நீ வரவில்லை

இதுதான்
அவளுக்காக நான் எழுதிய
இறுதி வரிகள் என்று
தயக்கத்தோடு நீட்டினேன்
இவளிடம்

"நிமிசங்கள் மணிகளாகி
மணிகள் நாட்களாகி
நாட்கள் வருடங்களாகியும்
நீ வரவில்லை
இருந்தும்
இந்த ஜென்மத்தையே
உனக்காகக் காத்திருக்க
எழுதிக்கொடுத்துவிட்டேன்
என்றாவது ஒருநாள்
ஒரே ஒரு முறையேனும் வா
அந்த ஒன்றே
இந்த ஜென்மத்தின்
முழு அர்த்தமாகிப் போகட்டும்"

நானும் எழுதி இருக்கிறேன்
இதே போன்ற வரிகளை
என்றவளின் கண்களில்
துருவேறிய மின்னலின் மிச்சம்
மிளிர்ந்தது ஒரு கணம்

மறுகணம் காகிதத்தைக்
காற்றில் கப்பலாக்கி
கடலலையை வென்று சிரித்தாள்

நெஞ்சு கோத்து நடந்தோம்
பொன்மணல் கம்பளத்தில்

1 comment:

cheena (சீனா) said...

mmmmm - யதார்த்தம் - நடைமுறையில் இது தான் நடக்கிறது - சரியான முடிவு தான் -