்ளத்தான். கற்றவர்களெல்லாம் மீண்டும் கற்காதவர்களைப் பின் தொடருவோம் என்று எப்படி முடிவெடுப்பது?//

நாம் பின் தொடர்வோம், முன் தொடர்வோம் என்று சொல்ல வரவில்லை. நமது கருத்தை ஏன் அவர்களுக்கும் சேர்த்து திணிக்க வேண்டும் என்றே கேட்டேன்.

//தமிழன் இன்று கிணற்றுத்தவளையாய் இல்லை. அவன் சர்வதேச அரங்கில் நோபல் பரிசுகளையும் ஆஸ்கார் அவார்டுகளையும் பெறுபவனாக இருக்கிறான். அவன் உலக அரங்கில் சார்ச் புழ்சு என்று சொல்லமாட்டான். சொல்லவும் கூடாது. இயன்றவரை உச்சரிக்க நெருங்குவான். எவரும் 100% பிறமொழி உச்சரிப்புகளோடு நெருங்கமுடியாது என்றாலும் இயன்றவரை நெருங்குதல் இன்றைய அறிவியல் கணினி உலகிற்கு அவசியம்.//

இந்த பகுதியில் மலாய் என்று ஒரு மொழி உண்டு அதில் 50 விழுக்காடு ஆங்கிலச் சொற்களும், எழுத்தும் ஆங்கில எழுத்தை வைத்தே எழுதி இருப்பார்கள், Clinic என்பதை Klinik என்றே எழுதுவார்கள், சொல்லும், பொருளும் ஆங்கிலத்தில் எடுத்துக் கொண்டு எழுதும் போது அவர்களால் சொல்ல முடிந்த சொல்லைத்தான் எழுதுகிறார்கள், இதை அவர்கள் மொழியின் குறையாக கருதுவது கிடையாது, நாம் அவ்வாறு கருதுவது நம் தாழ்வுணர்ச்சி. இயன்றவரை என்றால் அதன் அளவீடு என்ன ? நாளைக்கே Kha, ga, gha இல்லை என்று ஒருவர் கூச்சல் இட்டால் அவர்கள் காட்டும் இயன்ற அளவை புறந்தள்ள முடியுமா ?

கோவி.கண்ணன் said...

//பாமரர்களை மாமரர்களாகவே வைத்திருக்கலாம் என்கிறீர்களா? 50 வருடங்களுக்கு முன் பாமரர்களின் எண்ணிக்கை எத்தனை இப்போது எத்தனை? பாமரர்கள் படித்தவர்கள் என்ற வேறுபாடே எப்படி வந்தது? படித்தவன் சரியானதைச் சொல்வான் என்பதால்தானே? அவனையும் பாமரனைப்போல் பேசச்சொல்லி வற்புறுத்துவது சரியா?//

பாமரர்களை பாமரர்களாக வைத்திருக்க வேண்டும் என்பது நீங்களாக எடுத்துக் கொண்டது நான் சொன்னதன் பொருள் அது அல்ல, அவர்களையும் ஏன் நம் கருத்தில் கொள்ளக் கூடாது என்பதே கேள்வி.

//”இஸ்த்துக்கினு போனியா” என்று சென்னையில் படிக்காதவன் பேசினால் தமிழை இஸ்துக்கினு நாம் அங்கே செல்லமுடியுமா? அது வட்டார வழக்கு, பாமரவழக்கு என்று முத்திரை குத்தி வைத்துவிட்டு படித்தவர் வழக்கு பள்ளி கல்லூரி வழக்கு என்பதைத்தானே போற்றுவோம்?//

வட்டார வழக்குகளைப் பற்றிப் பேசவில்லை. எல்லா மொழிகளிலுமே வட்டார வழக்குகள் இயல்பானவை, சிங்கைப் பகுதி ஆங்கிலம் சிங்கிலீஷ் என்றே அழைக்கப்படும்.

