என்னை ஏன் இப்படித்
தேம்பித் தேம்பி அழவைக்கிறாய்
காயங்களை ஆற்றும் இந்த மயிலிறகு
உன் அன்பில்லையென்றால்
செத்துப்போகும்

உறவென்றும் பகையென்றும்
ஒருவருக்கும் ஒருவரும்
நிரந்தரமல்ல

மயிலிறகின் செவிகளில்
ஆகாய அளவு அன்புகொண்ட
உன் உதடுகள் விரித்து
மெல்லமெல்ல உள்ளம் பேசு
கடுங்குளிர் கரைய
வசந்தத்துக்குள் மலர்ந்துவிடுவாய்

வருட வரும் உயிரிழைகளை
நிராகரித்தல் தற்கொலை
உன் மூட்டைகளை
இறக்கிவை என் தோள்மீது

உன் மனஅமைதியே என் பெயரானால்
என் உயிர்த்துடிப்பின் பொருள்
எனக்கும் விளங்கும்

உன்னைச் சந்தித்தால்
நான் அழவே செய்வேன் என்பது
உனக்குத் தெரியும் என்று எனக்கும் தெரியும்

கட்டுக்கடங்காத கண்ணீரை
உன் கட்டளைக்குள் கட்டிவைத்து
நெஞ்சழியும் நயாகராவே
உனக்கே ஏனடி நீ வஞ்சகியாகிறாய்

3 comments:

புன்னகையரசன் said...

அருமை ஆசான்......

நீங்கள் பேனா எடுத்ததும் வார்த்தைகள் வெள்ளமாய் வந்து விழுமோ....

விளையாடுகிறீர்கள்..... வாழ்த்துக்கள்...

சிவா said...

உன் மனஅமைதியே என் பெயரானால்
என் உயிர்த்துடிப்பின் பொருள்
எனக்கும் விளங்கும்


அருமை ஆசான்

வானம்பாடிகள் said...

/உன் மனஅமைதியே என் பெயரானால்
என் உயிர்த்துடிப்பின் பொருள்
எனக்கும் விளங்கும்/

அருமைங்க.

/கட்டுக்கடங்காத கண்ணீரை
உன் கட்டளைக்குள் கட்டிவைத்து
நெஞ்சழியும் நயாகராவே
உனக்கே ஏனடி நீ வஞ்சகியாகிறாய்/

ஆஹா