//உங்கள் கருத்துக்களுக்கு ந்னறி கோவி. கண்ணன்//

உங்கள் கருத்துக்கும் நன்றி திரு புகாரி ஐயா

*****

ஜீஸஸ் என்பதை தமிழில் ஏசு என்றே எழுதுகிறோம். ஒரு கிறித்துவ வெள்ளைக்காரரிடம் 'ஏசு' என்று சொன்னால் அவருக்கு யாரைக் குறிப்பிடுகிறோம் என்றே தெரியாது. மொழியில் ஏற்படுத்த வேண்டியது நம் பலுக்குவதற்கு ஏற்ற பெயர் சொல் மாற்றமே அன்றி கூடுதல் எழுத்துக்களைச் சேர்த்து அந்த மொழியின் தன்மையை சிதைப்பது அல்ல. ஆங்கிலத்தில் உள்ள அனைத்துச் சொற்களையும் தமிழில் கொண்டு வர தமிழுக்கு ஏற்றவாறு தான் கொண்டு வரவேண்டும். ஆங்கிலத்தில் இருக்கும் சொற்கள் பிற மொழியில் இல்லாத போகும் போது அந்த ஆங்கில சொற்களையே பயன்படுத்தினால் எந்த ஒரு பிற மொழியும் மற்றொரு சிதைந்த ஆங்கிலமாகவே இருக்கும், இது அந்த மொழி சிதைவுக்கு அன்றி வளர்ச்சிக்கு எந்த ஒரு பயனையும் அளிக்காது.
மொழி இலக்கண அமைப்பும் மிக முதன்மையானது அதையும் கருத்தில் கொள்ள வேண்டும் 'இங்கிலாண்ட்' என்பதை 'இங்கிலாந்து' என்றே எழுதுகிறோம் ஏனெனில் 'ட்' போன்ற எழுத்துக்கள் முடியும் சொற்கள் தமிழ் இலக்கணத்துக்கு புறம்பானது. 'இவையெல்லாம் கட்டுபெட்டித்தனம் நாம் யார் அவர்களது நாட்டின் பெயரை மாற்றிச் சொல்வது ?' என்றும் கூடச் சிலர் சொல்லுவர் அவை ஏற்றுக் கொள்ளும் வாதமா ?
மொழிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற பரிந்துரைகள் தனி ஒருவர் ஒரே இரவில் உட்கார்ந்து எழுதிவிட்டு இதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட முடியாது. எந்த ஒரு மொழிக்கும் இல்லாத கவலை நமக்கு (தமிழுக்கும், தமிழர்களுக்கு) இருப்பது மிகவும் வியப்பான ஒன்றே. இதை கவலை என்பதைவிட தாழ்வுணர்வாகவே நான் நினைக்கிறேன்.

Unknown said...

அன்பின் கோவி. கண்ணன்,

//மொழி அந்நிலப்பரப்பு இன மக்களின் உள் நாக்கு, அடி நாக்கு, தொண்டை ஒலிகளுடன் தொடர்புடையது, இந்தியர்கள் தவிர்த்து மங்கோலிய இன மக்க்களுக்கு 'R' என்ற எழுத்தின் ஒலி சொல்லவே வராது. தமிழில் இருக்கும் 'ழ' வை மலையாளியையும் தமிழனையும் தவிர்த்து எவரும் சொல்ல முடியாது. தமிழனை தமிலன் என்றே எழுதுகிறார்கள். பிற மொழியில் இருக்கும் ஒரு ஒலிப்பு எழுத்து நம் மொழியில் இல்லை என்பது மொழியின் குறை அல்ல அது மொழியின் தனித்த இயல்பு.//

ஆம் அது பன்டைக் காலம். இன்று பல மொழிக்காரர்களும் ஒரு சபையில் நிற்கிறார்கள். பிற மொழிகளின் உச்சரிப்பை உச்சரித்துப் பழகுகிறார்கள்.

தூய தமிழுக்கு 30 எழுத்துக்களே போதும்தான். அதிலும் உயிரெழுத்து 12 தேவையில்லை. அ இ உ எ ஒ ஆகிய ஐந்து எழுத்துக்கள் மட்டுமே போதும். மற்றவை கூட்டெழுத்துக்கள்தாம். உண்மையில் தமிழில் 18 + 5 = 23 எழுத்துக்கள்தாம். கவிதையின் யாப்பிற்காக வந்ததே ஆய்த எழுத்து.

//வெறும் 26 எழுத்தை வைத்து அனைத்து ஒலிகளையும் பலுக்கல் முறையில் படிக்கும் முறை போன்று//

ஆங்கில எழுத்துக்கள் புதியதாய் தோன்றியவை அதனால்தான் அதற்கு அந்த சக்தி அதிகம் இருக்கிறது. இருந்தாலும் முழுமை என்று சொல்லமுடியாது. நம்முடைய ஞ, ழ கூட அதில் இல்லை. அரபு எழுத்துக்கள் சில இல்லை. இன்னும் சைனீஸ் எழுத்துககளை எங்கே போய் தேடுவது :)

//எழுதுவது போலவே படிக்க வேண்டும் என்கிற முறைகளை மாற்றி எழுதுவதற்கும் படிப்பதற்கும் வேறுபாடுகளை நாம் அமைத்துக் கொண்டால் கிரந்தத்தின் பயன்பாடு தேவையற்றதாக ஆகும்.//

நாம் எழுதுவதுபோல் படிக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து ஆரம்பம் முதலே மாறித்தான் இருக்கிறோம்.

முகம் என்பதை முஹம் என்றுதான் உச்சரிக்கிறோம். சக்கரம் என்பதை Chakkaram என்று Cha கொண்டும், மசக்கை என்பதை Sa கொண்டும்தான் உச்சரிக்கிறோம். பாலா என்பது Pala அல்ல Bala என்று சரியாகவே உச்சரிக்கப்படுகிறது. புகாரி என்பது Buhari என்று உச்சரிக்கப்படுகிறது. இதுபோல நிறைய சொல்லலாம். ஆனால் சார்ச் புழ்ச் என்பது வெகுதூரம் விலகியது. அது நகைப்பையே தரும். ஜார்ஜ் புஷ் என்று எழுத நமக்கு வழியிருக்க நாம் ஏன் கிரந்தம் வெறுக்க வேண்டும்? அதன்மீது நமக்கென்ன விரோதம்?

//இயன்றவரை என்றால் அதன் அளவீடு என்ன ? நாளைக்கே Kha, ga, gha இல்லை என்று ஒருவர் கூச்சல் இட்டால் அவர்கள் காட்டும் இயன்ற அளவை புறந்தள்ள முடியுமா ? //

அப்படி நாம் அனுமதிப்பதும் இல்லை. F என்பதற்கு ஒரு எழுத்தைக் கொண்டுவர சோ கடுமையாக சண்டைக்கு நின்றார். ஃப் போதும் என்று நாம் அனுமதிக்கவில்லை. இனியும் புதிய எழுத்துக்களுக்கான தேவையும் இல்லை அனுமதிக்கப்போவதும் இல்லை.

ஆனால் கிரந்தம் அப்படியல்ல. 1500 வருடங்கள் புழக்கத்தில் உள்ள எழுத்து. அரசு ஆவனங்கள் முழுவதும் அந்த எழுத்துகளைக் கொண்டிருக்கிறது. பாரதிதாசன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை என்று எல்லோரும் பயன்படுத்தியதுதான்.

தமிழில் புது இலக்கியங்கள் எழுதி அதை வளப்படுத்துவோம். அறிவியல் கட்டுரைகள் எழுதி உயர்த்துவோம். இந்த நாலு எழுத்துக்காக நேரத்தைச் செலவழிக்க வேண்டாம் என்பது என் கருத்து.

நம் உரையாடல்களைப் பாருங்கள்? இதில் எத்தனை கிரந்த எழுத்துக்கள். மிகக்குறைவுதானே? ஏன் கவலைப்படவேண்டும்? அதோடு கிரந்தம் தமிழிலிருந்து நீக்கவே முடியாத இடத்தை பிடித்துவிட்டது. அதை வெறுப்பதில் எந்தப் பொருளும் இல்லை என்றே எனக்குப் படுகிறது

அன்புடன் புகாரி

Unknown said...

http://anbudanbuhari.blogspot.com/2008/01/blog-post_6381.html

இதைக் கொஞ்சம் வாசித்துப் பாருங்கல் கோவி. கண்ணன்

அன்புடன் புகாரி

Unknown said...

http://anbudanbuhari.blogspot.com/2008/01/blog-post_6381.html

இதைக் கொஞ்சம் வாசித்துப் பாருங்கல் கோவி. கண்ணன்

அன்புடன் புகாரி

Unknown said...

வணக்கம் புகாரி அய்யா,

உங்கள் உரையாடல் மிகவும் அருமை, ஆனால் ( இரும்பு அடிக்கும் இடத்தில ஈய்க்கு என்ன வேலை என்பார் போல நான் இங்கு) க்ரந்தம் என்றால் என்னவென்றே தெரியாமல் முழி ( மொழி ) பிதுங்கிகறது.

தயவு செய்து அதன் அர்த்தம் எனவேன்று கூறுங்களேன்.

( இலக்கண பிழைக்கு மன்னிக்கவும்)

சாம்பமுர்த்தி

Unknown said...

சாம்பமூர்த்தி,

ஹ, ஜ, ஸ, ஷ, ஸ்ரீ ஆகிய எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்கள் அல்ல. கிரந்த எழுத்துக்கள்.

தமிழில் இதை வலிந்து பயன்படுத்துதல் கூடாது. இயன்றவரை தவிர்க்க வேண்டும். அது தமிழுக்கு அழகு.

ஜெர்மனி, ஜார்ஜ் புஷ் போன்ற பெயர் சொற்களில் அவசியம் ஏற்பட்டால் மட்டும் பயன்படுத்தலாம். அதில் தவறில்லை.

புஹாரி என்ற என் பெயரை புகாரி என்று எழுதுகிறேன். ஏனெனில் இதனால் என் பெயரில் சிதைவு கிடையாது.

ஜார்ஜ் புஷ் என்பதை சார்ச் புழ்ச் என்று எழுதும்போது உச்சரிப்பில் பெரும் தடுமாற்றத்தைத் தருகிறது. அவ்வேளையில் கிரந்தம் பயன்படுத்துவது தவறில்லை.

1500 ஆண்டுகளாக தமிழில் கிரந்தம் பயன்படுத்தப்படுகிறது.